Posted in Articles, WhatsApp

படைப்பும், படைத்தவரும்

பெயரைக்கூடச் சொல்லத் தகாத
சிலைகளின் வழிபாடே
எல்லாத் தீமைகளுக்கும் முதலும்
காரணமும் முடிவும் ஆகும்

( சாலமோனின் ஞானம் 14:27 )

ஒரு மனிதர் தனது ஓய்வு நேரத்தில், சும்மா கிடந்த ஒரு மரக்கட்டையை எடுத்துச் செதுக்குகிறார். அதை ஒரு விலங்கின் உருவமாய் வடிக்கிறார். அதை வைக்கின்ற மாடத்தையும் அவரே செய்கிறார். அவரே அதை சுவரில் மாட்டுகிறார். அந்த சிலைக்கு எதையும் செய்யும் சக்தியில்லை. ஒருவேளை தடுமாறிக் கீழே விழுந்தால் கூட அந்த சிலையால் தானே ஏறி அந்த மாடத்தில் அமர முடியாது. ஆனால் மனிதனோ தான் செய்த அந்த சிலையின் முன் மண்டியிட்டு வேண்டுகிறான். சற்று முன் மரத்துண்டாய்க் கிடந்த ஒன்றின் முன் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கிறான்.

ஒரு மனிதன் இளம் வயதில் இறந்து போன தன் மகனுக்காய் அழுது புலம்புகிறான். மகனின் நினைவு வாட்டி வதைக்க அவன் மகனைப் போல ஒரு சிலையைச் செய்கிறான். அதன் மூலம் மனதுக்கு ஆறுதல் தேடுகிறான். பின்னர் அந்த மனிதச் சிலையை தெய்வச் சிலையாய் வழிபட ஆரம்பிக்கிறான். தான் செய்த சிலையைக் கொண்டு தனக்குத் தேவையானது எல்லாம் கிடைக்கும் என தவறாய் சிந்திக்கிறான். காலப்போக்கில் அது ஒரு சடங்காக மாறி மனிதனை விழுங்குகிறது.

ஒரு அரசன் மாபெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டியெழுப்பி ஆள்கின்றான். நாட்டின் கடைகோடியில் இருக்கும் மக்களும் தன்னைக் காணவேண்டுமென தன்னைப் போல் சிலை செய்து வைக்கிறான். மக்கள் மன்னனை சிலையின் வழியாய் காண்கின்றனர். சிலைக்கு மரியாதை செய்வதை மன்னனுக்குச் செய்யும் மரியாதையாய் நினைக்கின்றனர். அவனைக் கடவுளாய்ப் பாவித்து சிலை வழிபாட்டில் இறங்கி விடுகின்றனர்.

என சாலமோனின் ஞானம் நூல் சிலை வழிபாட்டில் ஊற்றுக்கண்ணைக் குறித்து அழகுற விளக்குகிறது.
தாங்கள் உருவாக்கிய சிலையின் முன்னால் தனக்காய் வேண்டுதல் செய்கிறான் மனிதன். ஒரு அடி நடக்க முடியாத அந்த சிலையிடம் தனது பயணம் நலமாய் அமையவேண்டும் என வேண்டுகிறான். உயிரோடு இல்லாத அந்த சிலையிடம், தன் உயிருக்காய் மன்றாடுகிறான். வலிமையே இல்லாத அந்த சிலையிடம் தனக்கு வலிமை வேண்டும் என மன்றாடுகிறான்.

அலைகடலில் அலையும் படகில் இருப்பவன், அந்த மிகப்பெரிய படகை நம்புவதை விட, படகில் இருக்கும் சின்ன மரச்சிலையை நம்புகிறான். சிலைகளின் பெருமை சிற்பிகளையே சேரும். அந்தச் சிலைகளினால் மக்களுக்குப் பயன் இல்லை. என்றெல்லாம் விவரிக்கிறது நூல்.

சிலைவழிபாடு என்பது இறந்தவற்றின் மீது வைக்கின்ற நம்பிக்கை என்கிறார் இதன் ஆசிரியர். பண்டைய காலத்தில் விலங்குகளின் உருவங்களைப் பெரும்பாலும் சிலைகளாய்ச் செய்து மக்கள் வழிபட்டு வந்தார்கள்.

