Posted in Bible Books, Christianity

பைபிள் கூறும் வரலாறு 7 : யோசுவா

7
யோசுவா

Image result for book of joshua

மோசேவின் மறைவுக்குப் பிறகு, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையேற்று வழிநடத்தினார். எகிப்திலிருந்து கானானை நோக்கி நாற்பது ஆண்டுகள் மோசே வழிநடத்தினார். கானானுக்குள் நுழையும் முன் மோசே இறைவனால் எடுத்துக் கொள்ளப்பட்டார். இப்போது யோசுவா மக்களை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். அப்போது அவருக்கு வயது 85 !

மக்கள் மோசேயை மதித்தது போலவே யோசுவாவையும் மதித்தார்கள். யோர்தான் ஆற்றைக் கடந்து கானானுக்குள் செல்ல வேண்டும். நதி கரைபுரண்டு ஓடுகிறது. கடவுளின் அருளினால் யோசுவா யோர்தானை இரண்டாகப் பிரித்து நடுவில் வழி தோன்றச் செய்தார். அதைக் கடந்து மக்கள் கானான் நாட்டுக்குள் சென்றார்கள்.

பைபிளின் மிக முக்கியமான நூலான யோசுவா நூலை எழுதியவர் யோசுவா என்பது மரபுச் செய்தி. அவரது மரணமும் அதற்குப் பின்பான நிகழ்வுகளும் மட்டும் பிறரால் எழுதிச் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது அவர்களின் நம்பிக்கை. முதன்மைக் குரு எலியேசர், அல்லது அவரது மகன் பினகாசு இந்த நூலின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம் என நம்பப்படுகிறது. சில ஆய்வாளர்கள், இந்த நூல் யோசுவாவின் காலத்துக்கும் சுமார் 800 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டது என்கின்றனர்.

யோசுவா மோசேயோடு இணைந்து பயணித்தவர். எகிப்தின் அடிமை நிலையை வாழ்ந்து அனுபவித்தவர். மோசேயின் இறை நம்பிக்கையையும், கடவுளை மகிமைப்படுத்தும் செயல்களையும் அருகில் இருந்து அறிந்தவர். செங்கடலை இறைவன் மோசே மூலம் இரண்டாய் பிளந்ததை நேரில் பார்த்தவர். மோசேயின் நம்பிக்கைக்கும், பிரியத்துக்கும் உரிய நபராக இருந்தவர். அதனால் தான் மோசேக்குப் பின் யோசுவா தலைவர் என்பதை மக்கள் சடடென ஒத்துக் கொண்டனர்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான யுத்தம் என சுருக்கமாக இந்த நூலைப் பற்றிச் சொல்லி விடலாம். கடவுள் தன்னை விட்டு விலகிச் சென்று, வேறு தெய்வங்களை வழிபட்ட மக்களை அழிக்கிறார். தன்னை நம்பியிருப்போரைக் காக்கிறார் எனும் செய்திகள் இதில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழையும் பாக்கியத்தை, ஆபிரகாமோ மோசேயோ பெறவில்லை. ஆனால் அது யோசுவாவுக்குக் கிடைக்கிறது. யோசுவா இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்ந்தார். அவருடைய வாழ்நாளில் இஸ்ரயேல் மக்கள் பல்வேறு வெற்றிகளைப் பெற்றனர்.

யோசுவா மக்களை 25 ஆண்டுகள் வழிநடத்தி தனது 110 வது வயதில் இறைவனை அடைந்தார்.

யோசுவா நூலுக்கு, வெற்றிகளின் நூல் என்றொரு பெயர் உண்டு. இயேசுவின் பெயருக்கு இணையான பெயர் இந்த யோசுவா என்பது. மொத்தம் 24 அதிகாரங்கள் கொண்ட இந்த நூலில் மொத்தம் 658 வசனங்கள் இடம்பெற்றுள்ளன. “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24 : 15 ) எனும் வசனம் மிகப் பரபலமான வசனம்

யோசுவாவிடம் காணும் இறை நம்பிக்கையும், அசைக்க முடியாத விசுவாசமும் வியக்க வைக்கிறது. மாபெரும் எரிகோ கோட்டையை ஆர்ப்பரித்தே வீழ்த்தி விடலாம் என இறைவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார் யோசுவா. ஆறு ஏக்கள் அளவுக்கு விரிந்து பரந்திருந்த கோட்டை இடிந்து விழுந்தது. இந்த நிகழ்வு பழைய ஏற்பாட்டின் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

இந்த நூலில் யோசுவா 31 அரசர்களோடு போரிட்டு அவர்களை இறைவனின் அருளால் வென்ற நிகழ்வுகள் இடம் பெற்றிருக்கின்றன. கடவுள் அழிக்கும் தேவன் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டாலும், அவர் வாக்கு மாறாதவர், பாவங்களை வெறுப்பவர் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய பாடமாகும். எகிப்தில் அடிமைகளாய் இருந்த மக்கள் இப்போது கானானிலுள்ள மக்களை வென்று அந்த இடத்தை தங்களுடைய இடமாக மாற்றிக் கொள்கின்றனர்.

