Posted in Articles

குறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ

ஜான் பிரிட்டோ

காட்சி 1

( ஜானின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர் )

Image result for st john britto

அப்பா : சரி.. நான் மறுபடியும் சொல்றேன்…. ஏற்கனவே பல தடவை பேசினது தான் நம்ம ஜானோட போக்கே சரியில்லை.

அம்மா : நீங்க சும்மா சும்மா அவனை கரிச்சு கொட்டிட்டே இருக்கீங்க. அவன் இப்போ எவ்வளவு அமைதியா இருக்கான் தெரியுமா ?

அப்பா : அமைதியா இருக்கான்..இல்லேன்னு சொல்லல… ஆனா அவன் நடவடிக்கை இப்போ சரியில்லை.. சொல்றது உனக்கு புரியுதா இல்லை ? புரியாத மாதிரி நடிக்கிறியா ?

அம்மா : சின்ன வயசிலயே சாகக் கிடந்த பையன் அவன். அவன் நல்லா இருக்கணும்ன்னு நாம பண்ணாத பிரார்த்தனை இல்லை. இப்போ தான் கொஞ்சம் பொழைச்சு வந்திருக்கான். கொஞ்சம் அமைதியா இருங்க.

அப்பா : பொழச்சு வந்தது சந்தோசமான விஷயம் தான். ஆனா பழசை எல்லாம் மறந்துட்டு வந்திருக்கான்ல அது தான் குழப்பமா இருக்கு.

அம்மா : எதை மறந்தான்னு சொல்றீங்க ? கடவுள் கிட்டே அதிகமா நெருங்கியிருக்கான். டெய்லி பைபிள் வாசிச்சு செபம் பண்றான். தியானம் பண்றான். கடவுளோட மனிதர்களைப் பற்றி அதிகமா சிந்திக்கிறான். அவன் எதையுமே மறக்கலையே.

அப்பா : நான் அதைச் சொல்லல. நீ பாட்டுக்கு அவனுக்கு காவி டிரஸ் போட்டு விட்டே. இப்போ காவியையும் போர்த்திட்டு தான் எல்லா இடத்துலயும் அவன் சுத்தறான். ஒரு டிரஸ்ல என்ன இருக்கோ தெரியல.

அம்மா : கண்ணியமான டிரஸ் போடறது நம்ம மனசோட அடையாளம். அகத்தின் அழகு ஆடையில் தெரியும்ன்னு நிச்சயமா சொல்லலாம். அவன் உடுத்தர காவி ஒரு தாழ்மையின் அடையாளம். பிரான்சிஸ் சேவியரோட பணியில ரொம்ப ஈடுபாடு காட்டறான். அதனால தான் காவி போடறான்.

அப்பா : இதெல்லாம் எனக்குப் புடிக்கல… அவனை பழையபடி நார்மலாக்கணும். சாதாரண டிரஸ் போட வைக்கணும். பழைய நண்பர்களோட எல்லாம் பழக வைக்கணும்.

அம்மா : அதெல்லாம் முக்கியமில்லைங்க.. பையன் நல்லா இருக்கான், நல்லவனா இருக்கான். அது போதாதா ?

அப்பா : நீ என்ன பேசறே. அரச குலத்துப் பையன் அவன். நான் பிரேசில்ல ஆளுநரா இருந்தவன். இவன் என்னடான்னா அரச குல மக்கள் கூட ஒரு டச்சும் வைக்கிறதில்ல இப்போ. அவனோட நெருங்கிய நண்பன் இளவரசர் டான் பேட்ரோ வை இப்போ போய் பாக்கறதே இல்லை. போர்ச்சுகல்லுலயே நம்ம பெயரை கெடுக்கறான் அவன். வயசு பதினைச்சு தான் ஆவுது, அதுக்குள்ள ஆன்மீகப் பள்ளில சேர்ந்து பட்டம் படிக்கிறான்… இதெல்லாம் நமக்குத் தேவையா.

அம்மா : சும்மா சும்மா பையனை குற்றம் சொல்லாதீங்க.அவனுக்கு ஆன்மீகம் புடிக்கும்ன்னா,அவன் ஆன்மீகம் படிக்கட்டும். அவனுக்குப் பிடிச்சதை செய்யட்டும், தப்பான எதையும் செய்யலையே.