சிலை வழிபாடு என்பது சிலைகளுக்குத் தங்களை அர்ப்பணிப்பது. இறைவனுக்கும் தனக்கும் இடையே ஒரு பொருளை முதன்மையாய் வைப்பது. அது கல்லாலோ, மண்ணாலோ அமைக்கப்பட்ட சிலையாக இருக்க வேண்டுமென்பதில்லை. பணம் பதவி புகழ் திறமை என எது வேண்டுமானாலும் ஆகலாம். அது இறைவனுக்கும் நமக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவராக மாறிவிடுகிறது.

இறைவனைத் தவிர எதை வழிபட்டாலும் அது சிலைவழிபாடே.

சிலைகளை விட்டுத் திரும்புவோம்,
இறைவனை மனதில் நிரப்புவோம்

*

சேவியர்

Posted in Articles, Vettimani

ஏன் ஈசாக்கைப் பலியிட கடவுள் சொன்னார் ?

Image result for wisdom of solomon book

 

 

மக்களினங்கள் தீமையுடன்
கூட்டுச்சேர்ந்து
குழப்பத்திற்கு உள்ளானபோது
ஞானம் நீதிமானைக்
கண்டுகொண்டது;
அவரைக் கடவுள் திருமுன்
மாசற்றவராகக் காத்தது;
தம் பிள்ளைபால் கொண்டிருந்த
பற்றை மேற்கொள்ள
அவருக்குத் துணிவை அளித்தது

( சாலமோனின் ஞானம் 10 : 5 )

பைபிளில் இடம்பெற்றுள்ள நூல்களிலேயே ஞானத்தைப் பற்றி விலாவரியாகக் குறிப்பிடும் நூல் சாலமோனின் ஞானம் நூல் தான். ஞானத்தின் துவக்கம், இருப்பிடம், அதன் செயல்கள் என எல்லாவற்றையும் இந்த நூல் மிகத் தெளிவாக நமக்குப் புரிய வைக்கிறது.

கடவுளிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் துவக்கம் என்கிறது நீதிமொழிகள் நூல். சாலமோனின் ஞானம் நூல், அதன் விரிவான விளக்கத்தைத் தருகிறது.

ஞானம் — கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு.எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழையமுடியாது. ஞானம் — என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல். என ஞானத்தைப் பற்றிய மிக அழகான, கவித்துவமான விளக்கத்தைத் தருகிறது.

மீட்பு வரலாற்றில் ஆதாம் முதல் மோசே வரை எப்படி ஞானம் செயல்பட்டது எனும் அதிகாரம் இந்த நூலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கடவுள் ஏன் ஆபிரகாமிடம் ஈசாக்கைப் பலியிடச் சொன்னார் ? அதற்கான நேரடியான பதில் ஆதியாகமத்தில் இல்லை. “உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்தாய்” என கடவுள் ஆபிரகாமைப் பாராட்டும் வசனம் (ஆதியாகமம் 22 :15) மட்டுமே இருக்கிறது. அது ஆபிரகாமின் கீழ்ப்படிதலைப் பேசுகிறது. அந்த பலியை ஏன் கடவுள் கேட்டார் என்பதை நமக்கு சாலமோனின் ஞானம் நூல் பளிச் என விளக்குகிறது.

“தம் பிள்ளைபால் கொண்டிருந்த பற்றை மேற்கொள்ள” ஆபிரகாமை கடவுள் சோதித்தார் என்கிறது சாலமோனின் ஞானம் நூல். திருமணமாகி பத்து வருடம் கழிந்து குழந்தை வரம் பெறும் தம்பதியர் அந்தக் குழந்தையைத் தரையில் கால் படாமல் வளர்ப்பார்கள். தோளில் வைத்துத் தாலாட்டுவார்கள். அப்படியானால் நூறு வயதில் அந்த பாக்கியத்தைப் பெற்ற ஆபிரகாம் எப்படி இருந்திருப்பார் ? பரவசத்தின் உச்சியில் இருந்திருப்பார். ஈசாக்கின் மேல் ஆபிரகாம் கொண்டிருந்த பற்று அவரை கடவுளிடமிருந்தே சற்று விலக்கியது.

அந்தப் பற்றிலிருந்து ஆபிரகாம் விடுபட்டால் மட்டுமே மீட்பின் பயணத்தில் இணைய முடியும் எனும் நிலை. கடவுள் ஆபிரகாமை சோதிக்கிறார். பற்றை விட முடியுமா ? இல்லை பற்றிக்கொண்டு தான் பயணிக்க முடியுமா ? என்பதே கேள்வி. ஆபிரகாம் பற்றை விட்டு விட முடிவு செய்தார். இறைவனைப் பற்றிக் கொண்டார்.

