Posted in Articles, WhatsApp

பிள்ளைகளை கண்டிக்கலாமா

பயிற்றுவிக்கப்படாத குதிரை
முரட்டுத்தனம் காட்டுகிறது;
கட்டுப்பாடில்லாத மகன்
அடக்கமற்றவன் ஆகிறான்

தம் மகனிடம் அன்பு
கொண்டிருக்கும் தந்தை அவனை
இடைவிடாது கண்டிப்பார்;
அப்போது அவர்
தம் இறுதி நாள்களில்
மகிழ்வோடு இருப்பார்

சீராக் 30 : 8,1

Image result for discipline your children
எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கும் என நினைக்கிறேன். பக்கத்து வீட்டிலிருந்து நாலணாவை மிக சாதுர்யமாகத் திருடி விட்டேன். என்னுடைய திறமையை நானே மெச்சிக்கொண்டு முதலில் அம்மாவிடம் கொண்டு போய் காட்டினேன்.

“எங்கேயிருந்து எடுத்தே ?” என்று கேட்டார் அம்மா. அப்போது நாலணா என்பது எங்கள் வீட்டில் பெரிய பணம்.

“பக்கத்து வீட்ல இருந்து நைசா எடுத்தேன்”. பெருமிதத்துடன் சொன்னேன்.

பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்து நின்ற எனக்கு பளார் பளார் என ரெண்டு அடி தான் கிடைத்தது. அப்படியே தரதரவென இழுத்துக் கொண்டு போய் அந்த வீட்டில் விட்டார்கள்.

“எங்கேயிருந்து எடுத்தியோ அதே இடத்துல வெச்சுட்டு, மன்னிப்பு கேட்டுட்டு வா” என்றார் அம்மா.

என்னுடைய முதல் உழைப்பு வீணாய்ப் போன விரக்தியிலும், முதல் சம்பளம் பயனில்லாமல் போன ஆதங்கத்துடனும் நான் அதைச் செய்து முடித்தேன்.

அன்றைய அந்த அடியும், திருத்தலும் திருட்டு என்பது தவறு என்பதைப் புரிய வைத்தது. அதற்கான அங்கீகாரம் எனது வீட்டில் கிடைப்பதில்லை என்பதும் புரிந்தது.

எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் என் பெற்றோரிடம் ஒன்றோ இரண்டோ தடவை தான் அடி வாங்கியிருக்கிறேன். அந்த தருணங்களே மிக மிக முக்கியமானவை. அவை தான் என்னை திருத்தியிருக்கின்றன. சரியான பாதைக்குத் திருப்பியிருக்கின்றன.

நான் வகுப்பில் முதல் மாணவனாக வரவில்லை என்பதற்காகவோ, பக்கத்து வீட்டுப் பையனை விட குறைவாக மார்க் எடுத்தேன் என்பதற்காகவோ நான் அடி வாங்கியதில்லை. திருடினேன், கீழ்ப்படியவில்லை போன்ற காரணங்களுக்காக மட்டுமே தண்டனை வாங்கியிருக்கிறேன்.

பிள்ளைகளைத் தண்டித்தும், கண்டித்தும் வளர்க்க வேண்டும் என விவிலியம் நமக்கு பல இடங்களில் வலியுறுத்துகிறது. சீராக்கின் நூலும் அதே சிந்தனையையே பிரதிபலிக்கிறது. “தம் மகனை நன்னெறியில் பயிற்றுவிப்பவர் அவனால் நம்மை அடைவார்” என்றும், “உன் மகனுக்கு நற்பயிற்சி அளி; அவனைப் பயன்படுத்த முயற்சி செய். அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருந்தமாட்டாய்” என்றெல்லாம் சீராக் நமக்கு சிந்தனைகளை விதைக்கிறது.

பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்துவது எதை நோக்கி என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தை, குணாதிசயம், ஆன்மிகம் போன்ற இலக்குகளை நோக்கிய திருத்துதல்களே மிக‌ முக்கியம். நாமோ பல வேளைகளில், நமது விருப்பங்களுக்கு ஏற்ப பிள்ளைகள் வளரவில்லையேல் தண்டிக்கிறோம். நமது சுயநலத்துக்கும், நமது ஈகோவின் நிறைவேறலுக்கும் பிள்ளைகள் ஒத்துழைக்க வில்லையேல் கண்டிக்கிறோம். நமது கனவுகளைச் சுமந்து செல்லும் புரவிகளாய் அவர்கள் இல்லையேல் அடிக்கிறோம்.

