Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 26 எசேக்கியேல்

Image result for book of Ezekiel

அதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் எசேக்கியேல் என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான்.

எசேக்கியேல் எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் நாற்பத்தெட்டு அதிகாரங்களும், 1273 வசனங்களும், 39407 வார்த்தைகளும் அமைந்துள்ளன.

எசேக்கியேல் நூலின் சில பகுதிகள் மிகவும் பிரபலமானவை. உதாரணமாக உலர்ந்த எலும்புக் கூடுகள் எசேக்கியேல் இறைவாக்கு உரைத்த போது உயிர்பெற்று எழுந்த புதுமை நிகழ்வு. அதே போல, “பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள்” எனும் வசனமும் மிகவும் பிரபலமானது.

எசேக்கியேல் நூலை முழுமையாகப் படித்தால் இறைவனின் அன்பு நூல் முழுவதும் இழையோடுவதைக் காண முடியும். நமது வேண்டுதல்களுக்கு அவர் எப்படி செவிகொடுக்கிறார். அவர் எப்படி நம்மை அரவணைக்கிறார். நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார், போன்றவற்றையெல்லாம் புரிந்து கொள்ளவேண்டுமெனில் எசேக்கியேல் நூலை நாம் முழுமையாய் வாசிக்க வேண்டும்.

பன்னிரண்டு கோத்திரங்களான இஸ்ரேலின் பத்து கோத்திரங்கள் வடக்கே “இஸ்ரேல்” என்றும் இரண்டு கோத்திரங்கள் தெற்கே “யூதா” என்றும் எல்லை பிரித்து ஆட்சியமைத்து வந்தன. அதில் இஸ்ரேல் நாடு இறைவாக்கினர்களின் வார்த்தைகளை நிராகரித்து பாவத்தின் மேல் பாவம் செய்து குவித்தது. எனவே அவர்கள் கடவுளால் கைவிடப்பட்டு அசீரியர்களால் நாடுகடத்தப்பட்டனர்.

தென் நாடான யூதா இறைவனோடு நெருங்கியும், விலகியும் வாழ்ந்து வந்தது. பிற்காலங்களில் அதுவும் இறைவனை விட்டு விலகி வேற்று தெய்வங்களின் காலடியில் விழுந்தது. எசாயா போன்ற பெரிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளும் அவர்களது இதயத்தில் விழவில்லை.

எசேக்கியேல் இறைவாக்கினரும் கடைசி காலத்தில் யூதாவில் இறைவாக்கு உரைத்தார். ஆனால் அவரது வார்த்தைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. யூதா பாவத்தில் மூழ்கியது. அவர்கள் பாபிலோனியரின் கைகளில் சிக்கிக் கொண்டு, பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

கடவுள் எசேக்கியேலிடம், ‘மக்கள் கேட்கமாட்டார்கள், மனம் மாற மாட்டார்கள், உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து இறைவாக்கு உரைக்க வேண்டும் என கட்டளை கொடுத்திருந்தார். எனவே மக்கள் இறைவார்த்தையைக் கேட்காமல் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்துக் கொண்டபோதும் எசேக்கியா தொடர்ந்து இறைவாக்குரைத்தார்.

பாபிலோனுக்கு மக்கள் நாடுகடத்தப்பட்ட காலகட்டத்தில் பாபிலோன் பகுதியில் இருந்து இறைவாக்குரைத்தார். எனினும் தொலைவில் இருந்த எருசலேமில் என்ன நடக்கிறது என்பதை தீர்க்கத்தரிசனமாய் காணும் வரம் அவருக்கு இருந்தது. ஒருமுறை ஒரு மனிதர் எருசலேமில் கீழே விழுந்து இறந்து போவதைக் காட்சியாகக் கண்டார், அதே நேரத்தில் அந்த மனிதர் அதே போல இறந்தும் போனார்.

நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் காட்சிகளாய் காண்பதிலும் எசேக்கியேல் இறையருள் பெற்றிருந்தார். பைபிளில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கத்தரிசனங்கள் உண்டு. அதில் 593 எதிர்கால தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறிவிட்டன. இந்த தீர்க்கத்தரிசனங்களில் பெருமாலானவை இருப்பது எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களில் தான்.

