
காட்சி 1
( இரண்டு நண்பர்கள் .. அருள் & ஸ்டீபன்…
ஸ்டீபன் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் பின்னாலிருந்து அழைக்கிறார்… )
அருள் : ஸ்டீபன்… ஸ்டீபன்… டேய்… நில்லுப்பா..
ஸ்டீபன் : ஹேய்.. அருள் எப்படி இருக்கே ?
அருள் : நல்லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே ?
ஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே ?
அருள் : இங்கே தாண்டா இருக்கேன்… வேலை தேடி நாலு இடம் போக வேண்டி இருக்கிறதனால நாம மீட் பண்ண முடியாம போயிடுது.
ஸ்டீபன் : வேலை தேடியா ? ஏன் இப்போ இருக்கிற வேலைக்கென்ன குறைச்சல் ?
அருள் : அந்த வேலையை விட்டு தூக்கிட்டாங்கடா !
ஸ்டீபன் : என்னடா சொல்றே ? வேலையை விட்டு தூக்கிட்டாங்களா ?
அருள் : ஆமாடா… அது ஒரு பெரிய கதை !
ஸ்டீபன் : என்னடா இது ! பெட் ரோல் விலை ஏறிடுச்சுன்னு சொல்ற மாதிரி சர்வ சாதாரணமா சொல்றே ?
அருள் : என்ன பண்ண சொல்றே ? ஷாக் ஆயிட்டா மட்டும் ஜாப் கிடைச்சுடுமா என்ன ?
ஸ்டீபன் : ஆமா ஏன் வேலையை விட்டு தூக்கினாங்க ? நீ அங்கே சீனியர் ஆச்சே.. நல்ல பேரு வேற இருக்கு !
அருள் : என்னத்த சொல்றது ? போன வருஷம் ஏதோ டிஜிடல் டிரான்ஸ்பர்மேஷன் பண்றோம்ன்னு சொல்லி எல்லாத்தையும் கம்ப்யூட்டர் மயம் ஆக்கினாங்க, கால்வாசி பேரு காலி. ஆறு மாசம் கழிச்சு ஆட்டோமேஷன் பண்றேன்னு சொன்னாங்க, ஆளு பாதி காலி. இப்போ ரோபோட்டிக்ஸ் கொண்டு வராங்களாம்… மிச்சம் இருந்ததுலயும் கால்வாசி காலியாயிடுச்சு.
ஸ்டீபன் : என்னடா சொல்றே ? ரோபோவா ? நீ பெயிண்டிங் கம்பெனில தானே இருக்கே ? இங்கே எப்படி ரோபோ ?
அருள் : நீ விஷயம் தெரியாதவனா இருக்கேடா.. ரோபோ கைல பக்கெட்டை குடுத்தா ஒரு சொட்டு கூட கீழா சிந்தாம அஞ்சு நிமிஷத்துல ஒரு சுவரை அழகா பெயிண்ட் பண்ணிடுது. எந்த பெயிண்டிங்கை புரோக்ராம் பண்ணி குடுத்தாலும் சுவத்துல அந்த பெயிண்டிங்கை ரெண்டு நிமிஷத்துல வரஞ்சுடுது. மொத்தத்துல நாம நாலு வாரம் செய்ற வேலையை அது நாலு மணி நேரத்துல செய்யுது.
ஸ்டீபன் : ம்ம்.. இருந்தாலும் நீ கொஞ்சம் பிளீஸ் பண்ணி கேட்டிருக்கலாம்டா.. நீ செம ரேட்டிங் வாங்கற பையன் தானே ?
அருள் : கேட்டேன்… ஒரு கண்டிஷன் போட்டாங்க. சண்டே எல்லாம் கம்பெனிக்கு வரணும்ன்னு சொன்னாங்க. சர்ச் இருக்குன்னு சொன்னேன். போகாம இருக்க முடியாதான்னு கேட்டாங்க. சர்ச்சுக்கெல்லாம் ரோபோவை அனுப்ப முடியாது சார்ன்னு சொன்னேன். கடுப்பாயிட்டான் போல ( சிரிக்கிறான் ) கையோட லெட்டர் குடுத்து அனுப்பிட்டான்.
