Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள் 4 : பெந்தேகோஸ்தே விழா !

  1. பெந்தேகோஸ்தே விழா !

Image result for feast of pentecost

பெந்தேகோஸ்தே விழா அறுவடைப் பெருவிழா என்றும், வாரங்களின் விழா என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. நிசான் மாதத்தின் 14ம் நாள் பாஸ்கா பண்டிகை கொண்டாடப்பட்டது. அடுத்த நாளிலில் இருந்து புளிக்காத அப்பத் திருவிழா ஆரம்பமானது. நிசான் மாதத்தின் 16ம் நாள் முதற்பலன் விழா கொண்டாடப்பட்டது. இப்போது முதல் பலன் விழாவிலிருந்து ஐம்பதாவது நாள் இந்த பெந்தேகோஸ்தே விழா கொண்டாடப்படுகிறது.

முதற்பலனில் இறைவனுக்கு பார்லி படைக்கப்பட்டது, அது இறைமகன் இயேசுவைக் குறிப்பதாய் அமைந்தது. இப்போது ஐம்பது நாட்கள் கழிந்து வருவது கோதுமை அறுவடையின் காலம். கோதுமையை இறைவனுக்குப் படைக்கும் விழாவாக இந்த அறுவடைப் பெருவிழா அல்லது பெந்தேகோஸ்தே நாள் கொண்டாடப்படுகிறது. பெந்திகோஸ்தே எனும் கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த பெந்தேகோஸ்தே எனும் பெயர் வந்தது, இதற்கு ஐம்பது என்பது பொருள் !

முதற்பலன் நாளில் இருந்து ஏழு வாரங்களைக் கணக்கிட்டு அதற்கு அடுத்த நாளில் இந்த விழா கொண்டாடுவதால், வாரங்களின் விழா என்றும் அழைக்கப்படுகிறது. ஏழு என்பது முழுமையின் குறியீடு. அடிமைத்தனத்திலிருந்து மனிதன் முழுமையாய் மீட்படைந்ததன் அடையாம் இது.

இதைக்குறித்து இறைவனின் கட்டளை இவ்வாறு கூறுகிறது.

ஆரத்திப் பலியாகக் கதிர்க்கட்டினைக் கொண்டுவந்த ஓய்வு நாளின் மறு நாளிலிருந்து ஏழு வாரங்களைக் கணக்கிடவும்.  ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாளான ஐம்பதாம் நாளில் ஆண்டவருக்குப் புது உணவுப் படையலைச் செலுத்துங்கள்.

நீங்கள் வாழும் இடங்களிலிருந்து இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மிருதுவான மாவில் பத்தில் இரு பகுதி எடுத்து, புளிப்பேற்றி இரண்டு அப்பங்களைச் சுட்டு, அவற்றை ஆண்டவருக்கு பலியாகக் கொண்டு வாருங்கள்.  ஓராண்டான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும் ஆண்டவருக்கு எரிபலியாகச் செலுத்துங்கள்.

உங்கள் நாட்டில் நீங்கள் அறுவடை செய்யும்போது உங்கள் வயலோரத்தில் இருப்பதை முற்றிலும் அறுத்துவிடாமலும் சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்காமலும் இருங்கள். அவற்றை எளியவருக்கும் அன்னியருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!”

 

விளைச்சலின் பயனை இறைவனுக்குப் படைக்கும் விழாக்கள் உலகெங்கும் பல்வேறு வகைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த அறுவடை விழாவும் சுமார் 3500 ஆண்டுகளாக நினைவு கூரப்பட்டு வருகிறது.

இதுவும் இறைமகன் இயேசுவைக் குறியீடாய் கொண்ட ஒரு விழாவே. முதற்பலனாக இறைமகன் இயேசு இருக்கிறார், இரண்டாவதான இந்த அறுவடை விழா மனிதர்களை உயிர்த்தெழச் செய்யும் நிகழ்வின் குறியீடு. எனவே தான் இங்கே புளிப்பான மாவு பயன்படுத்தப்படுகிறது. புளிப்பு என்பது பாவத்தைக் குறிப்பது. பாவியாகிய நம்மை மீட்டுக்கொண்ட இறைவனின் திட்டம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. தேர்ந்து கொண்ட இஸ்ரேல் இனமும், தேர்ந்து கொள்ளப்படாத பிற இனங்களும் இறைவன் முன்னில் இணையும் குறியீடே இரட்டை அப்பங்கள் !

மோசே இஸ்ரேல் மக்களை எகிப்திலிருந்து விடுவித்துக் கொண்டு வெளியே வந்த ஐம்பதாவது நாளில் சீனாய் மலையில் இறைவன் பத்து கட்டளைகளைக் கொடுக்கிறார் ! அந்த வார்த்தைகள் அடங்கிய சட்டங்களை மோசே சுமந்து வருகிறார்.

இறைமகன் இயேசு உயிர்த்தபின் ஐம்பதாவது நாளில் தூய ஆவியானவர் சீடர்களின் மேல் நெருப்பு நாவாக வந்து இறங்கினார். இறைவனை விவிலியம் “வார்த்தை” என்கிறது. மோசேயிடம் வார்த்தைகள் எழுத்து வடிவமாக கிடைத்தன, இங்கே தூய ஆவி வடிவமாக கிடைக்கின்றன.