பிள்ளைகளை கண்டித்தும் தண்டித்தும் வளர்த்துவோம். அது நமது கோபத்தின் வெளிப்பாடாய் இல்லாமல் அன்பின் வெளிப்பாடாய் இருக்கட்டும். அது அவர்கள் நல்லவர்களாகவும், நன்மை செய்பவர்களாகவும், மனிதநேயம் உடையவர்களாகவும் வளரவேண்டும் எனும் நோக்கத்தோடு இருக்கட்டும்.

*
சேவியர்

Posted in Articles, WhatsApp

நட்பே துணை

இரகசியங்களை
வெளிப்படுத்துவோர் பிறருடைய
நம்பிக்கையை இழக்கின்றனர்;
ஆருயிர் நண்பர்களை
அவர்கள் அடையமாட்டார்கள்.
நண்பருக்கு அன்புகாட்டு;
அவர்கள்மீது நம்பிக்கை வை;
அவர்களுடைய இரகசியங்களை
நீ வெளிப்படுத்திவிட்டால்
அவர்கள் பின் செல்லாதே.

சீராக் 27:16

Image result for friends talking

நட்பின்றி அமையாது உலகு எனலாம். அந்த அளவுக்கு நமது வாழ்வில் நண்பர்களின் தேவையும் முக்கியத்துவமும் இருக்கிறது. “உலகமே நம்மை விட்டு விலகிச் செல்லும் போது, நம்மை நோக்கி நெருங்கி வருபவன் தான் உண்மையான நண்பன்” என ஒரு பிரபலமான பழமொழி உண்டு. மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் நல்ல நண்பர்கள் வேண்டும் என்கின்றன ஆய்வுகள்.

நட்பின் பெருமையை விளக்க இறைமகன் இயேசுவும், “தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை” என்றார். நட்பைப் பற்றி நீதிமொழிகள் கூறும்போது, “கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு” என்கிறது. நட்பை விவிலியம் பல்வேறு விதமாக பெருமைப்படுத்திப் பேசுகிறது.

தாவீது & யோனத்தான், தானியேல் & நண்பர்கள், எலியா & எலிசா, ஆபிரகாம் & லோத்து, தாவீது & அபியத்தார், யோபு & நண்பர்கள், பவுல் & திமோத்தேயு தொடங்கி ஏராளமான நட்பு இழையோடு உறவுகளை பைபிள் படம்பிடித்துக் காட்டுகிறது.

சீராக்கின் நூல் அதை இன்னும் கொஞ்சம் ஆழமாக, “இரகசியத்தை வெளிப்படுத்தாத” நண்பனைப் பற்றிப் பேசுகிறது. நண்பர்கள் மீது காட்டுகின்ற அன்பு என்பது அவர்களுடைய இரகசியங்களை வெளிப்படுத்தாத தன்மையில் இருக்கிறது என்கிறது அது.

பல வேளைகளில் நாம் நமது மனதின் துயரங்களை தோழர்களின் தோள்களில் இறக்கி வைக்கிறோம். அவர்கள் அதைச் சுமந்து சென்று நமது எதிரிகளின் இதயங்களில் இறக்கி வைக்கின்றனர். அத்தகைய நண்பர்கள் உண்மை நண்பர்களல்ல. அவர்கள் நம்மீது அன்பு செலுத்தவில்லை, நம்மை ஏளனப்படுத்துகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

யூதாஸ் பணப்பையை வைத்திருந்தான் என்றும், அதில் நேர்மையாய் இருக்கவில்லை என்றும் விவிலியம் சொல்கிறது. ஆனால் எந்த இடத்திலும் யூதாசின் பலவீனத்தை இயேசு வெளிப்படுத்தி அவரை அவமானப்படுத்தவில்லை. ஒரு நல்ல நண்பனாக அவனோடு பயணிக்கிறார். நண்பர்கள் மீது வைக்கின்ற அன்பும், நம்பிக்கையும் நமது வாழ்க்கைப் பயணத்தை அர்த்தமுள்ளதாக்குகின்றன

தனது கையிலிருக்கும் பறவையைப் பறக்க விடுவது போலவும், தனது அருகிலிருக்கும் மானை துள்ளிக் குதித்து மறைந்தோட விடுவதைப் போலவும், நண்பர்களை இழக்க நேரிடும் என்கிறது சீராக் நூல். இரகசியங்களைக் காக்காத நண்பர்கள் சுமைதாங்கிகளாய் இருப்பதில்லை, அவர்கள் சுமை கூட்டுபவர்களாக இருக்கிறார்கள்.

