எல்லாவற்றிலும் உன் முடிவை
நினைவில் கொள்;
அவ்வாறெனில் ஒருபோதும்
நீ பாவம் செய்யமாட்டாய்சீராக் 7 : 36
பாவம் செய்யாமல் இருக்க விவிலியம் நமக்கு பல்வேறு வழிகளையும், அறிவுரைகளையும் தருகிறது. “எல்லாவற்றையும் இறைவனுக்குப் பிடித்தமானதாகச் செய்வது பாவத்தில் நாம் விழாமல் இருக்க உதவும். புதிய மனிதனை அணிந்து கொண்டு பழைய இயல்புகளை விட்டு விடுவது பாவத்தில் விழாமல் நம்மைத் தடுக்கும். தூய ஆவியானவரின் துணையோடு வாழும் போது பாவத்தை மேற்கொள்ளும் வலிமை கிடைக்கும்”, என்றெல்லாம் விவிலியம் நம்மை சிறப்பாக வழிநடத்துகிறது.
சீராக்கின் நூல் இன்னொரு அழகான வழிகாட்டுதலைத் தருகிறது. “நீ பாவம் செய்யாமல் தப்பிக்க வேண்டுமெனில், எப்போதும் வாழ்வின் முடிவைக் குறித்த சிந்தனையைக் கொண்டிருக்க வேண்டும்” என்கிறது அந்த நூல். நரகமா, சொர்க்கமா ? இறைவனோடான ஐக்கியமா, சாத்தானோடான சங்கமமா ? எனும் கேள்வியை ஒவ்வொரு செயலிலும் கேட்டு, சரியான வழியைத் தேர்ந்தெடுத்தால் நமது வாழ்க்கை பாவத்தைக் கடந்த வாழ்க்கையாய் மாறும்.
சீராக் நூல் இணை திருமறைகள் என இப்போது அழைக்கப்படுகிறது. துவக்க காலத்தில் திருப்பாடல்கள் நூலுக்கு அடுத்தபடியாக பயன்படுத்தப்பட்டு வந்த நூல் இது என்பது குறிப்பிடத் தக்கது. இதை சபை நூல் என்றும் அழைப்பார்கள். இந்த நூல் எபிரேயத்தில் எழுதப்பட்டு அந்த குறிப்புகள் தொலைந்து போக, கிரேக்க மொழிபெயர்ப்பை வைத்தே இந்த நூல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. எனவே இது கிரேக்கத்தில் எழுதப்பட்ட நூல் எனும் தவறான சிந்தனையுடன் பலரால் நிராகரிக்கப்பட்டு வந்தது. எனினும் ஆதித் திருச்சபை இது இறைவனின் நூல் என அரவணைத்தே வந்தது.
சமீபத்தில் நடந்த கும்ரான் மலைப்பகுதி கண்டுபிடிப்புகளில் ஏசாயா நூலின் பழைய படிவங்களும், சீராக்கின் எபிரேய பதிவுகளும் கிடைத்திருக்கின்றன.
சீராக்கின் நூலின் ஆசிரியர் தருகின்ற இந்த அறிவுரை வெகு எதார்த்தமான அறிவுரையாய் நமக்கு முன்னால் நிற்கிறது. சிலுவையில் இறைமகன் இயேசு சாத்தானைத் தோற்கடித்தார். அவனது முடிவு இயேசுவின் பலியோடு ஊர்ஜிதமானது. நமது துவக்கம் இயேசுவின் மரணத்தோடு துவங்க வேண்டும்.
நம்மை அழித்து, இறைவனில் முளைப்போம். செய்யும் செயல்கள் யாவற்றிலும் நமது வாழ்க்கையின் முடிவு பற்றிய சிந்தனை எச்சரிக்கையாய் ஒலிக்கட்டும்.
*
சேவியர்