Posted in Articles, WhatsApp

நான் பற்ற வைத்த நெருப்பு

என்னைச் சூழ்ந்துகொண்டு
திணறடித்த தீயினின்றும்
நான் மூட்டிவிடாத நெருப்பின்
நடுவினின்றும் என்னைக்
காப்பாற்றினீர்

சீராக் 51:4

Image result for mistake

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். ஹெல்மெட் போடவில்லை என்பதற்காக ஒருவருக்கு காவல்துறை அதிகாரி அபராதம் விதித்தார். அவர் எவ்வளவோ மன்றாடியும் அந்த அபராதத்திலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. கோபம் கொண்ட அவர், நேரடியாகச் சென்று அந்த காவல்துறை அதிகாரியின் காவல் நிலையத்துக்கு வருகின்ற மின் இணைப்பைத் துண்டித்தார். காரணம் அவர் ஒரு மின்வாரிய அதிகாரி. அந்த காவல் நிலையம் சரியான மின் கட்டணத்தைச் செலுத்தவில்லையாம். விக்கிரமாதித்யன் கதையைப் போல, யார் செய்தது சரி ? எனும் கேள்விக்கு இந்த நிகழ்ச்சி முன்னுரை எழுதுகிறது இல்லையா ?

நமக்கு ஒரு சிக்கல் வந்தால் உடனே அதற்கான சலுகை நமக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கிறோம். அது தெரிந்தே செய்த தவறானாலும், தெரியாமல் செய்த பிழையானாலும் நாம் தப்ப வேண்டும் என விரும்புகிறோம். அதற்கு “ஆபத்து காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு” எனும் வசனத்தை உடனே உதவிக்கும் அழைக்கிறோம்.

உண்மையில் நாமாகவே செய்கின்ற தவறுகளுக்கு இறைவனின் உடனடி உதவி கிடைப்பதில்லை. அதை விவிலியம் பல இடங்களில் தெளிவாக விளக்குகிறது.

பழைய ஏற்பாட்டைப் பொறுத்தவரை பாவங்களுக்குக் கழுவாயாக விலங்குகளோ, பறவைகளோ பலியிடப்பட்டன. ஆனால் அவை எல்லாமே, “தெரியாமல் செய்த” பாவங்களுக்கான பலிகள். தெரிந்தே செய்த பாவங்களுக்கு மன்னிப்பு இருந்ததில்லை என்பது தான் உண்மை.

புதிய ஏற்பாட்டில் இயேசு சொல்லும் போதும் “நீதியின் நிமித்தம் துன்பப்படுவதையும்”, “இறைவனின் பொருட்டு துன்பப்படுவதையும்” பேசுகிறார். “என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே (மத் 5: 11). என்கிறார் இயேசு. அப்போது நமக்கான பிரதிபலன் கிடைக்கிறது.

ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு எனும் சங்கீதம் 50 எதைப் பேசுகிறது என்பதை முழுமையாய்ப் படித்தால் புரிந்து கொள்ளலாம். அது எல்லா துன்பங்களுக்குமானதல்ல. பொல்லாரைப் பார்த்து அடுத்த வசனத்தில், “என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?” என்கிறார். இறைவனோடு இணைந்து அவருக்குப் பிரியமான வாழ்க்கை வாழும்போது எழுகின்ற துன்பங்களை இறைவன் மாற்றுகிறார்.

சீராக்கின் நூல் அதை இன்னும் அழகாக, “நான் மூட்டி விடாத நெருப்பு” என குறிப்பிடுகிறது. நெருப்பில் சிக்கித் தவிக்கின்றேன். ஆனால் அந்த நெருப்பு நான் மூட்டி விடாத நெருப்பு. எனது துணிகரப் பாவத்தினால் விளைந்த நெருப்பல்ல. அத்தகைய சூழலில் இருந்து இறைவன் நம்மை காக்கின்றார். நமது வேண்டுதல்களை உடனே நிறைவேற்றுகிறார். நானே பற்ற வைத்த நெருப்பில் நான் துயரப்படுவது எனது தேர்வு, அதை இறைவனின் அருளோடு இணைத்துப் பேசுவது அறியாமை.

எனவே, துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் எனும் வசனத்தை இழுத்துக் கொண்டு, தவறான செயல்களுக்காக துயரம் அனுபவிப்போமெனில் நாம் அனுதாபத்துக்குரியவர்களே.

கடைசியாக, தெரிந்தே செய்யும் பாவங்களை இறைவன் மன்னிப்பதில்லையா ? எனும் கேள்விக்கு ஒரு அன்பான தந்தை மகன் உறவை எடுத்துக் கொள்ளலாம். மகன் தெரியாமல் செய்யும் பிழைகளை தந்தை உடனடியாக மன்னிக்கிறார். தெரிந்தே பாவம் செய்கையில் துயரமடைகிறார். தொடர்ந்து கீழ்ப்படியாமல் பாவம் செய்யும் போது கண்டிக்கிறார். எனினும், மனம் திருந்தி மீண்டும் தந்தையிடன் வருகின்ற எந்த மகனையும் தந்தை தள்ளி விடுவதில்லை.

உலகிலுள்ள தந்தையே இப்படியெனில்,
உலகத்துக்கே தந்தையானவர் எப்படியிருப்பார் ?

*
சேவியர்

 

#WriterXavier, #ChristianArticles, #Sin, #Jesus

One thought on “நான் பற்ற வைத்த நெருப்பு

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s