பாபேல் கோபுரத்தைக் கட்டி மக்கள் ஞானமில்லாமல் நடந்து கொண்டிருந்தபோது, இறைவன் ஆபிரகாமை அழைத்தார். அவரை வழிநடத்தினார். அவர் தன் மகன் மேல் கொண்டிருந்த பற்றை விட்டு விட்டார். அனைத்திற்கும் காரணம் அவரிடம் இருந்த ஞானமே என்கிறது சாலமோனின் ஞானம் நூல்.

நாம் எதன்மீது பற்றுக் கொண்டிருக்கிறோம் ? எந்தப் பற்று நம்மை இறைவனிடமிருந்து பிரிக்கிறது ? பணமா ? பதவியா ? கலையா ? புகழா ? எதுவாய் இருந்தாலும் அதை இறைவனுக்காய் இழக்கவும் தயாராவோம்.

ஒன்றை நினைவில் கொள்வோம்.

மீட்புக்காக எதையும் இழக்கலாம்
எதற்காகவும் மீட்பை இழக்கக் கூடாது.

*

Posted in Articles, WhatsApp

பாவம் எனும் சுயகல்லறை

Image result for sin

 

ஒருவர் எதனால்
பாவம் செய்கிறாரோ
அதனாலேயே அழிந்து போவார்

(சாலமோனின் ஞானம் 11 : 16 )

பாவம் என்பது நமது பாதங்களுக்குக் கீழே, நாமே வைக்கின்ற கண்ணிவெடி. அதை நாமே விரும்பி வைத்துக் கொள்கிறோம், பின்னர் “காலை எடுத்தால் கண்ணி வெடி வெடித்து விடும்” எனும் நிலமைக்குத் தள்ளப்படுவோம். பாவத்தை விடவும் முடியாமல், தொடரவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிடுவோம்.

பாவம் என்பது ஒருவர் அருந்துகின்ற ஸ்லோ பாய்சன் போன்றது. அதன் முடிவை அறியாமல் அதைத் துவங்கி விடுகிறார். கடைசியில் விஷம் உடலை முழுவதும் ஆக்கிரமித்தபின் விடுபட முடியாமல், மரணத்தை அரவணைத்துக் கொள்கிறார்.

எப்படி ஒரு மனிதன் போதைக்கு அடிமையாகிறானோ, அப்படியே பாவம் ஒருவனை கபளீகரம் செய்து விடுகிறது. விட நினைத்தால் துரத்தும், தொடர நினைத்தால் அழிக்கும் என பாவம் நம்மை அலைக்கழிக்கும். பாவத்தைப் பிடித்தவன், புலி வாலைப் பிடித்துக் கொண்டவனின் நிலமைக்கு தள்ளப்படுவான். புலியின் வாலை விட்டால் புலி அவனைத் தின்று விடும். விடாவிட்டால், இவனால் எதுவும் செய்ய முடியாது.

பாவம் என்பதன் விஸ்வரூபத்தை யாரும் முதலில் புரிந்து கொள்வதில்லை. அதை ஒரு சுவாரஸ்ய அனுபவமாகவோ, ஒரு தேடலாகவோ, ஒரு திரில்லாகவோ துவங்குகிறார்கள். அது பின்னர் புற்று நோய்போல பரவி, அவர்களுடைய வாழ்க்கையையே அழித்து விடுகிறது.

“வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்” என்றார் இயேசு. பாவம் எனும் வாளை எடுப்பவர்களை பாவம் அழித்து விடும் என்பதன் எச்சரிக்கை தொனியாகவும் அதை எடுத்துக் கொள்ளலாம்.

சாலமோனின் ஞானம் இதை ஒரு நிகழ்வின் மூலம் நமக்கு விளக்குகிறது. எகிப்தியர்கள் பாம்பையும், அறிவற்ற விலங்குகளையும் வழிபட்டனர். எனவே அவர்களுடைய அழிவும் பயனற்ற விலங்குகள் மூலமாக வந்தது என்கிறார் நூலின் ஆசிரியர். நாம் செய்கின்ற செயலே நமக்கு எதிராகத் திரும்பி விடுகிறது. இறைவன் நினைத்தால் எகிப்தியர்களை எப்படி வேண்டுமானாலும் அழித்திருக்கலாம், ஆனால் அவர்களுடைய பாவத்தின் அடையாளங்களைக் கொண்டே அவர்களை அழிப்பதாக விவிலியம் குறிப்பிடுகிறது.