( அப்போது ஜான் உள்ளே வருகிறான் )

ஜான் : அம்மா… என்னம்மா.. ஏதோ சீரியஸா பேசிட்டிருக்கீங்க போல

அப்பா : ஆமாடா.. உன்னைப் பத்தி தான் பேசிட்டிருந்தோம். உன்னோட போக்கைப் பற்றி தான் புலம்பிட்டிருந்தேன்.

ஜான் : நான் போறது உங்களுக்குத் தெரியுமா ?

அம்மா : எங்கே போறதுடா ?

ஜான் : நான் இந்தியா போலாம்ன்னு இருக்கேம்மா..

அப்பா : என்னது ? இந்தியாவா ? காமெடி பண்றியா ?

ஜான் : பிரான்சிஸ் சேவியர் இந்தியா போய் ஊழியம் செஞ்சவரும்மா.. அவரை மாதிரி நானும் இந்தியா போய் ஊழியம் செய்யப் போறேன்.

அம்மா : என்ன விளையாடறியா ? இந்தியா போறது ஒன்வே மாதிரி. அங்கே ஊழியத்துக்கு போறவங்க திரும்பி வரதில்லை. உன்னை அங்கேயெல்லாம் அனுப்புவேன்னு கனவுலயும் நினைக்காதே

அப்பா : அப்பாடா.. இப்போ தான் பையனை கொஞ்சம் எதிர்த்து பேசறே. ஓவரா செல்லம் கொடுத்துக் கொடுத்து அவனை கெடுத்துட்டே.

ஜான் : அம்மா… ரொம்ப எமோஷன் ஆகாதீங்க. சாகக்கிடந்த எனக்கு உயிர் கொடுத்தது கர்த்தர். அவருக்கான பணியில நான் இருக்கணும்ன்னு தானே காவி உடுத்தி அழகு பாத்தீங்க ! நான் இப்போ குருப்பட்டமும் வாங்கிட்டேன். இனி பணி செய்ய வேண்டியது தானே.

அம்மா : நீ பணி செய்.. வேண்டாம்ன்னு சொல்லல. இங்க பக்கத்துல பண்ணு. உன்னை நாங்க பாத்துட்டே இருக்கணும். அதுக்காகத் தாண்டா அவ்ளோ அழுது அழுது செபம் பண்ணினேன். சும்மா சுகமாக்கி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கவா !

ஜான் : அம்மா.. சாமுவேலோட வாழ்க்கையைப் பாருங்க. குழந்தையைக் கொடுத்த கடவுளுக்கே குழந்தையை அர்ப்பணம் செய்தாங்க .. இங்கேயும் அதே தானே. உயிரைக் கொடுத்த இறைவனுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாரா இருக்கணும்ல.

அம்மா : உன் பேச்சுக்கு மயங்கி உன்னை அனுப்பிடுவேன்னு மட்டும் பகல் கனவு காணாதே. நீ எங்கேயும் போக மாட்டே. போகவும் விடமாட்டேன். அதுக்காக நான் என்ன வேணும்ன்னாலும் பண்ணுவேன்.

ஜான் : (அம்மாவை அணைத்துக் கொண்டு ) அம்மா.. நான் எங்கே இருந்தாலும் இயேசுவோட இணைஞ்சு இருக்கிறவரை நாம எல்லாருமே ஒரு கொடியின் கிளைகள் தான். பிரிவுங்கறதே இல்லை. கவலைப்படாதீங்கம்மா…

அப்பா : நல்லா பேச கத்துகிட்டே.. அப்பா அம்மா சொந்தக்காரங்க மேல இருந்த அன்பு மட்டும் போச்சு உனக்கு.

ஜான் : அப்பா.. இப்போ தான் எனக்கு அன்பு அதிகமாயிருக்கு. உங்களுக்காக அதிகம் செபிக்கிறேன். என்னை உருவாக்கி, பணிக்கு தயாராக்கிய உங்களுக்கு நான் என்னிக்குமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். என்னை நீங்க ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினா தான் எனக்கு சந்தோசமா இருக்கும்.