இரகசியங்களைக் காப்பதில் ஒரே ஒருவிஷயம் மட்டும் நமது கவனத்தில் இருக்க வேண்டும். எல்லா இரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்பதில்லை. “தண்ணியடிக்கிறதை வீட்ல சொல்லாதே” என நண்பன் சொல்வது இரகசியத்தைக் காப்பதல்ல, அது பாவத்தை அனுமதிப்பது. நமது நண்பன் விலக முடியாத ஒரு அடிமைத்தனத்தில் இருந்தாலோ, பாவத்தின் பிடியில் இருந்தாலோ அவனை மீட்பதற்காக சரியான இடங்களில் உதவிகளைப் பெறவேண்டும். காரணம், அத்தகைய இடங்களில் நண்பனின் இரகசியங்களைக் காப்பதை விட முக்கியம், நண்பனின் இரட்சிப்பைக் காப்பது.

*

சேவியர்

#WriterXavier #ChristianArticle #JesusArticle

Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 12 அரசர்கள் முதல் நூல்

12

அரசர்கள் முதல் நூல்

Image result for Book of 1 kings

இப்போது இரண்டு பிரிவுகளாக இருக்கும் ‘அரசர்கள்’ நூல் துவக்கத்தில் ஒரே நூலாக இருந்தது.எபிரேய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதை மிலாகிம் என அழைத்தனர். அரசாங்கம் என்பது இதன் பொருள். அதை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்த போது வசதிக்காக இரண்டுபிரிவுகளாகப் பிரித்தனர். அப்படி மொழிபெயர்த்தவர்களை ‘செப்டுவஜின்ட்’ எனஅழைக்கிறார்கள். அதற்கு எழுபது என்பது பொருள். எழுபது பேர் சேர்ந்து இந்தமொழிபெயர்ப்பைச் செய்ததால் இந்த பெயர் அவர்களுக்கு வந்தது.

பழைய ஏற்பாட்டு இஸ்ரயேலரின் தலைமை ஆட்சியை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதலாவது ஆபிரகாம் முதல் யோசேப்பு வரையிலான இறைமனிதர்களின் காலம். அடுத்தது மோசே முதல் சாமுவேல் வரையிலான இறைவாக்கினர்களின் காலம். மூன்றாவது சவுல் முதல் செதேக்கியா வரையிலான அரசர்களின் காலம். நான்காவது யோசுவா முதல் காய்பா வரையிலான குருக்களின் காலம். அரசர்கள் நூல் இஸ்ரயேலின் அரசர்களைப் பற்றிப் பேசுகிறது. சாலமோன் மன்னன் முதல் ஆகாப் வரையிலான மன்னர்களைப் பற்றி முதல் நூலும், ஆகாப் முதல் செதேக்கியா வரையிலான மன்னர்களைப் பற்றி இரண்டாவது நூலும் பேசுகிறது.

இந்த நூலை எழுதியவர் யார் என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மரபுப் படி இந்த நூலை எழுதியவர் எரேமியா. ஆனால் நூலின் சில பாகங்களை அவர் எழுதியிருக்க வாய்ப்பில்லை. அதை எசேக்கியேல் அல்லது எஸ்ரா எழுதியிருக்கலாம் என இறையியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இறைவன் வரலாற்றை எழுதுவதற்கும், மனிதர்கள் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டை அரசர்கள் நூலின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள முடியும். எல்லா அரசர்களுக்கும் சமமான முக்கியத்துவம் இந்த நூலில் கொடுக்கப்படவில்லை என்பது முதல் செய்தி. உதாரணமாக ஓம்ரி மன்னன் இஸ்ரேலை ஆண்டவன். வரலாறு இவரைப் பற்றி அதிகமாகப் பதிவு செய்திருக்கிறது. நாட்டை செல்வச் செழிப்புக்கு கொண்டு சென்ற மன்னன் என வரலாறு இவரைக் கொண்டாடுகிறது. ஆனால் விவிலியம் இவருக்குக் கொடுத்திருக்கும் இடம் எட்டு வசனங்கள். காரணம் இவன் தேவனுடைய பார்வையில் தீமையைச் செய்தவன் !

இரண்டாம் எரோபவாம் உலக பார்வையில் நல்லாட்சி செய்த இன்னோர் மன்னன். அவனுக்கு விவிலியம் கொடுத்திருப்பது ஏழு வசனங்கள். அதே நேரம் எசேக்கியா மன்னனுக்கோ மூன்று முழு அதிகாரங்கள் ! எலியா எலிசா எனும் இறைவாக்கினர்களுக்கு அரசர்கள் நூலில் மூன்றில் ஒரு பங்கு இடம் ! அவர்கள் அரசர்கள் கூட இல்லை ! இது தான் இறைவன் எழுதும் வரலாற்றின் சிறப்பம்சம்.