எசேக்கியேலின் இறைவார்த்தைகள் மூன்று கட்டங்களாக வருகின்றன. அவருடைய முப்பது வயதுக்கும், முப்பத்து மூன்று வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் முதல் இறைவாக்கு காலம் வருகிறது. எருசலேமின் அழிவு தான் அதன் முதன்மையான விஷயமாய் இருக்கிறது. மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் பாடம் தொடர்ந்து உரைக்கப்படுகிறது. அதன்பின் யூதா பாபிலோனின் ஆட்சிக்குள் அடங்கிவிட்டது.

அடுத்த கட்டமான இறைவாக்கு அவரது 36, 37 வயதுகளில் வருகிறது. இப்போது ஏருசலேமைச் சுற்றி இருக்கின்ற நாடுகளைக் குறித்தும் அவர் இறைவாகு உரைக்கிறார். அந்த காலகட்டத்துக்குப் பின் இறைவன் அவரை இறைவாக்கு உரைக்க நீண்டகாலம் அனுமதிக்கவில்லை.

மூன்றாவது கட்டமாக அவரது 50 வது வயதில் இறைவாக்கு உரைக்க ஆரம்பித்தார். மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே அவரது அந்த செய்தியின் அடிப்படை. வறண்டு எலும்புக் கூடாய் கிடக்கும் மக்கள் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் எனும் செய்தி அறிவிக்கப்பட்டது. எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதைக் குறித்த இறைவாக்கும் அவரிடம் இருந்தது. ஆனாலும் அவர் அதைக் காணுமுன் இறந்து விட்டார்.

மக்கள் சிலைவழிபாடு செய்வதை எதிர்த்தார். நாடு முழுவதும் ஏழைகள் சுரண்டப்படுவதைக் கண்டு கடுமையான இறைவாக்குகளை உரைத்தார். அவர்களுடைய நன்றி இல்லாத நிலமையையும் கடுமையாகக் கடிந்து கொண்டார்.

இறைவன் தீர்ப்பிடுவார் என்பதையும், இறைவன் பழிவாங்குவார் என்பதையும், மீண்டும் மக்களை ஒருங்கிணைப்பார் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. விவிலியத்தின் கடைசி நூலான திருவெளிப்பாடு நூலுக்கான சாவி இந்த எசேக்கியேல் நூலில் இருப்பதாக இறையியலார் குறிப்பிடுகின்றனர்.

Posted in Christianity, SAINTS

Saints Poem : புனித வின்சென்ட் தே பவுல்

 

புறக்கணிப்புகளின்
பின்வாசலாய்
பிரான்சில்
ஒரு ஏழ்மை குடும்பம்.

நான்கு சகோதரர்கள்
இரண்டு சகோதரிகளுடன்
வறுமையின்
வரப்புகளில் நடக்கும்
விவசாயக் குடும்பம்.

கல்வி என்பதே
கனவாகிப் போன
பட்டினியின் படிக்கட்டுகளே
அவரது
பால்யத்தின் எதார்த்தம்.

நிலத்தைப் பண்படுத்தும்
ஆதாமின் பணியையும்,
ஆடுகளை மேய்க்கும்
புதிய ஆதாமின் பணியையும்
இவர் செய்தார்.

கடவுளின்
கருணை இமைகள்
சிமிட்டியதால்
கல்வி கற்கும் வாய்ப்பு
கைகூடியது.

ஆன்மிகத்தின்
இழைகள் அவரை
இறுக்கிக் கட்டின.

இறையன்பின்
நீரூற்று
அவருக்குள் ஆழியானது.

பத்தொன்பது வயதில்
குருவானார்.
அன்பின் உருவானார்.

இரக்கம் அவருக்குள்
பெருமழையாய் சொரிந்தது.
நேசம் அவருக்குள்
பனிமலையாய் சரிந்தது

ஏழைகளுக்குச் செய்தவற்றை
எனக்கே செய்தீர்கள்
எனும்
இறைவார்த்தை அவரை
வார்த்தெடுத்தது.

ஏழைகளின்
விழி நீர் துடைக்கும்
விரல்கள்
தூய்மையாய் முளைத்தன.

வறுமை வயிறுகளின்
பசிதனை அடக்கும்
மனதின் சன்னல்
திறந்தே கிடந்தது.