ஸ்டீபன் : சர்ச்ல தான் கடவுள் இருக்காரா என்ன ? உன் உடம்பே தேவாலயம் தான்னு சொல்லுது பைபிள். சண்டே வேலைக்கு போறதுல என்ன தப்பு ? நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணியிருக்கலாம் டா…
அருள் : இப்படி தாண்டா சாத்தான் டெம்ட் பண்ணுவான். இயேசு கிட்டயே வசனம் பேசி வாங்கிக் கட்டிகிட்டவன் அவன். இப்போ சண்டே சர்ச்சுக்கு போக வேண்டாம்ன்னு தோணும், அப்புறம் எந்த டேவும் சர்ச்சுக்கு போக வேண்டாம்ன்னு தோணும், அப்புறம் சர்ச் எதுக்குன்னு தோணும்.. அப்புறம் ஆண்டவர் எதுக்குன்னு தோணும்…
ஸ்டீபன் : ஓ.. இவ்ளோ மேட்டர் இருக்கா ?
அருள் : ஆமாடா.. இந்த மாதிரி டெம்டேஷனை எல்லாம் முளையிலேயே கிள்ளி எறியணும். இல்லேன்னா, படிப்படியா நாம கடவுளை விட்டு தூரமா போயிடுவோம். கடவுளுக்காக எதை வேணும்னாலும் விட்டுக் குடுக்கலாம். ஆனா கடவுளுளை எதுக்காகவும் விட்டுக்கொடுக்கக் கூடாதுடா…
ஸ்டீபன் : நான் விட்டுக்குடுக்கச் சொல்லல, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்ன்னு தான் சொன்னேன்….
அருள் : ஆமா… கடவுள் விஷயத்துல மட்டும் எல்லாருக்கும் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஈசியா வருது. ஏன்னு தெரியல. முதல்ல தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் தேட தான் பைபிள் சொல்லுது. அட்ஜெஸ்ட்மென்ட் அவரை இரண்டாம் இடத்துக்கு தள்ளிடும். அது பாவம் !
ம்ம்.. புரியுது புரியுது..சரி.. நான் ஒரு ஐடியா சொல்றேன். கேக்கறியா ?
அருள் : சொல்லுடா… ஐடியா சொல்றதுக்கெல்லாம் பர்மிஷன் கேக்கற ஒரே ஆள் நீதாண்டா…
ஸ்டீபன் : பஞ்ச் டயலாக் இருக்கட்டும்.. எனக்கு தெரிஞ்ச ஒரு கன்சல்டன்சி இருக்கு. சீக் அண்ட் ஃபைண்ட் ந்னு. அங்கே போய் பேசிப் பாப்போம். அவங்க சீக்கிரம் ஏதாச்சும் ஒரு நல்ல வேலையை கண்டு பிடிச்சு குடுப்பாங்க.
அருள் : கண்டிப்பாடா.. போலாம். வர்க் அவுட் ஆவுதா பாப்போம்.
காட்சி 2
கன் சல்டன்சியில் மேனேஜர் மற்றும் ஒரு செக்கரட்டரி இருக்கிறார்கள்.
மேனேஜர் : ( ஒரு கணினி முன்னால் அமர்ந்து தட்டிக் கொண்டிருக்கிறார் ) என்னப்பா இன்னிக்கு ஆபீசே வெறிச்சோடிப் போய் இருக்கு.. நமக்கு போணி ஏதும் தேறாது போலிருக்கே.
செக்கரட்டரி : ஆமா சார்.. இன்னிக்கு எல்லாருக்கும் வேலை கிடைச்சுச்சா ? இல்லை நாடு திருந்திருச்சா ? இல்ல வேலையில்லா திண்டாட்டம் ஒழிஞ்சுடுச்சா ? ஒண்ணுமே புரியலையே.
மேனேஜர் : ம்ம்ம்.. வெட்டியா ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு.
செக்கரட்டரி : வெட்டியா இல்ல சார்.. வெட்டியான் மாதிரி ஒக்காந்திருக்க வேண்டியிருக்கு. எப்படா பொணம் வரும், நமக்கு வேலை வரும்ங்கறது மாதிரி.
மேனேஜர் : ஏய்.. உன் வாய்ல நல்ல வார்த்தையே வராதா… பொணம் கிணம்ன்னு
(அப்போது கதவு தட்டும் ஓசை )
மேனேஜர் : போய் கதவை திறடா… ஏதோ பொணம் வந்திருக்கு… சே..சே..யாரோ வந்திருக்காங்க… ( உங் கூட சேர்ந்தா நான் வெட்டியானாவே ஆயிடுவேன் போல ..)( முணுமுணுக்கிறார் )
( அருளும், ஸ்டீபனும் உள்ளே வருகின்றார்கள் )
மேனேஜர் : ( சிரித்த முகத்துடன் ) வாங்க…வாங்க…வாங்க.. உக்காருங்க.
