புனைவும், நிஜமும் கலந்த ஒரு கதை. விவிலியத்தில் எஸ்தர் நூலில் வரும் வஸ்தி என்கின்ற கதாபாத்திரத்தை மையமாய்க் கொண்டது.
காட்சி 1
( மன்னர் அகஸ்வேரின் முன்னால் , கைகளில் மதுக்கோப்பைகளுடன் தலைவர்கள் அவரைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர் )
கர்சனா : மன்னரே ! உம்மைப் போல ஒரு அரசர் இந்த பூமியில் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப் போவதுமில்லை !
அரசர் : ( புன்னகையுடன் ) எப்படிச் சொல்கிறீர் ?
கர்சனா : இதுவரை யாராவது ஆறு மாத காலங்கள் தொடர்ந்து விருந்தளித்த வரலாறு உண்டா ? ஆறு மாத காலங்கள் குறுநில மன்னர்கள், தலைவர்கள், படைத்தலைவர்கள், உயர்குடி மக்கள் இவர்களுக்கெல்லாம் நீர் வைத்த விருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்கது. காலத்தால் அழியாதது.
அரசர் : ம்ம்… மகிழ்ச்சி ! மகிழ்ச்சி !!
சேத்தார் : விருந்து வைப்பது கூட எளிது தான். ஆனால், அதை இப்படி சுவை பட வைப்பது ரொம்ப ரொம்பக் கஷ்டம் ! என்ன ஒரு சுவை ! தேவலோகத்திலிருந்து இறங்கி வந்த சுவையல்லவா இது ! இப்படி ஒரு விருந்து யாருக்குக் கிடைக்கும் ?
அரசர் : ஹா..ஹா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி.. ரொம்ப மகிழ்ச்சி.
அதிமாத்தா : விருந்தைக் கூட சுவையாய்க் கொடுத்து விடலாம். ஆனால் நீங்கள் கொடுக்கின்ற இந்த மது இருக்கிறதே ! இதென்ன சொர்க்கத்திலிருந்து சொட்டுச் சொட்டாய் விழுந்ததா ? நாவில் விழுவதும் தெரியவில்லை, நாசியில் நுழைவதும் தெரியவில்லை. போதை மட்டும் மேகத்துக்குத் தூக்கிச் செல்கிறது.
மன்னன் : இருக்கட்டும் இருக்கட்டும்.. அருந்துங்கள்….
தர்சீசு : ஆறு மாத விருந்து கூட அரசருக்குப் பெரிதல்ல. ஆனால் அந்த ஆறு மாத காலங்களும் விளம்பரப் படுத்துமளவுக்கு நீங்கள் சாதனை புரிந்திருக்கிறீர்களே ! அது தான் வியக்க வைக்கிறது அரசே ! மிகப் பிரமாதம் ! நீங்கள் சாதனைகளின் சகாப்தம்.
அரசர் : ஹா..ஹா… நமது அரசு சாதனைகளின் அரசல்லவா !!
மெரேசு : சாதனைகள்ன்னா சும்மாவா ? மூன்றே ஆண்டு காலத்தில் நீங்கள் நிறைவேற்றியவையல்லவா இவை. மூன்றாண்டு சாதனை போலவா இருக்கிறது ? ஏதோ நூற்றாண்டு விழா போல அல்லவா இது இருக்கிறது.
அரசர் : மகிழ்ச்சி.. மது அருந்துங்கள்.. மது அருந்துங்கள்..
மெர்சனா : அது மட்டுமா ? இந்தியா முதல் எத்தியோப்பியா வரை நூற்று இருபத்தேழு மாநிலங்கள். யாரால் நிர்வகிக்க முடியும். யாரால் இப்படிப்பட்ட ஒரு சாதனையைச் செய்ய முடியும் ?
அரசர் : (மீசையை முறுக்கி விடுகிறார் )
மெமுக்கான் : ஆறு மாத விழாவையே தூக்கிச் சாப்பிடுவது போல அல்லவா இந்த ஏழு நாள் விழா இருக்கிறது. இந்த ஒரு வார விழாவைப் போல இன்னொரு விழாவை எங்கேனும் பார்க்க முடியுமா ? எப்போதேனும் பார்க்க முடியுமா ?
தர்சீசு : இது என்ன கேள்வி ? இப்படி ஒரு விருந்து இனிமேல் எங்கும் நடக்கப் போவதில்லை. கேட்குமளவுக்கு மதுவும் உணவும் மக்களுக்குக் கிடைக்கிறது. அதுவும் உயர்ந்த தரமான விருந்து. மிக உயர்ந்த தரமான மது.
