Posted in Articles, Christianity, Sunday School

பிலாத்துவும் பிராகுளாவும்…

கிளாடியா பிராகுளாவாகிய நான்..

*

Image result for wife of pilate

காட்சி 1 

( பிலாத்துவின் மனைவி < ‍பி.ம‍ >  கை தட்டுகிறார்.. அப்போது பணியாளர் அவரிடம் வருகிறார் )

பி.ம : என்னப்பா ? வழக்கத்துக்கு மாறாக‌ மாளிகை பகுதியில் ஒரே சத்தமும், சலசலப்புமாக இருக்கிறதே ? என்ன விஷயம் ?

பணி : தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், நிறைய மக்களும் ஆளுநர் மாளிகை முன்னால் கூடியிருக்கிறார்கள் அதனால் தான் இந்த சலசலப்பு.

பி. ம : அவர்கள் எல்லோருமா ? இந்தpilayt அதிகாலை வேளையிலா ? இன்னும் வானம் முழுமையாய் வெளுக்கவில்லை. இருள் கூட இன்னும் விலகவில்லை. இந்த அதிகாலை வேளையில் அங்கே என்ன கூட்டம் ?

பணி : காரியம் ஆகவேண்டுமென்றால் காலையில் வரவேண்டும் என்பது விதி போலிருக்கிறது. 

பி. ம : இருளின் காரியங்களுக்காகத் தான் மக்கள் இருள் விலகும் முன் வருவார்கள். என்ன காரியம் ஆகவேண்டுமாம் அவர்களுக்கு ?

பணி : ஏதோ ஒருவன் கடவுளைப் பழித்துரைத்தானாம், அரசை இடித்துரைத்தானாம், தலைவர்களைக் கடிந்துரைத்தானாம். அதனால் அவனைக் கட்டியிழுத்து கொண்டு வந்திருக்கிறார்கள்.

பி.ம : ஹா..ஹா.. யாரையாவது அழிக்க வேண்டுமென்றால் தான் எல்லோரும் ஒன்று கூடுவார்கள்.. அப்படி யார் நமது நாட்டில் இருக்க முடியும் ? அவனைப் பிடிக்க அதிகாலையில் தான் முடிந்ததா ? வெளிச்சத்தில் முடியவில்லையா ?

பணி : நல்ல கேள்வி ! நள்ளிரவில் கெத்சமெனேயில் செபித்துக் கொண்டிருந்தவரை படையோடு சென்று பிடித்து விட்டனர். தீப்பந்தங்களோடு சென்று அவனை அள்ளி வந்தனர். சொல்லப் போனால் கூட இருந்தவன் ஒருவனே காசுக்காக அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டான். 

பி.ம : நள்ளிரவில் செபமா ? நண்பனின் துரோகமா ? உன் கதை சுவாரஸ்யமாய் இருக்கிறது. பிடிபட்டவன் பெயர் என்ன ? ரோமருக்கு எதிராய் கலகக் குரல் எழுப்பும் போராளியா ?

பணி : முழுமையான விஷயம் தெரியவில்லை. ஆனால் அவன் பெயர் இயேசு, நசரேயனாகிய இயேசு !

பி.ம : என்னது இயேசுவா ? கொஞ்ச நாளுக்கு முன்னால் கழுதையின் மேலேறி ஊருக்குள் உற்சாக ஊர்வலம் வந்தாரே அவரா ?

பணி : ஆம் ! அவரே தான்.

பி. ம : நிஜமாகவே தெரியுமா உனக்கு ? அவர் போராளியில்லையே ! அவரது கண்களை நான் பார்த்தேனே, அது கருணையின் கடலாய் அல்லவா இருந்தது ? அதில் எப்படி வன்முறையின் அனல் வந்தது ? அவரது முகமே கடவுளின் பிம்பமாய் அல்லவா இருந்தது ? எனில் எப்படி கடவுளையே அவர் பழித்துரைக்க முடியும் ?

பணி : தெரியவில்லை… அன்னா, கயபா முதற்கொண்டு எல்லோருமே வந்திருக்கிறார்கள். அவரை கொன்று விட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பி. ம : கொன்று விடவா.. அப்படியானால்.. நான் கண்ட கனவு இதைத் தான் குறிப்பிட்டதா ? ( அதிர்ச்சியில் தலையில் கையை வைக்கிறார் )

பணி : கனவா ? என்ன கனவு ? என்ன சொல்கிறீர்கள் ?