அரசர் இறைவன் பார்வையில் நல்லவனாக இருக்கிறாரா ? உண்மைக் கடவுளை வழிபடுகிறாரா ? பிற வழிபாடுகளை வெறுக்கிறாரா , நல்ல குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறாரா நீதியும், நேர்மையும், இறையச்சமும் கொண்டிருக்கிறாரா என்பதே கேள்வி. அரசர்கள் நூலை அலசிப் பார்த்தால் நல்ல அரசர்கள் சுமார் 33 ஆண்டுகளும், கெட்ட அரசர்கள் 11 ஆண்டுகளும் சராசரியாய் ஆண்டிருக்கிறார்கள். சில விதிவிலக்குகளைத் தவிர்த்து !இறைவனே மண்ணுலக ஆட்சியையும் நிர்ணயிக்கிறார் என்பதன் விளக்கமாக இதைக் கொள்ளலாம்.

எருசலேமின் மாபெரும் சக்கரவர்த்தியான தாவீது மன்னனின் இறுதிக் கணங்களோடு இந்தஅரசர்கள் முதல் நூல், துவங்குகிறது. தாவீது மன்னன் இறக்கிறார். அவருக்கும் பத்சேபாவுக்கும்பிறந்த மகன் சாலமோன்அரசராகிறார்.

இந்த நூலில் சாலமோன் மன்னனின் நீதியும், செயல்பாடுகளும், ஞானமும், செல்வமும், ஆட்சித்திறமையும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. ள்வ

இந்த நூலின் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று எருசலேம் தேவாலயம் கட்டி எழுப்பப்படும்வரலாறு. தனக்கான ஆலயம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தாவீது மன்னனிடம் இறைவன்தெரிவித்தார். ஆனால் தாவீது இரத்தக் கறை படிந்த கையுடையவன் என்பதால், ஆலயத்தைஅவர் கட்டவேண்டாம், அவரது மகனே கட்டவேண்டும் என இறைவன் ஆணையிட்டார். அதன்படிகடவுளுக்கான ஆலயத்தை சிறப்புறக் கட்டி முடித்தார். சாலமோன் மன்னன்.

எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் வெளியேறி சரியாக 480 ஆண்டுகளுக்குப் பின்பு அந்தஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயத்தில் வசிப்பேன் என இறைவன் சாலமோன் மன்னனுக்குவாக்களித்திருந்தார்.

ஒருங்கிணைந்த இஸ்ரயேல் நாட்டின் கடைசி மன்னனாக சாலமோன் இருந்தார். அதற்குப் பின்கிமு 931ல் இஸ்ரயேல் நாடு கிழக்கு மேற்காக இரண்டாகப் பிரிந்தது. பன்னிரண்டுகோத்திரங்கள், பத்து + இரண்டு என பிரிந்துவிட்டன.

விவிலியத்திலுள்ள மாபெரும் இறைவாக்கினர்களில் ஒருவரான எலியாவின் வியப்பூட்டும் வாழ்க்கையை அரசர்கள் முதல் நூல் நமக்கு விளக்குகிறது.

இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்ட மக்களினம் எப்படியெல்லாம் உருமாற்றம் அடைந்து, எப்படி பெரு வீழ்ச்சியடைந்தது எனும் சோக வரலாறே அரசர் நூலின் முடிவில் நாம் புரிந்து கொள்ளும் விஷயம். இறைவன் தனது வாக்குறுதிகளை மீறுவதில்லை. ஆனால் மனிதன் அந்த வாக்குறுதிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் நடந்துகொள்வதில்லை. இந்த சிந்தனையே அரசர்களின் வாழ்க்கை வாயிலாக நமக்குக் கிடைக்கின்ற செய்தியாகும்.

Posted in Articles, WhatsApp

யார் அந்தி கிறிஸ்து (எதிர்கிறிஸ்து )

Image result for antichrist

ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள்.