மெரேசு : எல்லாரும் விருந்து வைத்தால் பெரிய தலைவர்கள் சிலருக்கு மட்டும் தான் விருந்து வைப்பார்கள்.ஆனால் மன்னருடைய விருந்தைப் பாருங்கள். தலைவர்கள் மட்டுமல்லாமல், தலைநகரிலுள்ள மக்கள் எல்லாருக்கும் விருந்து வைக்கிறாரே !
மெர்சனா : உணவே இல்லாமல் இருப்பவனுக்குக் கூட விருந்துண்ண அழைப்பு, சிவப்புக் கம்பள வரவேற்பு ! இது ஏதோ கற்பனை உலகு போல அல்லவா இருக்கிறது.
சேத்தார் : நாவுக்கு மட்டுமா விருந்து ? கண்ணுக்கு விருந்து எவ்வளவோ இருக்கிறதே ! நீல நிற தொங்கு திரை விழிகளை விட்டு விலகவில்லை.
உயர் தர கற்கள், பளிங்கு, முத்துகள் பதிக்கப்பட்ட தளம். தங்கமும் வெள்ளியும் இழைக்கப்பட்ட மஞ்சங்கள். சொர்க்கம் இப்படித் தான் இருக்குமோ என அருகில் பார்ப்பவன் எவனுமே அதிர்ச்சியடைவான் என்பது நிச்சயம்.
அரசர் : நன்றி நன்றி..
மெமுக்கான் : அரசே… அரசின் பெருமைகளை உரைத்து விட்டீர்கள். சுவைமிகு உணவினை அளித்து விட்டீர்கள். மனமகிழ் மதுவினை கொடுத்து விட்டீர்கள். மயங்கிப் போய் கிடக்கிறோம் நாங்கள். இதுக்கு மேல் என்ன இருக்கப் போகிறது ?
அரசன் : ஹா..ஹா.. இன்னும் ஒன்று இருக்கிறது.
மெமுக்கான் : இன்னும் ஒன்றா ? இந்த மதுவை விட மேலானதா ?
அரசர் : மதுவை விட மட்டுமல்ல, இந்த சாம்ராஜ்யத்திலேயே அழகான ஒன்று.
தர்சீசு : மன்னரே.. இதற்கு மேல் அழகாக ஒன்றா ? நம்ப மனம் மறுக்கிறதே !
அரசர் : உங்கள் கண்களையே நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
மெர்சனா : நீங்கள் சொல்வதை எங்கள் காதுகளே நம்ப முடியாமல் திகைக்கின்றன. அப்படி என்ன அபூர்வ விஷயம்.
அரசன் : அதைப் பார்த்தால் மதுவை விட அதிகமாய் நீங்கள் மயங்குவீர்கள்.
அதிமாத்தா : வியப்புக்கு மேல் வியப்பளிக்கிறீர்கள் மன்னரே. அப்படி என்ன தான் இருக்கிறது. காட்டுங்கள். இருப்பு கொள்ளவில்லை. விருப்பு தாளவில்லை.
அரசர் : பிரபஞ்சத்தின் பேரழகி ! வளைவுகளால் வீழ்த்துபவள், அசைவுகளால் ஆட்கொள்பவள்
மெமுக்கான் : அது யார் அரசே !
அரசன் : அரசி வஸ்தி ! அவளைக் கொண்டு வருகிறேன். உங்கள் முன்னால். ரசியுங்கள்.
தர்சீசு : அரசியையா ?
அரசர் : ஆம்.. அவளே பேரழகி. நான் கண்டு களித்த அந்த பேரழகு இன்று உங்கள் விழிகளுக்கு விருந்தாகப் போகிறது. அவள் விழிகளைப் பார்த்தாலே விழுந்து விடுவீர்கள்.
மெமுக்கான் : அரசே எதிர்பார்ப்பு கூடுகிறது. தாமதம் ஏன் ? அவையை அழகு நிரப்பட்டும்.
அரசர் : அண்ணகர்களே… நீங்கள் சென்று அரசி வஸ்தியை இங்கே அழைத்து வாருங்கள்.
அண்ணகர்கள் : உத்தரவு அரசே.
அரசர் : மகுடம் அணிந்த மங்கையாய் அவள் வரட்டும். அவள் அழகை இந்த அவைக்குத் தரட்டும்.
அண்ணகர்கள் : உத்தரவு அரசே !