பி.ம : இரவு முழுவதும் என்னைக் கனவுகள் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஒரு கனவில் ஒரு வெள்ளை ஆட்டுக்குட்டி என் முன்னால் வருகிறது.அதன் முதுகெங்கும் வரிக்குதிரையைப் போன்ற கோடுகள். ஆனால் அவை சிவப்பு நிறமாய் இருந்தன. அழகாய் இருக்கிறதே என தொட்டுப் பார்த்தால், கையில் பிசுபிசுப்பாய் இரத்தம். அதிர்ச்சியில் உற்றுப் பார்க்க, அந்த ஆட்டுக்குட்டியின் உடலில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. அது திரும்பி என்னைப் பார்த்தது. சட்டென அதன் நெற்றியிலிருந்தும் இரத்தம் வழிய சட்டென விழித்துக் கொண்டேன்.

பணி : கனவு திகிலூட்டுகிறதே.. இப்படி ஒரு கனவா ?

பி. ம : ஆம்.. அப்புறம் எனக்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. அடுத்து தூங்கிய போது முட்களும், சாட்டைகளும், முள் சாட்டைகளும் ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். அப்போது ஒரு வாள் எங்கிருந்தோ வந்து அவளை ஊடுருவியது. நான் திடுக்கிட்டு விழித்தேன். 

பணி : என்னம்மா கனவுகள்.. இப்படியெல்லாம் கனவுகள் வருமா  ? நினைத்தாலே குலை நடுங்குகிறதே !

பி. ம : ஆம்… உண்மை தான். அதன் பின் அதிகாலை வரை தூக்கம் வரவில்லை. அதிகாலையில் தூங்கிய போது மீண்டும் ஒரு கனவு. வானிலிருந்து ஒரு அழகிய வெள்ளைப் புறா இறங்கி வருகிறது. அதை வேடர்கள் கூட்டம் பிடிக்கிறது. அதை அடித்து, துவைத்து ஒரு மரத்தில் கட்டி ஆணியால் அறைகிறார்கள். பறவை இறக்கையை அடித்துப் படபடக்கிறது. நான் அதை விடுவிக்கலாம் என அருகில் சென்றேன். சட்டென அந்த புறாவின் முகம் இயேசுவின் முகமாக மாறி என்னைப் பார்த்தது. நான் பதறினேன்… படுக்கையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.

பணி : உங்கள் கனவுகள் கவலையடையச் செய்கின்றன. ஏதோ ஒரு விபரீதம் வரப்போவதை அவை உணர்த்துகின்றன. 

பி. ம : ஆம்.. அதிகாலையில் காணும் கனவு…. பலிக்கும் என்பார்கள். இந்தக் கனவும் பலித்து விடுமா ? அப்படியானால் இயேசுவின் முதுகில் இரத்தக் கோடுகள் விழுமா ? அவர் நீதிமான் என்பதையே எனது கனவு எனக்கு சொல்கிறது. அப்படியானால் அவரை ஏதாவது செய்தால் அது தீராப் பாவமாக விழும்.

பணி : உண்மை தான் .. கனவுகள் மூலமாக கடவுள் எச்சரிக்கை விடுப்பது புதிதொன்றுமில்லையே. இப்போ என்ன செய்யலாம் ?

பி.ம : நீ போய், இயேசுவை ஒன்றும் செய்ய வேண்டாமென பிலாத்துவின் மனைவி கிளாடியா பிராகுலாவாகிய நான் சொன்னேன் என சொல்.

பணி : அம்மா. நான் அந்த அவைக்குச் செல்ல முடியாது. சென்றாலும் என்னால் அவரை நெருங்கி பேச முடியாது. நான் பேசினாலும் அதற்கு வலிமை இருக்காது. நீங்களே அவரிடம் சென்று சொல்லுங்கள்.

பி.ம : ஆளுநரின் இருக்கைக்கு நான் செல்லக் கூடாது. பெண்களுக்கு அது அனுமதியில்லை.

பணி : அப்படியானால், அதை ஒரு கடிதமாய் எழுதித் தாருங்கள். அதை நான் கொண்டு அவரிடம் கொடுக்கிறேன்.