அம்மா : ஆனாலும் என்னால ஒத்துக்க முடியலைடா…

ஜான் : அம்மா.. பிரான்சிஸ் சேவியர் கால்பதித்த தமிழக மண்ணுக்கு நான் போறேன். இது எவ்வளவு பெரிய விஷயம். “ஒருவன் உலகமெல்லாம் ஆதாயமாக்கினாலும் தன் ஆத்மாவை இழந்து போனால் என்ன பயன்” ங்கற ஒரு வசனம் சேவியரை மாத்திடுச்சு.. அவரோட வாழ்க்கை என்னை மாத்திடுச்சு.. இறை பணியை தடுக்காதீங்கம்மா..

( அம்மாவும், அப்பாவும் அமைதியாய் இருக்கின்றனர் )

ஜான் : நன்றிம்மா… நீங்க எனக்கு எப்பவுமே சப்போர்ட் பண்ணுவீங்கன்னு தெரியும்.

காட்சி 2

( ஜான் மதுரையில் இருக்கிறார், இரண்டு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார் )

 

Image result for st john britto

ந 1 : ஜான் நீங்க இந்தியா வந்து கொஞ்ச நாள் ஆயிடுச்சு.. இந்த குறுகிய காலத்துலயே தமிழை கத்துகிட்டீங்க. அடுத்து என்ன செய்யப் போறீங்க ?

ஜான் : தமிழைக் கத்துக்காம தமிழ்நாட்ல நாம ஒண்ணும் பண்ண முடியாது. என்னோட பெயரையும் நான் அருளானந்தர் ந்னு மாற்றிட்டேன். ஜான்ங்கறது வெளிநாட்டுப் பேரு, அருளானந்தர் ந்னா உள்ளூர் பெயர் மாதிரி இருக்குல்ல. அருளானந்த சுவாமிகள். எப்படி இருக்கு பேரு ?

ந 2 : பெயர்ல என்ன இருக்கு ஜான் ?

ஜான் : பெயர் ரொம்ப முக்கியம். நாம எந்த மக்களுக்கிடையே பணி செய்ய போறோமோ அந்த மக்களோடு மக்களா கலந்து தான் பணி செய்யணும். அது மனித நேயப் பணியானாலும் சரி, நற்செய்திப் பணியானாலும் சரி.

ந 1 : ம்ம்.. ஆமா உண்மை தான். அப்போ தான் ஒரு அன்னியோன்யம் கிடைக்கும்.

ஜான் : கரெக்ட்.. ராபர்ட் நோபிலியைத் தான் நான் முன்மாதிரியா எடுத்திருக்கேன்.

ந 1 : அது ரொம்ப நல்ல விஷயம். அவரையும் மக்கள் தத்துவ போதக சுவாமிகள்ன்னு தான் கூப்பிட்டாங்க. அவரு காவி உடுத்திட்டு தான் மக்களிடையே பணி செய்தாரு

ந 2 : அவருக்கு சமஸ்கிருதம், தமிழ், தெலுங்குன்னு மூணு மொழி தெரியும். இவ்வளவும் ஏன் அவரு தமிழ்ல நாப்பத்து மூணு புக்ஸ், தெலுங்குல நாலு, சமஸ்கிருதத்துல எட்டுன்னு புக்ஸ் எழுதித் தள்ளினாரு. எல்லாமே சூப்பர் புக்ஸ்.

ந 1 : அவர் தந்தை மகன் தூய ஆவியை பிரதிபலிக்கிற மாதிரி மூணு நூல்களை சேர்த்து பூணூல் மாதிரி போட்டிருப்பாரு. காவி ஆடை தான் உடுத்துவாரு. ஆனா உள்ளுக்குள்ள இயேசுமேல கொண்ட தாகம் அழியாம பார்த்துகிட்டார்.