அரசர் : அவள் ஒரு பேரழகி. அந்தப் பேரழகுப் பெட்டகம், இந்த அவையிலே நடமாடட்டும். உடனே அழைத்து வாருங்கள். மயக்கத்தில் கிடக்கும் அரசவை மூர்ச்சையாகட்டும். ஹா…ஹா
அண்ணகர்கள் : உத்தரவு அரசே ( செல்கின்றனர் )
காட்சி 2
( வஸ்தி அரசியிடம் அண்ணகர்கள் செல்கின்றனர் )
அரசி : வாருங்கள் அண்ணகர்களே… யாவும் நலமா ?
அண்ணகர்கள் : நலம் அரசியாரே !
அரசி : விருந்து நிகழ்ச்சிகள் இன்றுடன் முடியப் போகின்றன ! பெண்டிர்க்கு யான் இங்கே விருந்தளிக்கிறேன். எல்லாம் நன்றாக இருக்கின்றன ! அங்கே எல்லாம் நல்ல முறையில் நடக்கிறதா ?
அண்ணகர்கள் : அனைத்தும் அருமை அரசியாரே. அரசரும் நண்பர்களும் விருந்தில் மகிழ்ந்திருக்கின்றனர். மகிழ்வில் திளைத்திருக்கின்றனர்.
அரசி : மகிழ்ச்சி. அரசின் புகழும் அரசரின் புகழும் மக்களைச் சென்று சேர்ந்திருக்கும்.
அண்ணகர்கள் : ஆம் அரசியாரே ! எல்லாம் நல்ல முறையில் நடந்திருக்கிறது.
அரசி : சரி, ஏதோ விஷயமாக வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன். சொல்லுங்கள் என்ன விஷயம் ?
அண்ணகர்கள் : அரசியாரே.. அரசர் உங்களை அழைத்து வரச் சொன்னார்.
அரசி : என்னையா ? ஆண்களின் அவையில் நான் எதற்கு ? நான் இங்கே அரசவைப் பெண்டிர்க்கு விருந்தளித்துக் கொண்டிருக்கிறேனே
அண்ணகர்கள் : மன்னிக்கவும் அரசியாரே.. உங்களை அரச மகுடம் சூட்டி அழைத்து வர அரசனின் உத்தரவு.
அரசி : அரச மகுடம் சூட்டியா ? ஏன் என்ன விஷயம் ?
அண்ணகர்கள் : உங்கள் பேரழகை பிறருக்குக் காட்ட அரசர் ஆசைப்படுகிறார் அரசியாரே !
அரசி : என்ன ? எனது பேரழகை ஆண்கள் அவையில் காட்ட அரசர் ஆசைப்படுறாரா ? என்ன சொல்கிறீர்கள் ?
அண்ணகர்கள் : ஆம் அரசியாரே. மக்களும் தலைவர்களும் உங்கள் எழிலைக் காண வேண்டுமென மன்னர் ஆசைப்படுகிறார்.
அரசி : உலகிற்கு எழிலைக் காட்ட நானென்ன விலைமகளா ? நான் விலையற்ற மகள். பெல்ஷாத்சாரின் மகள் நான் நெபுகத் நேசரின் பேத்தி நான்.
அண்ணகர்கள் : யாம் அறிவோம் அரசியாரே.. அரச கட்டளை
அரசி : என்ன அரச கட்டளை ? வஸ்தியின் வஸ்திரம் மோகக் கண்களுக்கு சாமரம் வீசவேண்டுமா ? அவர்களின் மதுக் கோப்பைகளின் வழியும் விரசத்துக்கு விலை நானா ?
அண்ணகர்கள் : அரசியாரே மன்னிக்கவும்… கட்டளையை சுமந்து வரும் பணியாளர் நாங்கள்.
அரசி : ( கோபத்தில் ) விருந்துகளோடு வாழ்க்கை நடத்தும் மன்னருக்கு பெண்ணின் உணர்வுகள் தெரிவதில்லை. விருந்து தருகிறேன் என்று நாளை யாராவது அழைத்தால் கூட அவர்களோடு சென்று அவர்கள் சொல்வதையெல்லாம் செய்யும் மன்னர் இவர்
அண்ணகர்கள் : கோபம் வேண்டாம் அரசியாரே…
அரசி : மன்னரின் அனுமதியின்றி அவர் முன்னால் நான் செல்லக் கூடாது என்பது அவரது சட்டம். இப்போது அவர் முன்னால் செல்வது காமுகர்களின் கழுகுக் கண்களுக்கு நான் விருந்தாகவா ? இதுவா அவர் திட்டம் ?
