இந்த புத்தகம் விவிலியத்தில் எப்படி இடம்பெற்றது என வியக்க வைக்கும் ஒரு நூல் சபை உரையாளர். இதை எழுதியவர் ஞானத்தில் சிறந்து விளங்கிய சாலமோன் மன்னன். ஆனால் இதை அவர் எழுதிய காலகட்டத்தில் கடவுளை விட்டு விலகிய ஒரு வாழ்க்கை வாழத் துவங்கியிருந்தார். வாழ்வின் முதுமை வயதில் இந்த நூலை அவர் எழுதுகிறார்.
‘மகனுக்கு அறிவுரை கூறுவது போல’ சிறப்பான நீதிமொழிகள் எனும் நூலைத் தந்து சிலிர்ப்பூட்டிய அவர், இந்த நூலில் தந்திருப்பது வாழ்வின் நிலையாமை குறித்த தத்துவங்களை. வாழ்க்கை வீண் எனும் சிந்தனையும், இந்த உலகத்தில் வாழும் வரை நன்றாக உண்டு குடித்து வாழவேண்டும் எனும் சிந்தனையும் அவரை நிரப்பியிருந்தன. எனவே ஒரு தத்துவ நூலைப் போல இந்த நூலை அவர் எழுதியிருக்கிறார். இந்த நூலில் 21 அதிகாரங்களும், 222 வசனங்களும், 5584 வார்த்தைகளும் உள்ளன. இந்த நூல் கிமு 935 வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
சாலமோன் மன்னன் மிகப்பெரிய சக்கரவர்த்தியாக இருந்தார். வெற்றிகளை ரசித்தார். இறைவனின் முழுமையான ஆசீருடன் வாழ்ந்தார். ஞானத்தில் நிரம்பினார். உலக செல்வங்களெல்லாம் மன்னர்கள் அவரது காலடியில் கொண்டு வந்து கொட்டினர். எண்ணவோ நிறையிடவோ முடியாத அளவு தங்கம் வெள்ளி எல்லாம் அவரது அரசில் நிரம்பியது. அவருக்கு எதிலும் திருப்தி கிடைக்கவில்லை. கலைகளில் நுழைந்தார். அங்கும் திருப்தியில்லை. மனைவியர் வைப்பாட்டியர் என ஆயிரம் பேரை கொண்டிருந்தார் எனினும் வாழ்வில் திருப்தியில்லை. சிற்றின்பம் மது போதை என பாதை மாறினார் எதிலும் திருப்தியில்லை. எல்லாவற்றையும் கடந்து முதுமை நிலையில் அவர் எழுதுகிறார், “வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்..” !
இறைவனை விட்டு விலகினால் வாழ்வின் அத்தனை விஷயங்களும் வீணானவையாய் மாறிவிடும் எனும் ஆழமான சிந்தனையை இந்த நூல் நமக்குத் தருகிறது.
இதில் பல உலக சித்தாந்தங்களை நாம் காணலாம். ‘எது நடக்க இருக்கிறதோ , அது நடக்கும்’ எனும் விதிவசவாத சித்தாந்தம். இந்த நொடியில் இன்பமாக வாழவேண்டும் எனும் இருத்தலியல் சித்தாந்தம். ‘பெண்ணை விட ஆணே சிறந்தவன்’எனும் ஆணாதிக்க சித்தாந்தம். ‘இன்பமே வாழ்க்கையின் தேவை’ எனும் ஹிடோனிச சித்தாந்தம். ‘நல்லதாய்த் தோன்றும் விஷயங்கள் கூட நல்லதல்ல’ எனும் வெறுப்பு மனப்பான்மைச் சித்தாந்தம். எல்லாமே மோசமாய் தான் நடக்கும் எனும் அவநம்பிக்கைச் சித்தாந்தம். இவற்றையெல்லாம் சபை உரையாளரின் எழுத்துகளில் காணலாம்.
இறைவன் படைப்பில் “ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு. பிறப்புக்கு ஒரு காலம், இறப்புக்கு ஒரு காலம்’ என தொடங்கி அவர் எழுதும் மூன்றாம் அதிகாரம் மிகப் பிரபலம். எல்லாவற்றையும் இறைவன் நேர்த்தியாகச் செய்திருக்கிறார். அவரது நேரத்தில் எல்லாம் சிறப்பாய் நடக்கும் எனும் சிந்தனையை இதில் நாம் காணலாம். நமது வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே இறைவனின் விருப்பப்படி நடக்கின்றன எனும் ஆறுதல் இந்த வரிகளில் மிளிர்கிறது.
சாலமோன் கடவுளை நினையுங்கள், கடவுளுக்கு அஞ்சி நடங்கள் என்றும் கூறுகிறார். “உயிரைக் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம் ஆன்மாவைக் கொல்பவர்களுக்கே அஞ்சுங்கள்” என்று இயேசுவும் குறிப்பிட்டிருந்தார். ஆன்மா அழிந்தால் வாழ்க்கை நரகத்துக்குச் செல்லும் என்பதையே இயேசு தனது போதனையில் தெளிவு படுத்தினார்.
தான் கடவுளுக்கு அஞ்சி நடக்கவில்லை எனும் உறுத்தல் சாலமோனுக்கு உருவாகியிருக்க வேண்டும். எனவே தான் கடவுளுக்கு அஞ்சி நடங்கள் என குறிப்பிட்டார். கடவுளுக்கு தான் கீழ்ப்படியவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். வேறு இன பெண்களை மணந்து, வேறு தெய்வங்களையும் சார்ந்தவர் அவர். எனவே இப்போது புத்தி தெளிந்தவராய், “கடவுளுக்குக் கீழ்ப்படியுங்கள்” என்றும் போதிக்கிறார்.
அறிவையும் புத்தியையும் வளர்த்துக் கொண்டே போவதால் ஆன்மீகம் வளராது. மனதுக்குள் வெற்றிடமே உருவாகும் என்பதையும் இவரது நூல் கற்றுத் தருகிறது.
