நல்ல ஒரு சொகுசுப் பேருந்தில் மார்த்தாண்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன். வலப்பக்க சன்னலோரம் அமர்ந்து ஹாயாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், உற்சாகமாய் இருந்தது. எனக்கு இரண்டு இருக்கைகளுக்கு முன்னால் இடப்பக்கம் இருந்த நபர் தனது கையிலிருந்த மொபைல் போனையே நோண்டிக் கொண்டிருந்தார்.
வாழ்க்கை மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகிறது. ஐம்பூதங்களும் உலவுகின்ற உலகை விட்டு, ஐந்தரை இன்ச் வெளிச்சப் பெட்டிக்குள் குடியிருக்கிறார்களே. வாட்ஸப்பின் வாசல் திறந்து வைத்து காலம் முழுதும் இப்படி வீணாய்க்கழிக்கிறார்களே என மனதுக்குள் சிந்தித்துக் கொண்டே இருந்தேன்.
காலம் பொன்போன்றது, அதை இப்படி வீணாக்குவது எவ்வளவு தவறு ? முன்பெல்லாம் மனிதர்களோடு பேசுவோம், இயந்திரங்கள் அமைதியாய் இருக்கும். இப்போதோ இயந்திரங்களோடு பேசுகிறோம், மனிதர்கள் அமைதியாக இருக்கின்றனர். மனம் எதையெதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது. அவர் இன்னும் மொபைலை கீழே வைத்தபாடில்லை, புன்னகைத்தபடியே ஸ்மாட் போனுக்குள் சங்கமமாகிவிட்டிருந்தார்.
எனது இடம் வந்ததும் எழும்பினேன். பையைத் தூக்கி தோளில் போட்டுக்கொண்டு அவரைக் கடந்து போனபோது வெறுப்பாய் திரும்பிப் பார்த்தேன் ! அதிர்ந்து போனேன்.
அவர் பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார். தானியேல் புத்தகம் அவரது விரல்களில் வசனம் வசனமாய் மேல் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நான் குற்ற உணர்வில் கீழ்நோக்கிச் சென்று கொண்டிருந்தேன்.
கிடைத்த சில மணி நேர இடைவெளியில், கொடுக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் இறைவனைத் தேடிய அவர் எங்கே ? அடுத்தவரைத் தவறாய் தீர்ப்பிட்டு, எனது நேரத்தை பாவத்தோடு பயணிக்க வைத்த நான் எங்கே.
இறங்கியபோது மனம் தெளிவாகியிருந்தது. சன்னல் வழியே பார்த்தேன். நடந்தது எதையும் உணராத அவர் இன்னும் ஒரு நண்பனோடு பேசிச் சிரிப்பது போல அந்த பைபிளை வாசித்துக் கொண்டிருந்தார்.
*