நன்றி மறப்பது நன்றன்று
_______
( ஒரு நபர் அங்கும் இங்கும் ஓடி…. எல்லாவற்றையும் அதிசயமாய் பார்க்கிறார்.. ரசிக்கிறார்.. தொட்டுப் பார்க்கிறார் )
நபர் 1 : வாய்… இந்த கடைங்க எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு. பக்கத்துல வந்து பாக்கும்போ தான் அதோட அழகு தனியா தெரியுது.
ஓ.. இந்த குளத்துல இருந்து தண்ணீரை குடிக்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு.
வாவ்… தொழுகைக்கூடம் …. ம்ம்ம்ம். எவ்ளோ நல்லா இருக்கு….
( அங்கும் இங்கும் ஓடி சில வினாடிகள் ரசிக்கிறார். அப்போது நபர் 2 உள்ளே வருகிறார் )
நபர் 2 : யோவ்.. யோவ்.. நில்லு நில்லு.. நானும் பாத்துட்டே இருக்கேன். அங்க ஓடறே, இங்க ஓடறே.. அது நல்லாயிருக்குன்னு சொல்றே.. இது நல்லாயிருக்குன்னு சொல்றே… நீ நார்மலா தான் இருக்கியா ?
நபர் 1 : (சிரித்துக் கொண்டே ) இப்போ நார்மலா தான் இருக்கேன்.
நபர் 2 : அப்போ அமைதியா இரு.. ஓவரா ஓடிட்டு திரியாதே..
நபர் 1 : என்னோட நிலமை உங்களுக்கு வந்தா, நீங்களும் இப்படித் தான் ஓடியிருப்பீங்க.
நபர் 2 : அப்படி என்ன நிலமை ? உனக்கு கண்ணு இல்லாம இருந்துச்சா ? இப்போ தான் பார்வை கிடைச்சிருக்கா ? அதனால தான் இதெல்லாம் பாத்ததும் பரவசம் ஆயிட்டியா ?
நபர் 1 : இல்லை.. இல்லை.. கண்ணெல்லாம் இருந்துச்சி. ஆனா பாக்க குடுத்து வைக்கல. கையெல்லாம் இருந்துச்சு, தொட்டுப் பாக்க குடுத்து வைக்கல.
நபர் 2 : யோவ்.. ஓவரா குழப்பாதே… வெளியூர் போயிருந்தியா ? இப்போ தான் இந்த ஊருக்கு வரியா ? அதனால தான் இதையெல்லாம் பாத்து ஆச்சரியப்படறியா ?
நபர் 1 : ஹா..ஹா.. நான் இந்த ஊர் காரன் தான்.. வெளியூருக்கும் போகல, உள்ளூருலயும் தங்கல…
நபர் 2 : ஓ.. புரிஞ்சு போச்சு.. நீ லூசு தானே ?
நபர் 1 : ( கொஞ்சம் அமைதியாய்… பின் அவரைப் பார்த்து மெல்லிய குரலில் ) நான் ஒரு தொழுநோயாளி….
( நபர் 2 : சட்டென பின்னால் போகிறார் )
நபர் 1 : பயப்பட வேண்டாம்… என் கையைப் பாருங்க ! இதை விட தெளிவான கையைப் பாக்க முடியுமா ? ஒரு சின்ன அடையாளம் கூட இல்லாம தொழுநோய் போயிடுச்சு இல்லையா ?
நபர் 2 : ( மெதுவாக நெருங்கி வந்து பார்க்கிறார் ) ஆமா.. ஒண்ணும் தெரியலையே… நிஜமாவே தொழுநோயாளியா இருந்தீங்களா ? நம்பவே முடியல…
நபர் 1 : ஆமா… ஊருக்கு வெளியே நாங்க ஒரு பத்து தொழுநோயாளிகள் சேர்ந்திருந்தோம். வாழ்க்கை அவ்ளோதான்னு நினைச்சிருந்தப்போ ஒரு அதிசயம் நடந்துச்சு..