மோசே கட்டளைகளைப் பெற்ற அந்த ஐம்பதாவது நாளிலும் சத்தமும், பெருங்காற்றும் காற்றும், நெருப்பும் இருந்தன. புதிய ஏற்பாட்டின் பெந்தேகோஸ்தே நாளிலும் நெருப்பும், பெருங்காற்றும், சத்தமும் இருந்தன.

மோசே கட்டளைகளைக் கொண்டு வந்த நாளில் மக்கள் இறைவனை விட்டு விலகி கன்றுக்குட்டியை வணங்கிக் கொண்டிருந்தார்கள். சட்டம் கொண்டு வந்த அந்த நாளில் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர். தூய ஆவி வந்திறங்கிய நாளில் சீடர்கள் பல மொழிகளில் பேச, மக்களில் மூவாயிரம் பேர் மீட்புக்குள் வந்தனர்.

“எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய ஆவியால் விளைவது வாழ்வு ( 2 கொரி 3 : 6 ) ” எனும் இறைவார்த்தை நிறைவேறும் நிகழ்ச்சியே இதில் மறைந்துள்ள மறை உண்மை !

புதிய ஏற்பாட்டில் அறுவடை என்பது தானிய அறுவடை என்பதைத் தாண்டி, இதயங்களை இறைவனிடம் கொண்டு வரும் நிகழ்வு எனலாம். “உங்களை மனிதரைப் பிடிப்போர் ஆக்குவேன்” என இறைமகன் இயேசு நற்செய்தி அறிவிக்க சீடர்களை அழைத்தார். முதற்பலனான இறைமகன் உயிர்த்து விட்டார், இப்போது இரண்டாம் பலனான நாம் கிறிஸ்துவின் அன்பில் இணையவேண்டும். அதுவே இந்த புதிய அறுவடை !

சுயநலமற்ற சிந்தனைகளோடு இறைமகனிடம் நம்மை நாமே அர்ப்பணிப்பதே இந்த விழாவின் இன்றைய சிந்தனை.

 

Posted in Bible Feasts

விவிலிய விழாக்கள்3. முதற்பலன் விழா

Image result for feast of first fruits

உலகைப் படைத்தவர் இறைவன். உயிர்களைப் படைத்தவர் இறைவன். பயிர்களைப் படைத்தவர் இறைவன். அவரன்றி எதுவும்உருவாகவில்லை என்பதே விவிலியம் சொல்லும் பாடம். படைத்தவருக்கு எப்போதும் முதலிடம் இருக்க வேண்டும் என்பதே இந்த விழா வலியுறுத்தும் பாடம்.

முதற்பலன் விழா, இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை. விளைச்சலின் முதற் பலனை இறைவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதே சுருக்கமான செய்தி.

“அறுவடை செய்யும் போது அறுவடையின் முதல் விளைச்சலான ஒரு கதிர்க் கட்டினைக் குருவிடம் கொண்டுவர வேண்டும். குரு அந்தத்தானியக் கதிர்க்கட்டினை, ஓய்வு நாளுக்குப் பின்வரும் அடுத்த நாளில் ஆண்டவரின் திருமுன் ஆரத்திப் பலியாக்குவார். ஆண்டவருக்குஎரிபலியாக ஓராண்டான பழுதற்ற ஆட்டுக்குட்டி ஒன்றைச் செலுத்துங்கள். இருபதுபடி அளவுள்ள மரக்காலில் பத்தில் இரண்டுபங்கான மிருதுவான மாவை எண்ணெயில் பிசைந்து எரிபலியாகச் செலுத்துங்கள். திராட்சைப் பழ இரசத்தை நீர்மப் படையலாகப்படையுங்கள். உங்கள் கடவுளின் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்த நாள்வரை, அப்பமோ, சுட்ட கதிரோ, பச்சைக் கதிரோ, உண்ணலாகாது.

என்பதே இந்த விழாவுக்கான விதிமுறைகளாக இறைவன் கொடுத்தவை! அதை இஸ்ரேல் மக்கள் தவறாமல் நிறைவேற்றிவந்தார்கள். நிசான் மாதத்தின் 14ம் நாள் பாஸ்காவைக் கொண்டாடி, 15ம் நாள் முதல் புளிப்பற்ற அப்பத் திருவிழாவை ஆரம்பித்து, 16ம் நாளில் முதல் பலன் விழாவைக் கொண்டாடினார்கள் இஸ்ரயேலர்கள்.

எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட அவர்கள், வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியேறிய பிறகே இந்த விழா ஆரம்பமாகிறது. அலைந்து திரிந்த காலத்தில் அவர்கள் பயிர் செய்ய இயலாது என்பதே அதன் காரணம் !

இறைவனுக்கு முதலில் விளையும் கதிரைக் கொடுப்பது, இறைவனுக்கு தானியம் வேண்டும் என்பதாலல்ல. இறைவன் நம் வாழ்வின்முதல் நபராக இருக்க வேண்டும் என்பதால்.

இந்த விழாவும் இறைமகன் இயேசுவை குறிப்பிடுகின்ற விழாவாகவே அமைந்திருக்கிறது. முதற்பயன் என்பது இறைமகன் இயேசுவைக் குறிக்கிறது. அவர் தந்தையின் தலைமகன். அவர் மரணமடைந்து உயிர்த்த முதல் மனிதர்.

