Posted in Articles, WhatsApp

தருமம் தலை காக்கும்

நீ செய்யும் தருமம் உன்னைச் சாவிலிருந்து விடுவிக்கும்; இருளுலகில் செல்லாதவாறு காப்பாற்றும். தருமம் செய்வோர் எல்லாருக்கும் அது உன்னத இறைவன் திருமுன் சிறந்த காணிக்கையாகிறது.

தோபித்து 4:10

( இணை திருமறைகள் )

Image result for helping poor

தோபித்து நூல் தருமம் செய்வதைப் பற்றி அதிகமாகப் பேசுகிறது. பெறுதலை விட அதிகமாய் கொடுத்தலை அது ஊக்கப்படுத்துகிறது. தருமமானது சாவிலிருந்து காப்பாற்றும் எனவும், அதுவே இறைவனுக்கு கொடுக்கும் சிறந்த காணிக்கை என்றும் தோபித்து நூல் புரிய வைக்கிறது.

‘கொடுங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்றார் இயேசு. பொழியாத மேகத்தால் பயனேதும் இல்லை. அது பொழியும் போது தான் நிலத்துக்கு ஈரம் கிடைக்கிறது, பூமிக்கு நீரும் கிடைக்கிறது. மேகத்தால் ஈரப்பதத்தைச் சேர்த்துக் கொண்டே இருக்க முடியாது. அழகான வெள்ளை மேகம் நீர் சேரச் சேர கருமை நிறமாகிறது. ஈரம் இருக்கின்ற மேகத்தில் தான் மின்னல்களும் இடிகளும் தொட்டுச் செல்கின்றன.

பொழிகின்ற மேகம் தனது மனதின் பளுவை இறக்குகிறது. தனது கருமை நிறத்தைக் கழற்றி வைக்கிறது. பிறருடைய உதடுகளில் புன்னகையை ஏற்றி வைக்கிறது. மொத்தத்தில் பொழியாத மேகத்தை யாரும் அழைப்பதில்லை. பொழிகின்ற மேகத்தை யாரும் வெறுப்பதில்லை.

இறைவன் மேகத்தை உயரத்தில் வைத்திருப்பதன் காரணம், கீழே உள்ள பூமிக்கு நீரை இறக்குமதி செய்யத் தான். நம்மை இறைவன் உயரத்தில் வைக்கிறாரெனில் அதன் காரணம், நமக்குக் கீழே இருக்கும் மக்களுக்கு உதவி செய்யத் தான். இரக்கம் இல்லாத இதயம் இறக்கும்.

ஏழை இலாசரும், பணக்காரச் சீமானும் கதையில் இயேசு சொல்கின்ற செய்தி ஒன்றே ஒன்று தான். நீ ஏழைக்கு இரக்கம் காட்டாவிடில் விண்ணகத்தில் உனக்கு இரக்கம் காட்டப்படாது.

கடன்பட்டோன் உவமையில் இயேசு சொல்வதும் ஒன்றே ஒன்று தான். இறைவன் உனது மிகப்பெரிய கடன்களை தள்ளுபடி செய்கிறார். நீயும் அதே இரக்கத்தை பிறருக்குக் காட்டவேண்டும்.

அயலான் உவமையில் இயேசு சொல்வதும் ஒன்றே ஒன்று தான். ஆலயத்தில் பூஜை செய்வதை விட மிக முக்கியம் தேவையில் இருக்கும் ஒருவனுக்கு உதவுவது தான்.

நமது சிந்தனை எதில் இருக்கிறது. பிறருதவிப் பணிகளில் நமது மனம் ஆர்வமாய் இருக்கிறதா ? செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசம் என்கிறது பைபிள், நமது விசுவாசம் உயிர்ப்புடன் இருக்கிறதா ?

ஒன்றை மட்டும் நினைவில் கொள்வோம். இறுதித் தீர்வை நாளில் இறைவன் சொல்லப் போகும் ஒரே வார்த்தை, “ஏழை எளியோருக்கு நீ எதையெல்லாம் செய்தாயோ அதையெல்லாம் எனக்கே செய்தாய்”. இறைவனை நாம் நிராகரித்தோமா இல்லை அரவணைத்தோமா என்பது அப்போது தெரியும். இப்போதே விழிப்பாய் இருப்போம், விழாமல் நடப்போம்.