இந்த நூல் பைபிளில் இடம் பெறுவதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. ஒன்று, எத்தனை தான் இறை ஆசீர் பெற்ற மனிதராய் இருந்தாலும் கடவுளை விட்டு விலகினால் வாழ்க்கை வெற்றிடமாகும், பாவத்தின் பிறப்பிடமாகும், நிம்மதியற்ற வெறுமையாகும் என்பதைப் புரிய வைக்க. இரண்டாவது, உலக தத்துவங்களைச் சார்ந்து வாழாமல் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தான் நாம் வாழவேண்டும் என்பதைப் புரிய வைக்க.
எதையும் விண்ணக வாழ்க்கை எனும் கண்ணோட்டத்தில் அணுகாவிட்டால் இத்தகைய தடுமாற்றங்கள் நிச்சயம் உருவாகும். சாலமோன் இந்த நூலை மண்ணகக் கண்ணோட்டத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார். சாலமோன் போன்ற ஞானிகளுக்கே இந்த நிலையெனில் சாதாரண மக்கள் நிச்சயம் அழிவுக்குள் செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.
கவித்துவமும், தத்துவமும், அது புரியவைக்கும் ஆன்மீகப் புரிதலுமாய் சபை உரையாளர் நூல் ரொம்பவே வசீகரமாய் இருக்கிறது.
“மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,
ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம் ! கிறிஸ்த ஆன்மீகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல் திருப்பாடல்கள் !
கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக் கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது. சொல்லப் போனால் ஆதிக் கிறிஸ்தவ போதகர்கள் திருப்பாடல்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து வைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்கிறது இறையியல் வரலாறு.
மொத்தம் 150 பாடல்கள் கொண்ட இந்த நூலில் 2461 வசனங்களும், 43743 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. உண்மையில் இது ஐந்து பாடல் புத்தகங்களின் தொகுப்பு. திருப்பாடல்கள் 41,72,89,106,150 ஆகியவையே ஒவ்வொரு நூலின் கடைசிப் பாடல்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் சங்கமம் இது. தாவீதின் காலமான கிமு 1000 களில் பெரும்பான்மையான பாடல்கள் எழுதப்பட்டன. மோசேயின் காலமான கிமு 1300லுள்ள பாடல்களும், கானானை விட்டு இஸ்ரேயலர்கள் வெளியேறி வாழ்ந்த கிமு 500களின் பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
திருப்பாடல்கள் இசைக்கும் போது நமது இதயத்தையே நாம் ஊடுருவிப் பார்க்கும் சிந்தனை எழுவது இதன் சிறப்பு. சர்வதேசத்துக்கும், சர்வ காலத்துக்கும் பொருந்தக் கூடியவகையில் திருப்பாடல்கள் இருப்பது உண்மையிலேயே வியப்பான விஷயம் தான்.
எபிரேய மொழியில் இந்த நூல் தெனிலிம் என அழைக்கப்படுகிறது. அதற்கு “புகழ்ச்சிப் பாடல்கள்” என்று பொருள். இந்த திருப்பாடல்களை இரண்டாக வகுக்க வேண்டுமெனில், “நான்” என தன்னை மையப்படுத்தி இறைவனைப் புகழும் தனிப்பட்ட பாடல்கள். “நாம்” என குழுவை மையப்படுத்தி இறைவனைப் புகழும் குழுப் பாடல்கள் என வகுக்கலாம்.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருப்பாடல்கள் நிறையவே இந்த நூலில் உண்டு. “உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்” என்பது போன்ற வரிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. பண்டைய யூதர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. யாராவது இறந்து விட்டால், அவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பவர்கள் அதை ஒரு பாட்டிலில் சேமித்து தங்களது இரங்கலாக அனுப்பி வைப்பார்கள். அத்தகைய சமூகப் பழக்கங்கள் திருப்பாடல்களில் எதிரொலிப்பதை ஆங்காங்கே காணலாம்.
கோபம், எரிச்சல், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளும், மகிழ்ச்சி, களிப்பு, ஆறுதல், நம்பிக்கை, சமாதானம் போன்ற நேர்மறை உணர்வுகளும் திருப்பாடல்களில் நிரம்பியிருக்கின்றன.
இன்னொரு வகையில் திருப்பாடல்களைப் பிரிக்க வேண்டுமெனில் இறைஞ்சும் பாடல்கள், நன்றிப் பாடல்கள், வருந்தும் பாடல்கள் என பிரிக்கலாம். இதன் ஆன்மீகச் செழுமை காரணமாக மார்டின் லூதர் ‘இது பைபிளுக்கு உள்ளே உள்ள இன்னொரு பைபிள்” என்று குறிப்பிட்டார்.
இந்த நூலின் மிகச்சிறிய அதிகாரம் 117. அதில் இரண்டே இரண்டு வசனங்கள் உள்ளன. மிகப்பெரிய பாடல் 119. அதில் 176 வசனங்கள் உள்ளன. பொதுவாக எபிரேயப் பாடல்கள் எல்லாமே சத்தமாய் பாடப்பட வேண்டிய பாடல்கள் தான். திருப்பாடல்களும் அதற்கு விதி விலக்கல்ல.
இந்தத் திருப்பாடல்களில் 73 பாடல்களுக்கு மேல் தாவீது எழுதியிருக்கிறார். தாவீதைத் தவிர ஆஸாப் புதல்வர்கள் பன்னிரண்டு பாடல்கள், மோசே ஒரு பாடல், கோராவின் மகன்கள் பத்து பாடல்கள், ஹெர்மான் ஒரு பாடல், எசேக்கியா பத்து பாடல்கள், ஏதன் ஒரு பாடல், சாலமோன் இரண்டு பாடல்கள் என பங்களிப்பு செய்திருக்கின்றனர்.