பி. ம : சரி.. அதுவும் நல்ல யோசனை தான். உடனடியாக நீ இதைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். சற்றும் தாமதிக்க வேண்டாம். எனக்கென்னவோ பயமாக இருக்கிறது. 

பணி : சரி.. அப்படியே ஆகட்டும். 

2

காட்சி 2 

பிலாத்து இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அப்போது பணியாளர் அந்தக் கடிதத்தை கொடுக்கிறார். பிலாத்து அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்கிறார். அவரது முகம் மாறுகிறது. பணியாளரின் காதில் ஏதோ முணு முணுக்கிறார். பணியாளர் ஆம் என்பது போல தலையாட்டுகிறார். 

( இயேசு முன்னால் நிற்கிறார் , குற்றம் சுமத்துவோர் இருக்கின்றனர், படை வீரர்களும் இருக்கின்றனர் )

பிலாத்து : நீ யூதரின் அரசனா ? 

இயேசு : (அமைதியாக ) அவ்வாறு நீர் சொல்கிறீர் !

பிலாத்து : நான் சொல்கிறேனா ? ஏரோதிடம் உன்னை அனுப்பினேன். அவர் உன்னை என்னிடம் திருப்பி அனுப்பியிருக்கிறார். இதுவரை பகை காத்த அவன் இப்போது நட்பு பாராட்டுகிறான்.  பகையோடு இருந்த எங்கள் இருவரையும் நண்பர்களாக்கி விட்ட‌ நீ யார் ?

இயேசு : ( அமைதி )

பிலாத்து : நீ குற்றமற்றவன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நிரூபிக்கப்படாத எதுவும் இங்கே நிரந்தரமில்லை. அமைதி என்பது விடுதலை தருவதுமில்லை. பேசு, அப்போது தான் என்னால் தீர்ப்பு கூற முடியும். 

இயேசு : (அமைதி )

பிலாத்து : (மக்களிடம் திரும்பி ) இவனிடம் குற்றம் ஒன்றும் நான் காணவில்லையே. என்னதான் உங்கள் பிரச்சினை ? குற்றமில்லாதவன் மேல் ஏன் குற்றப்பத்திரிகை ?

மக்கள் : என்ன குற்றம் காணவில்லை நீர் ? மக்கள் சீரழியக் காரணமாய் இருந்தானே ? அது குற்றமில்லையா ? 

பிலாத்து : அப்படி என்ன செய்தான் ?

மக்கள் : கலிலேயா முதல், யூதேயா வரை எல்லா இடங்களிலும் ஏதேதோ பேசி மக்களைத் தூண்டி விடுகிறான். நாம் கற்பிப்பது பிழையென்கின்றார், அவன் சொல்வதே இறைவன் சொல்லும் வழி என்கிறான். இவையெல்லாம் தவறில்லையா ?

பிலாத்து ( இயேசுவிடம் ) : இதற்கு என்ன சொல்கிறாய் ? மக்களைத் தூண்டிவிட்டாயா ? கலகத்தின் விதைகளைத் தூவி விட்டாயா ?

இயேசு : ( அமைதி )

மக்கள் : அது மட்டுமா ? தன்னையே கடவுளின் மகனென்றும், கடவுளென்றும் பிதற்றித் திரிந்தானே அது குற்றமில்லையா ? கடவுளுக்கு எதிராகவே பேசும் இவனை சும்மா விடலாமா ?

பிலாத்து : ம்ம்… இவையெல்லாம் மதக் குற்றங்களா ? அரசியல் குற்றங்களா ? நீங்களே அறிவீர்கள். மதத்தின் தீர்ப்புக்கு அரசியல் அவையில் என்ன வேலை ?

மக்கள் : அப்படியானால்… சீசருக்குக் கப்பம் கட்டக் கூடாது என்றானே ? அது அரசியல் குற்றமா இல்லையா ? சீசருக்கு எதிராய் எழும்பும் மனிதரை நீர் குற்றமற்றவர் என்பீரா ? அப்படியானால் நீர் சீசருக்கு ஆதரவா ? இந்த இயேசுவுக்கு ஆதரவா ?

பிலாத்து : நீங்கள் தான் இவற்றையெல்லாம் சொல்கிறீர்கள். நான் அவரிடம் விசாரித்தவரை எனக்கு எந்தக் குற்றமும் தெரியவில்லை. 