ஆதரவற்றோரின்
வலிகளை இறக்கி வைக்கும்
தோள்கள்
தயாராய் இருந்தன.

ஏழைகளின் நடுவே
நற்செய்தி அறிவிக்கும் பணியை
உற்சாகமாய்
தேர்ந்தெடுத்தார்.

ஒரு முறை
கடற்கொள்ளையரால்
கடத்தப்பட்டு,
அடிமை நிலையில்
விற்கப்பட்டாய்.

எந்தப் பறவை
சுமந்து சென்றாலும்
விதை விதைதானே !

எந்த நிலத்தில்
முளைத்து வளர்ந்தாலும்
மரம் மரம் தானே !

அடிமை வின்சென்ட்
தன்
எஜமானனுக்கு
இறைவார்த்தை சொன்னார்.

இறைவாக்கு
விடுதலை கொடுத்தது.
இறை பணிக்கு
சிறகு முளைத்தது

காலம் இவரை
போர்க்கப்பலில்
இறை பணிக்கு அனுப்பியது.

தோட்டாக்களின்
மத்தியில்
தூதுவனாய் நின்றார்.

கைதிகளின்
மத்தியில்
கடவுளோடு நின்றார்

குற்றவாளிகளுக்கு
இயேசுவை
அறிமுகம் செய்தார்.
வெறியின் விழிகளை
நெறியின் மொழிகளால் வென்றார்.

தண்ணீரில்
பயணித்தவர்கள்
கண்ணீரில்
மனம் திரும்பினார்கள்.

மனித நேயப் பணியை
விரிவாக்க
தனியனாய் முடியாதென
மறைபணி சபையை
ஆரம்பித்தார்

பெண்களும் பணியாற்ற
புது சபையாய்
பிறரன்புப் புதல்வியர்
பிறந்தது.

வின்சென்டின்
கனவை
சுமந்து திரியும் சுடர்கள்
வின்சென்டியர்கள் ஆனார்கள்.

லாசரைப் போன்ற
ஏழைகளைத் தேடியவர்கள்
லாசரிஸ்ட் ஆனார்கள்.

ஏழைகளின் சிரிப்பில்
இயேசுவை
மகிமைப்படுத்தியவர்
எண்பதாவது வயதில்
பயணத்தை முடித்தார்.

1851ல் துவங்கிய
முதல் சுவடு
1660ல் முற்றுப் புள்ளியானது.

இன்று,
சுமார் நூறு நாடுகளில்
இவருடைய
கனவின் தோட்டம்
கனிகளைக் கொடுக்கிறது.

ஆண்களும் பெண்களும்
இவரது
பணிவின் பணியை
தரணியின் தெருக்களெங்கும்
சுமந்து திரிகின்றனர்.

இவரது
பிறரன்புப் பணிகளால்
பரவசமான
பிரடரிக் ஓசானாம்
1833ல் துவங்கியதே

புனித வின்சென்ட் தே பவுல்
சபை !

மனிதத்தை
நேசிப்போம்,
புனிதரின் வாழ்க்கை
நம்மை
இறைவனிடம் சேர்க்கட்டும்.

*

சேவியர்

Posted in Articles, Sunday School

நாடகம் : எது நம் தேர்வு ?

இரண்டு எஜமானனுக்கு ஊழியம் செய்ய முடியாது.

Image result for serving two masters

( பீட்டர் ஆலயம் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார், அப்போது ஒரு சேகர் வருகிறார் )

பீட்டர் : வாங்க சேகர், சர்ச் போக ரெடியாயிட்டிருந்தேன். என்ன விஷயம் ?

சேகர் : சார், நம்ம மைன்ட்சாஃப்ட் கம்பெனியோட எம்.டி சென்னையில வந்திருக்காரு.

பீட்டர் : ஆமா… தெரியும், நாளைக்கு அவங்களை நாம மீட் பண்றோம். எப்படியாச்சும் இந்த கான்ட்ராக்டை வாங்கியாகணும்.

சேகர் : சார், இந்த கான்ட்ராக்டை வாங்கறதுக்கு நிறைய காம்பெட்டிஷன். உங்களுக்குத் தெரியாததில்லை.