*

Posted in Articles, WhatsApp

கொடு

உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு; சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு; ஆனால் தருமம் செய்யத் தயங்காதே

தோபித்து 4:8
( இணை திருமறைகள் )

Image result for helping the poor

எனது பால்ய கால கிராமத்தில் நிறைய பலா மரங்கள் உண்டு. ஏகப்பட்ட பலாப் பழங்களை கிளைகளெங்கும் சுமந்தபடி அவை காட்சியளிக்கும். சில பலா மரங்களில் கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் நெருங்கிச் சென்று பார்த்தால், பூமிக்கு வெளியே தெரியும் அதன் வேர்களில் பலாப்பழம் காய்த்திருக்கும்.

பாட்டி சொல்வார், “வேணும் சக்க வேரிலயும் காய்க்கும்” என்று. அதாவது காய்க்க வேண்டும் என முடிவெடுத்தால் பலாப்பழம் வேரில் கூட காய்க்கும். காய்க்க வேண்டாம் என முடிவெடுத்தால் கிளைகளில் கூட காய்க்காது. காலங்கள் கடந்தபின்னும், பாட்டி மறைந்தபின்னும் அந்த சக்க பழமொழி மட்டும் இன்னும் நெஞ்சில் நிலைக்கிறது.

நிறைய பணம் உள்ளவன் அள்ளி அள்ளிக் குடுப்பான், நம்ம கிட்டே என்ன இருக்கு குடுக்கிறதுக்கு ? என புலம்பும் பலரைப் பார்த்திருப்போம். உதவும் மனமின்மையை சாக்குப் போக்குக்குள் புதைத்து நடக்கும் மனநிலை இது. காரணம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலை அல்ல, கொடுப்பதற்கு மனம் இல்லாத நிலை.

கொடுக்க வேண்டும் எனும் சிந்தனை மட்டும் இருந்தால் போதும், கொடுப்பதற்கான பொருள் நம்மைத் தேடி வரும் என்பது தான் உண்மை. இருப்பதில் கொடு எனும் சிந்தனையை தோபித்து நூல் நமக்குச் சொல்கிறது. ‘இது இருந்தால் தான் கொடுப்பேன் என்பது எதிர் சிந்தனை, எது இருந்தாலும் கொடுப்பேன் என்பது விருப்பச் சிந்தனை’. கொடுக்கும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நிறைய செல்வம் இருந்தால் நிறைய கொடுக்கலாம், கொஞ்சமே கொஞ்சம் செல்வம் மட்டுமே இருந்தால் அதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாம். எப்படியானாலும் கொடுத்தேயாகவேண்டும் என்பதையே இந்த இறை வார்த்தைகள் விளக்குகின்றன.

கொடுக்கும் அளவை இறைவன் பார்ப்பதில்லை. ஏழை விதவையின் இரண்டு காசு தான் இறைவன் பார்வையில் முதல் பரிசைப் பெற்றது. இறைவன் கொடுக்கும் பொருளை நிறுத்துப் பார்ப்பதில்லை, கொடுக்கும் இதயத்தை நிறுத்துப் பார்க்கிறார். அதற்கு நாம் சேமிக்க வேண்டியது செல்வத்தையல்ல, கொடுக்க வேண்டும் எனும் மனநிலையை.

நமது வேண்டுதல்கள் “பொருட்களைக் கொடும் இறைவா” என்பதை விட, கொடுக்கும் மனதைக் கொடுப்பாய் இறைவா என்றிருந்தலே சிறப்பானது. அது தான் நம்மை விண்ணகத்தின் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

வாய்க்காலில் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை விட, அது வயலுக்குச் செல்கிறதா என்பதையே முதலில் விவசாயி பார்ப்பான். அணைகளில் தேங்கும் ஆயிரம் அடி தண்ணீரை விட, வயல்களில் பாயும் நாலு குடம் தண்ணீர் தான் முக்கியமானது.