2 யோவான் 1:7

 

அந்தி கிறிஸ்து, அதாவது எதிர் கிறிஸ்துவுக்கு சினிமாட்டிக் பொருள் கொள்வதையும், ஒரு பரபரப்பான நாடகமாக்கம் செய்வதையுமே இன்றைய கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். காரணம் அவர்கள் சில சித்தாந்தங்களின் பிடியில் சிக்குண்டு கிடப்பது தான். இறை வார்த்தைகளே தங்களை இயக்குவதாய் அவர்களில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ஏமாற்றுவோர் பலர் உலகில் தோன்றியுள்ளனர். இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை இவர்கள் எற்றுக்கொள்வதில்லை. இவர்களே ஏமாற்றுவோர், எதிர்க் கிறிஸ்துகள். என்கிறது 2 யோவான் 1:7. முதல் நூற்றாண்டிலேயே எதிர்கிறிஸ்து உலகில் எழுந்திருப்பதாக யோவான் குறிப்பிடுகிறார். ‘இயேசு கிறிஸ்து மனிதனாக வந்தார்’ எனும் உண்மையை ஏற்றுக் கொள்ளாதவர்களை யோவான் எதிர்கிறிஸ்து எனக் குறிப்பிடுகிறார்.கவனிக்க, ஒருவரல்ல ஒரு விசுவாசத்தை எதிர்ப்பவர்கள் அனைவருமே எதிர்கிறிஸ்துகள்.

இயேசுவை பிரதிபலிக்கிறேன் என சொல்லிக்கொண்டு, உண்மையான இயேசுவைப் பிரதிபலிக்காமல் இருக்கின்றவர்களையும் இந்த அந்தி கிறிஸ்து எனும் அடையாளம் குறிப்பிடுகிறது.

“இதுவே இறுதிக் காலம். எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர். ஆகவே இறுதிக் காலம் இதுவேயென அறிகிறோம். இவர்கள் நம்மிடமிருந்து பிரிந்தவர்கள்; உண்மையில் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களே அல்ல; நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மோடு சேர்ந்தே இருந்திருப்பார்கள். ஆகையால் இவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல” என 1 யோவான் 2:18 குறிப்பிடுகிறது.

எதிர் கிறிஸ்து ஒற்றை நபர் அல்ல, இறைவனை மறுதலிக்கும் யாரும் எதிர்கிறிஸ்துவே என்பதை யோவான் அறுதியிட்டுக் கூறுகிறார். ஆதித் திருச்சபையையும், அவர்களுடைய வழிமுறைகளையும், அவர்களது வழிபாட்டு முறைகளையும், அவர்களது சிந்தனைகளையும், அவர்களது சித்தாந்தங்களையும் ஏற்றுக் கொள்ளாமல் பிரிந்து போன அனைவரையும் அவர் எதிர்கிறிஸ்து என அழைக்கிறார்.

ஆதிகாலத்தில் நீரோ மன்னன் அந்திக்கிறிஸ்துவாய் சித்தரிக்கப்பட்டான். பின்னர் யோவான் தனது வாழ்வின் கடைசி காலத்தில், அதாவது திருத்தூதர்களின் வாழ்க்கை முடியும் காலகட்டத்தில் பிரிவினை வாதிகளையெல்லாம் அந்திக் கிறிஸ்து எனக் குறிப்பிடுகிறார். யோவானின் மரணத்தோடு உலகம் அழியும் என்றும், இயேசுவின் இரண்டாம் வருகை வரும் எனவும் அந்த காலத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத் தக்கது.

“இயேசு “மெசியா” அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள்” என யோவான் திரும்பத் திரும்ப அந்தி கிறிஸ்து என்பவர்கள் தந்தையையும், மகனையும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் என அழுத்தமாய்ச் சொல்கிறார்.

“அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறை மகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? … தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என இயேசு (யோவான் 10 36) ல் சொன்னதில் ஒளிந்திருக்கின்றன அந்தி கிறிஸ்துவின் அடையாளங்கள்.

இறைமகன் இயேசு, “இறைவாக்கினர் தானியேல் உரைத்த, ‘நடுங்கவைக்கும் தீட்டு’ திருவிடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள் ( மத்தேயு 24:15) என்றார். அதற்கான விளக்கங்களை ஆளாளுக்கு தங்கள் வெறுப்பு அரசியலின் வெளிப்பாடாய் வரையறை செய்து கொள்கின்றனர் என்பதே உண்மையாகும்.

தானியேலின் இறைவாக்கான, நடுங்க வைக்கும் தீட்டு மக்கபேயர் காலமான கிமு 167ல் நிறைவேறியது என்பதை இணை திருமறை நூலான 1 மக்கபேயர் 1 :54 விளக்குகிறது.

 

“நூற்று நாற்பத்தைந்தாம் ஆண்டு கிஸ்லேவு மாதம் பதினைந்தாம் நாள் அந்தியோக்கும் அவனுடைய ஆள்களும் பலிபீடத்தின் மேல் நடுங்க வைக்கும் தீட்டை நிறுவினார்கள்; யூதேயாவின் நகரங்களெங்கும் சிலை வழிபாட்டுக்கான பீடங்களைக் கட்டினார்கள்”. அப்போது நடந்த நிகழ்வுகளையும் மக்கபேயர் நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது. எனவே தான் விவிலியத்தின் தொடர்ச்சிக்கு இணை திருமறை நூல்கள் அவசியமாகின்றன.