செக்கரட்டரி : சார் நமக்கு ஒரு போணி கிடைச்சிருக்கு ஹிஹி ( மெதுவாக )
அருள் : வணக்கம் சார்… ரொம்ப சந்தோசமா இருக்கீங்க சார்…
செக்கரட்டரி : நோயாளியைப் பாத்தா டாக்டர் சந்தோசப்படறதில்லையா ? ஆட்டுக்குட்டியைப் பாத்தா கசாப்புக்கடைக்காரன் சந்தோசப்படறதில்லையா…
மேனேஜர் ( அவரை முறைக்கிறார் ) கொஞ்சம் பேசாம இருக்கீங்களா .. சார் நீங்க உக்காருங்க.
( இருவரும் உட்கார்கிறார்கள் )
மேனேஜர் : சொல்லுங்க என்ன விஷயம்.. வாட் கேன் ஐ டூ பார் யூ.
செக்கரட்டரி : சார் தமிழ்லயே பேசுங்க.. அவங்களுக்கு இங்கிலீஸ் தெரியுமோ தெரியாதோ… பயந்துடப் போறாங்க
மேனேஜர் ( முறைக்கிறார் ) : கொஞ்சம் அந்த பக்கம் தள்ளி நில்லுப்பா நீ.
அருள் : சார்… எனக்கு வேலை போயிடுச்சு.. அதான் உங்க கிட்டே வந்து ஏதாச்சும் சேன்ஸ் இருக்கான்னு கேக்க வந்தோம்.
மேனேஜர் : வெரி குட்… வெரிகுட்…
அருள் : வேலை போனது வெரிகுட் ஆ சார்.
மேனேஜர் : நோ..நோ.. எங்கிட்டே வந்தது…. வெரிகுட் ந்னு சொன்னேன். ஒரு நல்ல வேலை புடிச்சுடலாம். டோண்ட் வொரி.. டோண்ட் வரி.. ஐ வில் டேக் கேர்.
செக்கரட்டரி : சார் தமிழ்ல்ல…. ( மேனேஜர் முறைக்க அமைதியாகிறார் )
அருள் : தேங்க்யூ சார்.
மேனேஜர் : எவ்ளோ நாளா வேலையில்லாம இருக்கீங்க. (கம்ப்யூட்டரில் தட்டுகிறார்… )
அருள் : ஒரு ரெண்டு மாசமா சார்.
மேனேஜர் : டூ மந்த்ஸ்… ஓ.. நோ.. அப்போ நீங்க ஒரு யூஸ்லெஸ் பர்சன் இப்போதைக்கு.
அருள் : அப்படியெல்லாம் இல்ல சார்.. ஏன் அப்படி சொல்றீங்க..
மேனேஜர் : நோ..நோ நான் சொல்லல, என் கம்ப்யூட்டர் சொல்லுது. பணம் இல்லாதவன்னா யூஸ்லெஸ் ந்னு இது சொல்லுது. பணம் இல்லேன்னா யாரு மதிக்கிறது தம்பி… எனக்கு ஃபீஸ் தர பணம் இருக்கா ?
அருள் : எல்லாம் இருக்கு சார்… இவ்ளோ நாள் சமாளிச்சுட்டேன்.. ரொம்ப நாள் ஆயிடுச்சு.. அதனால சீக்கிரம் ஒரு வேலை வாங்கணும் ..
மேனேஜர் : வெரிகுட்… செல்ஃப் ரியலைசேஷன் வந்திருக்கு.. வெரி குட். அப்போ கொஞ்சம் பெட்டரான யூஸ்லெஸ் ந்னு சொல்லலாம்.
அருள் : சார்.. ஐம் நாட் யூஸ்லெஸ்.. ஐம் காட்ஸ் சைல்ட்.. நான் கடவுளோட பிள்ளை. எப்பவுமே யூஸ்லெஸ் கிடையாது.
மேனேஜர் : ஓ.. காட்ஸ் சைல்டா… அதை ஏன் முதல்லயே சொல்லல.. அந்த கேட்டகிரில ஏதாச்சும் வேலை இருக்கா பாக்கறேன் ( கம்ப்யூட்டரில் தட்டிப் பார்க்கிறார் ) காட்ஸ் சைல்ட் ந்னு எந்த வேலையும் இல்லையேப்பா… காட்ஸ் சைல்ட் க்கு எவ்ளோ சம்பளம் குடுப்பாங்க.
அருள் : சார்.. அது வேலை இல்ல சார்.. வேலை செய்து அந்த பேரை வாங்க முடியாது. அது இலவசமா கிடைக்கிறது.
மேனேஜர் : ஃபிரீயாவா ?