தாவீது மன்னனின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள இந்த பாடல்கள் உதவி புரிகின்றன. பத்சேபாவுடனான உறவுக்குப் பின் மனம் வருந்தி அவர் எழுதிய திருப்பாடல் 51 மிகப் பிரபலம். மொத்தம் பதினான்கு பாடல்கள் தாவீதின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
தற்போதைய பாடல்களைப் போலில்லாமல் திருப்பாடல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்படுத்தலாக இருப்பது சிறப்பு. பல பாடல்கள் குறிப்பிட்ட இறை சிந்தனையை நமக்கு விளக்குகின்றன. உதாரணமாக, இறைவார்த்தையைப் படிக்க வேண்டும் எனும் சிந்தனையை திருப்பாடல் 119 பதிவு செய்கிறது, ஓய்வு நாளை கடைபிடிக்க வேண்டுமென திருப்பாடல் 92 வலியுறுத்துகிறது.
இறைமகன் இயேசுவின் வாழ்க்கையை தீர்க்கத்தரிசனமாக உரைக்கும் பல பாடல்கள் திருப்பாடல்களில் உள்ளன. மனிதர்களால் இகழப்படுவார், ஆணிகளால் அறையப்படுவார், ஆடைகள் ஏலமிடப்படும், அவரது எலும்புகள் ஏதும் முறிபடாது என இயேசுவின் மரணத்தைக் குறித்தும் மிக விரிவாக இவை பேசுகின்றன.
இறைவனைப் புகழவும், இறைவனோடு உள்ள உறவை வலுப்படுத்தவும் இன்றும் நமக்கு திருப்பாடல்கள் துணை செய்கின்றன. அற்புதமான இலக்கியச் சுவை, ஆழமான ஆன்மீகச் சுவை என திருப்பாடல்கள் நூல் வாசிக்கும் யாவரையும் வசீகரிக்கிறது.
விசுவாசத்தின் அடையாளமாக குறிப்பிடப்படும் நபர் யோபு ! திரு விவிலியத்தில் அமைந்துள்ள நூல்களில் மிகவும் பழைய நூல் இது தான். இதன் காலம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. கவிதை நடையில் எழுதப்பட்டுள்ள நூல் நிஜமா, கற்பனையா அல்லது இரண்டும் கலந்த கலவையா எனும் கேள்வி எல்லோர் மனதிலும் எழுவது இயல்பு.
இது கற்பனைக் கதையல்ல ! காரணம் இந்த இறைமனிதர் யோபு விவிலியத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்படுகிறார். எசேக்கியேல் இறைவாக்கினர் தனது நூலில் மூன்று நீதிமான்களைப் பற்றி குறிப்பிடும்போது நோவா, தானியேல் மற்றும் யோபு என குறிப்பிடுகிறார். புதிய ஏற்பாட்டிலும் யோபுவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது கற்பனை என சொல்பவர்கள் மனதில் நினைக்கும் காரணம் யோபுவின் வாழ்க்கையில் நடக்கின்ற அழிவுகள். தொடர்ச்சியாக அவரது கால்நடைகள், சொத்துகள், பிள்ளைகள் எல்லாரும் அழிகின்றனர். எல்லா இடங்களிலும் சொல்லி வைத்தார் போல் ஒரே ஒரு நபர் மட்டும் தப்பிப் இழைக்கிறார். அதே போல கதாபாத்திரங்கள் எல்லாமே கவிதை நடையிலேயே பேசுகின்றன.
இரண்டையும் கலந்து பார்த்தால். யோபு என்பவர் நிஜ மனிதர். இரத்தமும் சதையுமாக வாழ்ந்தவர். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ஒருவர் கற்பனை கலந்து கவிதை நூலாக வடித்திருக்கிறார் என ஒரு முடிவுக்கு வரலாம்.
எபிரேயக் கவிதையான இந்த நூலில் கவித்துவம், நாடகத் தன்மை, வழக்காடுதல் என பல தன்மைகள் மிக அழகாக கோக்கப்பட்டுள்ளன.இந்த நூலின் அழகை மார்ட்டின் லூதர் உட்பட பல்வேறு வரலாற்றுத் தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.
இந்த நூல் கவித்துவ அழகு மட்டுமல்லாமல் பல்வேறு தத்துவச் சிந்தனைகளையும் விதைக்கிறது. நாம் ஏன் இந்த பூமியில் பிறந்திருக்கிறோம் ? ஏன் நமக்கு துன்பம் வருகிறது ? துன்பத்தை அனுமதிப்பது யார் ? வாழ்க்கை என்றால் என்ன ? நமது வாழ்க்கையில் சாத்தானின் பங்கும், கடவுளின் பங்கும் என்ன ? நல்லவர்கள் ஏன் துன்பத்தைச் சந்திக்கின்றனர் ? போன்ற பல கேள்விகளை எழுப்பி விடை காண முயல்கிறது இந்த நூல்.
கடவுள் இருக்கிறார், அவர் அன்பும் வலிமையும் உடையவர், அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர், தனது படைப்புகளோடு தொடர்பு கொண்டிருப்பவர் போன்ற பல சிந்தனைகளை நமக்கு இந்த நூல் தருகிறது. தொடக்கத்தில் உரைநடை, முடிவிலும் உரைநடை, இடையில் கவிதை என இந்த நூல் ஒரு அழகான கட்டமைப்பில் அமைந்துள்ளது.
இதை ஞான இலக்கியம் என்றும் சொல்வார்கள். அறிவார்ந்த சிந்தனைகளும், உரையாடல்களும் இந்த நூலில் நிறைந்துள்ளன. அவை எல்லா நேரங்களிலும் சரியாய் இருக்க வேண்டியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
யூதர்களின் காலத்தில் நன்மைக்கான பயனும், தீமைக்கான பயனும் இந்த காலத்திலேயே கிடைத்து விடும் என நம்பினார்கள். கிறிஸ்தவ விசுவாசத்தில் இவ்வுலக வாழ்க்கையின் பயனானது அடுத்த வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் என நம்புகிறோம். யோபு நூல் யூத சிந்தனைகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது.