பீட்டர் : எஸ்..எஸ்.. அதனால தான் பிரீசேல்ஸ் டீம் கிட்டே சொல்லி ஒரு பக்கா பிரசன்டேஷன் பண்ண சொல்லியிருக்கேன். டோன்ட் வரி…

சேகர் : அப்படியெல்லாம் பிராசஸ் படி போனா நடக்காது சார்.

பீட்டர் : ஏன் அப்படி சொல்றீங்க ?

சேகர் : என்னசார், உங்களுக்குத் தெரியாததா ? நம்ம கம்பெனி நம்ம காம்பெட்டிஷன் கம்பெனிகளோட ஒப்பிடும்போ சின்ன கம்பெனி. இந்தியால மட்டும் தான் இருக்கு. மத்த கம்பெனிங்க எல்லாம் பெரிய பெரிய கம்பெனிங்க.

பீட்டர் : ம்ம். அது உண்மை தான். அதுக்கு என்ன பண்ண முடியும் ?

சேகர் : அதுக்கு ஒரு வழி பண்ணியிருக்கேன் சார். மைன்ட்சாஃப்ட் எம்டி தாஜ் ஹோட்டல்ல தான் தங்கியிருக்காரு. அவரோட செக்கரட்டரியைப் புடிச்சு ஒன்பதரைக்கு ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கியிருக்கேன். நாம அவரை ஹோட்டல்ல போய் மீட் பண்ணினா காரியம் நடக்கும்.

பீட்டர் : என்ன சொல்றீங்க. நாளைக்கு தான் நமக்கு மீட்டிங் இருக்கே.

சேகர் : சார் அதெல்லாம் அபிஷியல். நாம அன்னபிஷியலா போய் அவரை கவனிச்சோம்ன்னு வெச்சுக்கோங்க. நமக்கு கண்டிப்பா பிஸினஸ் கிடைக்கும். நான் நேற்றே அவரோட செக்கட்டரி கிட்டே பேசி அவரோட வீக் பாயின்ட்ஸ் என்னன்னு லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன். அதுல ஒரு நாலஞ்சு விஷயத்தை நாம நிறைவேற்றி குடுத்துட்டோம்ன்னா பிஸினஸ் நமக்கு தான்.

பீட்டர் : அப்படியா சொல்றீங்க ? நீங்க படு பாஸ்டா இருக்கீங்களே. அப்படி என்னென்ன வீக்னெஸ் அவருக்கு இருக்கு ?

சேகர் : ( அவருடைய காதில் எதையோ சொல்கிறார் )

பீட்டர் : சே… இதெல்லாம் தப்பில்லையா ? லஞ்சம் குடுத்து கான்ட்ராக்டை வாங்கற மாதிரி ஆவாதா ? கடவுளுக்கு எதிரான செயல் இல்லையா இது ?

சேகர் : ஏன் இதை தப்புன்னு சொல்றீங்க ? இது ஒரு ஸ்ட்ராட்டஜி, திட்டம், உத்தி, தந்திரம் அவ்வளவு தான். அவருக்குத் தேவையானதை கொடுக்கிறோம், நமக்கு தேவையானதை வாங்கறோம். அவ்ளோ தான்.

பீட்டர் : ஒன்பதரைக்குன்னா நான் சர்க்கு வேற போணுமே ?

சேகர் : சார்… பழம் நழுவி பால்ல விழுந்திருக்கு. இப்போ விட்டீங்கன்னா இந்த வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. சர்ச் அடுத்தவாரம் போய்க்கலாம், எம்டியை அடுத்த வாரம் பாக்க முடியாது.

பீட்டர் : அதுவும் சரிதான். சாயங்காலம் கூட சர்ச்சுக்கு போய்க்கலாம். இந்த கான்ட்ராக்ட் கிடைச்சா நமக்கு அடுத்து ஒரு வருஷத்துக்கு இன்கம் பிரச்சினை இல்லை.

சேகர் : அதனால தான் சார் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த மீட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன். எல்லாம் கைகூடிச்சுன்னா ஹி..ஹி ( தலையைச் சொறிகிறார் )

பீட்டர் : இந்த கான்ட்ராக்ட் கிடைக்கட்டும், உனக்கு நிச்சயம் ஒரு ஸ்பெஷல் போனஸ் குடுத்துடறேன்.

( அப்போது பீட்டரின் பையன் வருகிறான் )

பையன் : டாடி.. சர்ச் டைமாச்சு.. வாங்க போலாம்.