நபர் 2 : ஓ.. உனக்கு மட்டும் தான் அதிசயமா ? மத்த ஒன்பது பேரும் அப்படியே தான் இருக்காங்களா ?
நபர் 1 : இல்லை இல்லை.. பத்து பேருக்குமே சரியாயிடுச்சு.
நபர் 2 : வாவ்.. அப்போ நாலைஞ்சு வருசமா மருந்து எடுத்துட்டு இருந்தீங்களா ? யாருசரி பண்ணினது ? என்ன மருந்து குடுத்தாங்க….
நபர் 1 : நோ.. நோ…. மருந்தும் எடுக்கல, மருத்துவமனைக்கும் போகல, எல்லாமே சட்டுன்னு சரியாயிடுச்சு.
நபர் 2 : சட்டுன்னு சரியாச்சா ? என்ன சொல்றீங்க ? அப்போ ஏதாச்சும் தொழுகைக்கூடமோ, மந்திரக் கூடமோ போனீங்களா ? எதுவுமே இல்லாம குணமாக சான்சே இல்லையே…
நபர் 1 : இல்லப்பா… உனக்கு விஷயமே தெரியாதா ? ஒரு காலத்துல நான் அசுத்தம் வருது, அசுத்தம் வருது .. ந்னு கத்திட்டு தான் ஊருக்குள்ளயே வரணும். அப்படி தான் வாழ்ந்துட்டு இருந்தேன். தண்ணி கூட கைநீட்டி வாங்கக் கூடாது, ஊரு பக்கம் தலை வெச்சும் படுக்கக் கூடாது அப்படித் தான் இருந்தேன்.
நபர் 2 : அதெல்லாம் தெரியுமே ! நீங்க முழுக்க சுகமாகி, சுத்தீகரிக்கும் சடங்கெல்லாம் முடிச்சு, குரு உங்களை சுத்தமானவன் ந்னு சொல்லி பிரகடனப் படுத்தினா தான் நீங்க ஊருக்குள்ளயே வரமுடியும். அதுவும் ஒரு ஆறு மாசம் தனியா இருந்து மீண்டும் அந்த நோய் வரலைன்னு தெரிஞ்சா தான் இப்படி முழுசா ஊருக்குள்ள சுதந்திரமா சுத்த முடியும்.
நபர் 1 : ஆமா.. நான் குணமாகி ஆறுமாசம் தாண்டிடுச்சு.. அதனால தான் இன்னிக்கு முழு சுதந்திரத்தோட இங்கே ஓடிட்டிருக்கேன்.
நபர் 2 : ஓ.. அப்படியா மகிழ்ச்சி… மகிழ்ச்சி.. வைத்தியர் பேரை நீங்க இன்னும் சொல்லல..
நபர் 1 : ஓ.. அது ரொம்ப ஆச்சரியமான கதைப்பா… நான் எந்த மருந்தும் குடிக்கல, எந்த வைத்தியர் கிட்டேயும் போகல. ஒரு நாள் இயேசு அந்தப்பக்கமா வந்தப்போ தூரத்துல இருந்து கத்தினோம். ‘இயேசுவே… கொஞ்சம் இரக்கம் வையுங்க’ ந்னு கத்தினோம்
நபர் 2 : இயேசுவா ? அவரு குருக்களை எல்லாம் திட்டிட்டு இருப்பாரே… ஓ… அவரு இதெல்லாம் பண்ணுவாரா ?
நபர் 1 :… நான் இந்த அதிசயத்தை எதிர்பாக்கல. அவரு பக்கத்துல வந்து பேசுவாரா ? ஏதாச்சும் கிடைக்குமா ? ந்னு தான் யோசிச்சேன். அவரு பக்கத்துல வரல, ‘நீங்க போய் குருக்கள் கிட்டே உங்களை காட்டுங்க’ ந்னு அனுப்பி வெச்சாரு.
