ஆதியாகமம் 3 :2..5
காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.
*
ஒரு செயல் எப்போது செத்த செயலாக, அல்லது பயனற்ற செயலாக மாறுகிறது ? வெளிப்பார்வைக்கு நல்லதாக இருக்கின்ற செயல் எப்போது பயனற்ற செயலாய் மாறுகிறது ? சிந்தனையும், செயலும் நேர்கோட்டில் இல்லாத போது செயல்கள் செத்த செயல்களாகின்றன என சுருக்கமாய் சொல்லலாம்.
“வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ” என இயேசு போலித்தனத்தின் மீது படுத்துறங்கிய நபர்களைப் பார்த்துக் கூறினார். அதாவது வெளிப்பார்வையில் அழகு, உள்ளிலோ உயிரற்ற தன்மை !
காயீன், ஆபேல் காணிக்கை அளிக்கின்ற விஷயங்களிலும் இந்த சிந்தனையை பொருத்திப் பார்க்கலாம்.
1. காயீன் மூத்தவன் ! ஆபேல் இளையவன். எனினும் இருவரும் ஒரே நேரத்தில் காணிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றனர் என்கிறது பைபிள். வழக்கப்படி காயீன் தான் முதலில் பலி செலுத்தத் துவங்கியிருக்க வேண்டும். ஆனால் இருவருமே காணிக்கை செலுத்த ஒரே நேரத்தில் வருகின்றனர். ஒருவேளை காணிக்கை செலுத்த வேண்டும் எனும் ஆசை ஆபேலுக்கு தோன்றியிருக்கலாம். எனவே காயீனும் வேறுவழியின்றி காணிக்கை செலுத்த வந்திருக்கலாம்.
இன்னொருவர் செய்கிறார் என்பதற்காக அதை பிரதியெடுக்க முயல்கின்ற செயல்களெல்லாம் செத்த செயல்களாகவே இருக்கும். அது மனிதர்களைப் பிரியப்படுத்தும் வீணான முயற்சியே.
2. காயீனின் காணிக்கை கடமைக்கானது. நிலத்தின் பயனிலிருந்து அவன் காணிக்கை கொண்டு வந்தான். செழிப்பானவற்றைக் கொண்டு வந்தான் என்றோ, பெரியவற்றைக் கொண்டு வந்தான் என்றோ பைபிள் குறிப்பிடவில்லை. “சிலவற்றை” என்கிறது ! ஆபேலோ கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வருகிறான். தன்னிடம் இருப்பதில் சிறந்ததைத் தரவேண்டும் எனும் இயல்பான எண்ணம் ஆபேலிடம் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
ஏதோ ஒன்றைக் கடமைக்காகக் கொடுப்பது செத்த செயல், இருப்பதில் சிறந்ததைக் கொடுப்பதே இறைவன் எதிர்பார்ப்பது.
3. காயீன் முதற்பலனைக் கொடுக்கவில்லை. ஆபேலோ தலையீற்றைக் கொடுக்கிறான். தலையீறு என்பது விவிலியம் முழுவதும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய வாழ்வோடு ஒப்பிடுகையில் நமது வாழ்க்கையில் எவையெல்லாம் முதன்மையானவையாய் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் !
ஏதோ ஒன்றைக் கொடுப்பதும், ஏனோ தானோ வெனக் கொடுப்பதும் செத்த செயலின் சான்றுகள்.
4. காணிக்கை கொடுக்கவேண்டும் எனும் கட்டாயம் காயீனுக்கு பயத்தின் விளைவாய்க் கூட வந்திருக்கலாம். பூமியில் ‘பிறந்த’ முதல் மனிதன் அவன். அவனிடம் ஆதாம் இறைவனைப் பற்றி எடுத்துக் கூறியிருக்கலாம். ஆபேலுக்கு இறைவன் மீதான அன்பினால் காணிக்கை கொடுக்கும் மனம் உருவாகியிருக்கலாம். இவை அனுமானங்களே.
பயத்தின் விளைவாகவோ, பிறருடைய கட்டாயத்தின் விளைவாகவோ வெளிப்படும் செயல்களெல்லாம் செத்த செயல்களே.
5. “இவ்வளவு கொடுத்தும் எனக்கு அங்கீகாரம் இல்லையா ?” எனும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது காயீனின் காணிக்கை. தன்னை இறைவன் நிராகரித்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
எவ்வளவோ செய்திருக்கிறேன் என கணக்கு பார்த்து செய்கின்ற செயல்கள் செத்த செயல்களாகவே முடியும்.
6. காயீனும் ஆபேலும் ஒரே நாளில் பலி செலுத்த வருவது, காயீன் காணிக்கை கொடுக்க தாமதித்தான் எனபதையே காட்டுகிறது. இறைவனுக்குக் கொடுக்க தாமதம் செய்வது என்பது உள்ளார்ந்த விருப்பத்தோடு செய்யவில்லை என்பதன் அடையாளம். தயக்கம் சுயநலத்தின் வெளிப்பாடு.
நமது செயல்கள் தயக்கத்தோடும், தாமதத்தோடும், முழு விருப்பமின்றியும் வரும் போது அது செத்த செயல் ஆகிவிடுகிறது.
7. நமது வாழ்க்கை இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையாய் இருக்கும் போது தான் நமது காணிக்கைகளும் இறைவனுக்குப் பிரியமானதாய் மாறுகிறது. நமது காணிக்கைகளுக்காக நம்மை இறைவன் ஏற்பதில்லை. நம்மை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகத் தான் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார். “காணிக்கை செலுத்த வரும் முன் சகோதரனோடு ஒப்புரவாகச் சொல்கிறார் இயேசு”. காரணம் இது தான். நமது வாழ்க்கை இறைவனை விட்டு விலகிச் சென்றால் எந்த ஒரு காணிக்கையும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. அது கொழுத்த தலையீறுகளானாலும் சரி.
நமது செயல்கள் செத்த செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டுமெனில், நமது வாழ்க்கை உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.
இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்.
*
காணிக்கையின் மகத்துவம்… சிறப்பு
LikeLike
thank you
LikeLike