இயேசுவோடு பயணப்பட்ட யோவான் ஐந்து முறை அந்திகிறிஸ்து/எதிர்கிறிஸ்து எனும் பதத்தை பயன்படுத்துகிறார். ஐந்துமே இறைமகனின் இறைத்தன்மையை மறுதலிக்கும் மக்களைக் குறிக்கிறதே தவிர ஒரு தனி நபரையோ, இயக்கத்தையோ குறிக்கவில்லை என்பதே பைபிள் சொல்லும் உண்மையாகும்.

வரலாற்றில் கொடூரமான மனிதர்கள் மேல் தங்கள் வெறுப்பைத் திணிக்க அவர்களை அந்திக்கிறிஸ்துகள் என அழைத்ததுண்டு. அடால்ஃப் ஹிட்லரே அந்திக்கிறிஸ்து என உருவகித்து மிகப்பெரிய கருத்துருவாக்கம் அவரது காலத்தில் எழுந்தது. ஜெர்மானிய தத்துவஞானி ஒருவர் இருந்தார். அவர் பெயர் ஃப்ரெட்ரிக் நீச்சி. அவரே அந்திக்கிறிஸ்து என கணிசமான மக்கள் நம்பினார்கள். அட்டிலா, முகமது, பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஹென்றி கிஸ்ஸிங்கர், மிகைல் கோர்பசேவ் இப்படிப் பல்வேறு மனிதர்கள் அந்திக்கிறிஸ்துவாக ஒவ்வொருகாலத்திலும் சித்தரிக்கப்பட்டனர்.

பிரிவினை சகோதரர்கள், போப்பை அந்திக்கிறிஸ்துவாக சித்தரித்து தங்களுடைய வெறுப்பை தணித்துக் கொள்வதுமுண்டு. அதற்காக சில கூட்டல் கழித்தல்களை அவர்கள் கட்டமைப்பதும் உண்டு.

அதே போல கத்தோலிக்கத் திருச்சபையில் பிரிவினையை உருவாக்கிய மார்டின் லூத்தரை அந்திக்கிறிஸ்து என ஒரு சாரார் அழைப்பதுண்டு. மார்டின் லூத்தர் திருச்சபைபில் மட்டுமல்லாமல் விவிலியத்திலேயே பிரிவினையை உருவாக்கினார் என அவர்கள் வாதிடுகின்றனர். ‘விசுவாசம் மட்டுமே போதுமானது’ எனும் அவருடைய சூளுரைக்கு எதிராக இருந்த யாக்கோபு நூலை அவர் “வெறுப்புக்குரிய நூல்” என அழைத்தார். இது அப்போஸ்தலிக்க நூல் கிடையாது இது விவிலியத்தில் இருக்கக் கூடாது என்றார். தீத்து நூலையும் அப்படியே விமர்சித்தார்.

திருவெளிப்பாடு நூல் புனை கதை போல் இருக்கிறது எனவும், “வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்” எனும் வசனம் மரியாவையும் குறிக்கிறது என்பதால் அந்த நூலையும் திருவிவிலியத்திலிருந்து நீக்க வேண்டுமென முழங்கினார்.

உண்மையில் அவர் உருவாக்கிய பைபிளில் யாக்கோபு, தீத்து மற்றும் திருவெளிப்பாடு போன்றவை பிற்சேர்க்கையாய் தான் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து அவருடைய சித்தாந்தத்துக்கு ஒத்திசைவு தெரிவித்த பலரும் அவருடைய கருத்தை பிரதிபலித்தனர் என்கிறது வரலாறு.

சிலர் “திரித்துவத்தை” நம்புகிற அனைவருமே அந்திகிறிஸ்துகள் என வாதிட்டனர். திரித்துவம் என்பதே கிரேக்க தத்துவஞானியான பிளாட்டோ சிந்தனையில் உருவானது. யூத, கிறிஸ்தவ மூலங்களில் இவை இல்லை. பைபிளில் திரித்துவம் என்பது இல்லை, அவை கட்டமைக்கப்பட்ட சித்தாந்தங்கள். தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட குறியீடுகள் என அவர்கள் தர்க்கித்தனர்.

