Posted in Articles, WhatsApp

பிள்ளைகளை கண்டிக்கலாமா

பயிற்றுவிக்கப்படாத குதிரை
முரட்டுத்தனம் காட்டுகிறது;
கட்டுப்பாடில்லாத மகன்
அடக்கமற்றவன் ஆகிறான்

தம் மகனிடம் அன்பு
கொண்டிருக்கும் தந்தை அவனை
இடைவிடாது கண்டிப்பார்;
அப்போது அவர்
தம் இறுதி நாள்களில்
மகிழ்வோடு இருப்பார்

சீராக் 30 : 8,1

Image result for discipline your children
எனக்கு அப்போது ஐந்து வயது இருக்கும் என நினைக்கிறேன். பக்கத்து வீட்டிலிருந்து நாலணாவை மிக சாதுர்யமாகத் திருடி விட்டேன். என்னுடைய திறமையை நானே மெச்சிக்கொண்டு முதலில் அம்மாவிடம் கொண்டு போய் காட்டினேன்.

“எங்கேயிருந்து எடுத்தே ?” என்று கேட்டார் அம்மா. அப்போது நாலணா என்பது எங்கள் வீட்டில் பெரிய பணம்.

“பக்கத்து வீட்ல இருந்து நைசா எடுத்தேன்”. பெருமிதத்துடன் சொன்னேன்.

பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்து நின்ற எனக்கு பளார் பளார் என ரெண்டு அடி தான் கிடைத்தது. அப்படியே தரதரவென இழுத்துக் கொண்டு போய் அந்த வீட்டில் விட்டார்கள்.

“எங்கேயிருந்து எடுத்தியோ அதே இடத்துல வெச்சுட்டு, மன்னிப்பு கேட்டுட்டு வா” என்றார் அம்மா.

என்னுடைய முதல் உழைப்பு வீணாய்ப் போன விரக்தியிலும், முதல் சம்பளம் பயனில்லாமல் போன ஆதங்கத்துடனும் நான் அதைச் செய்து முடித்தேன்.

அன்றைய அந்த அடியும், திருத்தலும் திருட்டு என்பது தவறு என்பதைப் புரிய வைத்தது. அதற்கான அங்கீகாரம் எனது வீட்டில் கிடைப்பதில்லை என்பதும் புரிந்தது.

எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் என் பெற்றோரிடம் ஒன்றோ இரண்டோ தடவை தான் அடி வாங்கியிருக்கிறேன். அந்த தருணங்களே மிக மிக முக்கியமானவை. அவை தான் என்னை திருத்தியிருக்கின்றன. சரியான பாதைக்குத் திருப்பியிருக்கின்றன.

நான் வகுப்பில் முதல் மாணவனாக வரவில்லை என்பதற்காகவோ, பக்கத்து வீட்டுப் பையனை விட குறைவாக மார்க் எடுத்தேன் என்பதற்காகவோ நான் அடி வாங்கியதில்லை. திருடினேன், கீழ்ப்படியவில்லை போன்ற காரணங்களுக்காக மட்டுமே தண்டனை வாங்கியிருக்கிறேன்.

பிள்ளைகளைத் தண்டித்தும், கண்டித்தும் வளர்க்க வேண்டும் என விவிலியம் நமக்கு பல இடங்களில் வலியுறுத்துகிறது. சீராக்கின் நூலும் அதே சிந்தனையையே பிரதிபலிக்கிறது. “தம் மகனை நன்னெறியில் பயிற்றுவிப்பவர் அவனால் நம்மை அடைவார்” என்றும், “உன் மகனுக்கு நற்பயிற்சி அளி; அவனைப் பயன்படுத்த முயற்சி செய். அப்போது அவனது வெட்கங்கெட்ட நடத்தையால் நீ வருந்தமாட்டாய்” என்றெல்லாம் சீராக் நமக்கு சிந்தனைகளை விதைக்கிறது.

பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்துவது எதை நோக்கி என்பதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தை, குணாதிசயம், ஆன்மிகம் போன்ற இலக்குகளை நோக்கிய திருத்துதல்களே மிக‌ முக்கியம். நாமோ பல வேளைகளில், நமது விருப்பங்களுக்கு ஏற்ப பிள்ளைகள் வளரவில்லையேல் தண்டிக்கிறோம். நமது சுயநலத்துக்கும், நமது ஈகோவின் நிறைவேறலுக்கும் பிள்ளைகள் ஒத்துழைக்க வில்லையேல் கண்டிக்கிறோம். நமது கனவுகளைச் சுமந்து செல்லும் புரவிகளாய் அவர்கள் இல்லையேல் அடிக்கிறோம்.

பிள்ளைகளை கண்டித்தும் தண்டித்தும் வளர்த்துவோம். அது நமது கோபத்தின் வெளிப்பாடாய் இல்லாமல் அன்பின் வெளிப்பாடாய் இருக்கட்டும். அது அவர்கள் நல்லவர்களாகவும், நன்மை செய்பவர்களாகவும், மனிதநேயம் உடையவர்களாகவும் வளரவேண்டும் எனும் நோக்கத்தோடு இருக்கட்டும்.

*
சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s