மக்கள் : நீங்கள் பாரபட்சம் காட்டுகிறீர்களோ ?

பிலாத்து : யார் ? நானா ? அப்படியானால் ஏரோதிடம் கொண்டு போனீர்களே ! அவரும் குற்றம் ஏதும் காணவில்லையே ? அவரும் பாரபட்சம் காட்டுகிறாரா ? ஆளுநருக்கு எதிராய் எப்படி நீங்கள் குரலுயர்த்தலாம் !

மக்கள் : இவன் குற்றம் பெரிது இவன் ஒழிய வேண்டும். அதுவே முடிவு.

பிலாத்து : நீங்கள் சொல்வதையெல்லாம் செய்ய முடியாது. குற்றம் நிரூபணமானால் மட்டுமே தண்டனை. பழுதற்றவரை நீங்கள் கழுவில் ஏற்றுவீர்களா ? 

மக்கள் : இவன் குற்றம் செய்யாமல் இருந்திருந்தால் நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம். 

பிலாத்து : நான் எந்த குற்றமும் காணவில்லை. நீங்கள் குற்றம் கண்டால் நீங்களே கொண்டு போய் தண்டனை கொடுங்கள். ஏன் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். இதோ அன்னா இருக்கிறார், கயபா இருக்கிறார். உங்களுக்கென சட்டம் இருக்கிறது. நீங்களே தீர்ப்பிடுங்கள். 

மக்கள் : எங்கள் சட்டம் தண்டனை தான் தர முடியும். மரண தண்டனை தர முடியாது.

பிலாத்து : என்ன ? மரண தண்டனையா ? தண்டனைக்குரிய குற்றமே இவனிடம் இல்லை, அப்படியானால் மரண தண்டனைக்குரிய குற்றம் எங்கே இருக்கிறது ?

மக்கள் : அவரை விசாரித்து, மரண தண்டனை கொடுங்கள்.

பிலாத்து இயேசுவிடம் : உண்மையைச் சொல்,  ? யூதர்களுக்கு நீ என்ன அரசனா ?

இயேசு : இதை நீராக உணர்ந்து கேட்கிறீரா ? இல்லை பிறர் சொல்வதை வைத்துக் கேட்கிறீரா ?

பிலாத்து : நானென்ன யூதனா ? நீ யூதனுக்கு அரசனானால் எனக்கென்ன ? அடிமையானால் எனக்கென்ன ? உன்னுடைய இனம் தானே இங்கே உன்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நீ என்ன செய்தாய் ? 

இயேசு : என் ஆட்சி உங்களுடைய ஆட்சி போன்றதல்ல.

பிலாத்து : அப்படியானால் ? புரியவில்லையே ? ஆட்சி இருக்கிறது, ஆனால் வேறு ஆட்சி அப்படியா ? 

இயேசு : இவ்வுலக ஆட்சியில் தான் யுத்தங்கள். சண்டைகள், தற்காப்பு வீரர்கள். நான் இவ்வுலக அரசனாய் இருந்திருந்தால், கேடயம் என்னைக் காத்திருக்கும். உங்களிடம் பிடிபடாதபடி என் வீரர்களே உங்களை விரட்டியிருப்பார்கள். 

பிலாத்து : ஓ.. அப்படியா ?

இயேசு : ஆம்.. அதனால் தான் சொல்கிறேன், எனது அரசு நீர் நினைக்கும அரசு அல்ல. அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் நீர் இல்லை.

பிலாத்து : எப்படியோ நீர் அரசன் என்கிறீர் ! அப்படித் தானே ?

இயேசு : உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. நான் சொல்லவில்லை. பணியாளன் தன்னை அரசன் என சொல்வதில்லை. 

பிலாத்து : என்ன சொல்கிறாய் புரியவில்லையே !

இயேசு : நான் இந்த உலகத்தில் பிறந்தது உண்மையை எடுத்துரைக்க, உண்மைக்கு சான்று பகர, உண்மையின் மக்கள் என்றும் என்னோடு இருப்பார்கள். பொய்மையின் புதல்வர்களோடு எனக்கு சகவாசம் இல்லை. 

பிலாத்து : உண்மையா ? அது என்ன ? எந்த உண்மை ? 