சேமித்தபின்பே செலவழிப்பேன் எனும் சிந்தனை ஆபத்தானது. களஞ்சியங்களை இடித்துப் பெரிதாக்குவதை விட, இதயத்தின் சுவர்களை விசாலமாக்குவதே அவசியமானது.

இருப்பதைக் கொடுப்போம்
இருப்பதில் கொடுப்போம்.

அதுவே இறைவாக்கு, அதை நீ நிறைவாக்கு !

*

Posted in Articles, WhatsApp

ஆசை நல்லது

உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.

தோபித்து 4:16
( இணை திருமறை )

Image result for give to poor

உலக மக்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்கள் பூமியில் உண்டு. ஆனால் ஒரே ஒரு மனிதனின் பேராசையைத் திருப்தியாக்கும் பொருட்கள் இல்லவே இல்லை என்பார்கள். மனிதனுடைய ஆசையே பாவத்தின் காரணம் என்கிறது புத்த சித்தாந்தம்.

ஆசை வைப்பதில் தவறே இல்லை.
பேராசை கொள்வதிலும் தவறேதும் இல்லை.

ஆனால் எதன் மீது ஆசை வைக்கிறோம், எதன் மீது பேராசை வைக்கிறோம் என்பதில் தான் சரியும், தவறும் பிரித்தெடுக்கப்படுகின்றன.

ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டே இருக்கவேண்டும் எனும் ஆசை அன்னை தெரசாவிடம் கொழுந்து விட்டு எரிந்தது. அதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து மன மகிழ்வுடன் செய்தார்.

தேவைப்படும் மக்களுக்கு புதுமைகள் செய்ய வேண்டும் எனும் ஆசை புனித அந்தோணியாரிடம் நிரம்பியிருந்தது. கட்டுப்பாடுகளையும் மீறி அவர் இறைவனின் அருளை பிறருக்கு வழங்கிக் கொண்டிருந்தார். கோடி அற்புதர் என புகழப்பட்டார்.

நற்செய்தி அறிவிக்க வேண்டும் எனும் தாகம் வீரமாமுனிவர் என அழைக்கப்பட்ட ராபர்ட் டி நொபிலியிடம் எக்கச்சக்கமாக இருந்தது. அதற்காக கடும் உழைப்பைச் செலுத்தி பல மொழிகள் கற்று, பல நூல்கள் இயற்றி தென்னிந்தியாவில் மிகப்பெரிய நற்செய்திப் பணியைச் செய்தார்.

ஆசை வைப்பதில் தவறில்லை, எதன் மீது ஆசை வைக்கிறோம் என்பதே முக்கியம்.

கொடுத்துக் கொண்டே இருப்பதில் தான் கிறிஸ்தவம் அடங்கியிருக்கிறது. இறைவனுடைய வார்த்தையை, இறைவனுடைய வல்லமையை, இறைவன் தந்த வளங்களை என, எதையெல்லாம் பிறருக்குக் கொடுக்கிறோமோ அதுவே நமக்கான சேமிப்பாய் இருக்கிறது. எதையெல்லாம் சேமிக்கிறோமோ, அதெல்லாம் நமக்கான இழப்பாய் இருக்கிறது.

விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைக்கச் சொன்னார் இறைவன். அது பிறருக்காகச் செலவழிக்கும் அன்பில் தான் இருக்கிறது. தோபித்து நூல் சொல்லும் அறிவுரை நமக்குப் புதிதல்ல. இந்தக் கேள்வியே விண்ணக நுழைவாயிலில் நம்மிடம் கேட்கப்படும் !

விண்ணக சேமிப்பு என்பது
மண்ணக செலவழிப்பு !

ஏழைகளுக்கு இரங்குவோம், மனம் கோணாமல் ஆனந்தமாய் உதவுவோம். வாழ்வின் நூலில் நம் பெயர் அழுத்தமாய் எழுதப்படும்.