நபர் 2 : குருக்கள் கிட்டயா ? எதுக்கு ? நீங்க அங்கேயெல்லாம் போக கூடாதுல்ல…
நபர் 1 : ஆமா.. இருந்தாலும் இயேசு சொல்றாரேன்னு ஓடிப் போனோம். போற வழியிலேயே எங்க எல்லாருக்குமே நோய் முழுசா தீந்துடுச்சு.. ஒரே அதிர்ச்சி…
நபர் 2 : ஓ.. என்ன சொல்றீங்க… அப்புறம் அப்புறம் என்னாச்சு ( பரபரப்பாய் )
நபர் 1 : அவங்க எல்லாம் குரு கிட்டே ஓடினாங்க.. அவங்க வீட்ல பிள்ளைங்க, மனைவி, சொந்தக்காரங்க, நண்பர்கள் எல்லாரையும் பாக்கற ஆவேசம் அவங்களுக்கு இருந்துச்சி.
நபர் 2: கண்டிப்பா இருக்கும்ல… நீ யும் ஓடியிருப்பியே..
நபர் 1 : நானும் ஓடினேன்.. ஆனா நான் திரும்பி இயேசு கிட்டே ஓடினேன். என்னால அந்த நன்றி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியல. அவரோட கருணையை என்னால நம்ப முடியல. அவரு நல்லாயிருக்கியா ந்னு கேட்டிருந்தாலே நன்றி சொல்லியிருப்பேன்.. நல்லாக்கினாரே.. அவருக்கு எப்படி நன்றி சொல்லாம இருக்க முடியும். அதனால ஓடினேன். ஓடினேன்.. அவரை தூரத்துல பாத்ததும் அழுகை வந்துச்சு.. கத்திகிட்டே ஓடினேன்… அப்படியே தரையில விழுந்து நன்றி சொன்னேன்.
நபர் 2 : ஓ.. ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. அவரு என்ன சொன்னாரு ?
நபர் 1 : நீ மட்டும் தான் குணமானியா ? மற்றவங்க எங்கே ? ந்னு கேட்டாரு. ஒரு சமாரியன் மட்டும் நன்றி செலுத்த வந்திருக்கானே ? மற்ற யூதர்களெல்லாம் எங்கே போயிட்டாங்கன்னு அவருக்கு வருத்தம்.
நபர் 2 : ஓ.. நீ மட்டும் தான் அதுல சமாரியனா ? ஆச்சரியம் தான்.
நபர் 1 : ஆமா.. உன்னோட நம்பிக்கை உன்னை சுகமாக்கிடுச்சு.. எழும்பி போ .. ந்னு பாராட்டி அனுப்பி வெச்சாரு.. அப்புறம் தான் நான் குருவைப் பாக்க போனேன். அங்கே அந்த ஒன்பது பேரையும் காணல. ஏற்கனவே போயிட்டாங்க போல.
நபர் 2 : வாவ்.. ஆச்சரியம் தான். நானும் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா வேற மாதிரி கேள்விப்பட்டிருக்கேன். குழம்பவாதின்னு தான் என் நண்பர்கள் எல்லாரும் சொல்றாங்க. அவரு அதிசயம் செய்றதையெல்லாம் நான் நம்பினதில்லை. ஆனா நீ சொல்றதைக் கேட்டா ஆச்சரியமா தான் இருக்கு.
( அப்போது இரண்டு பேர் ஓடி வருகிறார்கள் )
நபர் 3 : ( நபர் 2 டம் ) டேய்… உன்னை எங்கெல்லாம் தேடறதுடா… எங்கே போயிட்டே…
நபர் 2 : இங்கே தாண்டா இருக்கேன்… என்ன விஷயம் பரபரப்பா ஓடி வரீங்க
நபர் 4 : எல்லாம் நல்ல விஷயம் தாண்டா.. ரொம்ப நாளா நாம எதிர்பார்த்த விஷயம்… இன்னிக்கு நடக்க போவுது.
