ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.
(ஒரு பட்டி மன்ற உரையின் சாராம்சம் )
அவையோருக்கு வணக்கம். பழையவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எனது எதிர்கட்சி நண்பர்களுக்கும் வணக்கம்.
ஒரு புதிய துணி கிடைத்தபிறகும், பழைய துணி தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறீங்க. சுடச் சுட சோறு குடுத்தா கூட எனக்கு பழங்கஞ்சி தான் வேணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறீங்க.
இறைவார்த்தையே தெளிவா சொல்லுது, “பழைய ஏற்பாடு என்பது புதிய ஏற்பாட்டுக்கான ஒரு முன்னோடி“.
புதிய ஏற்பாடு என்பது நிஜம்.
பழைய ஏற்பாடு என்பது நிஜத்தின் நிழல்.
காச்சலடிச்சா நிழலுக்கு ஊசி போட சொல்றீங்க. நாங்க நிஜத்துக்கு ஊசி போட சொல்றோம். எது சரின்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க.
ஆன்மீக வாழ்க்கைக்கு ஏன் புதிய ஏற்பாடு தான் முக்கியம் என்பதை சுருக்கமா சொல்லிடறேன். எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தான். இதுக்கு ஒரு பட்டிமன்றமே தேவையில்லை. இருந்தாலும் சொல்றேன்.
முதன் முதலா ஒரே ஒரு கேள்வி. ஆன்மீகம் என்பது என்ன ? இயேசுவை அறிதல். இயேசுவின் வழியில் செல்தல். இயேசுவின் போதனைகளைக் கடைபிடித்தல். அவரோடு பயணித்தல். இது தானே ஆன்மீகம் ? இயேசுவே இல்லாத பழைய ஏற்பாட்டில் இதெல்லாம் சாத்தியமா ? அப்போ ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடுன்னு தனியா வேற சொல்லணுமா ? இதுக்கெல்லாம் ஒரு பட்டிமன்றம், அதுக்கு ஒரு நடுவர் வேற.
முக்கியமான இன்னொரு நபருக்கு வருவோம்,
1. பரிசுத்த ஆவியானவர் எங்கே வருகிறார் ? பழைய ஏற்பாட்டிலா ? புதிய ஏற்பாட்டிலா ?
” நான் போய் ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன்” என்று இயேசு சொன்னார். அவர் தான் நமது ஆன்மீக வாழ்க்கைக்கு அஸ்திவாரமே ! ஆவியின் கனிகள் ஒன்பது. அதை மனப்பாடமா சொல்லுவீங்க. ஆன்மீக வாழ்க்கைக்கு அந்தக் கனிகள் இல்லேன்னா என்னங்க ஆவும் ?
ஆவியானவர் என்னெல்லாம் செய்கிறார்,
அ, இயேசுவைப் பற்றி நமக்கு விளக்குவார். ( என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14 : 27 )
ஆ, பாவத்தைக் குறித்து எச்சரிக்கை செய்வார்.
இ, நமக்கு உள்ளே வாசம் செய்பவராக இருக்கிறார்.
ஈ, நம்மை சத்தியத்துக்குள் வழி நடத்துவார் ( யோவான் 16 : 8 )
உ, நம்மை சாட்சியாக நிறுத்துகிறார்
ஊ , சமாதானத்தைத் தருகிறார் ( யோவான் 14 : 27. சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன் )
எ, நமக்காக செபம் செய்கிறார் ( அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். ரோமர் 8 : 26 )
இப்படி நம்மை நிரப்புகிறார், நம்மை பலப்படுத்துகிறார், நம்மை கனிகொடுப்பவர்களாக்குகிறார் என பரிசுத்த ஆவியானவர் 50 பணிகளைச் செய்வதாக பைபிள் சொல்கிறது.
இப்போ சொல்லுங்க, ஆன்மீக வாழ்வுக்கு பழைய ஏற்பாடா வேணும் உங்களுக்கு.
2. இரண்டாவதாக,
பழைய ஏற்பாடு சட்டங்களால் கட்டமைக்கப்பட்டது
புதிய ஏற்பாடு கிருபையினால் கட்டமைக்கப்பட்டது.
ஆன்மீக வாழ்வுக்கு சட்டங்கள் தேவையா, கிருபை தேவையா என்று கேட்டால் பதிலை நான் சொல்லத் தேவையில்லை.
இதைச் செய், இதைச் செய்யாதே என 613 சட்டங்களோடு வந்தது பழைய ஏற்பாடு.
அன்பு மட்டும் செய் என ஒரே ஒரு கட்டளையோடு வந்தது புதிய ஏற்பாடு. “கடவுளை, மனிதனை அன்பு செய்“
சட்டங்களால் மீட்பு இல்லை,
கிருபையால் அழிவு இல்லை
எது நமது ஆன்மீக வாழ்வை பலப்படுத்தும் ? சட்டங்களோடு வரும் பழைய ஏற்பாடு வேண்டுமா ? கிருபையோடு வரும் புதிய ஏற்பாடு வேண்டுமா ?