ஒரு யுத்தத்தின் போது சூரியன் மறையாமல் முழுநாளும் ஒளிகொடுத்துக் கொண்டிருந்த அதிசய நிகழ்வும் யோசுவாவின் நூலில் காணப்படுகிறது. யோசுவா நிகழ்த்திய பல்வேறு யுத்தங்களும் அதன் காலங்களும் பின்னர் வரலாற்று ஆய்வாளர்களால் நிரூபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

“விலைமகளான இராகாபு ஒற்றர்களை நன்கு வரவேற்று, கீழ்ப்படியாதவரோடு அழியாது தப்பித்துக் கொண்டதும் நம்பிக்கையினால்தான்” என் புதிய ஏற்பாடு குறிப்பிடும் இராகாப் யோசுவாவின் காலத்தைய பெண்மணி. இஸ்ரயேலருக்கு உதவி செய்தவர். அவருடைய இறை நம்பிக்கை இன்றளவும் வியப்புடன் பார்க்கப்படுகிறது.

கடவுளால் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் நுழைவதும், அங்கே போரிட்டு நாட்டை தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வதும், நாட்டைப் பகிர்ந்து அளிப்பதும், மக்களுக்கு யோசுவா போதனைகள் வழங்குவதும், பின்னர் அவர் விடைபெறுவதும் என நிகழ்வுகள் எழுதப்பட்டுள்ளன.

Posted in Articles, WhatsApp

ஆட்சியும், மாட்சியும் ஆண்டவரிடமே

மண்ணுலகில் அதிகாரம்
ஆண்டவரின் கையில் உள்ளது;
ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில்
அவரே எழுப்புகிறார்.

சீராக் 10 : 4

 

Image result for election

மண்ணுலகில் நடக்கின்ற ஆட்சி மாற்றங்கள், தலைமைகள் நமக்கு பல வேளைகளில் குழப்பத்தையும், வருத்தத்தையும் உருவாக்குகின்றன. யார் வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என நாம் நினைக்கிறோமோ அவர்கள் வரவேண்டும் என விரும்புகிறோம். அப்படி நடக்காத பொழுதுகளில் நாம் கலக்கமடைந்து குழம்பிப் போகிறோம். காரணம், எதிர்காலத்தின் பாதை நமக்குப் புலப்படாமல் இருப்பது தான்.

மண்ணுலகின் தலைவர்களை ஆண்டவரே நியமிக்கிறார் எனும் புரிதல் நமக்குள் வரும்போது அத்தகைய பதட்டத்தை விட்டு விட்டு நாம் இறைவனின் அமைதியைப் பெற முடியும். விவிலியத்தில் பல வசனங்கள் இதைப்பற்றிப் பேசினாலும், சீராக்கின் நூல் இதை மிக மிகத் தெளிவாகவே செதுக்கி வைத்திருக்கிறது.

ஆதித்திருச்சபையில் சங்கீதம் நூலுக்கு அடுத்தபடியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த நூல் சீராக்கின் ஞானம் எனும் நூல். கிமு 180களில் எபிரேயத்தில் எழுதப்பட்ட இந்த நூல் இஸ்ரயேல் மக்களின் வரலாற்றையும், ஞானத்தையும் முக்கியமாகப் பேசுகிறது. நூலின் சில பகுதிகள் ஆட்சியாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறது.

நற்பயிற்சி பெறாத மன்னர் மக்களை அழிப்பார் என்றும், மக்களின் நடுவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே மக்களும் இருப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கின்ற நூல்,
“மண்ணுலகில் அதிகாரம் ஆண்டவரின் கையில் உள்ளது; ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில் அவரே எழுப்புகிறார்” என மிகப்பெரிய ஆறுதலைத் தருகிறது.

வாக்களிப்பதன் மூலம் நமது கடமையை செய்து முடித்த பின் முடிவை இறைவனின் கரங்களில் ஒப்படைத்து விட்டு நமது பணிகளைத் தொடர்வதே இறைவன் விரும்பும் செயல். இறைவனின் திட்டத்தைத் தாண்டி எதுவும் நமது வாழ்க்கையில் நடக்கப் போவதில்லை. கடலுக்கு எல்லை வகுத்த இறைவன், ஆட்சியாளர்களுக்கும் எல்லை வகுத்திருக்கிறார். அவர் விரும்பும் வேளையில் அவர்களை தலைமைப் பதவியில் அமர்த்துகிறார்.அவர் திட்டத்தின் நாளில் அவர்களை விலக்கவும் செய்கிறார்.

இறைவனில் கரத்தில் அமைதியாய் இருக்கும் களிமண் தான் அழகிய கலமாக உருவாகிறது. அவரது கைகளில் அமைதியாய் ஒப்படைக்கும் வாழ்க்கையில் தான் அமைதியின் காலம் உருவாகிறது.

அவரை நம்புவோம், அவரில் பயணிப்போம்

*