யோபு நேர்மையாளர் என கடவுள் சொல்ல, அவனுக்கு வசதிகள் இருப்பதால் தான் அவர் இப்படி இருக்கிறார் என சாத்தான் வாதிடுகிறான். கடவுள் யோபுவின் செல்வங்களை, குழந்தைகளை அழிக்க சாத்தானுக்கு அனுமதி கொடுக்கிறார். பின்னர் யோபுவின் உடலில் நோய்களைக் கொடுக்கிறான்.
கடவுளுக்கும், சாத்தானுக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தை யோபுவுக்குத் தெரியாது. அவர் விசுவாசத்தில் நிலைத்திருந்தாரா ? மனைவியும், நண்பர்களும் அவரை அவமானப்படுத்துகின்றனர். குற்றவாளியாக்குகின்றனர். பாவி என்கின்றனர். எல்லாவற்றையும் தாண்டியும் யோபு நீதிமானாகவே இருக்கிறார்.
பிரமிப்பூட்டும் யோபுவின் விசுவாசம் கிறிஸ்தவர்களுக்கு மாபெரும் சவால். விண்ணில் நிகழ்கின்ற விஷயங்களுக்கு மண்ணில் பாதிப்பு இருக்கும் என்பதும், மண்ணில் நாம் வாழும் வாழ்க்கை இறைவனுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதும் இந்த நூல் சொல்லும் இரண்டு பார்வைகளாகும்.
இந்த நூல் சொல்லும் இரண்டு முக்கியமான பாடங்கள் வியப்பானவை. ஒன்று, சாத்தான் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் மட்டும் தான் இருக்க முடியும். கடவுளைப் போல அவனும் எல்லா இடங்களிலும் இருப்பான் எனும் பொதுவான நம்பிக்கை தவறானது. இரண்டு, கடவுளின் அனுமதியில்லாமல் அவருடைய மக்களை சாத்தான் தொட முடியாது எனும் உண்மை! இந்த இரண்டு புரிதல்களும் நமக்கு யோபு நூலின் வாயிலாய் கிடைக்கிறது.
யோபுவின் நோய்க்குக் காரணம் அவனது பாவம் என அவனை குற்றம் சுமத்துகின்றனர் நண்பர்கள். யோபுவோ, தான் குற்றமற்றவன் என்கிறார். நோய்க்கும், பாவத்துக்கும் இடையே தொடர்பு உண்டு என்பதையும், எல்லா நோய்களும் பாவத்தின் விளைவல்ல என்பதும் இந்த நூலின் மூலம் நாம் புரிந்து கொள்ளும் ஒரு பாடமாகும்.
( மருத்துவமனையில் டாக்டரை சென்று பார்க்கின்றனர் பீட்டரும், ராபர்ட்டும் )
பீட்டர் : டாக்டர்.. குட் மார்ணிங்
டாக்டர் : வாங்க.. உக்காருங்க…
பீட்டர் : ( ரிப்போர்ட்களை நீட்டுகிறான் ) ரிப்போர்ட் வாங்கிட்டு உங்களை வந்து பாக்க சொன்னீங்க, அதான் காலையிலேயே வந்துட்டேன்.
டாக்டர் : குட்.. குட்… இருங்க பாக்கறேன்…
டாக்டர் : ( ஒவ்வொரு ரிப்போர்ட்டாகப் பார்க்கிறார்.. யோசிக்கிறார்.. முகத்தைச் சுழிக்கிறார் )
பீட்டர் : டாக்டர் ரிப்போர்ட்ல ஏதும் பிரச்சினை இல்லையே.. உங்க முகத்தைப் பாத்தா ஹார்ட்டுக்குள்ள கிரைண்டர் ஓடற சத்தம் கேக்குது.
டாக்டர் : என்னய்யா… ஹார்ட் வெச்சிருக்கே ? அதை ஒழுங்கா பாக்கறதே இல்லையா ? இப்படி கெட்டு குட்டிச் சுவராக் கிடக்கு ( ஒரு ரிப்போர்ட்டைத் தூக்கி மேஜையின் ஓரமாய் போடுகிறார் )
பீட்டர் : ஓ.. ஹார்ட் வீக்கா இருக்கா ? பிளட் ரிப்போர்ட் எப்படி இருக்கு டாக்டர் ?
டாக்டர் : ( அந்த ரிப்போர்ட்டையும் தூரப் போடுகிறார் ) என்னய்யா பிளட் வெச்சிருக்கே… கார்ப்பரேஷன்ல ஓடற தண்ணி மாதிரி…
பீட்டர் : ஐயையோ… டாக்டர்.. தலைக்கு எடுத்த ஸ்கேன்…
டாக்டர் : ஆமா.. அதுல மட்டும் என்ன என்ன இருக்கப் போவுது.. ( ரிப்போர்டைப் பாக்கிறார் ) … அடச்சே… இதென்ன மூளையா இல்லை காஞ்சு போன வாழையா.. ஒண்ணும் ஒழுங்கா இல்லையே..
பீட்டர் : டாக்டர்… என்ன டாக்டர் இப்படி பயமுறுத்தறீங்க… லங்க்ஸ் ஆவது ஹெல்தியா இருக்கா ?
டாக்டர் : லங்க்ஸ் பற்றி பேசாதே.. அடிச்சுபுடுவேன்…
ராபர்ட் : என்ன டாக்டர்… லங்க்ஸ்க்கும் சங்கா ?
டாக்டர் : ஆமா.. இந்த ரைமிங் ரொம்ப முக்கியம். உன் பிரண்ட் தானே இவன்.. கவனிக்க மாட்டீங்களா ?
பீட்டர் : டாக்டர் கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க… என்ன பிரச்சினை ? என்ன டிரீட்மென்ட் எடுக்கணும்.. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா ?
டாக்டர் : சொல்றேன்.. சொல்றேன்… அதுக்கு முன்னாடி, உடம்பைப் பாதுகாக்க இதுவரைக்கும் என்னென்ன செய்றீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க பாப்போம்.