3.
பழைய ஏற்பாடு, நான் சொல்வதைக் கேள் என்றது புதிய ஏற்பாடு நான் சொல்வதைச் செய் என்கிறது. “லிசன் டு மி யா, ஃபாலோ மீ யா ? எது வேண்டும் ?
பழைய ஏற்பாடு என்பது கரெஸ்பான்டன்ஸ் கோர்ஸ் ல நீச்சல் கத்துக்கிறது போல. படம் வரைஞ்சு விளக்குவாங்க. நாம போய் தண்ணில குதிச்சா அப்படியே போய்ட வேண்டியது தான்.
புதிய ஏற்பாடு என்னைப் பின்செல் என்கிறது. “என்னைப் பின்செல்” என்றார் இயேசு. “நான் இயேசுவைப் பின்பற்றுவது போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்கிறார் பவுல்.
கைபிடித்து அழைத்துச் செல்வது உங்கள் ஆன்மீக வாழ்க்கையை பலப்படுத்துமா ? அட்வைஸ் செய்து விட்டுப் போவது பலப்படுத்துமா ?
4.
பழைய ஏற்பாடு என்பது கிளைகளை கவனிப்பது. புதிய ஏற்பாடு என்பது வேர்களை விசாரிப்பது.
புரியும் படியா சொல்றேன். பழைய ஏற்பாட்டில் நம்முடைய செயல்கள் வெளிப்பார்வைக்கு சரியாய் இருந்தால் போதும். புதிய ஏற்பாட்டைப் பொறுத்தவரை அது ஆன்மீகத்தின் உயர்நிலை. நமது சிந்தனைகளே சரி செய்யப்பட வேண்டும்.
கொலை செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு
சகோதரன் மேல் கோபம் கொள்ளாதே என்கிறது புதிய ஏற்பாடு.
விபச்சாரம் செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு
இச்சைப் பார்வையே வேண்டாமடா என்கிறது புதிய ஏற்பாடு
களவு செய்யாதே என்கிறது பழைய ஏற்பாடு, பிறர் பொருள் மீது ஆசையே படாதே என்கிறது புதிய ஏற்பாடு.
எது ஆன்மீகத்தின் உயர்நிலை. எது நம்மை ஆன்மீகத்தில் வளர்ச்சியடையச் செய்கிறது.
பழைய ஏற்பாட்டுச் சட்டங்களில் ஊறிப் போன மக்களைப் பார்த்தல்லவா இயேசு சொன்னார், “வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே” என்று !!!
5. சரி, பழைய ஏற்பாட்டில் பலரோட கதைகளைச் சொல்றீங்க. ….. இவங்களைப் பற்றியெல்லாம் சொல்றீங்க.. அவங்க எல்லாம் ஆன்மீகத்தில் உயர் நிலை அடைஞ்சாங்களா ? கொஞ்சம் யோசிங்க…
* ஆபிரகாம் கடவுள் பேச்சை மீறி எகிப்துக்கு போனதும், அவசரப் பட்டு ஆகாரைத் திருமணம் செய்ததும் தெரியுமா தெரியாதா ? அந்த ஒரு கல்யாணம் மட்டும் இல்லாம இருந்திருந்தா இன்னிக்கு உலகத்துல கிறிஸ்தவத்துக்கு எதிரா இருக்கிற ஒரு மிகப்பெரிய மதமே இருந்திருக்காது. தெரியுமா தெரியாதா ?
* சரி, தாவீதை சொல்றீங்க. பத்சேபா யாரு ? உரியாவை தாவீது என்ன பண்ணினாரு ? சரி எல்லாம் போகட்டும். மரணப் படுக்கைல அவரு என்னதான் சொன்னாரு ? நான் கொல்லமாட்டேன்னு சொன்னவனை நீ கொல்லுடா.. ந்னு சொல்றாரு. இது தான் ஆன்மீகத்தின் உயர் நிலையா ? மரணப் படுக்கைல பையன் கிட்டே இதையா ஒருத்தரு சொல்லுவாரு ?
* சரி, நோவாவை எடுத்துக்கோங்க… ஓவரா தண்ணியடிச்சு ஆடை விலகிக் கிடந்தாரா இல்லையா ?
* யோபு, நீதிமான்.. உத்தமன்.. ஒத்துக்கறேன். கஷ்டம் ஓவரானப்போ என்ன சொன்னாரு. ஐயோ.. நான் பொறந்த நாள் சபிக்கப்படட்டும்.. ந்னு கடவுள் கூட சண்டை போட்டாரா இல்லையா ?
* ஈசாக்கு.. ஆபிரகாமோட பையன். எப்படி இருக்கணும் ? சூப்பரா கறி சமைச்சு தர பையன் கிட்டே ஓவர் பாசம். இளையவனை தான் ஆசீர்வதிப்பேன்னு சொன்னப்புறமும் ஏசாவோட வேட்டைப் பொருள் தான் பிரியம். வயிறு தான் அவருக்கு கடவுளாச்சா இல்லையா ?