அண்ணகர்கள் : ( அமைதி )..
அரசி : பெண்களின் உடலை மட்டுமே ஊடுருவிப் பார்க்கும் இந்த அரசவைக் கண்களுக்கு, அவர்களின் இதயத்தை தொட்டுப் பார்க்க நேரமும் இருப்பதில்லை, விருப்பமும் இருப்பதில்லை என்பது எவ்வளவு பெரிய துயரம்.
அண்ணகர்கள் : உங்கள் கோபம் நியாயமானது அரசியாரே..
அரசி : மதுவின் மடியில் புரளும் அரசரின் நண்பர்கள் சொல்லவில்லையா ? அரசியின் மானம் அரசவையில் அழிய வேண்டாமென ?
அண்ணகர்கள் : இல்லை அரசியாரே…
அரசி : செல்லுங்கள். அரசி வஸ்தி அரசனின் முன்னால் வரமாட்டாள் என சொல்லுங்கள்.
அண்ணகர்கள் : அரசியாரே.. இது அரச கட்டளை.. மீறினால்..
அரசி : தெரியும் ! அரச கட்டளையை மீறினால் என்ன நடக்கும் என்பது தெரியும். அரசி எனும் பட்டம் விடைபெறலாம். அரசவையின் சுகங்களெல்லாம் முடிவுறலாம். மஞ்சத்தின் மேலிருந்து நான் விரட்டப்படலாம்.
அண்ணகர்கள் : ஒருவேளை… அதையும் தாண்டி….
அரசி : தெரியும். பட்டையத்தின் முனை என் குருதி குடிக்கலாம். சட்டென என் உயிர் சடுதியில் மறையலாம். மானம் இழந்து உயிர்வாழ்வதா ? உயிரை இழந்து மானம் காப்பதா ? எனது பெண்மை என்ன வலுவிழந்த நாணலா ? அவமானம் சுமப்பதை விட அழிவை சுமப்பேன்.
அண்ணகர்கள் : அரசியாரே.. சற்று நேரம் மட்டும் ..
அரசி : சிறு துளி விஷம் போதும் ஜீவனை அழிக்க. ஒரு சிறு கறை போதும் ஓவியம் சிதைக்க. கணநேரம் போதும் என் கண்ணியம் குலைக்க. அரசி மறுத்தாள் எனச் சொல்லுங்கள். வரலாறு வெறுத்தாலும் பரவாயில்லை. விளைவுகளை நான் சந்திக்கிறேன்.
அண்ணகர்கள் : இன்னுமொரு முறை சிந்தித்துப் பார்க்கலாமே
அரசி : மீண்டும் மீண்டும் சிந்திப்பது என்பது தவறுகளுக்கு அனுமதிப் பத்திரம் கொடுப்பது போன்றது. எனக்குள்ளும் அரச இரத்தமே அசராள்கிறது. மகுடம் இழப்பேன், மகிமை இழக்க மாட்டேன். வேண்டாம், இன்றோடு என்வாழ்க்கை முடிந்தாலும் முடியட்டும். அன்னியர் முன் அவமானத்தை முள்முடியாய் சுமக்க மாட்டேன்.
அண்ணகர்கள் : வணக்கம் அரசியாரே. உம் உறுதி கண்டோம். உம் முடிவை அரசர்க்கு எடுத்துரைப்போம்.
( விடைபெறுதல் )
காட்சி 3 :
( அரசர் முன்னால் அண்ணகர்கள். )
அரசர் : எங்கே அரசியார் ?
அண்ணகர்கள் : அது.. வந்து.. அரசரே…
அரசர் : சொல்லுங்கள்.. என்ன இழுக்கிறீர்கள் ?
அண்ணகர்கள் : அரசரே… அரசியாருக்கு இங்கே வரவிருப்பமில்லை என சொல்லச் சொன்னார்கள்.
அரசர் : என்னது ? விருப்பமில்லையா ? மகுடம் சூட்டி வரச் சொன்னேனே ? சொன்னீர்களா ?
அண்ணகர்கள் : சொன்னோம் அரசே..
அரசர் : இது அரச கட்டளை என்றீர்களா ?
அண்ணகர்கள் : ஆம் அரசே !
அரசர் : அரசரின் கட்டளையே அவமானப்படுத்தப்பட்டிருக்கிறதா ? என்ன தைரியம் !
அண்ணகர்கள் : அரசே.. உங்களுக்குள் கோபம் கொழுந்து விட்டெரிவதை யாம் அறிவோம். நாங்கள் வெறும் தகவல் பகிர்பவர்கள்.