இயேசு : நானே வழியும் உண்மையும் வாழ்வும் என மக்களுக்குத் தெரியும். உண்மை எதுவென கையில் எடுத்துக் காட்ட முடியாது. அகக்கண்கள் திறந்தாலொழிய புது வெளிச்சம் புரியாது.

( பிலாத்து மக்களிடம் )

பிலாத்து : இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை. நான் ஒன்று செய்கிறேன். இந்த விழா நாளில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம் அல்லவா, அதில் இவனை விடுவிக்கிறேன். இல்லாவிட்டால் பரபாசை விடுவித்து விடுவேன்.

மக்கள் : ஓ.. இரண்டில் ஒன்றா, அப்படியெனில் எங்களுக்குப் பரபாஸ் போதும், இவன் வேண்டாம்.

பிலாத்து : என்ன பரபாஸா ? அவன் கொலைகாரன். கலகக்காரன். அவன் வெளியே வந்தால் உங்களை நிம்மதியாய் இருக்க விடமாட்டான். அவனா வேண்டும் என்கிறீர்கள் ?

மக்கள் : பரபாஸ் போதும். இவன் வேண்டாம்.

பிலாத்து : இவன் என்ன குற்றம் செய்தான். யாரையும் கொல்லவில்லை, எந்த வன்முறை போராட்டத்தையும் நடத்தவில்லை, அரசுக்கு சவால் விடுக்கவில்லை. ஏன் இவரை வெறுக்கிறீர்கள்

மக்கள் : இவனை சிலுவையில் அறையும். பரபாஸை விடுதலை செய்யும்.

பிலாத்து : ஒன்று செய்கிறேன். இவனை நன்றாய் அடித்து, காயப்படுத்தி, இனிமேல் இப்படி ஏதும் செய்யாதபடி அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்

மக்கள் : இவனை சிலுவையில் அறையும், அதுவே எங்களுக்குத் தேவை.

பிலாத்து : ஏன் இவன் சாகவேண்டுமென பிடிவாதம் பிடிக்கிறீர்கள். சட்டத்தில் அதற்கு இடமில்லையே

மக்கள் : எங்களுக்கென ஒரு சட்டம் உண்டு, அதன்படி இவன் சாகவேண்டும்.

பிலாத்து : இல்லை இவனை தண்டித்து விடுவிப்பேன்.

மக்கள் : அப்படியானால் நீர் சீசருக்கு எதிரியாவீர். இவன் தன்னை அரசனாக்குகிறான். தன்னை அரசாக்குபவன் சீசரின் எதிரி. எதிரியின் நண்பனும் சீச‌ருக்கு எதிரியே. 

பிலாத்து : உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமா ? யூதரின் அரசரை ரோமர் சிலுவையில் அறைவதா ?

மக்கள் : எங்கள் அரசர் சீசர் மட்டும் தான். இந்த மனிதர் இல்லை. இவன் கடவுளின் மகனாம் ! என்ன ஒரு திமிர் !

( இயேசுவிடம் பிலாத்து )

பிலாத்து : நீ உண்மையைச் சொல், எங்கிருந்து வருகிறாய் ?

இயேசு : ( அமைதி )

பிலாத்து : என்னோடு பேசு. எனக்கு இங்கே எல்லா அதிகாரமும் உண்டு. உன்னை சிலுவையிலும் அறையலாம், விடுதலையும் செய்யலாம். நான் அதிகாரம் உடையவன்

இயேசு : என்மேல் உமக்கிருக்கும் அதிகாரம், மேலிருந்து வரும் அனுமதியைப் பொறுத்தது.

பிலாத்து : என்ன சொல்கிறாய்

இயேசு : என் தந்தை விண்ணகத்திலிருந்து அனுமதி வராவிடில் என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இருக்காது.

பிலாத்து : விண்ணில் உன் தந்தையா ? அப்படியானால் நீர் கடவுளின் மகன் என மக்கள் சொல்வது  உண்மையா ?

இயேசு :  என்னை உம்மிடம் ஒப்படைத்தவன் தான் பெரும்பாவம் செய்தவன். 

பிலாத்து : அப்படியானால் நான் அல்ல, என்னிடம் உம்மை ஒப்படைத்தவன் தான் பாவியா ? உன்னை எப்படியாவது விடுவிக்கணுமே. ஆனால் மக்களோ கொந்தளிப்பில் இருக்கிறார்களே.