* யாக்கோபு… ஊரை அடிச்சு உலைல போட்டான். கடைசில அவன் மாமனாரு அவனை அடிச்சு வேலை வாங்கி கசக்கிப் புழிஞ்சாரு. பெண்ணாசை, மண்ணாசைன்னு அவன் வாழ்க்கை எப்படி இருந்துது ?
* சாலமோன். நீதி மொழிகள், உன்னதப்பாட்டு, பிரசங்கி ந்னு பைபிள்ள பட்டையைக் கிளப்பினாரு. என்னாச்சு ? கடைசில பாக்கிறவங்க எல்லாம் பொண்டாட்டி. மதம், இனம், குலம், கோத்திரம் எதுவும் பாக்கல. ஏன் ? கடவுளையே பாக்கலய்யா.. இவரு தான் உங்களுக்கு ஆன்மீக வளர்ச்சிக்கு உதாரணமா இருக்காரா ?
* யோசேப்பு பற்றி பேசலாம். ரொம்ப அற்புதமான மனிதர். ஆனா அவர் யாரு ? இயேசுவின் முன்னோடி. இயேசுவோட நிழல். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் மாதிரி அவரு. ஒரு சோறை எடுத்து பதம் பார்த்தா வயிறு நெரம்பிடுமா ? ஆன்மீகம் வளந்துடுமா ?
சொன்னா, சொல்லிட்டே போலாம்.
புதிய ஏற்பாட்டுல சில விஷயங்களை மட்டும் சொல்றேன்.
கேட்டுட்டு சைலன்டா போயிடுங்க.. மறுபடி விவாதம், கிவாதம் ந்னு வந்துடாதீங்க.
* பவுல்.. கிறிஸ்தவர்களைக் கொன்று குவிச்சவன். இயேசுவோட குரல் அவனோர வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுச்சு. புதிய ஏற்பாடு நூலில் அவர் மூலமா கடவுள் பேசிய விஷயங்கள் எத்தனை எத்தனை ? அவையெல்லாம் தானே நம்முடைய ஆன்மீக வாழ்வை ஆழப்படுத்துகின்றன.
* கல்லெறிஞ்சு கொன்னப்போ ஸ்தேவான் என்ன சொன்னாரு ? மன்னிப்பை வேண்டினார். சிலுவையில் இயேசு செய்து காட்டியதை அப்படியே செய்தார் ஸ்தேவான். ஆன்மீக உயர்நிலைக்கு வேறென்ன சாட்சி வேண்டும் ?
* இயேசு வெறும் பன்னிரண்டு பேரைத் தயாராக்கினார். அதுல ஒருத்தன் தறுதலை. அந்த பதினோரு பேரும் சேர்ந்து தான் இன்னிக்கு கிறிஸ்தவம் உலகிலேயே மிகப்பெரிய மதம் எனுமளவில் வளர்த்து வுட்டாங்க. பரிசுத்த ஆவியின் வல்லமையால. என்ன இது கூட ஆன்மீக வளர்ச்சி இல்லேன்னு சொல்லுவீங்களா
* ஐயா.. என்னை சிலுவைல அறையாதீங்க.. இயேசுவைப் போல அறையாதீங்க.. தலைகீழா அறையுங்கன்னு சொன்னாரேய்யா… அது ஆன்மீக உயர்நிலைக்கு உதாரணம் இல்லையா ?
* இயேசுவின் போதனைகளும், உவமைகளும் தராத ஆன்மீக வளர்ச்சியை எந்த நூல் தரும் ? சொல்லுங்க..
* மலைப்பொழிவு தராத மன வளர்ச்சியை எந்த பழைய ஏற்பாடு தரும் ?
கடைசியா ஒண்ணு சொல்றேன். பழைய ஏற்பாடு கண்ணாடி மாதிரி. முகத்துல அழுக்கு இருக்குன்னு சொல்லும். கண்ணாடி உங்க அழுக்கை கழுவாது.
புதிய ஏற்பாடு அழுக்கைக் காட்டுவதோட மட்டுமல்ல, அந்த அழுக்கை கழுவுகிற கிருபையோடு வரும். எது வேண்டும் உங்களுக்கு ?
கடைசியாக ஒன்றே ஒன்று.
இயேசு நமக்கு முன்செல்பவர் என்கிறது புதிய ஏற்பாடு. எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்ந்து காட்ட வந்தவர் தான் இயேசு. அவருடைய வாழ்க்கையை வாழ்வது தான் ஆன்மீக வளர்ச்சி. அது இயேசுவே தரிசனமாகாத பழைய ஏற்பாட்டில் சாத்தியமே இல்லை… புதிய ஏற்பாட்டில் தான் சாத்தியம் என கூறி விடை பெறுகிறேன்.