Posted in Articles

உறவின்றி அமையாது உலகு !

Image result for relationship

விவிலியத்தின் துவக்கம் முதல் கடைசி வரை, இறைவன் எப்படி தனது மக்களோடு நெருங்கிய அன்பு உறவு கொள்ள ஆசைப்படுகிறார் என்பதே விளக்கப்படுகிறது. மக்கள் விலகும் போது கலங்கும் இறைவனையும், நெருங்கும் போது நெகிழும் இறைவனையும், வேண்டும் போது கசியும் இறைவனையும் நாம் இறை வார்த்தைகளில் உயிர்ப்புடன் வாசிக்கிறோம்.

இறைவன் உறவுகளின் தேவன். அதனால் தான் மண்ணில் மனிதர்களைப் படைக்கும் போதும் அவர் உறவுகளையே முதன்மைப்படுத்தினார். 

ஆதாம் ஏவாள் எனும் முதல் உறவு இறைவனின் திருவுளம். அவர்களை ஏதேனில் வாழ வைத்து அவர்களோடு தானும் வாழ்ந்து மகிழ்ந்தவர் இறைவன். 

இறைவன் உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புபவர். கிறிஸ்தவ வாழ்க்கையின் கட்டளைகளைச் சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்த இறைவன் உறவுகளை மட்டுமே மையப்படுத்தினார். இறைவனை நேசி, சக மனிதனை நேசி ! என்பதே அவரது கட்டளைகளின் மையம். 

இன்றைய டிஜிடல் யுகம் நம்மை வெளிச்சத் திரைகளுக்குள் இருட்டு வாழ்க்கை வாழ அழைக்கிறது. இரயில் ஸ்நேகங்களும், குட்டிச் சுவர் உரையாடல்களும், டீக்கடை பெஞ்ச்களும் கூட இன்று டிஜிடல் வலைகளுக்குள் வலுவிழந்து கிடக்கின்றன என்பது தான் நிஜம். 

இயேசு நம்மை அழைக்கிறார். உறவுகளால் நெருக்கமாய்க் கட்டப்பட்ட ஒரு வாழ்க்கைக்காய் அழைக்கிறார். கடல்நீரில் கலந்திருக்கும் உப்பைப் போல உறவுகள் இறுக்கமாய் இருக்க வேண்டும் என விரும்புகிறார். 

1. தன்னோடான உறவு !

தன்னோடான உறவு என்பது சுயநலம் அல்ல ! “தன்னைப் போல பிறரையும் நேசி” என சொன்ன இயேசுவின் போதனை, தன்னை அன்பு செய்ய வேண்டும் என்பதையே மறைமுகமாக சொல்கிறது. நான் என்பது இறைவனின் பிம்பம். என்னை நான் நேசிப்பது இறைவனின் படைப்பை நேசிப்பதன் அடையாளம்.

நமது உடல் என்பது இறைவன் வாழும் ஆலயம் என்கிறது விவிலியம். இறைவனின் ஆலயமான இந்த உடலை நாம் அன்பு செய்ய வேண்டும். தூய்மையான உறவுடன் அதைப் பேண வேண்டும் 

2. உறவினரோடான உறவு.

நமது குடும்பங்களை எடுத்துப் பார்த்தால், ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் ஏதோ ஒரு உறவினர் இருப்பார். ‘செத்தாலும் அவன் வீட்டு வாசப்படியை மிதிக்க மாட்டேன்’ என்றோ, ‘என் சாவுக்கு கூட அவன் வரக்கூடாது’ என்றோ முறுக்கித் திரியும் ஒரு ஈகோ எல்லா குடும்பங்களிலும் ஒளிந்திருக்கும். 

விவிலியமோ உறவினரோடு உறவு பாராட்டச் சொல்கிறது. அப்படிச் செய்யாவிடில் அது இறைவனுக்கே எதிரானது என்கிறது. “தம் உறவினரை, சிறப்பாகத் தம் வீட்டாரை ஆதரியாதோர் விசுவாசத்தை மறுதலிப்பவராவர்” ( 1 திமோத்தேயு 5:8) 

3. கணவன் மனைவி உறவு.

ஒரு காலத்தில் ‘வெட்டி விட்டிருவேன்’ என்று கணவன் மிரட்டுவது குடும்பத்தின் உச்ச கட்ட மிரட்டலாய் இருக்கும். இந்த பதினைந்து ஆண்டுகளில் மணமுறிவு 350 சதவீதம் அதிகரித்திருப்பதாய் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.  

இறைவன் ஆணும் பெண்ணுமாய் மனிதனைப் படைத்து, அவர்களை குடும்பம் எனும் பந்தத்தில் இணைத்தபோது பிரிவைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லை. “  திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ( எபேசியர் 5:24 ) என குடும்ப உறவு குறித்து விவிலியம் அறிவுறுத்துகிறது.