ஜான் : ஆமா.. அவரோட பணி தான் எனக்கு ஒரு வழிகாட்டி. அந்த அளவுக்கு என்னால படிக்கவோ, படைக்கவோ முடியல. ஆனா தமிழ்ல மக்களுக்கு இயேசுவை அறிவிக்கிற அளவுக்கு படிச்சுட்டேன். ஒரு காவி உடையை உடுத்தி, அவரை மாதிரி என் பேரையும் தமிழ்ல மாத்திட்டேன்.

ந 2 : அதென்ன அருளானந்த சுவாமிகள் ?

ஜான் : இறைவனோட கிருபை எனக்கு மகிழ்ச்சியைத் தருது .. ங்கறது அதோட பொருள்.

ந 1 : நல்லா இருக்கு.. இப்போ என்ன பண்ண போறீங்க ?

ஜான் : முப்பது நாள் நோன்பு இருந்து செபம் பண்ண போறேன். அப்புறம் சென்னை, மதுரை, தஞ்சாவூர், வேலூர், இராமநாதபுரம் இங்கெல்லாம் போகப்போறேன். கால்நடையா

ந 2 : என்னது நடந்தேவா.. அதெல்லாம் எவ்ளோ தூரத்துல இருக்கு தெரியுமா ?

ஜான் : நடந்து போனா தான் நிறைய மக்களை சந்திக்க முடியும். இயேசு நடந்து தானே நற்செய்தி அறிவிச்சாரு. அவர் வழியில நடக்கிற நாம, தரையில நடக்கிறதா கஷ்டம் ?

ந 1 : உண்மை தான். நற்செய்தி அறிவிக்கணும்ன்னா பாடுபடறதுக்கும், சிலுவை சுமக்கவும் தயாரா இருக்கணும். உங்களுக்கு தேவையான உணவு தான் வழியில கிடைக்குமான்னு தான் தெரியல.

ஜான் : என்ன கிடைக்குதோ அதையே நான் சாப்பிட போறேன். இங்கே நிறைய மக்கள் இறைச்சி சாப்பிடறதில்லை, அதனால நானும் அதை விட்டுட்டேன். இந்த மக்களைப் போலவே வாழப் போறேன்.

ந 2 : சரி, இறைவன் அருளால் நிறைய மக்கள் இயேசுவைப் பற்றி அறியட்டும்.

காட்சி 3

( நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் )

 

Image result for st john britto

 

ந 1 : விஷயம் கேள்விப்பட்டியா ? ஜானை நாடுகடத்திட்டாரு முகவை மன்னன்.

ந 2 : ஓ.. என்ன ஆச்சு ?

ந 1 : ஜானோட போதனைகளாலும், வாழ்க்கையாலும் தஞ்சாவூர் பகுதியில நிறைய மக்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள ஆரம்பிச்சாங்க. அது முகவை மந்திரிக்கு புடிக்கல. அவன் ஜானைப் புடிச்சு சித்திரவதை பண்ணிட்டான்.

ந 2 : ஐயோ. சித்திரவதையா ?

ந 1 : ஆமா, நற்செய்தியை அறிவிக்கிறவங்களுக்கு கடுமையான துன்பங்கள் வரது சகஜம் தான். அது ஆதித் திருச்சபையிலயும் நடந்திருக்கு. அப்போஸ்தலர் புக்ல கூட அது பற்றி நிறைய போட்டிருக்கு.

ந 2 : பாவம் ரொம்ப கஷ்டப்பட்டாரோ ?

ந 1 : ஆமா… நல்லா அடிச்சு துவைச்சிருக்காங்க. அப்புறம் கைகாலைக் கட்டி வண்டியில கயிற்றால கட்டி இழுத்துட்டே போயிருக்காங்க. உடம்பெல்லாம் கிழிஞ்சு தொங்கியிருக்கு. விட்டா செத்துருவாருன்னு மன்னன் அவரை நாடுகடத்திட்டான்.

ந 2 : இப்போ போர்ச்சுகல்ல இருக்காரா ? அங்கே தான் இனிமே இருக்கப் போறாரா ?

ந 1 : நீ..வேற.. போர்ச்சுக்கல்ல போன கையோட மறுபடியும் தமிழ்நாட்டுக்கு தான் வருவேன்னு இத்தக் கால்ல நின்னாராம். யாராலயும் அவரை கன்வின்ஸ் பண்ண முடியல. மறுபடியும் இங்கே தான் வராரு.. பட் கொஞ்சம் வருஷம் ஆகும்ன்னு நினைக்கிறேன்.