அருள் : ஆமா சார்… யார் வேண்டுமானாலும் பிரீயா அதை வாங்கிக்கலாம்…
மேனேஜர் ( குழப்பமாய் தலையைச் சொறிகிறார் ) : இதென்னடா நமக்குத் தெரியாத புது வேலை ???
செக்கரட்டரி : செக்யூரிடி கார்டா இருக்குமோ சார் ?
மேனேஜர் : அதுக்கு சம்பளம் இருக்கேப்பா…
அருள் : சார்…. காட்ஸ் சைல்ட் ங்கறது ஒரு ஆசீர்வாதம், ஒரு உயர்வான நிலை, ஒரு டிவைன் ஸ்டேட்டஸ், அரசனுக்கு மகன் மாதிரி…
மேனேஜர் : ஓ… இங்கிலாந்து மஹாராணிக்கு மகன் மாதிரி… ம்ம்.. ஓகே ஓகே… எப்படி கிடைச்சுது அந்த வேலை ? எவ்ளோ குடுத்தீங்க ? ரொம்ப கஷ்டமோ ?
அருள் : சார்.. இதெல்லாம் காசு குடுத்து கிடைக்கிறதில்லை… கஷ்டமே இல்லாத விஷயம் அது. இஷ்டம் இருந்தா போதும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனா மாறுற எல்லாருக்கும் கிடைக்கிறது தான்.
மேனேஜர் ( உற்சாகமாகிறார் ) : ஓ.. நீ கிறிஸ்டியனா ? என்னப்பா அதை முதல்ல சொல்ல வேண்டாமா ? டைம் வேஸ்ட் பண்ணிட்டியே…ச்சே..ச்சே..ச்சே… ( கம்யூட்டரில் வேகமாகத் தட்டுகிறார் )… சூப்பர்ப்பா.. உனக்கு வேலை கிடைச்சாச்சு….
அருள் : என்ன சார் சொல்றீங்க ?
மேனேஜர் : ( கம்யூட்டரைப் பார்த்துக் கொண்டே ) ஆமாப்பா… நற்செய்தி டிவி சானல்ல நாலு வேலை காலி இருக்கு… டிரம்பெட் பத்திரிகைல ரிப்போர்ட்டர் வேலை காலியிருக்கு… ரெண்டு மூணு சர்ச்ல உதவியாளர் வேலை காலியிருக்கு….
அருள் : சார்… வெயிட் வெயிட்… கிறிஸ்டியன்னு சொன்னா உடனே சர்ச்ல வேலைன்னு ஆரம்பிக்காதீங்க.. எங்க வேலை செய்றதுங்கறது முக்கியம் இல்லை. எல்லா இடத்துலயும் கிறிஸ்டியனா இருக்கலாம்.. இப்போ, நான் ஒரு பெயிண்டர் அதுக்கு ஏதாச்சும் வேலை இருக்கா ?
மேனேஜர் : இல்லப்பா.. இங்கெல்லாம் வேலை செஞ்சா எப்பவும் கடவுளை நினைச்சுட்டே இருக்கலாம் இல்லையா.. அதான் சொன்னேன்…. நான் நிறைய பேரை சேத்து விட்டுருக்கேன்.. நல்ல கமிஷன் கூட தந்திருக்காங்க..
அருள் : சார்.. எங்கே வேலை செஞ்சாலும் அது கடவுளுக்காகத் தான் செய்யணும். அதை தான் பைபிள் சொல்லுது. வேலை இல்லாம இருந்தா கூட கடவுளுக்காக வேலை செய்யலாம்..
மேனேஜர் : குழப்பறியேப்பா.. வேலை இல்லாம இருக்கும்போ எப்படி வேலை செய்வே ?
அருள் : ஏழைகளுக்கு என்ன செஞ்சாலும் அது கடவுளுக்குச் செஞ்சதுன்னு கடவுள் சொல்லியிருக்காரு சார்… நான் முடிஞ்ச அளவுக்கு அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன்..அதைத் தான் சொன்னேன்.
மேனேஜர் : சம்பளம் இல்லாத வேலை தானே ?
அருள் : சார் சம்பளம் இந்த உலக தேவையை நிறைவேத்தறதுக்கு. சம்பளம் இருந்தாலும் இல்லாட்டாலும் நான் கடவுளோட பிள்ளைங்கறது மாறப் போறதில்லையே ?
