Posted in Articles, Bible Poems, Psalm

திருப்பாடல்கள் தரும் பாடங்கள் – 3

 Image result for psalm 3

“நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்”

தாவீது மன்னன் பொற்கால ஆட்சியை இஸ்ரேல் மக்களுக்கு அளித்து வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் சிற்றின்ப நாட்டத்தினால் பத்சேபா எனும் பெண்மீது ஆசை கொண்டு அவரை அபகரித்தார். அதற்காக அந்தப் பெண்ணின் கணவனை சூழ்ச்சியால் கொலையும் செய்துவிட்டார். அந்தப் பாவம் அவரைத் துரத்தியது. அவருடைய மகள் தாமாரை, அவருடைய இன்னொரு மனைவியின் மூலம் பிறந்த அம்மோன் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். தாமாரின் சகோதரன் அப்சலோம், அம்மோனை கொலை செய்து விட்டார்.

தான் செய்த பாலியல் பிழையும், படுகொலையும் தனது இரத்தக் கரங்களை பிள்ளைகளின் வாழ்விலும் பதித்ததைக் கண்டு தாவீது அதிர்ந்து போனார். அத்துடன் அவரது அதிர்ச்சி முடிந்து விடவில்லை. தாவீதை அகற்றிவிட்டு அந்த இடத்தில் தான் அரசனாகவேண்டுமென திட்டமிட்டு காய் நகர்த்தினார் அப்சலோம். அந்த சூழலில் தனது சொந்த மகனிடமிருந்தே தப்பி ஓடுகிறார் தாவீது மன்னர்.

அரியணையை விட்டு, கிரீடத்தை விட்டு  பாழ்வெளிகளிலோ, குகையிலோ பதுங்கி வாழ்ந்த நாட்களில் தாவீது மன்னர் இந்தப் பாடலை எழுதுகிறார். எப்படிப்பட்ட சூழல் வந்தபோதும், தான் பாவத்தின் பாதையில் வழுக்கி விழுந்தபோதும் மீண்டும் இறைவனே தஞ்சமென நெருங்கி வருகின்ற நெஞ்சம் தாவீதிடம் இருந்தது.

தனது துயரத்தையும், தனது இயலாமையையும், தனது மன ஆதங்கத்தையும் அவர் கடவுளிடம் கொட்டுகிறார்.

* என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர் !

* என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்!

* கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்” என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர் !

என, தனது ஆதங்கத்தை மூன்று அடுக்காகச் சொல்லும் தாவீது, கடவுளின் அரவணைப்பையும் அதே போல மூன்று அடுக்காக அணிந்து கொள்கிறார்.

* நீரே எனைக் காக்கும் கேடயம்

* நீரே எனது மாட்சி

* என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே !

என தாவீது மன்னர் இறைவன் மீது தனக்கு இருக்கின்ற ஆழமான பற்றுறுதியை வெளிப்படுத்துகிறார். எத்தனை எதிரிகள் பெருகினாலும், இறைவன் நம்மைக் காக்க மாட்டார் என எத்தனை பேர் தான் நம்மிடம் சொன்னாலும் நமது இதயம் இறைவனை நோக்கியே நீளவேண்டும். அவர் மட்டுமே தஞ்சமென அவர் பாதம் விழ வேண்டும். 

இறைவன் நம்மைச் சுற்றி அரணாய் இருக்கிறார் எனும் நம்பிக்கை நமக்குள் எழும்போது, நாம் நிம்மதியாகப் படுத்துறங்கி விழித்தெழுவோம். இறைவா எனக்குக் கேடயமாய் வாரும் என தாவீது வேண்டுதல் செய்யவில்லை, “நீரே எனது கேடயம்” என அறிக்கை செய்கிறார். இறைவனின் அன்பின் மீதான நம்பிக்கையை தாவீது வெளிப்படுத்துகிறார்.

பாதுகாப்புடன் நின்றுவிடாமல் இழந்து போன தனது மாட்சியை மீட்டுத் தருபவரும் இறைவரே ! மட்டுமல்ல, இறைவனே தனது மாட்சி என தாவீது அறிக்கையிடுகிறார். தனது மாட்சியை எதிலெல்லாமோ தேடிய தாவீது, இறைவனே தனது மாட்சி என கடைசியில் நிற்கிறார். 

ஒரு கவண் கல்லினால் கோலியாத்தை சாய்த்தபோதும் தாவீதோடு கடவுள் இருந்தார் !

எங்கே தலைசாய்ப்பது என்று அறியாமல் உயிர் பிழைக்க தப்பி ஓடும்போதும் தாவீதோடு கடவுள் இருக்கிறார் !

தான் அழைக்கும்போது இறைவன் தனது “திருமலை”யிலிரிந்து தனக்கு பதிலளிப்பார் என்பதை தாவீது உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கை தான் பாழ்வெளியில், பயத்தின் சூழலில், வசதிகளற்ற வெட்டாந்தரையில் அவரை நிம்மதியுடன் படுக்க வைக்கிறது. அலையடிக்கும் சூழல் வெளியே நிலவினாலும், உள்ளமோ இறைவன் மீது கொண்ட நம்பிக்கையினால் அமைதியாய் இருக்கிறது.

“இறைவனே என் எதிரிகளை அழியும்” என தனக்கான யுத்ததுக்கு தலைமை தாங்க கடவுளை அழைக்கிறார் தாவீது. நமது யுத்தத்துக்கு இறைவன் தலைமை தாங்கும் போது வெற்றிகள் சர்வ நிச்சயமாகிவிடுகின்றன. 

பாவத்தோடான நமது போராட்டம், ஆன்மீக தளர்ச்சிகளுடனான நமது போராட்டம் போன்றவை இறைவனின் தலைமையில், இறைவனின் உதவியுடன் நடக்கையில் வெற்றியாய் முடிந்து விடுகிறது. காரணம், “விடுதலை அளிப்பவர் ஆண்டவர்” என தாவீது மன்னர் உறுதியாய் சொல்கிறார். 

எத்தனை பாவங்கள் செய்தாலும், எத்தனை கடினமான சூழலில் இருந்தாலும் நமது தயக்கங்கள், பயங்கள், சந்தேகங்கள் அனைத்தையும் விட்டு விட்டு இறைவன் பாதத்தில் சரணடைய வேண்டும் எனும் பாடத்தையே இந்த சங்கீதம் அழுத்தமாய் நமக்கு விளக்குகிறது.

*

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s