பாவம் என்பது தற்காலிக இன்பங்களுக்காக நிரந்தர வரங்களை மறுதலிப்பது போன்றது. சிற்றின்பச் சாரலுக்காக, பேரின்பப் பிரவாகத்தை புறக்கணிப்பது போன்றது. பாவம் என்பது படுகுழியில் இறங்கிச் செல்லும் பாதை. அங்கே சிகரங்களைச் சந்திப்பது இயலாத காரியம்.

பாவம் செய்யும் உறுப்புகளை வெட்டி எறியச் சொன்ன இயேசுவின் வார்த்தைகள் பாவத்தின் வீரியத்தை நமக்கு விளக்குகின்றன.

பாவம் என்பது புதைகுழியின் மேனி, சுயமுயற்சியால் வெளியேறவே முடியாது. பாவம் எனும் கண்ணிவெடியிலிருந்து மீள வேண்டுமெனில், மீட்பு எனும் சிலுவையை நோக்கிப் பார்க்க வேண்டும். இதயக் கரங்களை நீட்டவேண்டும்.

அடுத்த முறை பாவம் செய்யும் போது, இந்தப் பாவத்தால் எனக்கு விண்ணக வாழ்க்கை மறுக்கப்படும் என்பதை மனதில் கொள்வோம். பாவத்திலிருந்து விடுபடுவோம்.

*

Posted in கிறிஸ்தவ இலக்கியம், Christianity, Life of JESUS

சிலுவைப்பாதை ! WAY of THE CROSS

சிலுவைப்பாதை
*

உன் பாவப் பழுவை
என் பாரச் சிலுவை
தோளோடு அழுத்தியதே

என் நேசப் பயணம்
உன் மீட்பின் தருணம்
கல்வாரி அழைக்கிறதே

என் பாவப் பழுவை
உன் பாரச் சிலுவை
தோளோடு அழுத்தியதே

உன் நேசப் பயணம்
என் மீட்பின் தருணம்
கல்வாரி அழைக்கிறதே

1

மரணத்துக்குத் தீர்ப்பிடப்படுகிறார் இயேசு

*

வாழ்வைத் தரவே புவியில் வந்தேன்
மரணம் கொடுத்தாயோ
பழியைச் சுமத்தி அழிவின் கரத்தில்
என்னை விடுத்தாயோ

பதவி சுகத்தைக் காக்க நுகத்தை
எனக்கு அளித்தாயோ
கரங்கள் கழுவி பாவக் கறையை
அழிக்க நினைத்தாயோ

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

2

இயேசுவின் தோளில் சிலுவையை சுமத்துகிறார்கள்

*

சாட்சியாகவே வாழச் சொன்னேன்
சாட்டை எடுத்தாயோ
முள்ளில் சிக்கிய உன்னை மீட்டேன்
முள்ளைக் கொடுத்தாயோ

திசைகள் எங்கும் புதுமை புரிந்தேன்
தசைகள் கிழித்தாயோ
கசைகள் கொண்டு உடலை கிழித்தே
உயிரை அறுத்தாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

3

இயேசு முதல் முறை தரையில் விழுகிறார்
*

இடறி இடறித் தரையில் விழுந்தேன்
பதற மறுத்தாயோ
பரமன் செயலைப் புரிய நினைத்தேன்
எனையும் வெறுத்தாயோ

பாதம் மண்ணில் படர்ந்து கொள்ள‌
தரையும் நழுவியதோ
வேதம் தன்னை ஏற்றுக் கொள்ள‌
இதயம் வழுவியதோ

4

வழியில் அன்னையைச் சந்திக்கிறார் இயேசு

*

கருவில் என்னை சுமந்த அன்னை
தெருவில் அழுகின்றாள்
தொழுவில் என்னை எடுத்த அன்னை
பழுவால் துடிக்கின்றாள்

தொலைந்த என்னை தேடி எடுத்தாள்
மீண்டும் தொலைத்தாளோ
மீட்பின் வழியில் என்னை முழுதும்
உனக்கே அளித்தாளோ

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

5

இயேசுவின் சிலுவையை சீமோன் சுமக்கிறார்
*

பின்னால் நடந்த கூட்டம் இன்று
வருந்தி வாடியதோ
பின்னங் கால்கள் பிடரி படவே
பயந்து ஓடியதோ

தயங்கும் பாதம் கண்ட சீமோன்
முன்னே வருகின்றார்
மயங்கும் எந்தன் நிலையைக் கண்டு
தோளைத் தருகின்றார்

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

6.