“இப்போதோ, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது (1 கொரிந்தியர் 15:20 ) .” எனும் இறைவார்த்தை அதை நமக்கு புரிய வைக்கிறது.

அந்தக் காலத்தில் விளைந்த முக்கியமான தானியமான பார்லி இறைவனின் முன்னால் வருகின்ற முதல் தானியமாக இருந்தது. ஏழைகளின் தானியமான பார்லி இயேசுவைக் குறிக்கிறது. இறைமகன் இயேசு ஏழையிலும் ஏழையாய் வந்தவர். விண்ணகத்தில் கடவுளாக இருந்தவர் பூமியில் அனைத்தையும் துறந்து எளிமையாய் வந்தார். பணிவு எனும் குணத்திலும் அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டவராய் இருந்தார்.

பார்லியானது ஆலயத்தில் அடிக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, கடைசியில் அதிலிருந்து மாவு பெறப்படும். பெறப்படும் மாவு தூய்மையானதாய் இருக்கும். அதை குரு பலியாய் செலுத்துவார். இறைமகன் இயேசுவும் அடிக்கப்பட்டார், நசுக்கப்பட்டார் ஆனாலும் தூய்மை விலகாமல் இருந்தார். கடைசியில் அவர் பலியாய் மாறினார்.

உயிர்த்த இயேசு வை மகதலேன் மரியா அன்பினால் தொட முயல்கிறார் அப்போது இயேசு, ‘என்னை தொடாதே, நான் இன்னும் தந்தையிடம் செல்லவில்லை’ என்றார். அதன் பின் விண்ணகம் சென்று தந்தையை சந்தித்தார் ! தந்தையை அடைந்த முதல் உயிர்ப்பு, இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். அவரே நமக்கெல்லாம் முதல் சகோதரராய் இருக்கிறார்.

“இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர், தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார்.” எனும் திருவெளிப்பாடு வசனமும் இதை தெளிவாக்குகிறது.

இப்படி இறைமகன் இயேசுவின் வாழ்க்கை முதற்பலன் பண்டிகையோடு பின்னிப் பிணைந்ததாய் மாறிவிடுகிறது.

இன்றைய சூழலில் நாம் இந்த விழாவை எப்படிக் கொண்டாட வேண்டும் ! இறைமகன் இயேசு ஏற்கனவே பூமியில் பிறந்து, வாழ்ந்து போதித்து, இறந்து, உயிர்த்து நம்மை மீட்டுக் கொண்டார். அந்த அடிப்படையில் இந்த முதற்பலன் விழா புதிய பரிமாணம் பெறுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனை நேசி ! முதலிடத்தை எப்போதும் இறைவனுக்கே வழங்கு ! எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனுக்கே மரியாதை செலுத்து ! எனும் சிந்தனையே இந்த முதற்பலன் விழாவின் அடிப்படையாய் இன்றைக்கு இருக்கிறது. நமது வாழ்வும், நமது வளமும் இறைவன் நமக்குத் தந்தவை என்பதை உணரும் போது அதை அவருக்கே சமர்ப்பிப்பதில் சஞ்சலம் இருக்காது

“வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு” என்கிறார் இயேசு !

அந்த இறைவனிடம் நம்மை ஒப்படைப்பதில் இந்த விழா முழுமையடைகிறது

Posted in Bible Feasts, Uncategorized

விவிலிய விழாக்கள் 2. புளிப்பற்ற அப்பப் பண்டிகை

2. புளிப்பற்ற அப்பப் பண்டிகை

Image result for unleavened bread feast

விவிலியத்தில் வருகின்ற விழாக்களில் முக்கியமான ஒன்று புளிப்பற்ற அப்பப் பண்டிகை ! பண்டைய விழாக்கள் இறைவனுக்கும் மனிதனுக்கு இடையேயான உறவின் வெளிப்பாடுகள். பழைய ஏற்பாட்டில் கொண்டாடப்படும் இந்த புளிப்பில்லாத அப்பத் திருவிழாவும் இறைமகன் இயேசுவின் வாழ்க்கையை முன்குறிக்கின்ற ஒரு விழாவாகவே அமைகிறது !

‘பாஸ்கா விழா’ வுக்கு அடுத்த நாளிலிருந்து இந்த விழா ஆரம்பமாகிறது. இந்த விழா ஏழு நாட்கள் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் ஒரு விழா.

எகிப்தில் அடிமைத்தனத்தில் கிடந்த இஸ்ரேஸ் மக்களை மோசேயின் மூலமாக கடவுள் மீட்கிறார். அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். அவசர அவசரமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது கடவுள் இந்த கட்டளையைக் கொடுக்கிறார். “வீடுகளிலிருந்து புளிப்பானவற்றை அகற்றுங்கள். புளிப்பான எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம், புளிப்பற்ற அப்பத்தை மட்டுமே ஏழு நாட்கள் உண்ணுங்கள்” !

அப்படி இஸ்ரயேல் மக்கள் புளிப்பற்ற அப்பத்தையும், புளிக்காத திராட்சை ரசத்தையும் ஒரு வாரம் குடித்து இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர். கடவுள் அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு அழைத்துச் செல்வதற்கான முதல் நிலையாக இந்த விழா அமைகிறது.

