உறவின்றி அமையாது உலகு !
கிறிஸ்தவம் உறவுகளின் முக்கியத்துவத்தை மிக அழகாகவும், ஆழமாகவும் நமக்கு விளக்குகிறது. கிறிஸ்தவம் என்பதே உறவின் மொழி தான். இறைவனுக்கும், மனிதனுக்கும் இடையேயான உறவே கிறிஸ்தவத்தின் அடிப்படை ! அந்த உறவு எந்த அளவுக்கு ஆழமாய்க் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை வைத்தே நமது ஆன்மிக வாழ்க்கை அளவிடப்படுகிறது.
விவிலியத்தின் துவக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது. மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.
இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார்.
ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன்.
உலகம் பாவத்தின் புயலில் அலைக்கழிக்கப்பட்ட போது, தன்னோடு உண்மையாய் அன்பு பாராட்டும் ஒரு சின்ன மக்கள் கூட்டமாவது இருக்கவேண்டும் எனும் அவருடைய ஆர்வம் தான் ஆபிரகாமை அழைத்தது. இஸ்ரயேல் மக்களினத்தை உருவாக்கியது. அவர்களோடு வாழ்விலும் தாழ்விலும் இணைந்து பயணித்தது.
இறைவன் உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். இறைவனை நேசி, சக மனிதனை நேசி ! என்பதே அவரது கட்டளைகளின் மையம்.
இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரைகளுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. இரயில் ஸ்நேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்ச்களும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலுவிழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம்.
அடுத்த வீட்டு நபரின் பெயர் என்னவென்பதே தெரியாத நகர வாழ்க்கை. வெற்றிலை குதப்பும் வாய்களோடு, “நல்லா இருக்கியா பிள்ளே” என அழைக்கும் அன்யோன்யம் தொலைந்த கிராம வாழ்க்கை. தனிமனிதன் சின்னச் சின்னச் சிறைகளுக்குள் அடைபட்டு வாழ்கிறான்.
ஏசியும், டிவியும், வேளாவேளைக்கு சோறும் போடும் முதியோர் இல்லங்கள் மாத கட்டணம் பத்தாயிரம் முதல் சில இலட்சங்கள் வரை என விளம்பரம் செய்கின்றன. தோளோடும், மார்போடும் வளர்ந்த பிள்ளைகள் பெற்றோரை ஊருக்கு வெளியே கட்டணக் கட்டிடங்களில் தள்ளி விடுகின்றன. தொழுவங்களில் கட்டப்படும் மாடுகளாகிவிட்டது, உறவுகளில் கட்டப்படாத வாழ்க்கை.
இயேசு நம்மை அழைக்கிறார். உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.
உறவுகள் சுயநலத்தின் சுருக்குப் பைகளில் முடிந்து வைப்பதல்ல, அவை மனித நேயத்தின் வீதிகளில் நிரப்பி வைப்பது எனும் உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
1. தன்னோடான உறவு !
தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல ! “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.
நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும். தன்னைத் தான் ஆழமாக நேசிக்காதவன், பிறரையும் நேசிக்க முடியாது. காரணம் அன்பின் துவக்கம் நம்மிலிருந்து தான் துவங்குகிறது. நம்மை ஏற்றுக் கொள்வதும், நம்மை நேசிப்பதும், நமக்காக இறைவனுக்கு நன்றி சொல்வதும் நம்மீதான உறவின் அடையாளங்கள்.
2. உறவினரோடான உறவு.
நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும்.
விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” ( 1 திமோத்தேயு 5:8) என்கிறது விவிலியம்.
3. கணவன் மனைவி உறவு.
ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. கிறிஸ்தவர்கள் சற்றும் குற்ற உணர்வு இல்லாமல் மணமுறிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ( எபேசியர் 5:24 ) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.
“உங்கள் கடின உள்ளத்தைக் குறித்தே மோசே மணமுறிவை அனுமதித்தார், ஆனால் மணமுறிவு இறைவனின் திட்டத்தில் உள்ளதல்ல” என இறைமகன் இயேசுவும் பரிசேயர்களிடம் கூறினார். தம்பதியரிடையே ஆழமான உறவு இருக்க வேண்டியது அவசியம்.
4. பிறரோடான உறவு
சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது. அயலானோடு உறவு கொள்ளவேண்டும் என்பதை இறைவன் பல இடங்களில் நமக்குப் போதிக்கிறார்.
நல்ல சமாரியன் உவமை ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும் சக மனிதர் மீது நாம் அன்பு கொள்ள வேண்டியதன் கட்டாயத்தைப் புரிந்து கொள்ள.
5. திருச்சபையோடான உறவு
திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது. திருச்சபையின் இயக்கங்கள், உறுப்பினர்கள், மூப்பர்கள், எளியவர்கள், தலைவர்கள் அனைவருடனும் தூய்மையான நேசம் கொள்ள வேண்டியது முக்கியமான விஷயம்.
கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந்திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும்.
“ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால் தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்; அவரைப் போல் நீங்கள் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்ளுங்கள்” என விவிலியம் நமக்கு போதனையைக் கொடுக்கிறது. இறைவனோடான உறவை வலிமைப்படுத்த, திருச்சபையோடான உறவை பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகிறது.
முடிவாக, இறைவன் விரும்பிய வாழ்க்கையை நாம் மண்ணில் வாழவேண்டுமெனில் உறவு எனும் துடுப்பைக் கொண்டு வாழ்க்கைப் படகைச் செலுத்த வேண்டும். அந்த உறவு பல பரிமாணங்களைக் கொண்டது. எல்லாமே இறைமகன் இயேசுவின் அன்பில் அடக்கம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை கை வரவேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.
*