*

Posted in Articles, Sunday School

கட்டுரை : அன்பே பெரியது

விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது;
இவைகளில் அன்பே பெரியது

Image result for Love poor

முன்னுரை :

கிறிஸ்தவத்தின் மையம் அன்பே. இயேசுவின் போதனைகள் எல்லாமே அன்பின் அடிப்படையிலானவை. எனவே அன்பை விலக்கி விட்டு இயேசுவின் போதனைகளை நாம் நிறைவேற்றவே முடியாது. அன்பை விலக்கி விட்டு கிறிஸ்தவன் என அழைத்துக்கொள்ளவே முடியாது. ஏன் அன்பு முக்கியமானது ?

இயேசுவே அன்பு :

“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்கிறது பைபிள் ( 1 யோவான் 4:8 ).இயேசுவே அன்பு என்கிறது பைபிள். இயேசுவை விடப்பெரியவர் எவரும் இல்லை என்பது நாம் அறிந்ததே. அன்பாய் இருக்கிற தேவன் பெரியவராகிறார். எனவே அன்பே எல்லாவற்றையும் விடப் பெரியதாகிறது.

இயேசுவின் போதனை அன்பே.

இயேசு திருச்சட்டத்தை சுருக்கி இரண்டு கட்டளைகளாகக் கொடுத்தார். அவை இரண்டுமே அன்பு சார்ந்தவையே. இதைத் தாண்டி எதுவுமே இல்லை என்றார் இயேசு. அவை “எல்லாவற்றையும் விட அதிகமாய் கடவுளை அன்பு செய்வதும், தன்னைத் தான் நேசிப்பதைப் போல அடுத்தவரை அன்பு செய்வதுமே. இயேசுவின் போதனையான அன்பே எல்லாவற்றையும் விடப் பெரியது.

இயேசுவின் வருகை அன்பே.

இயேசுவின் வருகையின் நோக்கம் மானுடத்தின் மீட்பு. மனிதர்கள் அழிவுறக் கூடாது எனும் அன்பே அவரது வருகைக்குக் காரணம். அதற்காகவே அவர் மனிதனாக மண்ணில் வந்தார். தொழுவத்தில் பிறந்தார். அந்த அன்பே நம்மை விண்ணக வாழ்வுக்கு சொந்தமாக்குகிறது. அந்த அன்பே பெரியது.

இயேசுவின் வாழ்க்கை அன்பே

இயேசுவின் வாழ்க்கை முழுவதும் அன்பினால் நிரம்பியிருக்கிறது. இயேசு பாவிகளை அன்பு செய்தார், நோயாளிகளை அன்பு செய்தார், ஒதுக்கப்பட்டோரை அன்பு செய்தார். ஏன், சிலுவையில் தொங்கியபடி எதிரிகளைக் கூட அன்பு செய்தார். இயேசுவின் வாழ்க்கையே நமக்கு வழிகாட்டி. அது அன்பையே பெரிதென்கிறது.

இயேசுவின் மரணம் அன்பே

இயேசுவின் சிலுவை மரணம் அன்பின் உயர்நிலை. நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு இல்லை என்றார் இயேசு. வெறும் வார்த்தையில் மட்டுமல்லாமல் செயலிலும் செய்து காட்டினார். அன்பிற்காக உயிரையும் கொடுக்கவேண்டும், காரணம் அன்பே பெரிது என்கிறது இயேசுவின் மரணம்.

விண்ணக சாவி அன்பே

அன்பு இல்லாதவர்கள் விண்ணக வீட்டுக்குள் நுழைய முடியாது. இறுதித் தீர்வை நாளில் இயேசு கேட்பது ஏழைகளுக்கு உணவளித்தாயா, உடையளித்தாயா, பாதுகாத்தாயா, ஆறுதல் அளித்தாயா என்பதைத் தான். சுருக்கமாக அன்பை அளித்தாயா என்பது தான். அன்பை அளிக்காதவர்கள் அழிவார்கள். அன்பு எத்தனை முக்கியம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இயேசுவைப் பின்பற்றுதல் அன்பே

இயேசுவுக்காக எத்தனையோ பேர் இரத்த சாட்சிகளாய் உயிர்நீத்திருக்கிறார்கள். அவர்களிடம் அன்பு நிரம்பியிருந்தது. கிரகாம் ஸ்டெயின்ஸும் அவரது இரண்டு பிள்ளைகளும் படுகொலை செய்யப்பட்டனர். அந்த சூழலிலும் அவரது மனைவி அன்பையே போதித்தார். அன்னை தெரசாவின் பணி அன்பை மட்டுமே சார்ந்திருந்தது. இயேசுவுக்காக தலை குனிந்து கழுத்து வெட்டுண்ண ஜான் பிரிட்டோ போல ஏராளமானோர் அன்பை செயலில் காட்டியிருக்கின்றனர்.