வெரோனிக்கா இயேசுவின் முகம் துடைக்கிறார்

பறவை போலே பருந்துகள் இடையே
ஒருத்தி வருகின்றாள்
நடுங்கும் கரத்தால் வடியும் முகத்தை
அழுத்தி துடைக்கின்றாள்

வதனம் துடைத்த துணிவின் துணியில்
முகத்தை பதிக்கின்றேன்
பரிவைத் தேக்கி வந்த மகளுக்கு
பரிசை அளிக்கின்றேன்

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

7

இரண்டாம் முறை இயேசு விழுகிறார்
*

குருதி தரையில் சிதறி மறைய‌
வலிமை இழக்கின்றேன்
உயிரை இழந்தப் பயிராய் தரையில்
மீண்டும் விழுகின்றேன்

விழுந்த இடத்தில் புதைந்திடாமல்
மீண்டும் எழுகின்றேன்
எழும்ப வலிமை தந்த‌ இறையை
மனதில் தொழுகின்றேன்

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

8.

இயேசு பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார்
*

பாதை முழுதும் மகளிர் நின்று
எனக்காய் அழுதாரோ
எந்தன் தோளில் சிலுவை கொடுத்த‌
பழிக்காய் அழுதாரோ

வேண்டாம் எனக்காய் கண்ணில் ஈரம்
என்றேன் முடிப்பாயோ
இல்லம் வாழ நெஞ்சம் மாற‌
கண்ணீர் வடிப்பாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

 

9

மூன்றாம் முறை கீழே விழுகிறார் இயேசு
*

தரையும் என்னை தொடர்ந்து அழைக்க‌
மீண்டும் சரிகின்றேன்
மூன்றில் ஒன்றாய் ஆன நானும்
முறிந்து கிடக்கின்றேன்.

எந்தன் சித்தம் அல்ல தந்தை
சித்தம் காய்ந்திடுமோ
சாவின் அருகில் உயிரின் வலிமை
மொத்தம் சாய்ந்திடுமோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

 

10

இயேசுவின் ஆடைகளை உரிகிறார்கள்
*

இறுகப் பிடித்த உடைகள் தன்னை
உருவி எடுத்தாயோ
குருதி உடலை துளைத்துப் பாய‌
வலியை கொடுத்தாயோ

மீட்பை உனக்கு உடுத்த வந்தேன்
மானம் அழித்தாயோ
உடையைக் கூட அளிக்க மறுத்து
ஊனம் அடைந்தாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

11

இயேசுவைச் சிலுவையில் அறைகிறார்கள்
*

விரித்த கரங்கள் இரண்டும் அலற‌
ஆணி அடித்தாயோ
நாடி நடந்த பாதம் தன்னில்
தேடி அடித்தாயோ

கள்ளர் நடுவே கள்ளன் போலே
என்னை வைத்தாயோ
உள்ளம் முழுதும் நஞ்சை வைத்து
ஜீவன் தைத்தாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

12

இயேசு சிலுவையில் உயிர்விடுகிறார்
*

அன்னை தன்னை சீடர் கரத்தில்
நானும் கொடுக்கின்றேன்
ஜீவன் தன்னை தந்தை கரத்தில்
தானே கொடுக்கின்றேன்

பகையை விடுத்து சிலுவை நிழலில்
அன்பை விதைக்கின்றேன்
கொடுத்த பணியை முடித்த நிறைவை
மனதில் பதிக்கின்றேன்

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

13

இயேசுவின் உடல் தாயின் மடியில்
*

துடிக்கும் அன்னை மடியில் நானும்
அடங்கிக் கிடக்கின்றேன்
வடிக்கும் அவளின் கண்ணீர் விழுந்தும்
சலனம் இழக்கின்றேன்

தொழுவில் அழகாய்ச் சிரித்த விழியில்
அழுகை நீரலையோ
பாவம் புரியும் மகனே உனக்கு
தாகம் தீரலையோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

14

இயேசுவின் உடல் கல்லறையில் வைக்கப்படுகிறது
*

மறையைச் சொன்ன எனையும் நீயும்
அறையில் அடைத்தாயோ
கருணை பொழிந்த விழிகள் தன்னைக்
குகையில் அடைத்தாயோ

எனது வலிகள் எனது பணிகள்
உனக்காய் அறிவாயோ
பாவம் அழிந்தால் நீயும் புதிதாய்
உயிர்ப்பாய் அறியாயோ

 

நான் பாவம் புரிந்தேன்
உன் அன்பை பிரிந்தேன்
என் உள்ளம் வருந்துகின்றேன்.
கல்வாரி பயணம்
என் மீட்பின் தருணம்
இந்நாளில் திருந்துகின்றேன்.