பீட்டர் : இல்லப்பா.. இன்னிக்கு எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு. நான் வரமுடியாது. நீங்க போயிட்டு வாங்க.

பையன் : போங்கப்பா.. நீங்க போகலேன்னா நானும் போகல. அடுத்தவாரம் போய்க்கலாம்.

பீட்டர் : சரி.. அப்போ வெளியே எங்கேயும் ஓடிட்டு திரியாம நல்ல புள்ளையா வீட்ல இரு.

பையன் : சரிப்பா… நான் கொஞ்ச நேரம் ஃபோர்ட்நைட் கேம் விளையாடறேன். இன்னிக்கு புதிய ஸ்கின் எல்லாம் குடுக்கிறாங்க‌

பீட்டர் : அம்மா ?

பையன் : ஆமா.. நீங்க வரலேன்னா என்னிக்கு தான் அம்மா வந்திருக்காங்க. அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும். ஓய்வு நாள் இல்லையா ? ஓய்வு நல்லது

பீட்டர் : சரி, சரி .. நாங்க கிளம்பறோம். வீட்டை பூட்டிட்டு பத்திரமா இருங்க. வாங்க சேகர், நாம கிளம்புவோம். சண்டேன்னாலே கடவுளோட நாள். எல்லாம் நல்லா முடியட்டும்.

காட்சி 2

( பீட்டர் வீட்டில் சோகமாக அமர்ந்திருக்கிறார், அப்போது நண்பர் வருகிறார் )

பீட்டர் : வா.. ஸ்டீபன்.. உக்காரு

ஸ்டீபன் : என்னடா.. ரொம்ப அவசரமா கூப்டே.. ரொம்ப டல்லா இருக்கே ? என்னாச்சு ?

பீட்டர் : உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்டா.. நம்பிக்கைக்குரிய ஆட்கள்கிட்டே தான் சொல்ல முடியும். அதான் உன்னை கூப்டேன்.

ஸ்டீபன் : சொல்லுடா என்னாச்சு ?பிஸினஸ்ல ஏதாச்சும் பிராப்ளமா ?

பீட்டர் : பிஸினஸ் ஈஸ் ஃபைன் டா.. புது கான்ட்ராக்ட் எல்லாம் போட்டாச்சு… வீட்ல தான் ஒரு பிரச்சினை.

ஸ்டீபன் : சண்டையா ? அதெல்லாம் சகஜம் தானேடா ?

பீட்டர் : இல்லடா.. என் பையன் இருக்கான்ல.. அவன் கம்ப்யூட்டர் கேம்ஸ்க்கு அடிமையாயிட்டான்டா. அதை சரிபண்ணணும்ன்னு அவனோட கம்ப்யூட்டரை பார்த்தா, அவனோட நடவடிக்கைகளெல்லாம் சரியில்லேன்னு புரிஞ்சுது. இந்த வயசுலயே இப்படி கெட்டுப்போயிட்டானேன்னு ஒரே கவலையா இருக்கு. படிக்கிறதுல ஆர்வம் போச்சு. மத்ததுல எல்லாம் ஆர்வம் வந்துச்சு. என்ன பண்றதுன்னே புரியல.

ஸ்டீபன் : ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு. நம்ம பையனா அப்படி ஆயிட்டாம். ம்ம்.. தப்பான பழக்கத்துல போயிட்டா படிப்பெல்லாம் பாழாப்போயிடும்டா.. பைபிள்ல கூட சொல்லியிருக்குல்ல. எவனும் இரண்டு எஜனானுக்கு ஊழியம் செய்ய முடியாதுன்னு.

பீட்டர் : இப்போ என்னடா பண்ணலாம் ? நீ தான் எப்படியாச்சும் அவன்கிட்டே பேசி.. அவனை சரி பண்ணணூம். ஸ்டீபன் அங்கிள் சொன்னா கேப்பான்.

ஸ்டீபன் : முதல்ல.. நீ மாறணும்டா.. பிள்ளைங்க அப்பா அம்மாவைப் பாத்து தாண்டா கத்துப்பாங்க. உன்னோட பிரையாரிட்டீஸை நீ எங்க வைக்கிறியோ அப்படித்தாண்டா பிள்ளைங்களும் வைப்பாங்க.