புளிப்பற்ற அப்பத்தைத் தயாராக்கும் முறை வித்தியாசமானது. அப்பத்தின் மீது கோடுகளையும், துளைகளையும் போட்டு அதை சுடுவார்கள். இதனால் அப்பம் விரைவாக தயாராகி விடும். வரலாற்றுப் பதிவுகள் இந்த அப்பம் சுட 18 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும் என்கின்றன.

சுட்டு முடித்தபின் அதன் உடலெங்கும் சாட்டையால் அடித்தது போன்ற காயங்களும், துளைகளும் காணப்படும் !

புளிப்பு என்பது பாவத்துக்கு ஒப்பீடாக விவிலியத்தில் பயன்படுத்தப்படுகிறது. இறைமகன் இயேசு தனது போதனைகளில் “புளிப்பு மாவை விலக்க வேண்டும் எனவும், புளிப்பு மாவு குறித்து கவனமாய் இருக்க வேண்டும் எனவும்” பல முறை வலியுறுத்தியிருக்கிறார்.

அதற்கு மாறாக, புளிப்பற்ற மாவு என்பது தூய்மையைக் குறிக்கிறது. இறைமகன் தருகின்ற புனித வாழ்வுக்கு அது ஒப்பீடு செய்யப்படுகிறது. புளிப்பை விலக்கி விட்டு புளிப்பற்ற அப்பத்தை எடுப்பது, பாவத்தை விலக்கி விட்டு புனிதத்தை அணிவது எனும் பொருளில் வருகிறது!

புளிப்பற்ற அப்பத்தின் உடலில் உள்ள வரிகள், பாவமற்ற இயேசுவின் உடலில் சாட்டையால் கொண்ட தழும்புகளைக் குறிக்கின்றன. அப்பத்தின் துளைகள் இயேசுவின் உடலில் ஆணிகளாலும், ஈட்டியாலும் உருவான காயங்களைக் குறிக்கின்றன. திராட்சை இரசம் அவரது குருதியைக் குறிக்கிறது. “என் உடலை உண்டு, இரத்தத்தைக் குடியுங்கள்” என இயேசு சொன்னது அவரால் புனிதமாக வேண்டும் என்பதன் குறியீடே.

“ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும். தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக் கொண்டாடுவோமாக” 1 கொரி 5:8 எனும் விவிலிய வசனம் புளிப்பு என்பது பாவம் என்பதை தெளிவாக விளக்குகிறது.

அதே போல புளிப்பு என்பது வெளிவேடம் என்பதையும் இயேசு குறிப்பிடுகிறார். “பரிசேயருடைய வெளிவேடமாகிய புளிப்பு மாவைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள்” என அவர் மிகத் தெளிவான போதனையை தருகிறார். பரிசேயர் சதுசேயர் ஆகியவர்களுடைய வெளிவேடமும், அவர்களுடைய போதனையும் புளிப்பு மாவைப் போன்றது. அதை விலக்க வேண்டும் என்பதே அவருடைய அறிவுறுத்தலாய் இருந்தது.

அதேபோல ஏரோதியரின் புளித்த மாவு என உலகு சார்ந்த சிந்தனைகளை இயேசு குறிப்பிடுகிறார். உலகின் போக்கில் வாழ்வதையே வாழ்க்கை எனக் கொள்ளாமல் இறைவனின் வாக்கில் வாழ்வதையே வழக்கமாகக் கொள்ளவேண்டும் என்பது அவரது அறிவுரையாய் இருந்தது.

இயேசு தன்னை அப்பம் என அழைத்தார். ஜீவ அப்பம் நானே என்றும் வாழ்வு தரும் உணவு நானே என்றும் அவர் தனது போதனைகளில் குறிப்பிட்டார்.

இன்றைக்கு புளிப்பற்ற அப்பத் திருவிழா பழைய நாட்களைப் போல கொண்டாடப்படமல் புதிய சிந்தனையின் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது. நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்ற பாவங்களை முழுவதுமாய் அகற்றி விட்டு புனிதமான வாழ்க்கையில் பயணிக்க வேண்டும் என்பதே அந்த புதிய சிந்தனை.

ஏழு என்பது விவிலியத்தில் முழுமையைக் குறிப்பிடும் சொல். ஏழு நாள் புளிப்பற்ற அப்பம் உண்ண வேண்டும் என்பது வாழ்நாள் முழுதும் புனிதமாய் இருக்க வேண்டும் என்பதன் அடையாளம். கொஞ்சம் புளிப்பு மாவை நல்ல மாவோடு சேர்த்து வைத்தால் மொத்த மாவும் புளித்துப் போய்விடும். அதே போல கொஞ்சம் பாவம் தானே என நம்மோடு அதை சேர்த்துக் கொண்டால் அது நமது வாழ்க்கையை முழுவதுமாய் செல்லரித்துப் போகச் செய்து விடும்.

புதிய ஏற்பாட்டின் பின்னணியில், இறைமகன் இயேசுவின் போதனையின் வெளிச்சத்தில் இந்த புளிப்பற்ற அப்பப் பண்டிகை பாவத்தை விலக்கும் விழாவாகக் கொண்டாடுவதே சரியானது !

Posted in Articles, Bible Feasts

விவிலிய விழாக்கள் : 1. பாஸ்கா பண்டிகை !

1. பாஸ்கா பண்டிகை !

