லேவியர்
லேவி எனும் குலத்தினர் இறைவனின் ஆலயப் பணிகளைச் செய்பவர்கள். இந்த நூல் பெரும்பாலும் இறைவனின் சட்டதிட்டங்களையும், இறைவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ என்னென்ன செய்யவேண்டும் என்பதையும் விளக்குகிறது. இது லேவியர்களுக்கு மட்டுமானதல்ல, ஆனாலும் லேவியர் பணி சார்ந்த விஷயங்களைப் பேசுவதால் இது லேவியர் ஆகமம் என அழைக்கப்படுகிறது.
எபிரேயத்தில் இந்த நூல் வாயிக்ரா என அழைக்கப்பட்டது. அதற்கு ‘அவர் அழைத்தார்’என்பது பொருள். இந்த நூல்களை கிரேக்கத்தில் மொழிபெயர்த்த எழுபதின்மர் குழு இதற்கு ‘லேவியர் தொடர்பானது’ எனும் பொருளுடைய பெயரை வைத்தனர்.
அன்றைய இஸ்ரயேல் மக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது போன்ற சட்டங்களால் இந்த நூல் நிரம்பியிருக்கிறது. இந்த நூல் யூதர்களால் தவறாமல் படிக்கப்படும் ஒரு நூல். யூதக் குழந்தைகள் சிறுவயதிலேயே இந்த நூலைப் படித்தாகவேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.
இந்த நூலை எழுதியவரும் மோசே தான். இறைவனை விட்டு மக்கள் விலகிச் செல்லக் கூடாது என்பதற்காக இதிலுள்ள சட்டங்கள் எழுதப்பட்டன. கிமு 1446என்பது இதன் தோராய காலம் என கணிக்கப்படுகிறது.
இந்த நூலில் ஐம்பது முறைக்கு மேல் வருகின்ற “ஆண்டவர் மோசேயிடம் கூறியது” எனும் வாசகம் இவை கடவுளின் கட்டளைகள் என்பதை ஊர்ஜிதப்படுத்துகின்றன. அதை மக்கள்தங்கள் மனங்களில் ஆழமாய் எழுதிக் கொள்ள வேண்டும் எனும் மோசேயின் எச்சரிக்கைஉணர்வையும் இவை பிரதிபலிக்கின்றன.
கடவுளுக்கு என்னென்ன பலிகள் செலுத்தவேண்டும், எப்போது செலுத்தவேண்டும், யார்செலுத்த வேண்டும், பலிப் பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என இந்த நூலில் பலிகள்குறித்து மிக விரிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முந்தைய நூலானவிடுதலைப் பயணத்தில், பலி பீடம் எப்படி இருக்க வேண்டும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நூலில், அந்த பலிபீடத்தில் செலுத்தப்பட வேண்டிய பலிகள் எப்படி இருக்க வேண்டும்என்பது விளக்கப்பட்டுள்ளது.
இந்த நூல் உடல்சார்ந்த தூய்மையை அதிகம் பேசுகிறது. உதாரணமாக இறந்த உடலை ஒருவர் தொட்டால் அவர் தீட்டுப்பட்டவர். அவர் எப்படி தன்னை தூய்மைப்படுத்த வேண்டும்போன்ற விஷயங்களெல்லாம் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் ஓய்வு நாள்பற்றிய சட்டங்கள், ஓய்வு ஆண்டைப் பற்றிய சட்டங்கள் போன்றவையும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. எப்படிச் சாப்பிடவேண்டும், பாலியல் தூய்மையைக் காத்துக்கொள்வது எப்படி, என்பது தொடங்கி எப்படி கழிவுகளை வெளியேற்றுவது என்பதுவரையிலான நுணுக்கமான சட்டங்கள் இந்த நூலை செறிவாக்குகின்றன.
ஏழு எனும் எண்ணிக்கை முழுமையைக் குறிக்கிறது . ஏழாவது நாள் ஓய்வு நாள், ஏழாவது ஆண்டு ஓய்வு ஆண்டு, பாஸ்கா விழா ஏழு நாள் கொண்டாடப்படும் என தொடங்கி ஏராளமான ‘ஏழு’ களை இந்த நூலில் காணலாம்.
இரத்தம் எனும் குறியீடு இந்த நூலில் மிக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. எரி பலிகள், தானிய பலிகள், சமாதான பலிகள், பாவ நிவாரண பலி, குற்ற நிவாரண பலி போன்ற பலிகள் பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் அருகாமை அச்சம் தரக்கூடியது. அவரைத் தூய்மையுடன் மட்டுமே அணுகவேண்டும் எனும் சிந்தனை அழுத்தமாக விளக்கப்படுகிறது.
தெரியாமல் செய்யும் பாவங்களுக்கு மட்டுமே அன்றைய தினம் பாவ மன்னிப்பு வாய்ப்புகள்வழங்கப்பட்டன. தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு இறைவனின் தண்டனை நிச்சயம் எனும் போதனை நிலவியது.
இந்த நூலில் தான் விவிலிய விழாக்களான பாஸ்கா விழா, புளிப்பற்ற அப்பப் பண்டிகை,முதற்பலன் பண்டிகை, பெந்தேகோஸ்தே விழா, எக்காளப் பண்டிகை, பாவ நிவாரணப்பண்டிகை, கூடாரப் பண்டிகை ஆகியவை பற்றிய சட்ட திட்டங்களும், வரைமுறைகளும்விளக்கப்பட்டுள்ளன.
இந்த நூலின் அடிப்படை சிந்தனை தூய்மை என்பதாகும் ! இறைவன் மக்களோடு வந்து தங்கும் போது மக்கள் எப்படி தங்களைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எப்படிப்பட்ட பலிகளைச் செலுத்த வேண்டும். சக மனிதரோடு எப்படி வாழ வேண்டும்போன்ற விஷயங்களெல்லாம் இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நாம் அகத்தூய்மையாய்இருக்கவேண்டும் என்பதன் நிழலாக இந்த நிகழ்வுகளை எடுத்துக் கொள்ளலாம். பலிபொருட்கள் பழுதற்றவையாக இருக்க வேண்டும் என்பதும், இரத்த பலி பாவங்களுக்காகச் செலுத்தப்பட வேண்டும் என்பதும் நேரடியாக இயேசுவின் மீட்புச் செய்தியோடு நெருங்கிய தொடர்புடையவை. இயேசு பாவமற்ற பலியாக இரத்தம் சிந்தியதன் மறை உண்மையேஅது.
எகிப்திலிருந்து இஸ்ரயேலர்கள் வெளியேறி வந்தது மீட்பு என்பதன் குறியீடு. அதன்பின் இறைவனின் சட்டங்களின் அடிப்படையில் வாழ வேண்டும் என்பது புனித வாழ்க்கையின் குறியீடு. இயேசுவை மீட்பராக ஏற்றுக் கொள்வதும், அதன்பின் அவர் சொன்ன புனித வாழ்க்கையை வாழ்வதும் எனும் இரட்டை ஆன்மீக நிலையை இது விளக்குகிறது.
வாசிக்க சுவாரஸ்யமற்ற நூல் என்றாலும், புரிந்து கொள்ளவேண்டிய பல ஆன்மீகவிஷயங்களின் புதையலே இந்த நூல்.