Posted in Articles, Bible Poems, Psalm

திருப்பாடல்கள் தரும்பாடங்கள் – 2

Week 3

திருப்பாடல்கள்
தரும்பாடங்கள்

Image result for psalm 2

மன்னர்களே,
விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;
பூவுலகை ஆள்வோரே, எச்சரிக்கையாயிருங்கள்.
அச்சத்தோடு ஆண்டவரை வழிபடுங்கள்;
நடுநடுங்குங்கள்! அவர்முன் அக மகிழுங்கள்!

திருப்பாடல்களின் இந்தப் பாடலை தாவீது மன்னன் எழுதியிருக்கிறார். அதை திருத்தூதர் பணிகள் உறுதிப்படுத்துகிறது. திருத்தூதர் பணிகளை எழுதிய லூக்கா, “எங்கள் தந்தையும் உம் ஊழியருமாகிய தாவீது வாயிலாக தூய ஆவி மூலம் ‘வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்? பூவுலகின் அரசர்களும் தலைவர்களும் ஆண்டவருக்கும் அவர்தம் மெசியாவுக்கும் எதிராக அணிவகுத்து நின்றனர்’ என்று இந்த திருப்பாடலைக் கையாண்டிருக்கிறார். இதன் மூலமே இந்தப் பாடல் தாவீது மன்னன் வழியாக தூய ஆவியார் எழுதி வைத்தது என்பதும், இயேசுவின் முன்னறிவிப்புப் பாடல் என்பதும், நமக்குத் தெரியவருகிறது.

சுருக்கமாக இந்தத் திருப்பாடலைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால், இரண்டு விதமான மனநிலைகளின் பாடல் என்று சொல்லலாம். இறைவனுக்கு எதிர்த்து நின்று அழிவது ஒரு மனநிலை, இறைவனுக்கு பணிந்து நின்று வாழ்வது இன்னொரு மன‌நிலை. எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதைப் பொறுத்து நமது வாழ்க்கையின் நிகழ்வுகள் அமையும்.

திருப்பாடலின் முதல் பகுதி, உலக மக்களும், அரசுகளும் ஏன் இறைவனுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன எனும் ஆச்சரியத்துடன் துவங்குகிறது. இறைவனுக்கு எதிரான போராட்டங்கள் எல்லாம், எரிமலைக்கு எதிராய் பனித்துளிகள் நடத்தும் போராட்டமாகவே முடியும். வெற்றி யாருக்கு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை. எனினும் அவர்கள் இறைவனுக்கு எதிராய் நிற்கின்றனர். ஒருவேளை பலரோடு இணைந்து போராடினால் இறைவனையே வென்று விடலாம் என நினைக்கிறார்களா தெரியவில்லை ? தீயவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தூயவருக்கு எதிராக அணி சேர்க்கின்றனர்.

இறைவனிடமிருந்து அருட்பொழிவு பெற்றவருக்கு (இயேசு) எதிராகவும் அவர்களுடைய போராட்டம் இருக்கிறது. இது வியப்பான விஷயம். மகனுக்கு எதிராய்ப் போரிடுபவன் தந்தைக்கு எதிராகப் போராடுகிறான். விண்ணகத் தந்தையும், இயேசுவும் ஒருவரே என்பதில் அவர்கள் குழம்பி விடுகின்றனர். இறைவனுடைய விருப்பத்துக்குள் வாழ்வின்ற வாழ்க்கை அடிமை வாழ்க்கை என்பது அவர்களுடைய சிந்தனை ! உண்மையில் தந்தையின் கரங்களுக்குள் இருப்பது தான் மகனுக்குக் கிடைக்கும் அதிகபட்ச மகிழ்ச்சியான வாழ்க்கை ! அதை மக்கள் உணர்வதில்லை.