4. பிறரோடான உறவு

சக மனிதர் மீதான கரிசனை இன்று நீர்த்துப் போய்க்கொண்டிருக்கிறது. சாலையில் அடிபட்டுக் கிடப்பவனைக் கவனிப்பதை விட போட்டோ எடுத்து ஸ்டேட்டஸ் போடும் கூட்டம் தான் அதிகரித்திருக்கிறது.  

இறுதித் தீர்வை நாளின் போது கடவுள் கேட்கும் கேள்விகள் எல்லாமே சக மனிதனோடு நாம் என்ன உறவு கொண்டிருந்தோம் என்பதன் அடிப்படையில் தான் அமைந்திருக்கின்றன. “உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” எனும் இறைவனின் கட்டளை ஒன்றே போதும்  அதைப் புரிந்து கொள்ள‌

5. திருச்சபையோடான உறவு

திருச்சபை என்பது இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இறைவனால் நடத்தப்படுவது. இறைவனால் கண்காணிக்கப்படுவது. திருச்சபை மீதான நமது அணுகுமுறை புனிதம் கலந்து இருக்க வேண்டியது அவசியமாகிறது.  

கொடியாம் இறைவனின் கிளைகள் நாம். அவரில் இணைந்திருக்கும் போது தான் பலன் கொடுக்கிறோம். கிளைகள் ஒன்றுக்கொன்று சண்டையிடுவதில்லை. அப்படி சண்டையிட்டால் அது கொடியை பாதிக்கும். 

 தன்னை, தன்னைச் சார்ந்தோரை, தன்னை ஈன்றோரை, தன்னோடு வாழ்வோரை, தன் திருச்சபையினரை, தன் சமூகத்தினரை என அனைவரையும் நேசிக்கும் நிலை வேண்டும். அனைவரோடும் இறைவனின் அன்பைப் பகிரும் வாழ்க்கை கை வரவேண்டும். அப்போது தான் உறவின் மேன்மை, இறையின் தன்மையாய் வெளிப்படும்.

*

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

Kavithai : யார் எதிரி

யார் எதிரி ?

Image result for joseph and potiphar's wife

இச்சைக்கு
இணங்கென்று
கண்ணி வெடி வைத்தாள்
கன்னியொருத்தி.

தனிமையின்
நெருக்கத்திலும்
தேகத் தீயில் விழாமல்
தப்பித்தார் யோசேப்பு !

போர்த்திபாவின்
மனைவி,
யோசேப்பின் தூய்மையை
உலகறியச் செய்தவள் !

கடவுளுக்கு எதிராகவே
கர்ஜித்து நின்றான்
ஒருவன்.

வீரனே இல்லாத
கோழை தேசமா என
கொக்கரித்தான்.

கோலியாத்,
தாவீதிடம்
கடவுள் இருந்ததை
வரலாற்றுக்கே
புரிய வைத்தவன்.

புனித முத்தத்தை
புனிதரின் முகத்தில்
பதித்தான் ஒருவன்.

எனினும்
அது புனிதமடையவில்லை.
போலியின் பிசுபிசுப்பால்
கறைபடிந்தது.

யூதாஸ்
சிலுவைப் பயணத்தை
முத்தத்தால்
துவங்கி வைத்தவன்.

கொலையாளிகளின்
ஆடைகளுக்குக்
காவலிருந்தான் ஒருவன்.

கொன்றே தீருவேனென
அழிக்கும் அனலுடன்
சீறிப் பாய்ந்தான்.

பயணம்
சவுலின் சத்தத்தை
பவுலின்
போதனையாய் மாற்றியது.

இறைவன்
வியப்பானவர்.

எதிரியின்
விரல்களைப் பிடித்தும்
எழுதுகிறார்
வெற்றியின் வரலாறுகளை

*

சேவியர்

Posted in Bible Poems, Christianity, Poem on People, Songs, Sunday School

எதிரே வருவதெல்லாம், எதிரியல்ல

எதிரே வருவதெல்லாம்,
எதிரியல்ல

Image result for red sea and moses
செங்கடல்
எதிரே வந்ததால் தான்
இரண்டாகப் பிரிந்தது.

யோர்தான்
குறுக்கே வந்ததால் தான்
குறுக்கு வெட்டுத்
தோற்றம் பெற்றது.

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல
சாதாரண வெற்றியை
அசாதாரணமாக்கும்
காரணிகள்.

எரிகோ மதில்
இல்லையெனில்
ஆராவாரமும்
ஆண்டவரின் ஆயுதமென்பது
புரிந்திருக்குமா ?

நாமான்
மட்டும் இல்லையென்றால்
நீர் கூட
நோய் தீர்க்குமென
விளங்கியிருக்குமா ?