முடிவுரை

மொத்தத்தில் அன்பை கழித்து விட்டுப் பார்த்தால் கிறிஸ்தவ வாழ்க்கை அர்த்தமிழக்கிறது. அயலான் யார் எனும் உவமையில் இயேசு சொல்வது என்னவெனில், இறைவனைத் தொழுவதை விட அயலானுக்கு உதவுவதே முதன்மையானது என்று. எனவே அந்த அன்பை இதயத்தில் கொள்வோம். அன்பான இறைவனைப் போல மாற நம் வாழ்க்கையை அமைப்போம்.

Posted in Articles, Sunday School

பட்டிமன்றம் : சீடனாவதா ? நற்செய்தி அறிவிப்பதா ? எது முக்கியம்

டிசைப்பல்ஸ்

Image result for disciple and evangelist

1. இயேசு “என்னைப் பின்பற்றி வா” என்றார். பவுல், “நான் இயேசுவைப் பின்பற்றியதைப் போல நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்” என்றார். இயேசு சொன்னது, பின்பற்ற ! அதுவே முதன்மையானது.

2. கனிகளினால் உங்களை அறிந்து கொள்வார்கள் என்றார் இயேசு. அவர் எதிர்பார்ப்பது கனிகொடுக்கும் வாழ்க்கையை. வார்த்தைகளை அல்ல.

3. உலகெங்கும் சென்று எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள் என்றார் இயேசு. விதைத்துக் கொண்டே இருப்பதில் பயனில்லை, அது கனிகொடுக்கிறதா என்பதைப் பார்ப்பதே சீஷத்துவப் பணி.

4. இறுதித் தீர்வை நாளில் இயேசு சொன்னதை ரிவைன்ட் பண்ணி பாருங்கள். அதில் எங்கும் “பிரசங்கம்” இடம்பெறவில்லை. செயல்களே இடம்பெற்றிருக்கின்றன. அதுவே டிசைப்பல்சிப்

5. என்னை நோக்கி ஆண்டவரே ஆண்டவரே என்று சொல்பவனெல்லாம் விண்ணகம் சேர்வதில்லை. தந்தையின் விருப்பப்படி “செய்பவனே” சேர்வான் என்றார் இயேசு. வெறும் வார்த்தைகளால் அறிவித்தல் பயனில்லை

6. உங்களை மனிதரைப் பிடிப்போராக்குவேன் என்று தான் இயேசு சொன்னார். அதுவே அவரத் விருப்பம். மனிதருக்கு உரைப்போராக்குவேன் என்றா சொன்னார்.

7. என் ஆடுகளை மேய், என் ஆடுகளைக் கண்காணி, என் ஆடுகளை பராமரி என்று தான் இயேசு சொன்னார். என் ஆடுகளுக்கு பாடம் சொல்லிக் கொடு என்று சொல்லவில்லை.

8. திருச்சட்டத்தை இரண்டு கட்டளையாக்கியபோது இயேசு என்ன சொன்னார் ? கடவுளை நேசி, மனிதனை நேசி. அது தான் அடிப்படை. கடவுளை பூஜி, மனிதனுக்கு போதி என்று சொல்லவில்லை.

9. தான் நலமாக்கிய மனிதர்களிடம் இயேசு பொதுவாய் சொல்லும் வார்த்தை, “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்பது தான். தொழுநோயாளிகள் நலம்பெற்ற போது ‘போய் காணிக்கை செலுத்து’ என்றார். செல்வந்தனான இளைஞனிடம் எல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு என்றார். செயல்களே பிரதானம்.