பீட்டர் : டாக்டர்.. ஈட் ஏன் ஆப்பிள் எ டே.. கீப் டாக்டர் அவே… ந்னு சொன்னாங்க. அதனால டெய்லி ஒரு ஆப்பிள் சாப்பிடறேன். பீட்ரூட் சாப்டா பிளட் நல்லாயிருக்கும்ன்னு சொன்னாங்க, சோ பீட்ரூட் க்கு ரூட் போட்டிருக்கேன். பிரீத்திங் பண்ணினா லங்க்ஸ் ப்யூரா இருக்கும்ன்னு சொன்னாங்க.. சோ டெய்லி காலைல பிரீத்திங் பண்றேன். ஹெல்தியா சாப்டறேன், சரியா தூங்கறேன்… இதை விட என்ன டாக்டர் பண்ணணும்.
டாக்டர் : ம்ம்ம்… இதெல்லாம் நல்லது தான். ஆனா இதெல்லாம் பண்ணினா மட்டும் பத்தாதுப்பா..
பீட்டர் : வேற என்ன சாப்பிடணும் டாக்டர்.. சொல்லுங்க, உடனே போய் சாப்பிடறேன்.
டாக்டர் : இது சாப்பிடறதில்லை. சொல்றதை கவனமா கேளு. உன் ஹார்ட் புல்லா ஹேட்ரட் நிறஞ்சிருக்கு. உன் பிளட் ஃபுல்லா வெஞ்சன்ஸ் நிறைஞ்சிருக்கு. லங்க்ஸ் புல்லா ஆங்கர் நிறைஞ்சிருக்கு.. இதையெல்லாம் வெளியேற்றினா தான் உடம்பும் மனசும் நல்லா இருக்கும்.
பீட்டர் : ஐயையோ.. என்ன டாக்டர் சொல்றீங்க ? அதெல்லாமா தெரியுது.
டாக்டர் : ஆமாமா… கோபம், எரிச்சல், பழிவாங்கும் சிந்தனை, வெறுப்பு எல்லாமே உடம்புல நிறைய பாதிப்புகளை உருவாக்கும்ன்னு தெரியாதா ? இட்ஸ் நாட் ஒன்லி ஸ்பிரிச்சுவல்..இட்ஸ்… சயின்ஸ்…
ராபர்ட்: அது உண்மை தான் டாக்டர். இவனுக்கு கோபம் வந்தா இவனை புடிக்கவே முடியாது. ஒருத்தருக்கு ஸ்கெட்ச் போட்டான்னா அவங்களை எப்படியாவது பழிவாங்கிடுவான்.
டாக்டர் : சீ.. திஸ் ஈஸ் த பிராப்ளம். இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு.
ராபர்ட் : என்ன வழி டாக்டர்… சொல்லுங்க…
டாக்டர் : பர்கிவ்னஸ்… மன்னிப்பு. மனப்பூர்வமா எல்லாரையும் மன்னிக்கப் பழகணும். எல்லாருக்கும் எல்லா நேரத்துலயும் மன்னிப்பைக் கொடுக்க தயாரா இருக்கணும். மன்னிப்பு தான் இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் சர்வ ரோக நிவாரணி.
பீட்டர்: அதெப்படி டாக்டர் முடியும் ? இந்த காலத்துல எல்லாரையும் மன்னிச்சிட்டெல்லாம் இருக்க முடியாது. நம்மளை ஏறி மிதிச்சு போயிட்டே இருப்பாங்க. அப்படி யாரு தான் மன்னிப்பாங்க ? இதெல்லாம் வெறும் தியரி தான்.. பிராக்டிக்கலா நாட் பாசிபிள்
டாக்டர் : ஏன் முடியாது ? இயேசு உன்னோட பாவங்களை மன்னிக்கலையா ? எத்தனை தடவை தப்பு பண்ணினாலும் அவரு மன்னிக்கலையா ? ஏன், சிலுவைக்கு மேல இருந்து கூட அவரு மன்னிப்பைத் தானேப்பா போதிச்சாரு. வேற என்ன எக்ஸாம்பிள் வேணும் உனக்கு. பீட்டர்ன்னு பேரை வெச்சிட்டு இப்படி ஹீட்டர் மாதிரி பேசலாமா ?
பீட்டர் : ஹா..ஹா.. டாக்டர்.. நீங்க பைபிள் ரூட்ல போறீங்களா ? அப்போ நானும் உங்க ரூட்லயே வரேன். கடவுள் மட்டும் என்ன எப்பவும் மன்னிச்சாரா ? லூசிபரைப் புடிச்சு பாதாளத்துல எறியலையா ? ஆதாம் ஏவாளை அடிச்சு துரத்தலையா ? மன்னிச்சா விட்டாரு ? இல்லையே.
டாக்டர் : பீட்டர். ஒண்ணு சொல்றேன். உனக்கு என்ன நோய் இருந்தாலும் என் கிட்டே வந்து சொன்னா தான் மருந்து தர முடியும். அதே மாதிரி தப்பு பண்ணினா ஆண்டவர் கிட்டே போய் வேண்டினா தான் மன்னிப்பு கிடைக்கும். நீ சொல்ற ரெண்டு பேருமே கடவுள் கிட்டே மன்னிப்பு கேக்கல. அதனால தான் துரத்தப்பட்டாங்க. தப்பான எக்ஸாம்பிளை வெச்சுட்டு, சரியான வாழ்க்கையை வீணாக்காதே.
பீட்டர் : எனக்கென்னவோ.. கடவுள் பாரபட்சம் காட்டறவருன்னு தான் தோணுது. பழைய ஏற்பாட்டில ஒரு மாதிரி, புதிய ஏற்பாட்டில ஒரு மாதிரி.. இந்த காலத்துல ஒரு மாதிரி, அந்த காலத்துல ஒரு மாதிரி.