மேனேஜர் : உன் கேஸ் கொஞ்சம் வித்தியாசமா இருக்குப்பா.. காட்ஸ் சைல்ட் ந்னு சொல்றே… அது பிரியா கிடைச்சுதுன்னு சொல்றே… எல்லா வேலையிலயும் கடவுளுக்கு வேலை செய்வேன்னு சொல்றே… வேலையில்லாட்டா கூட கடவுளுக்கு வேலை செய்வேன்னு சொல்றே… என்னையே யோசிக்க வெச்சுட்டியேப்பா..
அருள் : சார்… வேலை போச்சு, மார்க் போச்சு, வீட்ல சண்டை போடறாங்க, பிரண்ட்ஸ் விட்டுட்டு போயிட்டாங்க ந்னு சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். ஏன்னா எல்லாத்தையும் விட பெரிய அங்கீகாரம் தான் கடவுளோட பிள்ளைங்கற அங்கீகாரம். அது இருக்கும்போ நான் எதுக்கு சின்னச் சின்ன விஷயங்களைப் பற்றி கவலைப்படணும்.
செக்கரட்டரி : அதாவது பிளைட்ல போகும்போ ஏன் புல் தடுக்கும் ந்னு பயப்படணும்ன்னு சொல்றாரு சார்.
மேனேஜர் : இப்போ தாண்டா நீ ஒரு நல்ல வார்த்தை பேசியிருக்கே !
செக்கரட்டரி : நல்லவங்க கூட பேசிட்டிருக்கும்போ தான் சார் நல்ல வார்த்தை வரும்
(மேனேஜர் முறைக்கிறார் )
அருள் : சார்.. அதெல்லாம் இருக்கட்டும் சார். என்னோட கடமைகளை நிறைவேற்ற வேண்டி இருக்கும். ஏதாச்சும் என்னோட திறமைக்கு தக்க வேலை இருந்தா சொல்லுங்க சார். கடவுளுக்கு சித்தம் இருந்தா கிடைக்கட்டும்.
மேனேஜர் : கண்டிப்பா…. டீட்டெயில்ஸ் எல்லாம் நோட் பண்ணிட்டேன்பா… நான் அப்படியே என்னோட ஹெட் ஆபீஸுக்கு அனுப்பி ஏதாச்சும் வேலை இருக்கான்னு பாத்து சொல்றேன்… நீ கவலைப்படாம போயிட்டு வா…
அருள் : தேங்க்யூ சார்…
( இருவரும் எழுந்து வெளியே போகிறார்கள் )
மேனேஜர் : யப்பா செக்கரட்டரி… வேலை இல்லாம ரெண்டு மாசமா சுத்திட்டிருக்கான்.. ஆனாலும் எவ்ளோ கூலா, நிதானமா, சந்தோசமா இருக்கான் பாத்தியா ?!
செக்கரட்டரி : ஆமா சார்… ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.
மேனேஜர் : அவன் ஏதோ காட்ஸ் சைல்ட் ந்னு சொன்னான்ல, அதான் அதுக்கு காரணம்ன்னு நினைக்கிறேன்.
செக்கரட்டரி : ஆமா சார்… அதான் நானும் நினைக்கிறேன்…
மேனேஜர் : நாமும்… எப்படியாச்சும் காட்ஸ் சைல்ட் ஆயிடணும்பா… அது எப்படின்னு கண்டுபிடிப்போம்.
செக்கரட்டரி : கண்டிப்பா சார்.. எனக்கும் அதான் தோணிச்சு… அப்போ தான் எப்பவுமே சந்தோசமா இருக்க முடியும். இல்லேன்னா உங்க கிட்டே வேலை செய்யும்போ எப்படி சந்தோசமா இருக்கிறது ?
மேனேஜர் முறைக்கிறார் : உன்னையெல்லாம் திருத்தவே முடியாதுடா…
———
பின் குரல் :
வாழ்வில் மிக உன்னதமான நிலை என்பது ராஜாதி ராஜாவாம் இயேசுவின் பிள்ளைகள் எனும் நிலை தான். மற்ற எல்லா வெற்றிகளும், தோல்விகளும் சாதாரணமானவை. தற்காலிகமானவை. இறைவனின் பிள்ளைகள் என்பதே உன்னதமான உயர்ந்த நிலை.
நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம் என்கிறது 1 யோவான் 3 :1.
இந்த நிலை நமக்கு இறைவனால் இலவசமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. “நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை என்கிறது எபேசியர் 2 : 8”.
எனவே நாம் இறைவனின் பிள்ளைகள் எனும் நிலையை அடைவோம். அதன் மூலம் வாழ்க்கையை இனிமையாய் எதிர்கொள்வோம். நன்றி.
Like this:
Like Loading...