உன் உணவில் ஒரு பகுதியைப் பசித்திருப்போருக்குக் கொடு; உன் உடையில் ஒரு பங்கை ஆடையற்றிருப்போருக்கு வழங்கு. தேவைக்குமேல் உன்னிடம் உள்ளதையெல்லாம் தருமம் செய்துவிடு. தருமம் கொடுப்பதற்கு முகம் கோணாதே.
தோபித்து 4:16
( இணை திருமறை )
உலக மக்கள் அனைவரின் தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்கள் பூமியில் உண்டு. ஆனால் ஒரே ஒரு மனிதனின் பேராசையைத் திருப்தியாக்கும் பொருட்கள் இல்லவே இல்லை என்பார்கள். மனிதனுடைய ஆசையே பாவத்தின் காரணம் என்கிறது புத்த சித்தாந்தம்.
ஆசை வைப்பதில் தவறே இல்லை.
பேராசை கொள்வதிலும் தவறேதும் இல்லை.
ஆனால் எதன் மீது ஆசை வைக்கிறோம், எதன் மீது பேராசை வைக்கிறோம் என்பதில் தான் சரியும், தவறும் பிரித்தெடுக்கப்படுகின்றன.
ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டே இருக்கவேண்டும் எனும் ஆசை அன்னை தெரசாவிடம் கொழுந்து விட்டு எரிந்தது. அதற்காக தனது வாழ்க்கையையே அர்ப்பணித்து மன மகிழ்வுடன் செய்தார்.
தேவைப்படும் மக்களுக்கு புதுமைகள் செய்ய வேண்டும் எனும் ஆசை புனித அந்தோணியாரிடம் நிரம்பியிருந்தது. கட்டுப்பாடுகளையும் மீறி அவர் இறைவனின் அருளை பிறருக்கு வழங்கிக் கொண்டிருந்தார். கோடி அற்புதர் என புகழப்பட்டார்.
நற்செய்தி அறிவிக்க வேண்டும் எனும் தாகம் வீரமாமுனிவர் என அழைக்கப்பட்ட ராபர்ட் டி நொபிலியிடம் எக்கச்சக்கமாக இருந்தது. அதற்காக கடும் உழைப்பைச் செலுத்தி பல மொழிகள் கற்று, பல நூல்கள் இயற்றி தென்னிந்தியாவில் மிகப்பெரிய நற்செய்திப் பணியைச் செய்தார்.
ஆசை வைப்பதில் தவறில்லை, எதன் மீது ஆசை வைக்கிறோம் என்பதே முக்கியம்.
கொடுத்துக் கொண்டே இருப்பதில் தான் கிறிஸ்தவம் அடங்கியிருக்கிறது. இறைவனுடைய வார்த்தையை, இறைவனுடைய வல்லமையை, இறைவன் தந்த வளங்களை என, எதையெல்லாம் பிறருக்குக் கொடுக்கிறோமோ அதுவே நமக்கான சேமிப்பாய் இருக்கிறது. எதையெல்லாம் சேமிக்கிறோமோ, அதெல்லாம் நமக்கான இழப்பாய் இருக்கிறது.
விண்ணகத்தில் செல்வம் சேர்த்து வைக்கச் சொன்னார் இறைவன். அது பிறருக்காகச் செலவழிக்கும் அன்பில் தான் இருக்கிறது. தோபித்து நூல் சொல்லும் அறிவுரை நமக்குப் புதிதல்ல. இந்தக் கேள்வியே விண்ணக நுழைவாயிலில் நம்மிடம் கேட்கப்படும் !
விண்ணக சேமிப்பு என்பது
மண்ணக செலவழிப்பு !
ஏழைகளுக்கு இரங்குவோம், மனம் கோணாமல் ஆனந்தமாய் உதவுவோம். வாழ்வின் நூலில் நம் பெயர் அழுத்தமாய் எழுதப்படும்.
*