ந 2 : அவரோட விசுவாசம் மிகப்பெரிய ஆச்சரியம் தான்.

காட்சி 4

( 3 நண்பர்களுடன் ஜான் )

Image result for st john britto

 

ந 1 : நீங்க தமிழ்நாட்டுக்கு வந்து சுமார் பத்தொன்பது வருசம் ஆயிடுச்சு. இடையில ஆறு வருஷம் மட்டும் நாடுகடத்தப்பட்டதால இங்க இல்லாம போயிட்டீங்க. உங்களால, ஏராளமானோர் கிறிஸ்துவை ஏத்துகிட்டாங்க. இப்போ, மறவர் சீமையின் தலைவன் சேதுபதி உங்களுக்கு எதிரா திட்டம் போட்டிட்டு இருக்கான் தெரியுமா ?

ஜான் : தெரியும். மறவர் மக்கள் பகுதியில இயேசுவோட அன்பு மிக வேகமா பரவிட்டு இருக்கு. அது சேதுபதிக்கு புடிக்கல.

ந 2 : ஆமா.. குறிப்பா இயேசுவோட குணமாக்கு வல்லமை அவனுக்கு மிகப்பெரிய இடஞ்சலா இருக்கு. அவன் அதனால தான் கடுப்பாகிறான். நீங்க குணம் குடுக்கிறதெல்லாம் பேயோட வேலைன்னு அவன் மக்களை திசைதிருப்பறான்.

ஜான் : ஆமா அதுவும் தெரியும். இயேசுவோட அருளினால தான் எல்லாம் நடக்குதுன்னு மக்களுக்கு தெரியும். மறவ இளவரசர் தடியத் தேவருக்கு நடந்தது உங்களுக்குத் தெரியும் தானே !

ந 1 : தெரியாதே.. அவருக்கு என்ன ஆச்சு ?

ஜான் : அதுதான் பெரிய கதை. தடியத் தேவருக்கு மிகப்பெரிய நோய். அது கடவுள் கிட்டே ஜெபம் செய்ததுல தீந்துடுச்சு. அவரு இயேசுவோட நற்செய்தியைக் கேட்டாரு. பைபிளை வாசிச்சாரு. கிறிஸ்தவரா மாறிட்டாரு.

ந 2 : அட.. இது மகிழ்ச்சியான செய்தி. இளவரசரே மனம் மாறினா மக்கள் மிக எளிதில் கிறிஸ்தவ மதத்துக்கு வந்துடுவாங்க.

ஜான் : அது தான் சேதுபதியோட பயம். கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து வலுவடைஞ்சுடுவாங்களோ, தன்னோட பதவிக்கு ஆபத்து வருமோன்னு பயம்.

ந 2 : இப்போ என்ன பண்ணலாம்.. கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமா ?

ஜான் : இல்லை, விதைக்கிறதுக்கு நமக்கு எவ்வளவு நாள் இருக்குமோ தெரியாது. இருக்கிற காலத்துல விதைச்சுடணும். இந்த மக்களுக்கு இயேசுவை ஏத்துக்கிறது கூட பெரிய விஷயம் இல்லை, ஆனா தங்களோட வாழ்க்கையை மாத்தறதுல தான் பிரச்சினை.

( அப்போது உடையத் தேவர் என்பவருடைய படை வந்து கைது செய்கிறது )

காட்சி 5

(உறையூர் தேவர் முன்னால் ஜான் )

Image result for st john britto

உ.தே : உன் பெயரென்ன அருளானந்த சுவாமியா ? சுவாமி என பெயர் வைத்தால் உடனே உன்னைக் கும்பிட வேண்டும் என நினைத்தாயா ?

ஜான் : நீங்கள் என்னைக் கும்பிட வேண்டுமென என்றுமே விரும்பியதில்லை, இயேசுவை நீங்கள் கும்பிட வேண்டுமென ஆசைப்படுகிறேன்.