அரசர் : ம்ம்…நீங்கள் போகலாம்
கர்சனா : என்ன அரசரே.. என்ன விஷயம் ?
அரசர் : என் அழைப்பை அரசி மறுத்திருக்கிறாள். இங்கே வர முடியாது என்கிறார்.
கர்சனா : சரி.. விடுங்கள் அரசே…
மெமுக்கான் : எதை விடுவது ? மக்களுக்கும், மற்றவர்களுக்கும் முன்னால் அரசர் அவமானபடுவதை விடுவதா ? இல்லை அரசரை விட பெரியவர் எனும் நினைப்பு அரசியிடம் இருப்பதை விடுவதா ? அரச கட்டளையின் மரியாதை களங்கப்பட்டிருப்பதை விடுவதா ? இல்லை ஆணை விட பெண்தான் பெரியவள் எனும் ஆணவத்தை விடுவதா ?
அரசர் : என்ன செய்யலாம் ?
மெமூக்கான் : தலைமைக்கு ஒரு இழுக்கெனில் அது தலைமுறைக்கே இழுக்கு. நாட்டுக்கே இழப்பு. இது முளைவிட்ட முள்மரம். கிள்ளவில்லையேல் கொல்லும். வெட்டவில்லையேல் அழிக்கும். சிதைக்கவில்லையேல் செழிக்கும்.
அரசர் : என்ன சொல்ல வருகிறீர்கள்
மெமூக்கான் : அரசனையே அரசி மதிக்கவில்லை, ‘உன்னை நான் மதிக்க வேண்டுமா’ என அத்தனை பெண்களும் ஆணவம் ஏந்துவர். ஆண்கள் அடிமையாவர். பணிந்திருப்பது தானே பெண்மைக்கு நாம் தரும் பணி. அதனதன் இடத்தில் அதது இருப்பது தானே நாட்டுக்கும் நல்லது, வீட்டுக்கும் நல்லது ?
அரசர் : உண்மை தான்.
மெமூக்கான் : அரசிக்கு பேரழகி எனும் திமிரா ? இல்லை அவர் பெரியவர் என்ற நினைப்பா தெரியாது. ஆனால் ஆண்களுக்கெல்லாம் இது அதிர்ச்சி. எனவே …
அரசர் : எனவே.. சொல்லுங்கள்.. என்ன செய்யலாம் ?
மெமூக்கான் : அரசியை அகற்றுங்கள். இப்போது உங்கள் முன் வராத அரசி, இனி எப்போதும் வரக்கூடாதென சட்டம் இயற்றுங்கள். மகுடம் தரிக்க மறுத்தவருக்கு மஞ்சத்தை மறுத்து விடுங்கள். இது பெண்களுக்கு பாடமாகட்டும், ஆண்களுக்கு ஆறுதலாகட்டும்.
அரசர் : ம்ம்.உண்மை தான்.
மெமூக்கான் : சட்டம் இயற்றுங்கள். வஸ்தியை விட அழகான ஒரு பெண்ணை அரசியாக்குங்கள். வஸ்தியின் அஸ்திவாரம் கூட அசைக்கப்படட்டும். உமது அரசு நிலை பெறட்டும்.
அரசர் : அப்படியே செய்வோம். இது எனக்கு நலமெனப் படுகிறது.
மெமூக்கான் : பாரசீய, மேதிய சட்டங்களில் இடம் பெறும் வகையில் இந்த சட்டத்தை இயற்றுங்கள். அதை சாம்ராஜ்யம் முழுதும் பரப்புங்கள். மடல்கள் எழுதி மூலை முடுக்குகளிலும் அறிவியுங்கள்.
அரசர் : ம்ம்.. நல்ல யோசனை வேறு ஏதாவது ?
மெமூக்கான் : ஆண்களே வீடுகளில் ஆட்சி செலுத்தவேண்டும் என்பதையே சட்டமாய் எழுதி விடுங்கள். தெளிவாக இருக்கட்டும். ஆண்களின் கௌரவம் அழியாமல் காப்போம். பெண்மையின் திமிர் இனி எழும்பாமல் பார்ப்போம்.
அரசர் : அதிகாரிகளே.. இதை இன்றே சட்டமாக்குகிறேன். இதை என் சாம்ராஜ்யத்தின் அத்தனை வீடுகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள்.
அதிகாரி : உத்தரவு அரசே.
அரசர் : யாரங்கே.. மீண்டும் மது பரிமாறுங்கள். விருந்து தொடரட்டும்.
( முடிந்தது )