டாக்டர் : இல்லப்பா.. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அதுல சந்தேகமே வேண்டாம். நாம புரிஞ்சுக்கற விதத்துல வேணும்ன்னா தப்பு இருக்கலாம், ஆனா அவர் செயல்படற விதத்துல தப்பே இல்லை.
பீட்டர் : இறைவாக்கினர்கள் சொல்லியிருக்காங்க.. ஆனா நேர்ல போய் பாத்தா தான் தெரியும்.
டாக்டர் : சரி.. அப்போ நேர்ல போய் பாத்துட்டு வாங்க, நீங்க ரெண்டு பேரும்.
பீட்டர் : என்ன டாக்டர் சொல்றீங்க ? ஜோக் அடிக்கிறீங்களா ? அதெல்லாம் பழைய காலம்.
டாக்டர் : என்கிட்டே… ஒரு டைம் மெஷின் இருக்கு. எங்களோட ஆர்&டி டெவலப்மென்ட் சென்டர்ல ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் வெச்சு உருவாக்கியிருக்கோம். யாருக்கும் தெரியாது. வேணும்ன்னா உங்களை நான் அதுல அனுப்பறேன். நீங்க போய் இயேசு காலத்துல என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வாங்க.
ராபர்ட் : என்ன டாக்டர்.. டைம் மிஷினை ஏதோ வாஷிங் மெஷின் மாதிரி சொல்றீங்க.
டாக்டர் : ஹா..ஹா.. இப்போ டைம் மெஷினெல்லாம் நீங்க நினைக்கிற மாதிரி கார் மாதிரி எல்லாம் கிடையாது. அது ஒரு கிளவுஸ் மாதிரி தான் இருக்கும். இன்னிக்கு நைட் நீங்க வாங்க. யார் கிட்டயும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம். உங்களை நேரா நான் இயேசுவோட காலத்துக்கே அனுப்பறேன். பாத்துட்டு வந்து சொல்லுங்க.
ராபர்ட் : ஏதோ கத விடறீங்கன்னு நினைக்கிறேன். எதுக்கும் நைட் வரோம் டாக்டர்..
டாக்டர் : கண்டிப்பா.. பை ..பை.
காட்சி
2
( ராபட்டும், பீட்டரும் பழைய காலத்துக்கு வந்திருக்கின்றனர் )
பீட்டர் : டேய்… இப்போ எங்கடா வந்திருக்கோம்.
ராபர்ட் : தெரியலையேடா.. ஏதோ நான் ஜிபிஎஸ் யூஸ் பண்ணி, உன்னை இங்கே கூட்டிட்டு வந்தது மாதிரி என்கிட்டே கேக்கறே. அந்த டாக்டர் தான் ஏதோ பண்ணிட்டிருக்காரு.
பீட்டர் : ஆமாடா… டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் மாதிரி நம்மை எங்கயோ பார்சல் பண்ணி அனுப்பிட்டாரு போல.
பீட்டர் : ஆமா நம்ம கையில அவர் ஏதோ ஒரு கிளவுஸ் போட்டு விட்டாரே… தானோஸ் மாதிரி.. அது எங்கே போச்சு ?
ராபர்ட் : அது டைம் சேஞ்ச் ஆனா இன்விசிபிள் ஆயிடும்ன்னு சொன்னாருல்ல. லேங்குவேஜ் கூட நாம போற இடத்துக்கு தக்கபடி மாறிடும் ந்னு சொன்னாரு. டெஸ்ட் பண்ணி பாக்கணும்.
ராபர்ட் : வெயிட் பண்ணுடா.. யாரோ வராங்க.. யாருன்னு பாப்போம்.
( மூன்று பேர் வருகிறார்கள் )
ந 1 : டேய் சீக்கிரம் போய் கோணி தயார் பண்ணணும். இந்த நேரத்துல கோணி கிடைக்குமா தெரியல.
ந 2 : ஆமாமா.. அதையெல்லாம் தூக்கிக் கடாசிட்டு, நல்ல நல்ல ஆடைகள் தானே போட்டுட்டு திரிஞ்சோம். இப்போ நமக்கு வந்த சோதனையைப் பாரு….
ந 3 : இப்போ சாம்பல் வேற தேடணுமே… அதெல்லாம் இந்த ஊர்ல இப்போ இருக்கான்னே தெரியல…
ந 1 : ஆமாடா.. ஊர்ல நாம ரொம்ப தான் ஆட்டம் போட்டுட்டு திரிஞ்சோம். இல்லாத பாவம் எல்லாம் செஞ்சிட்டு திரிஞ்சோம்.
ந 2 : இப்போவாச்சும் நமக்கு புத்தி வந்துச்சே… அதுக்கு அந்த மனுஷனுக்கு தான் நன்றி சொல்லணும். கொஞ்சம் திருந்த வேண்டிய காலம் வந்துச்சு.
பீட்டர் : ஐயா.. கூல் டவுன்.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகறீங்க.
யோனா : பின்னே.. என்ன பண்ண சொல்றீங்க ? சொல்ற பேச்சைக் காப்பாத்தறதே இல்லை. கடைசில நமக்கு தான் அவமானம்.
ராபர்ட் : என்ன பேச்சு ? யாரு காப்பாத்தல ?
யோனா : கடவுளைத் தான்யா சொல்றேன்.சொல்றது ஒண்ணு செய்றது ஒண்ணு. அவரை நம்பி போய் இப்போ நான் பொய் சொன்னவனாயிட்டேன்.
ராபர்ட் : ஐயா.. நீங்க புள்ளி தான் போட்டுட்டிருக்கீங்க. இன்னும் கோலம் போடல. விஷயத்துக்கு வாங்க.
யோனா : நாப்பது நாள்ல இந்த நாட்டை அழிப்பேன்னு சொன்னாரு கடவுள். ஆனா அவரு அப்படி செய்ய மாட்டாருன்னு தெரியும். அதனால எஸ்கேப் ஆகி தர்ஷீஸ் போற கப்பல்ல ஏறினேன். அவரு என்னை இங்கே நினிவேல கொண்டு வந்து விட்டாரு.