சிலுவை மட்டும்
இல்லையென்றால்
பூட்டிய கல்லறையும்
புரட்டப்படுமென
புரிந்திருக்குமா ?

எதிரே வருவதெல்லாம்
எதிரியல்ல.
இறைவன் யாரென்பதை
நமக்கே உணர்த்தும்
உதிரிகள்

• சேவியர்

Posted in Bible Poems, Christianity, Songs, Sunday School

Kavithai : ஒருவன்

ஒருவன்

Image result for david and jesus

ஒரு தீக்குச்சி,
செய்யும்
சிறு தவறு
பிழையற்ற கானகத்தைப்
பொசுக்கி முடிக்கிறது.

தாவீதின்
பிழை
எழுபதாயிரம் பேரின்
மரணத்துக்கு
முன்னுரை எழுதியது.

ஏரோதின்
பிழை
எண்ணற்ற குழந்தைகளின்
புன்னகையை
அழுகையாய் மாற்றியது.

ஆபிரகாமின்
பிழை
தவறான சந்ததியை
பூமிக்கு அறிமுகம் செய்தது.

ஒரு மீட்பர் செய்யும்
பெரும் தியாகம்
பொசுங்கிய வாழ்வை
மீண்டும் புதுப்பிக்கிறது.

இயேசுவின் வருகை
ஒற்றை
விளக்கில்
அத்தனை இருட்டையும்
அடக்கும் முயற்சி.

ஒற்றை
சிப்பியில்
அத்தனை ஆழிகளையும்
நிறைக்கும் முயற்சி.

ஒற்றை
ஜீவனில்
அத்தனை மரணங்களையும்
முறிக்கும் முயற்சி.

இது
பிழையற்ற ஒருவர்
பிழையாய்
உருமாறிய தருணம்.

பாவமற்ற ஒருவர்
பாவத்தின் வடிவான
தருணம்.

ஒருவரால்
மனுக்குலம்
மீட்பின் வாசல் நுழைந்த
அனுபவம்.

நாமும்
ஒருவன் தான்.
கானகம் அழிக்கிறோமா
வானகம் அழைக்கிறோமா ?

*

சேவியர்

Posted in Articles

செத்த செயல்கள்

Image result for dead works

ஆதிமனிதர்கள் ஆதாமும், ஏவாளும் இறைவனின் வாக்கை மீறிய பாவத்துக்காக இறைவனின் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு காயீன், ஆபேல் என இரண்டு புதல்வர்கள் பிறக்கின்றனர். காலங்கள் கடந்தன. ஒரு நாள் இருவரும் காணிக்கை கொண்டு வந்தனர். அதை விவிலியம் இவ்வாறு சொல்கிறது.

“காயின் நிலத்தின் பலனிலிருந்து ஆண்டவருக்குக் காணிக்கை கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வந்தான். ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார். ஆனால் காயினையும் அவன் காணிக்கையையும் அவர் கனிவுடன் கண்ணோக்கவில்லை. ஆகவே, காயின் கடுஞ்சினமுற்றான்.” ( ஆதியாகமம் 4 :3..5 )

இருவருமே காணிக்கை கொண்டு வந்தார்கள், ஒன்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒன்று நிராகரிக்கப்படுகிறது ! 

ஒரு செயல் எப்போது செத்த செயலாக, பயனற்ற செயலாக மாறுகிறது ?  சிந்தனையும், செயலும் நேர்கோட்டில் இல்லாத போது செயல்கள் செத்த செயல்களாகின்றன என சுருக்கமாய் சொல்லலாம்.

“வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் ” என இயேசு போலித்தனத்தின் மீது படுத்துறங்கிய நபர்களைப் பார்த்துக் கூறினார். அதாவது வெளிப்பார்வையில் அழகு, உள்ளிலோ உயிரற்ற தன்மை !

காயீன், ஆபேல் காணிக்கை அளிக்கின்ற விஷயங்களிலும் இந்த சிந்தனையைப் பொருத்திப் பார்க்கலாம்.

1. காயீன் மூத்தவன் ! ஆபேல் இளையவன். எனினும் இருவரும் ஒரே நேரத்தில் காணிக்கை எடுத்துக் கொண்டு வருகின்றனர் என்கிறது பைபிள். வழக்கப்படி காயீன் தான் முதலில் பலி செலுத்தத் துவங்கியிருக்க வேண்டும். ஆனால் இருவருமே காணிக்கை செலுத்த ஒரே நேரத்தில் வருகின்றனர். 

ஒருவேளை காணிக்கை செலுத்த வேண்டும் எனும் ஆசை ஆபேலுக்கு தோன்றியிருக்கலாம். எனவே காயீனும் வேறுவழியின்றி காணிக்கை செலுத்த வந்திருக்கலாம்.