இயேசு ( அமைதி )

பிலாத்து ( மக்களிடம் ) : இவனிடம் நான் குற்றம் காணவில்லை. 

மக்கள் : சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்

பிலாத்து : இவனை நான் எந்த அடிப்படையில் தண்டிப்பது ?

மக்கள் : சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும். 

பிலாத்து : சரி… இவனை நீங்களே கொன்டு போய் சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள். எனக்கு இதில் பங்கில்லை. இவரை என்னிடம் ஒப்படைத்தவனே பாவி. அவன் மீதே பாவம் விழும்

( கை கழுவுகிறான் )

மக்கள் : பரவாயில்லை. அந்த பாவம் எங்கள் மீது மட்டுமல்ல, எங்கள் தலைமுறை மீதும் விழட்டும் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம். 

காட்சி 3

( பிலாத்து தனது மனைவியின் அருகே வருகிறான் )

பி.ம : வாங்க.. வாங்க… என்னாச்சு, விடுவிச்சிட்டீங்களா ?

பிலாத்து : யாரை ?

பி. ம : என்ன கேள்வி இது…. இயேசுவை ….  நான் தான் கடிதம் கொடுத்து அனுப்பினேனே.. கிடைக்கலையா

பிலாத்து : கிடைச்சுது.. ஆனா அவரை விடுவிக்க முடியல. மக்கள் அதுக்கு சம்மதிக்கல. நல்லா முயற்சி பண்ணினேன். 

பி. ம : முயற்சி பண்ணியும் நடக்கலையா ? என்ன சொல்றீங்க ? நீங்க தானே ஆளுநர். நீங்க சொல்றது தானே சட்டம். அதுல என்ன முயற்சி தேவையிருக்கு ?

பிலாத்து : நீ புரியாம பேசாதே ! அன்னா, கயபா, அவரோட ஆளுங்க முழுக்க நிக்கறாங்க. அவங்களுக்கும் சீசருக்கும் என்ன தொடர்புன்னு உனக்கே தெரியும். அவங்களை பகைச்சுகிட்டு நான் ஒண்ணும் பண்ண முடியாது.

பி.ம : அவங்களை பகைச்சுக்க மறுத்து, கடவுளை பகைச்சுக்கிட்டீங்க !

பிலாத்து : என் கடமையைத் தான் நான் செஞ்சேன்.

பி.ம : என்ன கடமை ? அவரு குற்றமற்றவர்ன்னு உங்களுக்கு தெரியாதா ? பொறாமையால தான் மக்கள் அவரை கொண்டு வந்தாங்கன்னு தெரியாதா ?

பிலாத்து : தெரியும்.. ஆனாலும், மக்கள் கொந்தளிப்பா இருந்தாங்க. கலகத்தை அடக்கியாகணும், மக்களோட கொந்தளிப்பைக் குறைச்சாகணும்.

பி.ம : மக்களோட விருப்பத்துக்காக கடவுளோட விருப்பத்தை தூக்கி எறிஞ்சுட்டீங்க. மக்கள் கோபமா, கடவுள் கோபமா எது பெரிது.  

பிலாத்து : அப்படி இல்லை, கடைசி முயற்சியா பரபாஸை விடவா இயேசுவை விடுவிக்கவா ந்னு மக்களுக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தேன். அவங்க பரபாஸை தேர்ந்தெடுத்தாங்க. அது மிகப்பெரிய அதிர்ச்சி எனக்கு.

பி.ம : வந்தவங்க எல்லாரும் இயேசுவுக்கு எதிரானவங்க, அவங்க எப்படி இயேசுவை விடுவிக்க கேப்பாங்க ? பரபாசைத் தான் கேப்பாங்க. இது சின்னப் பிள்ளைக்கு கூட தெரியும். உங்களுக்குத் தெரியாதா. 

பிலாத்து : ஒரு அரசியல் பிரளயம் நடக்கக் கூடிய சூழலை எப்படி எதிர்கொள்வது. சில பலிகளைக் கொடுத்து தான் சில பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆளுநனும், ஆளும் எவனும் இதற்கு விதிவிலக்கல்ல. 