10. அதெல்லாம் இருக்கட்டும். இயேசுவின் மிகப்பெரிய போதனையே மலைப்பிரசங்கம் தான். அதில் எங்கே நற்செய்தி அறிவித்தல் இருக்கிறது. அதில் இருப்பதெல்லாம் சீடராகும் பணி தான்.

11. இயேசு ஒரே ஒரு இடத்தில் தான் “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள் (மார்க் 16:15)” என்கிறார். வரலாற்றுத் தகவல்களின் படி மார்க் 16ம் அதிகாரம் 9 முதல் 20 வரையிலான வசனங்கள் சில முக்கியமற்ற கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.

12. ஒரு விஷயம் முக்கியம் எனக் கருதினால் இயேசு அதை திரும்பத் திரும்பச் சொல்வார். அஞ்சாதீர்கள் என்பதைக் கூட பலமுறை சொன்னவர் அவர். சீடராவதன் தேவையை பல இடங்களில் சொன்னவர் ஒரே ஒரு இடத்தில் மட்டும் நற்செய்தியை அறிவிக்கச் சொன்னார். இதிலிருந்தே புரிந்திருக்கும்…

13. இயேசு தனது பணிநாட்களில் பன்னிரண்டு பேரைத் தெரிந்தெடுத்தார். அவர்களோடு வாழ்ந்து அவர்களை சீடர்களாக்கினார். அவர்களை கூப்பிட்டு நாலு கிளாஸ் எடுத்துட்டு அனுப்பல. இயேசுவைப் போல வாழவேண்டுமெனில் அவர் காட்டிய டிசைப்பல்ஷிப்பை நாம் செயல்படுத்த வேண்டும்.

14. பவுலின் பயணங்களைப் பார்த்தால் அவர் எல்லா இடங்களிலும் தங்கி போதித்து மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். சீடர்களாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். அவர் சும்மா துண்டுப்பிரசுரம் வினியோகித்துக் கொண்டே நடக்கவில்லை.

15. இயேசுவின் போதனையான அன்பு, போதனையில் வரவே வராது. அது செயலில் தான் வரும். அது சீடராக மாறுவதில் தான் வரும்.

16. தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையைச் சுமந்து கொண்டு வருவது சீடத்துவம். வெறும் வார்த்தையைச் சுமப்பதில் அர்த்தமில்லை

நற்செய்தி அறிவித்தலே முக்கியம்.

Image result for disciple and evangelist

1. இது இயேசு கொடுத்த கட்டளை. உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்பது. அதைத் தான் செய்கிறோம்.

2. இன்றைய டிஜிடல் உலகில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், யூடியூப் நிகழ்ச்சிகள், பத்திரிகைகள் எல்லாம் நற்செய்தி அறிவிக்கும் பணியைத் தான் செய்கின்றன. சீடர்களாக மாற்றும் பணியே முக்கியமென்றால் இவற்றையெல்லாம் இழுத்து மூட வேண்டியது தான்.

3. இயேசு திரளான மக்களைக் கண்டு பிரசங்கம் பண்ணினார் என்பதை எத்தனை இடங்களில் வாசிக்கிறோம். மலையில் இருந்து பிரசங்கம் பண்ணினார், படகில் இருந்து பிரசங்கம் பண்ணினார், நடந்து கொண்டே பிரசங்கம் பண்ணினார், ஏன் சிலுவையில் இருந்து கூட மன்னிப்பின் பிரசங்கம் பண்ணினார். இவையெல்லாம் நற்செய்தி அறிவித்தல்தானே தவிர சீடத்துவ பணி அல்ல.

4. ஒருவனுக்கு வாசலைக் காட்ட முடியுமே தவிர, அவனை அதற்குள் வலுக்கட்டாயமாய்த் திணிக்க முடியாது. நற்செய்தி அறிவிப்பது ஒருவருக்கு வாசலைக் காட்டுவது போல. நற்செய்தி அறிவித்தல் என்பது வயலில் விதைப்பதைப் போல. அதுவே அடிப்படை.

5. நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றார் இயேசு. என்வழியாய் அன்றி யாரும் தந்தையிடம் வருவதில்லை என்றார். அந்த செய்தியை அறிவிக்காமல் எப்படிப் புரிந்து கொள்வது ?

6. இதை இயேசு மட்டும் கட்டளையாய்க் கொடுக்கவில்லை, அப்போஸ்தலர்களும் கட்டளையிடுகின்றனர் ( 2 திமோ 4,5 ல் ). அந்த நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் போதகனாகவும் நான் ஏற்படுத்தப்பட்டுள்ளேன் என்கிறார் பவுல்.

7. சோர்ந்து போயிருப்பவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்க டிசைப்பல்ஷிப் அல்ல, எவாஞ்சலிசமே வேண்டும். அவர்களுடைய சோகத்தையும், கவலையையும் துடைக்க இயேசுவின் அன்பு வார்த்தைகளே வேண்டும்.

8. எங்கே இரண்டு மூன்று பேர் என் பெயரால் கூடி வருகிறார்களோ அவர்கள் மத்தியில் நான் இருப்பேன் என்றார் இயேசு. தனியே சீடனாக இருப்பதை விட, முக்கியம் நம்மிடையே இயேசுவை இருக்க வைப்பது. அதற்கு எவாஞ்சலிசம் தேவையாகிறது.

9. இறைவார்த்தைகளின் பொருளை விளக்க வேண்டுமெனில் எவாஞ்சலிசமே தேவை. அது இல்லையே மறைபொருளின் உண்மைகள் மறைந்தே கிடக்கும்.

10. உலக மாந்தர்களையெல்லாம் இணைப்பது நற்செய்தி அறிவித்தல் தான்.

11. பல வேளைகளில் இயேசு யார் என்பதை மக்களுக்குப் புரியவைக்க வேண்டுமெனில் நமக்கு நற்செய்தி அறிவித்தல் தான் தேவைப்படுகிறது. சீடனாக வாழ்வதை வைத்து நற்செய்தியைப் புரிந்து கொள்ள முடியாது.

12. விண்ணக அரசு நெருங்கிவிட்டது என்பதை அறிவியுங்கள் என்றார் இயேசு. அதை அறிவிப்பதே நமது தலையாய பணி.

13. சிறையில், மருத்துவமனைகளிலெல்லாம் நற்செய்தி அறிவித்தல் நடக்கிறது. மக்கள் மனம் திரும்புகிறார்கள். அங்கே போய் சீடத்துவத்தை கத்து கொடுக்க முடியுமா ?

14. சென்டினல் தீவுக்கு ஒருத்தர் போனாரே.. அவரோட அர்ப்பணிப்புக்கு காரணம் எவாஞ்சலிசம்

15. ஆன்மாவைக் கொல்வோருக்கு அஞ்சுங்கள் என்று சொன்னார் இயேசு. அதை பிறருக்கு எபப்டி அறிவிப்பது ? நரகம் பற்றி வாழ்ந்தா காட்ட முடியும். அறிவிக்க தான் முடியும்.

16. பிறரன்பை எப்படி வெளிப்படுத்துவது ? அவர்கள் நரகம் போகாமல் காத்துக் கொள்வதில் தானே ? அதற்கு நாம் நற்செய்தி தானே அறிவிக்க வேண்டும்

17. நன்மை செய்யத் தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் பாவம். மக்களை சுவர்க்கத்தில் சேர்க்கும் வழி தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் இருப்பது பாவம்.

18. நற்செய்தி அறிவிக்க வேண்டுமெனில் நாம் முதலில் நற்செய்தியை அறிய வேண்டும். ஒரு வகையில் நற்செய்தி அறிவித்தல் நமது நற்செய்தி ஆர்வத்தை அதிகரித்து நாம் நற்செய்தி கற்க வழிவகுக்கும்.

19. பைபிளே எழுதப்படாமல்,நற்செய்தியே அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்று நம்மில் யாருக்காவது தெரிந்திருக்குமா ? சீஷத்துவம் எத்தனை நூற்றாண்டு கடந்து நமக்கு விளக்கும் ?