Image result for passover festival

விழாக்கள் அர்த்தம் பொதிந்தவை. வரலாற்றை அறிந்து கொள்ளவும், அவை சொல்லும் ஆன்மீக ஆழங்களை தலைமுறை தோறும் சுமந்து செல்லவும் விழாக்கள் பயன்படுகின்றன. விவிலிய விழாக்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன.

அவற்றில் மிக முக்கியமான ஒன்று பாஸ்கா பண்டிகை ! ஆங்கிலத்தில் பாஸோவர் என்றும், தமிழில் பஸ்கா என்றும் அழைக்கப்படுகின்ற இந்த விழா ‘பெஷாக்’ எனும் எபிரேய வார்த்தையிலிருந்து உருவானது. கடந்து செல்லல் என இதற்குப் பொருள் கொள்ளலாம்.

இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்து சேர்கின்றனர். ஒரு சின்ன குழுவாக இருக்கும் அவர்கள் அங்கே வாழ்ந்து, பலுகிப் பெருகி மிகப்பெரிய இனமாக உருவாகின்றனர். இப்போது எகிப்திய மன்னனுக்கு இந்த வேற்று தேசவாசிகளை சொந்த மக்களாய் நடத்த மனம் இல்லாமல் போகிறது. அவர்களை அடிமைகளாக மாற்றுகிறார்.

சுகமாய், சுதந்திரமாய் வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டுக்குள் அடிமைகளாக அவதிப்பட ஆரம்பித்தனர். நானூறு ஆண்டுகள் அவர்களுடைய நிம்மதியை ஒட்டு மொத்தமாகச் சிதைத்து விட்டது. அவர்கள் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். கடவுள் ஒரு விடுதலை வீரரை களமிறக்கினார். அவர் தான் மோசே !

மோசே, அவரது சகோதரன் ஆரோன் இருவரும் கடவுளின் துணையோடு எகிப்திய மன்னனிடம் சென்று இஸ்ரயேல் மக்களை விடுவிக்க கோரிக்கை விடுத்தனர். மன்னன் மசியவில்லை. கடவுள் மன்னனுக்கும் அவன் மக்களுக்கும் எதிராக போர் தொடுக்க ஆரம்பித்தார். தவளைகள், பூச்சிகள், உடலில் கொப்பளங்கள் என பல்வேறு எச்சரிக்கைகளை அனுப்பினார். இது எகிப்து மக்களை மட்டுமே பாதித்தது, இஸ்ரயேல் மக்களை பாதிக்கவில்லை. எனினும் எகிப்திய மன்னன் மனம் இளகவில்லை.

கடைசியாக இறைவன் தலைப்பேறுகளைக் கொன்றுவிட முடிவெடுத்தார். இஸ்ரயேல் மக்களின் தலைப்பேறுகள் இதிலிருந்து தப்ப வேண்டுமெனில் நிசான் மாதத்தின் 14ம் நாளன்று வயது ஒன்று நிரம்பிய ஆடு ஒன்றை பலியிட்டு, அதன் இரத்தத்தை வீட்டுக் கதவின் நிலைகளின் மேல் பாகத்திலும், இரண்டு பக்கங்களிலும் பூசவேண்டும்.

இரவில் கடவுளின் தூதர் அந்த நாடு வழியாக பயணிப்பார். இரத்தம் பூசப்பட்ட வீடுகள் தப்பும். மற்ற வீடுகளிலுள்ள தலைச்சன் பிள்ளைகள் இறக்கும் ! இஸ்ரயேல் மக்கள் அப்படியே செய்தனர். தப்பித்தனர். எகிப்தியர் வீடுகள் அனைத்திலும் தலைப்பேறுகள் இறந்தன. மன்னனின் மகனும் மரணமடைந்தான். ஒற்றை நாளில் எகிப்து தேசம், கண்ணீர் கடலானது. மன்னன் வெலவெலத்தான். அடிமை மக்கள் நாட்டை விட்டு வெளியேற அனுமதி கொடுத்தான்.

சாவின் தூதன் ‘கடந்து சென்ற’ அந்த விழா தான் பாஸ்கா என யூதர்களால் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. சுமார் 3300 ஆண்டுகள் பழமையான இந்த விழா, புதிய ஏற்பாட்டில் புதிய பரிமாணம் பெறுகிறது.

புதிய ஏற்பாட்டை நிஜம் என்றும், அதன் நிழல் தான் பழைய ஏற்பாடு என்றும் விவிலிய ஆய்வாளர்கள் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விழா இயேசுவின் மரணத்தின் நிழல் !

பாஸ்கா விழாவுக்கு ஒரு ஆடு கொல்லப்பட வேண்டும். புதிய ஏற்பாடு இயேசுவை ஆட்டுக்குட்டியுடன் ஒப்பிடுகிறது.

பாஸ்காவில் கொல்லப்படும் ஆட்டின் வயது ஒன்று, அது மனித வயதோடு ஒப்பிடுகையில் 30 என்கின்றனர் ஆய்வாளர்கள். இயேசுவின் வயது 33 !

பாஸ்காவில் ஆடு கொல்லப்பட வேண்டிய நேரம் மதியம் சுமார் மூன்று மணி ! இயேசு கொல்லப்பட்ட நேரம் மதியம் மூன்று மணி !

இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறியபின் மன்னன் மீண்டும் பிந்தொடர்ந்து சென்று அவர்களைப் பழிவாங்க முயல்கிறார். இஸ்ரயேல் மக்களுக்காக கடவுள் செங்கடலை இரண்டாய் பிரிக்க, மக்கள் அதன் வழியே நடந்து மறுகரைக்குச் செல்கின்றனர். துரத்தி வந்த எகிப்திய படை நீரில் மூழ்கி அழிகிறது. இப்போது முழுமையான விடுதலை. இஸ்ரயேல் மக்கள் எகிப்தை விட்டு வெளியேறிய மூன்றாவது நாள் இது நிகழ்கிறது. இயேசு மரணத்தை வென்று உயிர்த்தது மூன்றாவது நாள் !

இப்படி இயேசுவின் மீட்பின் வாழ்க்கை இஸ்ரயேல் மக்களின் விடுதலை வாழ்க்கையோடு நெருக்கமாய் இணைந்து விடுகிறது.

” நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.(1 கொரி 5 : 7 ) ” எனும் விவிலியம் இயேசுவின் மரணத்தையும் உயிர்ப்பையும் ‘புதிய பாஸ்கா’ வாகக் கொண்டாடுகிறது.

பாவம் எனும் இருள் கொண்டு வருகின்ற சாவை, இயேசுவின் இரத்தம் எனும் பலி மீட்கிறது. அதை நினைவு கூர்ந்து பாவ வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் எனும் சிந்தனையை இந்த விழா நமக்கு விளக்குகிறது.

*

Posted in Articles, Desopakari

கடலும் கடவுளும் !

கடலும் கடவுளும் !

Image result for sea and Christianity

எவையெல்லாம் மனிதனை அச்சுறுத்தியதோ, எவையெல்லாம் மனிதனை பிரமிப்பூட்டியதோ அதையெல்லாம் மனிதன் கடவுளாய் அழைக்கத் துவங்கினான் என்பது மனித வரலாறு. கடலும்அப்படிப்பட்ட ஒரு வியப்புக் குறியீடாக இருந்ததால் தான் கடலைச் சுற்றி பல்வேறு கடவுள்கள் உலா வருகின்றனர்.

கிரேக்க புராணக் கதைகளைப் புரட்டிப் பார்த்தால் ஏகப்பட்ட கடல் தெய்வங்கள் காணக்கிடைக்கின்றன. அவை தான் ஹாலிவுட் திரைப்படங்களின் அனிமேஷன் தினவுக்குத் தீனி இடுகின்றன.கண்முன்னால் மாயக்காட்சிகளை விவரிப்பதும், ஒரு மர்ம உலகத்துக்குள் நம்மை பயணிக்க வைப்பதுமாய் ஒரு கமர்ஷியல் விருந்துக்கு இத்தகைய கதைகள் தான் கிரியா ஊக்கிகளாகின்றன‌.

உதாரணமாக குமுக்வே எனும் ஒரு கடல் தெய்வம் ஒன்றுண்டு. அவருக்கு கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஒரு சாம்ராஜ்யம் இருக்கிறது. சர்வ வல்லமை பொருந்திய கடவுள் அவர். கடல் மீன்களுக்கு அவர்தான் கட்டளையிடுவார். கடலைத் தொட்டு வேண்டுதல் செய்பவர்களைக் குணமாக்கும் வல்லமை அவருக்கு உண்டு. அவருடைய கோட்டையை கடல் சிங்கங்கள் காவல் புரிகின்றன. அவை கடலுக்குள்கர்ஜித்தபடி  நடமாடித் திரிகின்றன. ஒரு மாபெரும் ஆக்டபஸ் அந்த கோட்டையில் காவல் தலைவனாய் இருக்கிறது.

இப்படி ஒரு காட்சியை வாசிக்கும்போதே ஒரு மிகப்பெரிய மாயாஜால காட்சி மனதில் விரிகிறது அல்லவா ? அதைத் தான் இத்தகைய புனைக் கதைகள் செய்கின்றன. இவற்றில் எதுவும்உண்மையில்லை. இவையெல்லாம் மனிதனின் கற்பனை வீதியில் விளைகின்ற கடவுள்கள் தான். இந்தக் கடவுள்களை விதைப்பதும், விளைவிப்பதும், விற்பதும் மனிதர்களே !

உண்மையில் கடல் என்பது கடவுளின் படைப்பு என்பதையே விவிலியம் விளக்குகிறது. கடவுளின் படைப்பின் ஒரு சிறிய பாகமே கடல் ! “கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்” என்கிறதுசங்கீதம் 95:5. பிரபஞ்சத்தின் பார்வையில் பூமியும் ஒரு துகளே ! அந்தத் துகளின் பாகமான கடல் கடவுள் பார்வையில் அணுவளவே ! கடவுளின் பார்வையில் அணுவளவான விஷயம், மனிதனுடையபார்வையில் பிரமிப்பின் உச்சம் ! இதுவே கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான வித்தியாசம்.

விவிலியம் கடலை பல விதங்களில், பல வகைகளில் பயன்படுத்துகிறது ! கடக்க முடியாத செங்கடலை இறைவன் வற்றச் செய்கிறார் ! யோர்தான் நதி இரண்டாய் பிரிந்து வழிவிடுகிறது ! அலைகின்றகடலை இறைவனின் வார்த்தை அடங்கச் செய்கிறது ! அமைதியான கடலின் முதுகில் இயேசு நடந்து வருகிறார் ! என விவிலியம் கடலையும், கடல் சார்ந்த இடங்களையும் கலந்தே தனது நற்செய்தியைநகர்த்துகிறது.

