Posted in Articles, WhatsApp

கர்வம் என்றால் என்ன ?

ஆண்டவரிடமிருந்து விலகிச்
செல்வதே மனிதருடைய
இறுமாப்பின் தொடக்கம்

சீராக் 10 :12

 

Image result for kite

பட்டம் விடுவது சிறுவர்களுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு. பட்டத்தை எப்படி உயர உயர பறக்க விடலாம் எனும் வித்தை அவர்களுடைய கைகளில் தான் இருக்கிறது. லாவகமாக அவர்கள் சுண்டி இழுக்கும் முறையில் பட்டம் மீண்டும் மீண்டும் விண்ணில் சீறிப் பாயும்.

ஒரு நாள் ஒரு பையன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். பட்டம் வானத்தை நோக்கி மெல்ல மெல்ல விரைந்து கொண்டிருந்தது. மிக உயரத்தை அடைந்த போது பட்டம் கீழே பார்த்தது. பட்டம் விடுகின்ற சிறுவன் தூரத்தில் சின்னப் புள்ளியாய்த் தெரிந்தான். “அட, அவனை விட எவ்வளவோ உயரத்துல நான் இருக்கேன்” என பட்டத்தின் இல்லாத மூளையில் கர்வம் முளைத்தது.

“ஏய் தம்பி… இந்த நூலைக் கட் பண்ணி விடுப்பா, நான் அந்த மேகம் வரைக்கும் போயிட்டு வரேன்” என்றது பட்டம்.

“கயிறைக் கட் பண்ணி நீ மேல போக மாட்டே, கீழ வருவே” சிறுவன் சிரித்தான்.

“காலைக் கட்டிப் போட்டு காமெடி பண்றியா, நான் மேல இருக்கேனா ? நீ மேல இருக்கியா ? இனிமே உன் உதவி எனக்குத் தேவையில்லை” என சொல்லிக் கொண்டே காலை உதறி நூலை அறுத்தது பட்டம்.

அப்படியே வேகமெடுத்து விண்ணில் பாய்ந்தது. “ஆஹா என்ன ஒரு சுகம்” என மெய்மறந்து மிதந்த பட்டத்தை சட்டென புரட்டிப் போட்டது ஒரு காற்று. பட்டம் நிலை குலைந்தது. தலைகீழாய் பூமியை நோக்கிப் பாய்ந்தது. காற்று அதை அங்கும் இங்கும் அலைக்கழிக்க, சற்று நேரத்தில் அது அந்தப் பையனின் அருகே இருந்த ஒரு மரக்கிளையில் குற்றுயிராய்ச் சரணாகதியடைந்தது.

பட்டத்தின் இறுமாப்பு, பட்டம் விடுபவரை விட்டு விலகிச் செல்லத் தூண்டியது. அதுவே அதன் அழிவாகவும் மாறியது.

இப்படித் தான் நாம் பல விஷயங்களில் இறைவனை விட்டு விலகிச் செல்கிறோம். என்னால் செய்ய முடியும், எனக்கு இதில் திறமை இருக்கிறது, இதை நான் வெற்றிகரமாகச் செய்திருக்கிறேன், எனக்கு புலமை இருக்கிறது, வலிமை இருக்கிறது என்றெல்லாம் நாம் நினைக்கும் போது இறைவனை விட்டு விலகிச் செல்கிறோம்.

போர்க்களத்தில் எதிரியின் மார்பைத் துளைப்பது அம்பு தான், ஆனால் வில்லில் வைத்து அதை எய்பவர் ஒருவர் இருக்கிறார். நமது வாழ்வில் நாம் அடையும் பயன்களுக்கெல்லாம் பின்னணியில் இறைவனின் கரம் இருக்கிறது. அதை உணராமல் நடக்கும் போது, விலகிச் சென்ற பட்டம் போல வீழ்ந்து விடுவோம்.

இறைவனின் அருகாமையிலிருந்து விலகிச் செல்ல முடிவெடுத்த லூசிபர், இருளுலகின் இழிமனிதன் ஆனான். இறைவனின் கட்டளையை விட்டு விட்டு முடிவெடுத்த ஏவாள், மனுக்குலத்தில் பாவத்தின் கதவைத் திறந்து விட்டாள். இறைவனின் நட்பை விட்டு விலக நினைத்த யூதாஸ் சிலுவைக்கான சதிகாரனானான். இவையெல்லாம் கர்வம் என்கிறது சீராக்கின் நூல்.

கர்வம் என்றால் என்ன எனும் கேள்விக்கு, இனி மிக எளிமையாய் பதில் சொல்லலாம். “ஆண்டவரை விட்டு விலகிச் செல்வது”. நாம் கர்வமாய் இருக்கிறோமா இல்லையா என்பதை சோதித்தறியும் எளிய வழி, நாம் இறைவனோடு நடக்கிறோமா இல்லையா என்பது தான்.

சீர்தூக்கிப் பார்ப்போம், சீர்செய்வோம்.

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s