ஆனால் கடவுளோ இவர்களுடைய செயல்களைப் பார்த்து நகைக்கிறார். சினத்துடன் சீறிப் பாயும் சிங்கத்துக்கு முன்னால் அணிவகுத்து நிற்கும் காலில்லா கட்டெறும்புகளைப் போல நிற்கும் மக்களைப் பார்த்து இறைவன் சிரிக்கிறார். ஆனால் அவர் அவர்களை இகழவில்லை. தன்னை எதிர்க்கிறார்களே எனும் கவலை அவருடைய இதயத்தில் நிரம்புகிறது. விண்ணகத்திலுள்ள இருக்கையில் அமைதியாக, தீர்க்கமாக அமர்ந்திருக்கிறார் அவர். அனைத்தும் அவருடைய கரங்களில் இருக்கின்றன. மக்களின் செயல் அவரை பதட்டமடைய வைக்கவில்லை, பயப்பட வைக்கவில்லை. தனது நீதியின் இருக்கையில் அவர் இருக்கிறார்.

வரலாறுகளின் பக்கம் முழுவதும் கிறிஸ்துவின் பெயரையும், கிறிஸ்தவத்தின் இருப்பையும் அழித்து விடவேண்டுமென கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கிய மனிதர்களால் நிரம்பியிருக்கிறது. இத்தனை நூற்றாண்டுகள் தாண்டியும் கிறிஸ்தவம் அழியவில்லை. அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள். இறைவன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.

ரோம மன்னன் டயோகிளேஷியன் ஹெர்குலிஸ் சீசர், கிறிஸ்தவர்களை மிகக் கொடுமையாய் தாக்கி அழித்தவன். ‘கிறிஸ்தவத்தை வேரோடு பிடுங்கி விட்டேன்’ என முத்திரை பொறித்து வைத்தான் ! காலம் அவனை அழித்துவிட்டது, அழிக்க நினைத்த இறை புகழை வளர்த்து விட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே அவன் மடிந்தான். இருபதாம் நூற்றாண்டின் படிகளிலும் கிறிஸ்தவம் தொடர் நடை போடுகிறது

மக்களின் அறிவீனத்தைக் கண்டு நகைக்கும் கடவுள், அவர்களை உடனே அழிக்கவில்லை. அவர்களோடு பேசுகிறார். தொடர்ந்து தவறு செய்யும் மகனை தந்தை தோளோடு அணைத்து அறிவுரை சொல்வது போல பேசுகிறார். கடிந்து பேசுகிறார். வார்த்தைகளில் அவரது அன்பு வெளிப்படுகிறது.

தனது மகனை இந்த உலகின் அரசராக நியமிக்கப் போவதை இறைவன் வெளிப்படுத்துகிறார். அனைத்து அரசர்களையும் விட பெரிய அரசராக, இறைவனின் பிரியத்துக்குரிய வாழ்க்கையைப் புரிய வைக்க வரும் பரமனாக ! தனது அன்புக்குரிய மகன் அவர் ! மண்ணுலக மக்கள் விண்ணுலகுக்கு எதிராக வெறுப்பை அனுப்பி வைக்கின்றனர், இறைவன் அதற்குப் பதிலாக அன்பை அனுப்பி வைக்கிறார்.

அனைத்து அதிகாரமும் கொண்ட மகனை அனுப்பி வைக்கிறார் இறைவன். அந்த இறைவனின் பாதங்களை முத்தமிட்டு அவரிடம் சரணடையும் மக்கள் மீட்பு பெறுவார்கள். அச்சத்தோடு இறைவனை வழிபடும் மன்னர்கள் வாழ்வார்கள்,அவர்களே இறைவன் முன்னிலையில் மகிழவும் செய்வார்கள். அவரது கோபத்தின் பெருமழை பொழியும் முன், இறைவனின் அடைக்கலக் குடையின் கீழ் ஒன்று சேர்பவர்கள் வாழ்வார்கள்.

ஆன்மீக வளர்ச்சி,
இறைவனின் பாதைகளை நிராகரிப்பதிலல்ல‌
அவரது பாதங்களை அரவணைப்பில் இருக்கிறது !

*

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s