இயேசுவின் போதனைகள் பெரும்பாலும் கடற்கரையோரங்களில் தான் நடந்தன ! இயேசுவின் சீடர்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழிலைச் செய்தவர்களே ! இயேசுவின் போதனைகளிலும் கடலும்கடல்சார் பொருட்களும் இடம்பிடிக்கின்றன ! இப்படி எங்கும் கடல் ஒரு குறியீடாக விவிலியம் முழுவதும் தொடர்கிறது.

யோனாவின் வாழ்க்கை கடலோடு கலந்தது ! திசை மாறிப் போன யோனாவை இறைவன் கடல் வழியாகக் கரை சேர்க்கிறார். உலகின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் யோனா பயணித்த மீன் தான் ! மீனைவிழுங்கி வாழ்ந்த மனிதர்களின் காலத்தில் மீன் விழுங்கியதும் யோனாவைத் தான். யோனா வின் கதை நமது பார்வைக்கு ஒரு புனைக்கதை போலத் தோன்றும். இயேசுவே யோனாவை தனதுபோதனையில் சுட்டிக்காட்டியதன் மூலம் அதன் உண்மைத் தன்மையை மீண்டும் ஒரு முறை விவிலியம் உறுதிப்படுத்துகிறது !

ஃபால்க்லாந்த் தீவுப்பகுதியில் 1900களில் ஒரு திமிங்கலம் ஒரு மனிதரை விழுங்கி மூன்று நாட்களுக்குப் பின் கடற்கரையில் விடுவித்த வரலாறு உண்டு. தோலில் மட்டும் காயங்களோடு அவர்உயிர்பிழைத்ததாக வரலாறுகள் குறித்து வைத்துள்ளன !

எது எப்படியோ, கடல் என்பதும் கடற்கரை என்பதும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத இடங்கள் என்பதில் சந்தேகமில்லை. சோர்வுகள் சுற்றப்பட்ட நிலையில் கடற்கரையில் வந்தமரும்மனிதர்கள் அதன் பிரம்மாண்டத்திலும், அதன் காற்றிலும் சோகத்தை மணலோடு சேர்ந்து உதறி விடுவது வெகு இயல்பு.

இந்தக் கடலை இறைவனோடு ஒப்பிட்டால் நமக்கு சில ஆன்மீகப் பாடங்கள் கிடைக்கின்றன.

  1. கடலின்ஆழமும், கடவுளின் நேசமும் !

கடற்கரையில் அமர்ந்து கடலின் பிரம்மாண்டத்தை வியக்கும் அனைவரின் மனதிலும் இருக்கின்ற ஒரு கேள்வி, இத்தனை பிரம்மாண்டம் எப்படி இங்கே அமைதியாய் இருக்கிறது என்பது தான். இதன்ஆழம் என்ன என்பதை யாரால் கண்டுபிடிக்க முடியும் ? கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு கப்பலைக் கண்டுபிடிக்க மனிதர்களுக்கு பல நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன. பலகண்டுபிடிக்கப்படாமலேயே போய்விடுகின்றன ! அந்த அளவுக்கு ஆழமானது கடல் !

கடவுளின் அன்பும் அளவிட முடியாத ஆழமானது ! கரங்களுக்குள் அடக்கி விட முடியாத அளவுக்கு நீளமானது ! கண்ணுக்குத் தெரிந்த ஒரு பொருளுடன் ஒப்பிடவேண்டுமெனில் கடவுளின் அன்பை ஒப்பிடகடலை விட அழகான ஒரு பொருள் கிடைப்பதில்லை. கடவுளின் இயல்புகளைப் பற்றிப் பேசும்போது விவிலியம் கடலை இதனால் தான் உதவிக்கு அழைக்கிறது. கடவுளின் எல்லை ஆழ்கடலை விடஅகலமானது (யோபு 11 9 ) என்கிறது விவிலியம். கடவுளுடைய தீர்ப்புகள் கடல்போல் ஆழமானவை என்கிறது சங்கீதம் !

அன்பு என்பது அமைதியாய் இருக்கும். நமது மனங்களிலும் அத்தகைய ஆழமான ஒரு அன்பு நிலை உருவாக வேண்டும். அந்த அன்பு நீந்த நீந்த தீராததாக, மூழ்க மூழ்க தரையை எட்டாததாக இருக்கவேண்டும்.

  1. அலைகளாய்,செயல்கள்

“கடற்கரையிலேயே இவ்வளவு அலைகள் இருந்தால் கடலுக்கு உள்ளே நடுக்கடலில் ஏகப்பட்ட அலைகள் இருக்கும்   இல்லையா ? ” என அப்பாவின் கையைப் பிடித்து ஒரு முறை கேட்டேன். ‘கரைகள் தான்சலசலக்கும், ஆழ்கடல் அமைதியாய் இருக்கும்’ என்றார். அப்போது அதை என்னால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. இப்போது அந்த உண்மை மிக எளிதாய் நமக்கு புரிந்து விடுகிறது.

