உனக்குரிய செல்வத்துக்கு ஏற்பத் தருமம் செய். உன்னிடம் மிகுதியாகச் செல்வம் இருப்பின், மிகுதியாகக் கொடு; சிறிது செல்வமே இருப்பின், சிறிது கொடு; ஆனால் தருமம் செய்யத் தயங்காதே
தோபித்து 4:8
( இணை திருமறைகள் )
எனது பால்ய கால கிராமத்தில் நிறைய பலா மரங்கள் உண்டு. ஏகப்பட்ட பலாப் பழங்களை கிளைகளெங்கும் சுமந்தபடி அவை காட்சியளிக்கும். சில பலா மரங்களில் கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும். ஆனால் நெருங்கிச் சென்று பார்த்தால், பூமிக்கு வெளியே தெரியும் அதன் வேர்களில் பலாப்பழம் காய்த்திருக்கும்.
பாட்டி சொல்வார், “வேணும் சக்க வேரிலயும் காய்க்கும்” என்று. அதாவது காய்க்க வேண்டும் என முடிவெடுத்தால் பலாப்பழம் வேரில் கூட காய்க்கும். காய்க்க வேண்டாம் என முடிவெடுத்தால் கிளைகளில் கூட காய்க்காது. காலங்கள் கடந்தபின்னும், பாட்டி மறைந்தபின்னும் அந்த சக்க பழமொழி மட்டும் இன்னும் நெஞ்சில் நிலைக்கிறது.
நிறைய பணம் உள்ளவன் அள்ளி அள்ளிக் குடுப்பான், நம்ம கிட்டே என்ன இருக்கு குடுக்கிறதுக்கு ? என புலம்பும் பலரைப் பார்த்திருப்போம். உதவும் மனமின்மையை சாக்குப் போக்குக்குள் புதைத்து நடக்கும் மனநிலை இது. காரணம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத நிலை அல்ல, கொடுப்பதற்கு மனம் இல்லாத நிலை.
கொடுக்க வேண்டும் எனும் சிந்தனை மட்டும் இருந்தால் போதும், கொடுப்பதற்கான பொருள் நம்மைத் தேடி வரும் என்பது தான் உண்மை. இருப்பதில் கொடு எனும் சிந்தனையை தோபித்து நூல் நமக்குச் சொல்கிறது. ‘இது இருந்தால் தான் கொடுப்பேன் என்பது எதிர் சிந்தனை, எது இருந்தாலும் கொடுப்பேன் என்பது விருப்பச் சிந்தனை’. கொடுக்கும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறைய செல்வம் இருந்தால் நிறைய கொடுக்கலாம், கொஞ்சமே கொஞ்சம் செல்வம் மட்டுமே இருந்தால் அதிலிருந்து கொஞ்சம் கொடுக்கலாம். எப்படியானாலும் கொடுத்தேயாகவேண்டும் என்பதையே இந்த இறை வார்த்தைகள் விளக்குகின்றன.
கொடுக்கும் அளவை இறைவன் பார்ப்பதில்லை. ஏழை விதவையின் இரண்டு காசு தான் இறைவன் பார்வையில் முதல் பரிசைப் பெற்றது. இறைவன் கொடுக்கும் பொருளை நிறுத்துப் பார்ப்பதில்லை, கொடுக்கும் இதயத்தை நிறுத்துப் பார்க்கிறார். அதற்கு நாம் சேமிக்க வேண்டியது செல்வத்தையல்ல, கொடுக்க வேண்டும் எனும் மனநிலையை.
நமது வேண்டுதல்கள் “பொருட்களைக் கொடும் இறைவா” என்பதை விட, கொடுக்கும் மனதைக் கொடுப்பாய் இறைவா என்றிருந்தலே சிறப்பானது. அது தான் நம்மை விண்ணகத்தின் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
வாய்க்காலில் எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பதை விட, அது வயலுக்குச் செல்கிறதா என்பதையே முதலில் விவசாயி பார்ப்பான். அணைகளில் தேங்கும் ஆயிரம் அடி தண்ணீரை விட, வயல்களில் பாயும் நாலு குடம் தண்ணீர் தான் முக்கியமானது.
சேமித்தபின்பே செலவழிப்பேன் எனும் சிந்தனை ஆபத்தானது. களஞ்சியங்களை இடித்துப் பெரிதாக்குவதை விட, இதயத்தின் சுவர்களை விசாலமாக்குவதே அவசியமானது.
இருப்பதைக் கொடுப்போம்
இருப்பதில் கொடுப்போம்.
அதுவே இறைவாக்கு, அதை நீ நிறைவாக்கு !
*