இன்னும் சிலர் யகோவா எனும் வார்த்தையைத் தாங்காத பைபிளைப் பின்பற்றும் அனைவரும் அந்திகிறிஸ்துவை ஆதரிப்பவர்கள். வல்லமையுள்ள இறைவனுடைய பெயரையே அவர்கள் இருட்டடிப்பு செய்கிறார்கள். “உமது பெயர் தூயதென போற்றப்படுக” எனும் கர்த்தர் கர்ப்பித்த செபத்தையே அவமானப்படுத்துகின்றனர். என வாதிட்டனர்.

திருத்தூதர்களின் காலத்தின் கடைசி கட்டத்திலும், அதன் பிந்தைய காலத்திலும் பல ஞானக் கொள்கைகள் தோன்றின. ஒறுத்தல் முயற்சியும், தனிமை தியானமும் தேவையெனும் சித்தாந்தங்களும் தோன்றின. மனிதனின் இருதய நிலையே இறையரசு எனும் சிந்தனைகள் தோன்றின. இவர்கள் எல்லோருமே ஒருவர் மற்றவரை அந்தி கிறிஸ்துவின் சேனை என அழைத்தனர்.

சிலர் அந்திகிறிஸ்து என்பவர் இனிமேல் தான் வருவார் எனவும், 666 எனும் எண் அவனுக்கு இடப்படும் என்றெல்லாம் விவாதிக்கின்றனர். ஆனால் விவிலியமோ மிகத் தெளிவாக அந்திக்கிறிஸ்து என்பவர் ஒருவரல்ல என்கிறது. “எதிர்க் கிறிஸ்து வருவதாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களே! இப்போது எதிர்க் கிறிஸ்துகள் பலர் தோன்றியுள்ளனர் (1யோவான் 2:18)” என மிகத் தெளிவாக விவிலியம் குறிப்பிடுகிறது.

கிறிஸ்தவ குழுக்களில், அமைப்புகளில், திருச்சபைகளில் குழப்பம் உருவாக்கும் மனிதர்களை அந்திகிறிஸ்து எனலாம்.

1 திமோத்தேயு 3 ஐ வாசித்தால் பொறுப்பில் இருக்கும் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பது விளக்கப்படுகிறது. அதைப் பின்பற்றாமல் ஆன்மிக பயணத்தில் இடையூறாக இருக்கும் அனைவருமே அந்திக்கிறிஸ்துகள் தான்.

அதை விட்டு விட்டு திருவெளிப்பாடு 13 குறிப்பிடும் மிருகத்தையும், தானியேல் 7 குறிப்பிடும் மிருகங்களையும் ஒப்பிட்டு அந்திகிறிஸ்துவை உவமைப்படுத்துவோர், தானியேல் 7:17 சொல்வதை வசதியாய் மறந்து விடுகின்றனர். “இந்த நான்கு விலங்குகளும் உலகில் எழும்பப்போகும் நான்கு அரசர்களைக் குறிக்கின்றன” என்கிறது தானியேல் 7:17. விவிலியத்தின் பதிவுகளில் எல்லாவற்றையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது குழப்பங்களே மிஞ்சும் என்பது தெளிவு.

சொல்லப்போனால், அந்தி கிறிஸ்து என்பவர் மனிதரல்ல, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ட் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களே அவை என ஒரு மாபெரும் கூட்டம் இப்போது பேசித்திரிகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

விவிலியம் குறிப்பிடுகின்ற அந்தி கிறிஸ்து யார் என்பதை மிக எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், அன்றைக்கு அவர்கள் அறிவித்து வந்த கிறிஸ்துவ நம்பிக்கைக்கு எதிராய் இருந்தவர்கள் என புரிந்து கொள்ளலாம். உலகில் எழுகின்ற அரசுகள், சித்தாந்தங்களுக்கு எதிரான செயல்பாடுகள் போன்றவையெல்லாம் அந்திகிறிஸ்துக்களை ஊக்குவித்தன. இன்றும் அந்தி கிறிஸ்து என்பவர் யார் என்றால், கிறிஸ்துவின் மனநிலைக்கு எதிரானவன் என்பதே உண்மையாகும்.

அத்தகைய ஒரு சூழல் எழுந்த காலகட்டத்தில் தான், அதாவது இறைவனின் விண்ணேற்புக்கும் அரைநூற்றாண்டுகளுக்குப் பின்பு தான், அந்தி கிறிஸ்துவைப் பற்றி யோவான் எழுதுகிறார். அது அன்றைய காலத்தில் இறைவனுக்கு எதிராக செயல்பட்டவர்கள் என புரிந்து கொள்வதே சரியாகும்.

“என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்; என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறடிக்கிறார்” என்ற இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்வோம். அவை அந்திக்கிறிஸ்துவை அடையாளம் காட்டுகின்றன என்பதை உணர்ந்து தெளிவடைவோம்.