அன்பின் பிரம்மாண்டம் அமைதியாய் இருக்கிறது. இரக்கத்தின் செயல்கள் அலைகளாய் அலைகின்றன எனலாம். ஆழமான அன்பு கொண்ட கடலில் தான் அலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டேஇருக்கும். ஒரு டம்ளர் நீரில் அலை வருவதில்லை. நீர்த்தேக்கங்களில் மிகச் சிறிய அலைகள் எழும். அன்பின் ஆழம் எங்கே அதிகமாய் இருக்கிறதோ, செயல்களின் வேகமும் அங்கே தான் அதிகமாகஇருக்கும்.

நமது இதயம் அன்பின் கடலாக இருக்கிறதா என்பதை நமது செயல்கள் எனும் அலைகள் எவ்வளவு தொடர்ச்சியாக வீசிக்கொண்டிருக்கின்றன என்பதை வைத்து அறிந்து கொள்ளலாம். அலையடிக்காதகடலாய் நாம் இருந்தால், உடனடியாக நமது இதயத்தின் அன்பை கேள்விக்கு உட்படுத்துவோம். அன்பின் செயல்களை அலைகளால் அறிவிப்போம்.

  1. உப்புக்கரிக்கும்,தப்பை உரைக்கும்

கடல் நீரை அள்ளி கண்களில் தெளித்தால் உறுத்தும் ! நாவில் உப்புக்கரிக்கும். கடலின் அலைகள் சில வேளைகளில் நம்மைப் புரட்டித் தள்ளும். பாய்மரப் பயணங்கள் நம்மை நிலைகுலைய வைக்கும்.கடலுக்குள் பயணிக்கவும், கடவுளுக்குள் பயணிக்கவும் நமக்கு துன்பங்களைச் சகிக்கும் மனநிலை வரவேண்டும். சின்னச் சின்ன அசௌகரியங்களைக் கண்டு பயந்தால் கடல் அலைகளின் அழகைரசிக்க முடியாது. எதிர்பாரா நிகழ்வுகள் வருமோ என அஞ்சினால் கடல்பயணம் கைவராது.

கடலலையில் கால்நனையாமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பவர்களின் சகவாசம் மணலோடு முடிந்து போய் விடுகிறது. கிளிஞ்சல்களோடு திருப்திப்படும் வாழ்க்கை அது ! ஆனால் கடலோடுகலக்க தயாரானால் மட்டுமே இனிமைகள் சொந்தமாகும்.

  1. ஆழங்கள்அழகானவை

கடலில் இருக்கின்ற உயிரினங்களின் வகைகளை மனுக்குலம் இதுவரை கண்டுபிடித்து முடிக்கவில்லை. இன்னும் சுமார் 70% கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறது அறிவியல்.இதுவும் ஒரு தோராயக் கணக்கு மட்டுமே. இந்த சதவீதம் 99 விழுக்காடு என்று இருந்தால கூட ஆச்சரியம் இல்லை.

ஆழ்கடலில் மூழ்குபவர்கள் முத்துகளைக் கண்டடைகிறார்கள். புதிய அனுபவங்களைப் பெறுகிறார்கள். யாருக்கும் கிடைக்காத அழகிய புதையல்களை சொந்தமாக்குகின்றார்கள். கடலின் எழிலைவிழிகளுக்கு வழங்குகின்றனர்.

இறை அனுபவமும் அப்படியே. இறை வார்த்தைகளில் மூழ்குபவன் கடல் தரும் வியப்பைப் போல, கடவுள் தரும் வியப்பைக் கண்டு கொள்கிறான். மூச்சடக்கி மூழ்கத் தயாராக இருந்தால், இறைவனதுபிரமிப்பின் அழகைக் கண்டு கொள்ள முடியும்.

  1. தீராதவை!

எத்தனை கோப்பைகளில் அள்ளி அள்ளிக் கரையில் கொட்டினாலும் தீராத ஒன்று கடல் மட்டும் தான். கடவுளின் மன்னிப்பும் அத்தகையதே. நமது பாவங்கள், தவறுகள் கடலில் இருந்து தண்ணீரைஅள்ளி வெளியே கொட்டுகின்றன. ஆனால் கடல் குறைபடுவதில்லை. தண்ணீர் தரமாட்டேன் என தகராறு செய்வதில்லை. வேண்டும் அனைவருக்கும் மன்னிப்பை அளிக்கிறார் இறைவன். முரண்டுபிடிப்பதில்லை.

தீராத அன்பெனும் இறைவனை விடாமல் பற்றிக் கொண்டிருக்கின்றோமா என்பதே கேள்வி. கடல் எனும் கடவுளின் அன்பை, கடல் எனும் கடவுளின் மன்னிப்பை, தன்னை இழந்து மழையாய் பூமியைசிலிர்க்க வைக்கும் நேசத்தை, பொக்கிஷங்களைத் தன்னுள் புதைத்து வைத்து மனிதனை அழைக்கும் மென்மையை நாம் புரிந்து கொள்கிறோமா என்பதே கேள்வி !

கடல் என்பது ஒரு குறியீடு ! இறைவனின் அன்பைப் போல ஈரம் வற்றாத ஒரு இடம். சோகத்தை கரைக்கும் ஒரு இடம். கடலெனும் கடவுளின் அன்பை உணர்வோம், உரைப்போம்.