மனித உள்ளத்தின் ஆழத்தையே நீங்கள் காண முடியாது; மனித மனம் நினைப்பதையே நீங்கள் உணர முடியாது. அவ்வாறிருக்க, இவற்றையெல்லாம் படைத்த கடவுளை எவ்வாறு உங்களால் தேடி அறிய முடியும்? அவருடைய எண்ணத்தை எவ்வாறு புரிந்த கொள்ள முடியும்? அவருடைய திட்டத்தை எவ்வாறு தெரிந்துகொள்ள முடியும்?
யூதித்து 8 :14
( இணை திருமறைகள் )
+++
நெபுகத்நேசரின் வலிமைமிகு படைத்தலைவன் ஓலோபெரின் யூதாவை முற்றுகையிடுகிறார். இதற்கு முன் சென்ற நாடுகளையெல்லாம் அழித்து, ஒழித்து, கபளீகரம் செய்தவன். பல இலட்சம் வீரர்களுடன் இப்போது யூதாவை நெருங்கியிருக்கிறார்.
யூதா மக்கள் இப்போது இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் வழிகளை அடைத்துவிட்டு பாதுகாப்பாய் இருக்கின்றனர் இஸ்ரயேலர்கள். எதிரியோ நாட்டுக்கு வரும் தண்ணீர் வழிகளை அடைத்துவிட்டு மக்களை அழிக்க முயல்கிறான். ஊர் தலைவர்கள், “இன்னும் ஐந்து நாட்கள் பொறுத்திருப்போம், கடவுள் நம்மை மீட்காவிட்டால் சரணடைவோம்” எனும் முடிவை எடுக்கின்றனர். தலைமைக்குரு இல்க்கியாவின் வழித்தோன்றலான யூதித்து இதைக் கேட்டு மனம் வருந்தி இந்த வசனங்களை உரைக்கிறார்.
கடவுளுக்குக் கெடு விதிப்பதும், கடவுள் இந்த நாளுக்குள் இதைச் செய்யாவிட்டால்.. என நிபந்தனைகள் விதிப்பதும் எவ்வளவு முட்டாள் தனமான வாதங்கள் என்பதையே இந்த வசனங்கள் விளக்குகின்றன. இறைவனின் திட்டங்கள் துவக்கத்துக்கும் முன்பே நிர்ணயிக்கப்பட்டு, முடிவுக்குப் பின்பும் தொடரப் போகின்றவை. “நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் வாழ்கிறோம்” என்பதால் கடவுள் நமக்கு ஏற்புடைய ஒரு நேரத்தில் பதிலளிக்க வேண்டுமென்பதில்லை.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், நமது செயல்களோ நமது தேவைகளோ நமது அவசரங்களோ இறைவனின் காலத்தை நிர்ணயிப்பதில்லை. அவர் நம்மீது கொண்டிருக்கும் அன்பு அதை நிர்ணயிக்கிறது. அவருடைய அன்பெனும் இயல்பு அதை நிர்ணயிக்கிறது. “நாம் வேண்டுவதற்கு முன்பாகவே நமது தேவையை அறிந்தவர் அவர்” என்கிறது விவிலியம். அதைத் தான் யூதித்தின் வார்த்தைகளும் விளக்குகின்றன.
நாம் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டியது மட்டுமே அவர் விரும்புவது. அப்படி வாழும்போது நமது தேவைகளை, தேவையான நேரத்தில் அவர் நிறைவேற்றுகிறார்.
இறைவனிடம் செபிப்பதும், விண்ணப்பிப்பதும், உரையாடுவதும் மிகவும் அவசியம். அதே நேரத்தில், இறைவனை நமது கால வரைகளுக்குள் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனமானது.
இறைவனின் வழிகளில் நடப்போம்,
அவருடைய நேரத்துக்காய் காத்திருப்போம்.
*
சேவியர்