நாம் அந்தி கிறிஸ்து என அடையாளப்படுத்தும் நபர்கள் ஒருவேளை இறைவனின் அருகில் அமரும் பாக்கியம் பெற்றவர்களாக இருப்பார்கள். அதை தந்தையே தீர்மானிக்கிறார். இயேசுவின் வலப்புறமும், இடப்புறமும் இருப்பது நமது விமர்சனங்களின் வீரியத்தைப் பொறுத்ததல்ல, தந்தையின் விருப்பத்தைப் பொறுத்தது.

நாம் கேட்கவேண்டிய கேள்வி, யார் அந்தி கிறிஸ்து என்பதல்ல ?

நான் அந்தி கிறிஸ்துவா என்பது தான்.

நமது செயல்பாடுகள் கிறிஸ்துவுக்கு எதிராய் இருந்தால் நாம் அந்திகிறிஸ்துகளே !

*

சேவியர்

#writerxavier #ChristianArticles #Antichrist

Posted in Articles, WhatsApp

சீராக்கும் டாப் 3 விஷயங்கள்

என் மனத்திற்குப்
பிடித்தவை மூன்று;
அவை ஆண்டவர் முன்னும்
மனிதர்முன்னும் அழகுள்ளவை.
அவை; உடன்பிறப்புகளிடையே
காணப்படும் ஒற்றுமை,
அடுத்திருப்பாரோடு ஏற்படும்
நட்பு, தங்களுக்குள்
ஒன்றி வாழும் கணவன் மனைவியர்.

சீராக் 25:1

Image result for happy husband and wife shadow

உரையாடல்களின் போது பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது இந்த டாப் 10 , டாப் 3 விஷயங்கள். தேவையான விஷயங்களை எல்லாம் பட்டியலிட்டு, அவற்றில் முக்கியமான மூன்று விஷயங்கள் இவை என்பதே டாப் 3 என்பதன் பொருள். அலுவலக உரையாடல்களில் இது வெகு சகஜம். இயேசுவும் ஒரு டாப் 2 பட்டியலைச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசி, உன்னைப்போல அயலானை நேசி என்பதே இயேசு சொன்ன டாப் 2 !

சீராக் ஒரு டாப் 3 விஷயத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. கடவுளுக்கு முன்பும் மனிதர்களுக்கு முன்பும் அழகுள்ளவையானவை இந்த டாப் 3 என்கிறது சீராக்.

விவிலியத்தில் உள்ள நூல்களில் வாழ்வியல் யதார்த்தங்களையும், வழிகாட்டுதல்களையும் மிகச் சிறப்பாகத் தருகின்ற நூல்களில் ஒன்றாக சீராக் நூலைச் சொல்லலாம். ஆதித்திருச்சபைபில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு, சங்கீதம் நூலைப் போல மிகப்பிரபலம் பெற்ற ஒரு நூல் இது. தவறான வழிகாட்டுதல்களால் பலராலும் புறக்கணிக்கப்பட்டு வந்தது இந்த நூல். இந்த நூற்றாண்டின் மாபெரும் கண்டுபிடிப்பான கும்ரான் மலைப்பகுதியின், டெட் சீ ஸ்க்ரோல்ஸ் இதன் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்தியது.

இந்த சீராக்கின் டாப் 3, குடும்பத்தின் மைய வட்டமான கணவன் மனைவியரிடையே இருக்க வேண்டிய அன்பு, அடுத்த வட்டமான சகோதரர்களிடையே இருக்க வேண்டிய அன்பு, அதைத் தாண்டிய வட்டமான பிறரோடு இருக்க வேண்டிய அன்பு இவற்றை மையப்படுத்துகிறது.

தனது சகோதர்களை உதாசீனப்படுத்திவிட்டு இறைவனை அன்பு செய்ய முடியாது. சக மனிதரோடு கொள்ள வேண்டிய மனித நேயத்தை மறுதலித்து விட்டு இறைவனை நேசிக்க முடியாது. கணவன் மனைவியரிடையே உள்ள உறவைப் புறக்கணித்து விட்டு இறைவனை அரவணைக்க முடியாது.

பிறரன்பின் மூலமாகவே இறையன்பை சம்பாதிக்க முடியும் என்பதையே சீராக் கூறுகிறது. இறைமகன் இயேசு இறுதித் தீர்வை நாளில் கேட்கின்ற கேள்விகளுக்கான விடை, இந்த அன்புப் பயணத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். மற்றவை எல்லாம் எதிர் கிறிஸ்துவின் பாதைகளே.

மனித நேயம் காப்போம், இறைவனை மகிமைப்படுத்துவோம்.

*