பெரிதோ சிறிதோ எதிலும்
குற்றம் செய்யாதேசீராக் 5 : 15
அலாஸ்கா ஏர்லைன் விமானம் ஒன்று ஜனவரி 2000ல் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த 88 பேரும் கொல்லப்பட்டனர். விமான விபத்தைக் குறித்து விசாரணை நடந்தது. தீவிரமான அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட முடிவு ஆச்சரியமும், அதிர்ச்சியும் கலந்ததாக இருந்தது.
விமானத்திலுள்ள நட்டு போல்டுகளை இணைக்கும் பணி செய்த ஒரு பணியாளர், சரியாக ஒரு போல்டை பொருத்தவில்லை. அது கழன்று விழுந்து விட்டது. அந்த ஒரு சின்னத் தவறு மிகப்பெரிய விமான விபத்துக்கு வழிவகுத்து விட்டது. என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
ஒரு சின்ன பிழை, மிகப்பெரிய விமான விபத்துக்கும், பல உயிர்களின் இழப்புக்கும், பொருளாதார இழப்புக்கும் காரணமாகிவிட்டது பலரை அதிர்ச்சிக்குள் தள்ளியது.
பாவமும் அப்படித் தான். சிறு சிறு பாவங்களை நாம் செய்யும் போதெல்லாம் பாவத்தின் பாதையை சற்று அகலமாக்குகிறோம். பின்னர் பாவத்தின் செயல்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. கடைசியில் வெளியேற முடியாத புதைகுழிப் பாவங்களுக்குள் புதைந்து விடுவோம்.
கப்பலை செலுத்தும் மாலுமி ஒரு சின்ன கோணம் தவறிழைத்தாலும் கூட, கப்பல் செல்ல வேண்டிய இலக்கை விட்டு பல மைல் தூரம் தள்ளிச் சென்று விடும். துவக்கத்தில் சிறிதாய் இருக்கின்ற பாவம், கடவுளை விட்டு நம்மை வெகுதூரத்தில் கொண்டு சென்று விடும்.
குற்றவாளிகளை உண்மை பேச வைக்க ஒரு வழியைப் பின்பற்றுவார்களாம். ஒரு இடத்தில் குற்றவாளியைக் கட்டி வைத்து விட்டு, சொட்டுச் சொட்டாக அவரது தலையில் தண்ணீர் விழும்படு உயரத்தில் ஒரு பானையைத் தொங்க விடுவார்களாம். முதலில் சில்லென சுவாரஸ்யமாய் விழும் தண்ணீர், நேரம் செல்லச் செல்ல சுத்தியலைப் போல கொடூரமாய் இறங்குமாம். வலி தாளாமல் அந்த நபர் உண்மையைச் சொல்லி விடுவாராம்.
பாவமும் அப்படியே, முதலில் சுவாரஸ்யமாய் தோன்றும் பாவம் மெல்ல மெல்ல நமது ஆன்மீக வாழ்க்கையை கோடரி வைத்து வெட்டி வீழ்த்தும். பின்னர் மாபெரும் உன்னத வாழ்க்கையான விண்ணக வாழ்க்கையை நாம் இழக்க வேண்டிய சூழல் கூட உருவாகும்.
உலகையே உலுக்கிய இந்தியாவின் போபால் விஷவாயுக் கசிவினால் சுமார் இருபதாயிரம் பேர் இறந்தார்கள். பல இலட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள். அதற்கான காரணங்களில் ஒன்று ஏற்கனவே சின்னச் சின்ன கசிவுகள் ஏற்பட்ட போது கவனிக்காமல் விட்டது. இன்னொன்று, துயரம் நடந்த அன்று பாய்லர்களின் வெப்ப அளவை கவனிக்காமல் விட்டது. சிறு சிறு பிழைகள். பலியானதோ பல்லாயிரக்கணக்கான உயிர்கள்.
பெரிதோ சிறிதோ எதிலும்
குற்றம் செய்யாதே, எனும் சீராக்கின் வார்த்தைகள் நமக்கு வலுவூட்டட்டும். பாவங்களின் முள்மரங்கள் முளைக்கும் போதே கொய்தெறிவோம், வேர்விட்டபின் பிடுங்க முடியாமல் பரிதவிப்பதை அது தடுக்கும்.
*