பீட்ட்ர் : ஓ… வாவ்.. நீங்க மிஸ்டர் யோனா ! ஹாய்.. ஹௌ ஆர் யூ. ( கை கொடுக்கிறான் )
ராபர்ட் : ஆமா. அது தெரியும். அப்புறம் மீன் வந்து முழுங்கிடுச்சு. மீனோட வயிற்றுக்கு உள்ளே மூணு நாள் இருந்தீங்க.
யோனா : அதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? புரியலையே
பீட்டர் : அது மட்டுமா ? நீங்க மீனோட வயிற்றில இருந்து “என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.” ந்னு தானே செபம் பண்ணினீங்க
யோனா : (தலைவணங்கி ) ஐயா.. நீங்க கண்டிப்பா தீர்க்கத் தரிசி தான். நீங்க இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டே ஆகணும். நாப்பது நாள்ல அழிப்பேன்னு சொல்லிட்டு இப்போ அழிக்க மாட்டாராம்.
பீட்டர் : ஏன் ? ஏன் கடவுள் அப்படி பண்றாரு ? வாக்கு மாறாதவராச்சே அவர்.
யோனா : ஆமா.. கோபப்படுவாரு. அப்புறம் மக்கள் மனம் திருந்தி அவர் கிட்டே வந்தா மனம் மாறி மன்னிச்சுடுவாரு. அவருக்கு இளகிய மனசு. அது எனக்குத் தெரியும். எப்படியும் அசீரியர்கள் அழியணும்ன்னு தான் நான் நினிவேக்கு வராம ஓடினேன்.
பீட்டர் : ஐயா.. கடவுள் அவ்ளோ இளகிய மனசுக்காரரா ? அவரு எல்லாரையும் மன்னிக்கிறவரா ?
யோனா : ஏன்பா ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கறே. அவரு மக்கள் மேல ரொம்ப அன்பு காட்டறவரு. அவரை விட்டு விலகிப் போனா கோச்சுப்பாரு, அவரை நோக்கி ஓடிப்போனா பழசை எல்லாம் மறந்துட்டு அரவணைப்பாரு.
ராபர்ட் : ஊதாரி மைந்தன் உவமைல இயேசு இதைத் தான் சொல்லுவாரு, இல்லையா பீட்டர் ?
யோனா : அது யாரு ஊதாரி ? அது யாரு இயேசு ? குழப்பாதீங்க.. என்னை தடுக்காதீங்க. நான் ஊருக்கு வெளியே போய் உக்கார போறேன். அவரு நாட்டை அழிப்பாரா இல்லையான்னு பாக்கணும்.
பீட்டர் : ஆமா.. நீங்க அங்க போய் ஒரு பந்தல் போட்டு உக்காருவீங்க.
ராபர்ட் : ஒரு ஆமணக்கு செடி முளைக்கும், ஒரே நாள்ல அது வளரும்.
பீட்டர் : அடுத்த நாளே ஒரு புழு அதை அரிக்கும்…
ராபர்ட் : அனல் காற்று பயங்கரமா அடிக்கும்.
பீட்டர் : நீங்க .. ஐயோ நான் சாகணும்ன்னு நினைப்பீங்க.
ராபர்ட் : அப்போ கடவுள் வந்து நீ நடாத ஆமணக்கு செடிக்காக இப்படி வாதாடறியே.. என்னோட இலட்சக்கணக்கான பிள்ளைகளுக்காக நான் இரங்க மாட்டேனான்னு சொல்வாரு.
பீட்டர் : நீங்களும் ஓக்கே ந்னு சைலன்ட் ஆயிடுவீங்க
யோனா : நில்லுங்க..நில்லுங்க.. நீங்க என்ன சொல்றீங்க ?
பீட்டர் : நாங்க நடக்கப் போறதைப் பற்றி பேசறோம்.
யோனா : புரியலையே
ராபர்ட் : அதை விடுங்க.. இந்த மீனோட வயிற்றில இருந்தீங்களே ? நல்ல வசதியா இருந்துச்சா ? குளிரா இருந்துதா ? சூடா இருந்துதா ?
பீட்டர் : ஏண்டா இப்படியெல்லாம் கேக்கறே .. உட்டா உள்ளே அட்டாச்ட் பாத்ரூம் இருந்துதான்னு கூட கேப்பே போல இருக்கு. பாரு பெரிய தீர்க்கத்தரிசி, அவரே கோச்சுகிட்டு போயிட்டாரு..
பீட்டர் : சார்.. யோனா சார்.. ஐயா… ஐயா ( அழைக்கிறான் )
திரு விவிலியத்திலுள்ள நூல்களில் சுவாரஸ்யமான நூல்களின் பட்டியலை எடுத்தால் அதில் நிச்சயம் எஸ்தர் நூலுக்கு ஒரு தனியிடம் உண்டு. ஒரு பரபரப்பான நாவலுக்குரிய அத்தனை அம்சங்களும் இதில் உண்டு.
பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்கள் தான் பெண்களின் பெயர்களைத் தலைப்பாகக் கொண்டிருக்கின்றன. ஒன்று ருத், இன்னொன்று எஸ்தர். பைபிளில் உள்ள நூல்களில் இரண்டே இரண்டு நூல்களில் தான் கடவுளின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. ஒன்று உன்னத சங்கீதம், இன்னொன்று இந்த எஸ்தர் நூல் !
வாக்களிக்கப்பட்ட நாட்டிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டு வாழ்ந்த காலத்தில் தான் இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க இது வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே நடந்த கதை தான். அப்படிப்பட்ட களத்தில் அமைந்த பிற நூல்களாக எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களைச் சொல்லலாம்.