பி. ம : ஆளுநரைப் பார்த்து மக்கள் அஞ்சுவதா ? மக்களைப் பார்த்து ஆளுநர் அஞ்சுவதா ? வேடிக்கைக் கதையாய் இருக்கிறது நீங்கள் சொல்லும் வறட்டு நியாயம்.

பிலாத்து : வறட்டு நியாயமோ, குருட்டு நியாயமோ. இயேசுவின் விஷயத்தில் அவர்களே முடிவு செய்ய விட்டு விட்டேன், கைகளைக் கழுவி விட்டேன்.

பி. ம : கைகளைக் கழுவி விட்டால் பாவம் போகுமா ? மழையில் நனைந்தால் யானை வெள்ளையாகுமா ? குருதியை குருதி கழுவாது. பாவத்தை தண்ணீர் மாற்றாது. இந்த பாவம் நம்மை விட்டு விலகாது

பிலாத்து : இந்தப் பாவத்தை அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். அது என் தலையில் விழாது. 

பி. ம : ஹா..ஹா… பாவத்தை ஏற்கவும், விலக்கவும் அவர்கள் யார் ? அது கடவுளால் மட்டும் தான் முடியும். நீங்கள் தீர்ப்பிட்டது கடவுளின் மகனுக்கு. தூயவனுக்கு. நீதிமானுக்கு. 

பிலாத்து : இயேசுவை என்னிடம் ஒப்படைத்தவர் தான் குற்றவாளியாம்.. அவரே சொன்னார்.

பி.ம : நடு ராத்திரி புடிச்சு, அதிகாலையிலேயே குற்றவாளியாக்கி, விடியும் முன் தீர்ப்பிட்டீங்களே ! அவரைப் பற்றி நான் கனவு கண்டேன்னு சொன்னேனே. அவர் நீதிமான்னு சொன்னேனே. எதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லையே. 

பிலாத்து : ஆமா.. அதையெல்லாம் பாத்தா முடியுமா ? என் சூழல் அப்படி. 

பி.ம : ஏவாள் சொன்னதைக் கேட்டதால ஆதாம் பாவம் செய்தான். நான் சொன்னதை கேக்காததால நீங்க பாவம் செய்தீர்கள் ! இது கடவுளுக்கு எதிரான பாவம். என்ன நடக்கப் போவுதோ

பிலாத்து : இதோ பார்… எனக்கு என் பதவி முக்கியம். மக்களின் அங்கீகாரம் முக்கியம். அதை விட்டுக் கொடுக்க முடியாது. இயேசு ஒரு நபர் தானே… எத்தனையோ பேரை சிலுவையில் அறைகிறோம். அதில் ஒருவர் இயேசு என வைத்துக் கொள். உன்னோடு இனிமேல் விவாதம் கிடையாது.  

பி.ம : எனக்கும் உங்கள் நியாயம் தேவையில்லை. சிலுவையில் ஒரு வெள்ளைப் புறாவை சிவப்பாக்கி விட்டீர்களே ! இனி உங்கள் அரண்மனை எனக்குத் தேவையில்லை. கழுதையில் ஏறி வந்தவரை கழுமரம் அனுப்பி விட்டீர்கள். கருணைக் கடலை குடுவையில் அடைத்தீர்கள். நான் போகிறேன். என்றைக்கு என் கனவை நிராகரித்து, என் விண்ணப்பத்தைக் கிழித்தீர்களோ, இனிமேல் உங்கள் அரண்மனையில் எனக்கு இடம் வேண்டாம். இயேசுவின் வழியில் நான் போவேன்.

பிலாத்து : கிளாடிஸ்… கிளாடிஸ்…

( அவள் போகிறாள் )

பின் குறிப்பு

பிலாத்துவின் மனைவி கிளாடியா பிராகுலா என்கிறது வரலாறு. அவள் இயேசுவின் ரகசிய சீடர் எனவும். அவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் கிறிஸ்தவர் ஆனார் எனவும்,  பின்னாளில் இயேசுவின் வழி நடந்து தூய வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பரம்பரைக் கதைகள் சொல்கின்றன. இவரை கிறிஸ்தவத்தின் சில பிரிவுகள் புனிதையாகவும் கொண்டாடுகின்றன. இது புனைவுகளின் பின்னணியில் ஒரு சரித்திர சம்பவம்

*

Advertisements

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s