பீட்டர் : நான் என்னடா பண்ணினேன். நான் தண்ணியடிக்கல, தம்மடிக்க, கெட்ட பழக்கம் ஏதும் இல்லை. சரியா தானே போயிட்டிருக்கேன்.

ஸ்டீபன் : அப்படி நீ நினைக்கிறே. ஆனா உன் லைஃப்ல நீ யாரை முதல்ல வெச்சிருக்கே ? கடவுளையா ? செல்வத்தையா ? கொஞ்சம் யோசிச்சு பாரு.

பீட்டர் : என்னடா சொல்றே.. நான் சர்ச்க்கு மேக்ஸிமம் எல்லா வாரமும் போவேன். சில நாள் மிஸ் பண்ணினாலும் பைபிள் டெய்லி வாசிப்பேன்.. மினிஸ்ட்ரி சப்போர்ட் பண்றேன்…யூ..நோ.. எவ்ரிதிங்..

ஸ்டீபன் : நீ உன்னோட வாழ்க்கைக்கு வெளியே மதில் மாதிரி கடவுளை வெச்சுக்க பாக்கறே… வீடு வேணும்ங்கறது உன்னோட தேடல், அதை கடவுள் பாதுகாக்கணும்ங்கறது உன்னோட எதிர்பார்ப்பு. கார் வாங்கணுங்கறது உன்னோட பிரையாரிட்டி, ஆக்சிடன்ட் வரக்கூடாதுங்கறது உன்னோட வேண்டுதல். பையன் ஸ்போட்ஸ்ல, ஸ்டடிஸ்ல எக்செல் ஆகணுங்கறது உன்னோட எதிர்பார்ப்பு. அதுக்கு கடவுள் ஆசீர்வாதம் தரணும்ங்கறது உன்னோட பிரார்த்தனை. நீ கடவுளை எதுலயுமே முதல்ல வைக்கலையேப்பா. உன் கதையில கடவுள் ஹீரோ இல்லை, ஜஸ்ட் எ சப்போர்ட்டிங் ஆக்டர்.

பீட்டர் : என்னடா சொல்றே… இதெல்லாம் என்னோட கடமை இல்லையா ? ஐ..ஹேவ் டு டூ ஆல் தீஸ்… அன்ட். நான் சேரிட்டி குடுக்கறேன்,மினிஸ்ட்ரி சப்போர்ட் பண்றேன்.. எல்லாம் பண்றேனே.இதெல்லாம் பண்ணாத எத்தனையோ பேர் இருக்காங்களே.

ஸ்டீபன் : பீட்டர். நம்மளால இரண்டு எஜமானுக்கு ஊழியம் செய்யவே முடியாது. கடவுளுக்கும் செல்வத்துக்கும் முதலிடம் குடுக்க முடியாது. நீ ஒரு காயினை டாஸ் பண்றேன்னு வெச்சுக்கோ, ஒண்ணு தலை வரும், இல்லே பூ வரும் அவ்ளோ தான். தலை பாதி, பூ பாதின்னு வராது. கடவுள் கொஞ்சம், செல்வம் கொஞ்சம்ன்னு செலக்டிவ்வா வாழ முடியாது. கடவுள் பாதி, மிருகம் பாதி எல்லாம் கிறிஸ்தவத்துல கிடையாது.

பீட்டர் : நீ என்ன சொல்ல வரேன்னு கொஞ்சம் கொஞ்சம் புரியுது.. பட்…

ஸ்டீபன் : இந்த இஃப் அன்ட் பட் எல்லாம் தூக்கி போடு. நான் என்னோட முழு மனசோட கடவுளை நேசிக்கிறேனா ? அப்படின்னா அது அயலானுக்கு காட்டற அன்பில வெளிப்படும். என்னோட பேச்சிலயும் செயல்லயும் அன்பும், பொறுமையும், மகிழ்ச்சியும், நிம்மதியும், விசுவாசமும் வெளிப்படுதா ? அப்படின்னா உன்னைச் சுற்றி தெய்வீக சமாதானம் இருக்கும். கடவுளோட வார்த்தையை அப்படியே கீழ்ப்படியறியா ? அடுத்தவங்களுக்காக செபிக்கிறியா ? பைபிளை வாசிக்கிறியா , அடுத்தவங்களுக்கும் சொல்றியா ? இதெல்லாம் நீயா யோசிச்சு பாக்கணும் பீட்டர்.