நபர் 2 : ஓ.. அப்படி என்னடா விஷயம் சொல்லு.. ரொம்ப காக்க வைக்காதே… ( அவசரமாய் )
நபர் 3 : அவனை புடிச்சுட்டாங்க.. நம்ப முடியலைல்ல…. இன்னிக்கு குளோஸ் பண்ணிடுவாங்க..
நபர் 2 : யாரை டா ?
நபர் 4 : டேய்…. இயேசுவை டா.. நம்ம ஏரியால வந்து நம்ம குருக்களைப் பத்தியெல்லாம் திட்டிட்டு திரிஞ்சாரே அந்த மனுஷனைத் தான். இனிமே விடவே மாட்டாங்க.
நபர் 1 : (பதட்டமாக ) என்னது இயேசுவை புடிச்சுட்டாங்களா ? ஏன் ? ஏன் ? அவரு என்னய்யா கெடுதல் பண்ணினாரு ? அவரு எல்லாருக்கும் நல்லது தானே பண்ணினாரு ?
நபர் 3 : இவன் யாருடா ? இவன் எப்படி உன் கூட இருக்கான் ? பாத்தா நம்ம ஆளு மாதிரி இல்லையே…
நபர் 2 : இவரு ஒரு தொழுநோயாளிடா.. இப்போ நல்ல சுகம் கிடைச்சு சந்தோசமா இருக்காரு. அவருக்கு சுகம் கொடுத்தது இயேசுவாம்
நபர் 4 : இயேசுவா ? என்னடா சொல்றே
நபர் 1 : ஆமாங்க.. அவரு தான் எனக்கும் என் கூட இன்னும் ஒன்பது பேருக்கும் சுகம் கொடுத்தாரு, பிளீஸ் அவரை விட்டுட சொல்லுங்க. அவரு யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணினதில்லை. நல்லதை மட்டும் தான் பேசறாரு, செய்றாரு.. பிளீஸ்
நபர் 3 :யோய்.. தள்ளி நில்லுய்யா.. டேய் (நபர் 2 பார்த்து )..நாம போலாம்.. வரியா ? இன்னிக்கு அவரை சிலுவைல அறைய சான்ஸ் இருக்கு.
நபர் 1 : ஐயோ.. சிலுவையிலயா.. வேணாம்யா.. பிளீஸ்.. தடுத்துடுங்கய்யா.. அவரு ரொம்ப நல்லவருய்யா.. பிளீஸ்.. நானும் வரேன்.. நாம போய் அவருக்கு சப்போர்ட் பண்ணுவோம்.
நபர் 4 : நீ வரவேணாம்.. நீ இங்கயே இரு…
நபர் 1 : ஐயா. அவரோட அன்பை மறந்துடாதீங்க.. அவரோட கருணையை மறந்துடாதீங்கய்யா.. நன்றியோட இருங்கய்யா… பிளீஸ்.. என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்கய்யா..
நபர் 2 : ஆமாப்பா.. இவன் சொல்றதைப் பாத்தா இயேசு நல்லவரு மாதிரி தான் தெரியுது.. நாம அவரை சப்போர்ட் பண்ணலாம்.
நபர் 3 : உனக்கும் கிறுக்கு புடிச்சிருச்சு.. நீயும் இவன் கூடவே கெட…
( அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு விட்டு போகின்றனர் )
நபர் 1 : ஐயா.. விட்டிடுங்கய்யா.. வேணாம்யா… அவரை ஒண்ணும் பண்ணிடாதீங்கய்யா… ( பின்னாலேயே போகின்றனர் )
*
பின்குரல் :
இயேசுவின் கருணை பாரபட்சம் இல்லாமல் எல்லா இனத்தவருக்கும் கிடைக்கிறது. அதை ஏற்றுக் கொள்வதும், அதற்காய் நன்றியுடையவர்களாய் இருப்பதும் நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களாகும். பத்து தொழுநோயாளிகளில் ஒருவனைப் போல, திரும்பி வரவேண்டும். நன்றி மறக்காதவர்களாக.