 

*

பாடல் . சேவியர் .
இசை : ஆனந்த கீதன்

Posted in WhatsApp

யார் உயர்ந்தவன் ?

கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வினால்
ஞானம் தன் உயர்குடிப்பிறப்பில்
மேன்மை பாராட்டுகிறது
( சாலமோனின் ஞானம் : 8:3 , இணை திருமறை )

Image result for being with god

எத்தனை முறை அழித்தாலும் மறையாத ஏற்றத்தாழ்வு மனநிலை சமூகத்தில் மனிதரிடையே புரையோடிக் கிடக்கிறது. உயர்ந்தவர், தாழ்ந்தவர், உயர் குடிப் பிறப்பு, கீழ் குடிப் பிறப்பு எனும் மறைமுக யுத்தம் திருச்சபைகளிலும் நிலவி வருகிறது. சில இடங்களில் வெளிப்படையாய் நடக்கிறது, பல இடங்களில் மறை முகமாய் நடக்கிறது. அது ஒன்று மட்டுமே வித்தியாசம்.

இந்த சமத்துவமற்ற சூழலில் யார் உயர்குடிப் பிறப்பு என்பதை விவிலியம் நமக்குக் கற்றுத் தருகிறது. “கடவுளோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்வது உயர்குடிப் பிறப்பு” என்கிறது சாலமோனின் ஞானம் நூல். இறைவனோடு ஒன்றுபட்டு வாழாத வாழ்வு கீழ்குடிப் பிறப்பு எனப் புரிந்து கொள்ளலாம்.

உயர்குடியும், தாழ் குடியும் பிறப்பினால் வரவில்லை, வாழ்வினால் வருகிறது எனும் புதிய சிந்தனையை விவிலியம் தருகிறது. யார் வேண்டுமானாலும் உயர்குடியாய் மாறலாம், யார் வேண்டுமானாலும் கீழ் குடியைத் தேர்வு செய்து அழியலாம். இதையே விவிலியம் நமக்கு விளக்குகிறது.

கடவுளோடு ஒன்று பட்ட வாழ்வை வாழ்வதே மேன்மையானது. அத்தகைய வாழ்வு வாழ்பவர்கள் மட்டுமே மேன்மையை அடைவார்கள். கடவுளை விட்டு விலகி வாழும் போது நமது வாழ்க்கை மேன்மையிழக்கிறது.

பிறப்பின் போது நாம் எந்த பெற்றோருக்குப் பிறந்தோம் என்பதை வைத்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த தொழிலைச் செய்து வாழ்கிறோம் என்பதைப் பார்த்து நாம் அளவிடப்படுவதில்லை. எந்த பொருளாதார வசதியில் இருக்கிறோம், என்னென்ன திறமைகளைக் கொண்டிருக்கிறோம் என்பதை வைத்தும் நாம் மதிப்பிடப்படுவதில்லை. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்வு வாழ்கிறோமா என்பதே முக்கியம்.

ஒன்றுபட்ட வாழ்வு என்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாத வாழ்வு. இதைத்தான் இயேசு “செடி நிலைத்திருக்கும் கிளைகள்” என குறிப்பிடுகிறார். செடியோடு இணைந்தாலன்றி, கிளையானது கனிகொடுப்பதில்லை. ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துவிட்டால் கிளையானது விறகாகும். தனது கனி கொடுக்கும் தன்மையை இழந்து விடும். தனது வாழ்வை இழந்து விடும். நெருப்புக்கு தன்னை அர்ப்பணித்து விடும்.

நாம் உயர்குடிகளாக வாழ இறைமகன் இயேசு அழைப்பு விடுக்கிறார். அதை நமது முதல் பிறப்பு முடிவு செய்வதில்லை, இரண்டாம் பிறப்பு முடிவு செய்கிறது. இறைவனோடு வாழப் போகிறேன் எனும் தீர்மானம் முடிவு செய்கிறது. இறைவனோடு ஒன்றுபட்ட வாழ்க்கை வாழ்வதில் அது முழுமையடைகிறது.

அத்தகைய வாழ்க்கை வாழ, இறைவனின் ஞானத்தை நாம் வேண்டுவோம்.

*

சேவியர்