எஸ்தர் நூலின் சாரம்சம் இது தான். அகஸ்வேர் மன்னன் இந்தியா முதல் எகிப்து வரை விரிந்து பரந்த மாபெரும் வலிமையான சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கிறான். தன்னுடைய வீர தீர பராக்கிரமங்களை எல்லோருக்கும் பறை சாற்ற மாபெரும் விருந்தொன்றை அளிக்கிறான். அந்த அரசவையில் அரசி வஸ்தி ஆட வேண்டும் என அழைப்பு விடுக்கிறான்.
அரசனின் அழைப்பை வஸ்தி நிராகரிக்கிறாள். மன்னனையே மனைவி மதிக்காவிடில் எந்த மனைவி தான் கணவனை மதிப்பாள் என விவாதம் நிகழ்கிறது. வஸ்தி அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுகிறாள். அந்த இடத்துக்கு இன்னொரு இளம் கன்னிப் பெண் தேடப்படுகிறாள்.
அந்த இடத்தில் மொர்தக்காய் எனும் யூதரிடம் ஆதரவாய் இருக்கும் எஸ்தர் எனும் பெண் வருகிறாள். பல்வேறு தயாரிப்பு நிகழ்வுகளுக்குப் பின் அவள் அரசியாகிறாள். பிற இன நாடு ஒன்றின் அரசியாகிறாள் யூதப் பெண். உண்மை வெளிப்பட்டால் உயிருக்கே ஆபத்து எனும் நிலை.
மொர்த்தக்காய்க்கு அரச வாயிலில் நிற்கும் பணி. அவரது வளர்ப்பு மகளுக்கு அரவையின் மிக உயரிய நிலை. அப்போது வருகிறான் வில்லன் ஆமான். அரசனின் உயரதிகாரி. எல்லோரும் அவனுக்கு தலை குனிந்து வணக்கம் செலுத்துகின்றனர். ‘ஆண்டவரை மட்டுமே வணங்குவேன்’ என மொர்த்தக்காய் வணங்காமல் நிற்கிறார்.
ஆமானுக்கு சினம் தலைக்கேறுகிறது. மொர்த்தக்காயை மட்டுமல்ல யூத இனத்தையே ஒட்டு மொத்தமாய் அழிக்க வேண்டும் என திட்டமிடுகிறான். அரசனின் அனுமதியும் பெற்று விடுகிறான். மொர்த்தக்காயைக் கொல்ல மிகப்பெரிய கழுமரத்தையும் உண்டாக்குகிறான்.
அரசி எஸ்தர் இந்த நிலையை மாற்ற முயல்கிறார். யூதர்கள் அனைவரும் இறைவனை நோக்கி மன்றாடுகின்றனர். அந்த சூழலில் மொர்த்தக்காய் ஒரு முறை மன்னனை ஆபத்திலிருந்து காப்பாற்றிய நிகழ்வு தெரிய வருகிறது. ஆமானைக் கொண்டே மொர்த்தக்காயை மரியாதை செலுத்த வைக்கிறார் மன்னன்.
எஸ்தர் அரசி திட்டமிட்டு விருந்தொன்றை உருவாக்கி மன்னனையும் ஆமானையும் அழைக்கிறாள். அந்த விருந்தில் ஆமானின் மீது மன்னனுக்கு கோபம் உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறாள். ஆமான் மொர்த்தக்காய்க்காய் தான் உருவாக்கிய கழுமரத்தில் உயிர் விடுகிறான்.
இந்தக் கதையின் முழுமையான சுவாரஸ்யத்தைப் பெற்றுக் கொள்ள எஸ்தர் நூலை ஒரு முறை வாசித்தாலே போதும்.
கடவுள் எப்படி சூழல்களை தமக்குப் பிரியமானவர்களுக்குச் சாதகமாக மாற்றுகிறார் என்பது வியப்பூட்டும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை மட்டுமே வணங்கவேண்டும் எனும் மனநிலை கொண்ட மன்னன், கடைசியில் யூதர்கள் மீது யாரும் கை வைக்கக் கூடாது என மாறுகிறார்.
எதேச்சையாக நடப்பதைப் போல நடக்கின்ற விஷயங்கள் உண்மையில் இறைவன் உருவாக்குகின்ற சூழல்கள் என்பதை நாம் இந்த நூலிலிருந்து புரிந்து கொள்ளலாம். எல்லாம் சுமூகமாக மாற ஒரு எதேர்ச்சையான நிகழ்வு தான் காரணம். ஒரு இரவில் மன்னனுக்கு தூக்கம் வரவில்லை. அவர் குறிப்பேட்டை வாசிக்கிறார். தனது உயிரை மொர்த்தக்காய் காப்பாற்றியதை அறிகிறார். அவரை கௌரவிக்க விரும்புகிறார். அந்த தூக்கமற்ற ஒரு இரவு தான் யூதர்களை ஒட்டு மொத்தமாய்க் காப்பாற்றியது.
மோசேயின் காலத்தில் ஆண் பிள்ளைகளெல்லாம் படுகொலை செய்யப்பட மோசே ஒரு கூடையில் வைக்கப்பட்டு நதியில் மிதக்க விடப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
பெத்லேகேமில் இயேசு பிறந்த போது, பாலகர்களையெல்லாம் படுகொலை செய்ய அரசன் ஆணையிட்டான். இயேசு இரவில் ஒரு கனவின் மூலம் காப்பாற்றப்பட்டார். எஸ்தர் கதையில் யூத இனத்தை தூக்கமற்ற ஒரு கனவு காப்பாற்றுகிறது.
இயேசுவின் வருகையைத் தடுக்க நினைக்கின்ற சாத்தானின் நிகழ்வாக இது இருந்திருக்கலாம். எனவே தான் இது விவிலியத்தில் இடம்பெற்றிருக்கிறது.
வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வெளியே இருக்கும் நாம் உண்மையும், இறையச்சமும் உடையவர்களாய் இருக்க வேண்டும் என்பதையும், கடவுள் தனிநபர்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவார் என்பதையும் இந்த நூல் நமக்குப் பாடமாகத் தருகிறது.