உ.தே : இயேசுவையும் கும்பிடுவதொன்றும் எங்களுக்குப் பெரிய விஷயம் இல்லை. ஆனால், இயேசுவை மட்டுமே கும்பிடவேண்டுமென்கிறாயே.. அது தான் நடக்காது. எங்களுடைய தேவர்களின் பட்டியல் கோடிக்கணக்கானது, அதில் உனது இயேசுவும் இருந்துவிட்டுப் போகட்டும் பரவாயில்லை.

ஜான் : படைத்தவரை, படைப்புகளோடு இணைப்பது சரியல்ல. அதனால் தான் இயேசுவை நம்புங்கள், அவரே மீட்பர் என்கிறேன்.

உ.தே : எங்களுடைய வழக்கங்களை எல்லாம் உடைக்கிறாய். எங்களுடைய வாழ்க்கை முறையை சிதைக்கிறாய்.

ஜான் : அது தவறான குற்றச்சாட்டு. நான் உங்கள் வழக்கங்களுக்கு எதிராய் வாதாடவில்லை, எது இறைவனுக்குப் பிரியம் என்பதை மட்டுமே பகிர்கிறேன்.

உ.தே : பொய் பிதற்றாதே… தடியத்தேவரின் மனைவி கடலாயியை கணவனிடமிருந்து பிரித்திருக்கிறாய். அவள் இப்போது தனிமரமாய் நிற்கிறாள். அவளது வாழ்க்கையை உனது போதனை சிதைத்திருக்கிறது.

ஜான் : மன்னிக்கவும். தடியத்தேவருக்கு ஐந்து மனைவிகள். இயேசுவின் போதனை ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது. அவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருக்க வேண்டும் என்கிறது. வேதத்தைப் போதித்தேன், தடியத் தேவர் மனம் மாறினார். மனம் மாறியதை செயலில் காட்டினார். அது அந்தப் பெண்ணுக்கு எதிரானதல்ல அவளையும் இயேசு நேசிக்கிறார்.

உ.தே. உன்னால் எனக்கு மிகப்பெரிய தலைவலி. நீ வாழ்க்கையை பறித்துக் கொண்ட கடலாயி என் சகோதரி. அவளுக்கு நியாயம் வழங்க வேண்டியது அண்ணனாகிய என் கடமை. அவள் மன்னனிடமும் சென்று முறையிட்டிருக்கிறாள். அரசர் உன்னைக் கொல்ல திட்டம் வகுத்திருக்கிறார். அவரது கட்டளையை நிறைவேற்ற வேண்டியது என் பணி. எப்படியானாலும் நீ சாகப்போவது உறுதி.

ஜான் : நான் சாவுக்கு அஞ்சவில்லை. அது என்னை இறைவனிடம் அழைத்துச் செல்லும் அழகிய தேர். அதற்காக வழிமீது விழி வைத்துக் காத்திருக்கிறேன். ஒரு பெண்ணினால் திருமுழுக்கு யோவானின் தலை உருண்டது, இப்போது ஒரு பெண்ணினால் என் தலை உருண்டாலும் எனக்குக் கவலையில்லை.

உ.தே : உனக்கு கொழுப்பு அடங்கவில்லை. குதிரைச் சேணத்தில் கட்டி இழுத்தாயிற்று. அடிமேல் அடி கொடுத்து உடலைக் கிழித்தாயிற்று. எட்டி உதைத்து அவமானத்தையும் கொடுத்தாயிற்று. இன்னும் நீ திமிருடன் பேசுகிறாய்.

ஜான் : மன்னிக்கவும், திமிருடன் பேசவில்லை, இறைவன் என்னோடு இருக்கின்ற துணிவுடன் பேசுகிறேன். அவர் படாத பாடுகளா ? அவரது சிலுவைச் சாவுக்கு முன் இது சாதாரணம். கடவுளே அடிகள் பட்டாரெனில், பக்தன் அடிகள் படுவதென்ன ஆச்சரியம். இந்த மறவர் மண்ணிலே மறையப் பரப்பக் கிடைத்த வாய்ப்புக்காய் இறைவனுக்கு நன்றி செலுத்துவேன்.