இன்னொருவர் செய்கிறார் என்பதற்காக அதை பிரதியெடுக்க முயல்கின்ற செயல்களெல்லாம் செத்த செயல்களாகவே இருக்கும். அது மனிதர்களைப் பிரியப்படுத்தும் வீணான முயற்சியே.

2. காயீனின் காணிக்கை கடமைக்கானது. நிலத்தின் பயனிலிருந்து அவன் காணிக்கை கொண்டு வந்தான். செழிப்பானவற்றைக் கொண்டு வந்தான் என்றோ, பெரியவற்றைக் கொண்டு வந்தான் என்றோ பைபிள் குறிப்பிடவில்லை. “சிலவற்றை” என்கிறது ! 

ஆபேலோ கொழுத்த தலையீறுகளைக் கொண்டு வருகிறான். தன்னிடம் இருப்பதில் சிறந்ததைத் தரவேண்டும் எனும் இயல்பான எண்ணம் ஆபேலிடம் இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஏதோ ஒன்றைக் கடமைக்காகக் கொடுப்பது செத்த செயல், இருப்பதில் சிறந்ததைக் கொடுப்பதே இறைவன் எதிர்பார்க்கிற செயல்.

3. காயீன் முதற்பலனைக் கொடுக்கவில்லை. ஆபேலோ தலையீற்றைக் கொடுக்கிறான். தலையீறு என்பது விவிலியம் முழுவதும் மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இன்றைய வாழ்வோடு ஒப்பிடுகையில் நமது வாழ்க்கையில் எவையெல்லாம் முதன்மையானவையாய் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும் !

ஏதோ ஒன்றைக் கொடுப்பதும், ஏனோ தானோ வெனக் கொடுப்பதும் செத்த செயலின் சான்றுகள்.

4. காணிக்கை கொடுக்கவேண்டும் எனும் கட்டாயம் காயீனுக்கு பயத்தின் விளைவாய்க் கூட வந்திருக்கலாம். பூமியில் ‘பிறந்த’ முதல் மனிதன் அவன். அவனுடைய காணிக்கை இறைவன் மீதான பயந்த்தின் காரணமாக வந்திருக்கலாம். ஆபேலுக்கு இறைவன் மீதான அன்பினால் காணிக்கை கொடுக்கும் மனம் உருவாகியிருக்கலாம்.  

பயத்தின் விளைவாகவோ, பிறருடைய கட்டாயத்தின் விளைவாகவோ வெளிப்படும் செயல்களெல்லாம் செத்த செயல்களே.

5. “இவ்வளவு கொடுத்தும் எனக்கு அங்கீகாரம் இல்லையா ?” எனும் எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியது காயீனின் காணிக்கை. தன்னை இறைவன் நிராகரித்ததை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எவ்வளவோ செய்திருக்கிறேன் என கணக்கு பார்த்து செய்கின்ற செயல்கள் செத்த செயல்களாகவே முடியும்.

6. காயீனும் ஆபேலும் ஒரே நாளில் பலி செலுத்த வருவது, காயீன் காணிக்கை கொடுக்க தாமதித்தான் எனபதையே காட்டுகிறது. இறைவனுக்குக் கொடுக்க தாமதம் செய்வது என்பது உள்ளார்ந்த விருப்பத்தோடு செய்யவில்லை என்பதன் அடையாளம். தயக்கம் சுயநலத்தின் வெளிப்பாடு.

நமது செயல்கள் தயக்கத்தோடும், தாமதத்தோடும், முழு விருப்பமின்றியும் வரும் போது அது செத்த செயல் ஆகிவிடுகிறது.

7. நமது வாழ்க்கை இறைவனுக்கு பிரியமான வாழ்க்கையாய் இருக்கும் போது தான் நமது காணிக்கைகளும் இறைவனுக்குப் பிரியமானதாய் மாறுகிறது. நமது காணிக்கைகளுக்காக நம்மை இறைவன் ஏற்பதில்லை. நம்மை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாகத் தான் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார். 

“காணிக்கை செலுத்த வரும் முன் சகோதரனோடு ஒப்புரவாகச் சொல்கிறார் இயேசு”. காரணம் இது தான். நமது வாழ்க்கை இறைவனை விட்டு விலகிச் சென்றால் எந்த ஒரு காணிக்கையும் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. அது கொழுத்த தலையீறுகளானாலும் சரி.

நமது செயல்கள் செத்த செயல்களாக இல்லாமல் இருக்க வேண்டுமெனில், நமது வாழ்க்கை இறைவனைப் பிரதிபலிக்கும் உயிருள்ள வாழ்க்கையாய் இருக்க வேண்டும்.