உ.தே : ரங்கநாதத் தேவன் முன்னிலையில் நீ கொல்லப்பட வேண்டும் என்பது மன்னனின் கட்டளை. உன்னை உறையூர் தேவரிடம் அனுப்பி வைக்கிறேன். நீ உன் வாழ்க்கையின் கடைசிப் படிக்கட்டை எட்டி விட்டாய்.

ஜான் : இல்லை நித்திய வாழ்வின் முதல் படிக்கட்டைத் தொடப் போகிறேன். என் ஆண்டவருக்காக என் உயிரைத் தியாகம் செய்யும் பொன்னான தருணம் இது. அவரைப் போதித்ததும், சிலை வழிபாட்டை எதிர்த்ததுமே என்மேல் உள்ள உங்கள் கோபத்துக்குக் காரணம். இயேசு உங்களை நேசிக்கிறார் என்பதே நான் சொல்ல வந்த விஷயம்.

உ.தே : இனிமேல் பேசிப் பயனில்லை. ஓரியூர் மணல் மேட்டில் உன் தலை வெட்டப்படும். தலை உருண்டபின் நீ எப்படி இயேசுவை அறிவிக்கிறாய் என பார்ப்போம்.

ஜான் : மகிழ்வின் நாட்கள் நெருங்குகின்றன. அவருக்காய் படுகின்ற பாடுகள் எனக்கு அதிக ஆனந்தத்தைத் தருகின்றன. தலையை இழந்து தலைவனை பெறுவேன். நீங்கள் உங்கள் பணியைச் செய்யுங்கள், நான் பணிவுடன் உடன்படுகிறேன்.

உ.தே : இவனை இழுத்துக் கொண்டு போங்கள், தலையை வெட்டி வீழ்த்துங்கள். இவன் குருதி மணல் மேடெங்கும் சிதறி வழியட்டும். உடலை துண்டு துண்டாய் வெட்டி, பறவைகளுக்கு இரையாகும் படி தொங்க விடுங்கள். இவனது சாவு, மற்றவர்களுக்கு பயத்தை வரவைக்கட்டும்.

( அவரை இழுத்துக் கொண்டு போகின்றனர் )

பின் குரல் :

 

Related image

போர்ச்சுக்கல்லிலுள்ள லிஸ்பன் நகரில் 1647ல் பிறந்து அருளானந்த சுவாமிகளாய் மாறிய ஜான் பிரிட்டோ 1693ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தியதி ஓரியூரில் கழுத்து வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது குருதி மணல் மேட்டில் விழுந்து சிதறியது. அவரது உடலை வெட்டி கம்பியில் குத்தி நட்டு வைத்தனர் கயவர்கள். வானம் எட்டு நாட்கள் இடைவிடாமல் அழுதது.

அவரது உடல் வீழ்ந்த அந்த மணல் மேடும் அதன் சுற்றுமுள்ள பகுதியும் சட்டென சிவப்பு மண்ணாக மாறிவிட்டது. அதைக் கண்டு வியந்த மக்கள் உண்மை இறைவனை வழிபட ஆரம்பித்தனர். ஒரு மனிதனின் சாவு, பல மனிதர்களின் வாழ்வுக்குக் காரணமானது. என்ன செய்வதென்று அறியாமல் கொலையாளிகள் குழம்பினர்.

ஓரியூரில் இன்று ஒரு தேவாலயம் இருக்கிறது. மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இரத்த பூமியை பார்த்துச் செல்கின்றனர். கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் தான் பயன்கொடுக்கும். இங்கே விதை விழுந்த மண்ணே பயன் கொடுக்கிறது.

துன்பங்களைத் தாங்குவதை மகிழ்வுடன் எதிர்கொண்ட ஜான்பிரிட்டோ போன்ற மறை சாட்சிகளின் வாழ்க்கை நமக்கு துணிவைத் தரட்டும்.

*

2 thoughts on “குறு நாடகம் : அருளானந்த சுவாமி / ஜான் பிரிட்டோ

  1. குறுநாடகம் அருமை….. தங்கள் பணிக்கு பாராட்டுக்கள்

    Like

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s