பீட்டர் : புரியுது ஸ்டீபன். நான் கடவுளை என்னோட முதன்மையா வைக்கல. அவரை என் வாழ்க்கையில மையமா வைக்கல. ஹார்ட்ல அவருக்குன்னு ஒரு ரூமை ஒதுக்கி குடுத்திருக்கேன் அவ்வளவு தான். அது தப்புன்னு புரிஞ்சுகிட்டேன். கடவுளுக்குரிய ராஜ்யத்தை நான் முதல்ல தேடியிருக்கணும், அப்படின்னா எனக்குத் தேவையானதெல்லாம் கிடைச்சிருக்கும். நானோ என்னோட ராஜ்யத்துக்காக எல்லாம் தேடினேன், அதனால தேவையானவை ஏதும் கிடைக்கல.

ஸ்டீபன் : நெவர் டூ லேட். பையன் கிட்டே நான் பேசறேன். நீ பிரேயர் பண்ணு. உன்னோட பிரையாரிடீஸை அடியோட மாற்று. கடவுளை முன்னாடி வை. உன் வாழ்க்கை அவருக்கு பிரியமா மாறும். எந்த ஒரு செயலை செய்யும்பவும் மனசுல யோசிச்சுக்கோ, இந்த செயல்ல யார் எனக்கு முதலாளி ? கடவுளா ? வேற ஏதோ ஒண்ணா ? ..

பீட்டர் : எஸ்.. அதுல கடவுளை நான் தேர்ந்தெடுக்கறேன். ரொம்ப நன்றி. எனக்கு நல்ல தெளிவு கிடைச்சிருக்கு.

பின்குரல்

எவரும் இரண்டு எஜமானர்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. ஒரே வாகனம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பயணம் செய்ய முடியாது. ஒரு திசையைத் தேர்ந்தெடுக்கும் போது அடுத்த திசையை நிராகரிக்கிறோம். நமது வாழ்க்கையும் அப்படியே, நாம் கடவுளின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோமா ? இல்லை உலகத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறோமா ? சிந்திப்போம். நன்றி.

Posted in Christianity, SAINTS

புனிதர் கவிதை : கோஸ்மாஸ் & தமியான்

Image result for saints cosmas and damian

 

புனிதர்கள் !

இறை அன்பின்
புயல் வடிவங்கள்.
மறை வாழ்வின்
செயல் படிமங்கள்

கோஸ்மாஸ்
தமியான்
இறைமகன் வழிநடந்த‌
இரட்டைப் புனிதர்கள்.

இருவர் இருவராய்
சீடர்களை
பணிக்கு அனுப்பிய இயேசு
இவர்களை
இரட்டையர்களாகவே
பிறக்கவும் வைத்தார்.

ஒற்றை உதிரத்தின்
இரட்டைக் கிளைகள்
ஒற்றைச் சுவையில்
கனிகளைக் கொடுத்தன.

அரேபிய மண்ணில்
அவதாரம் எடுத்தவர்,
ஆண்டவர் இயேசுவில்
அடையாளம் கண்டனர்.

வாழ்க்கை முழுதும்
பரிசுத்த தேவனை
தரிசித்துத் திரிந்தனர்.

பாவத்தின் பாதைகளை
நிராகரித்தனர்
பரமனின் பாதங்களை
அரவணைத்தனர்

குருத்துவ சிந்தனையில்
மருத்துவம் பார்த்தனர்,
இறைவன் கொடுத்ததை
இலவசமாய்க் கொடுத்தனர்.

துருக்கி நாட்டின்
சிசிலியாக் கடற்கரை
இவர்களுக்கு
மருத்துவமனையானது.

ஏழைகளின்
துயரத் துளிகள் இவர்களுக்கு
துவக்கப் புள்ளியானது.

பணமற்ற மனிதர்கள்
எனும்,
பட்டப் பெயர் வருமளவுக்கு
வறுமைக் விளிம்பில்
வைத்தியம் செய்தனர்.

செல்வத்தின் விதைகளை
இலவசமாய்
வினியோகித்து,
விண்ணக வயலில்
விளைச்சலைப் பெருக்கினர்.

நோய் நீங்கிய மக்கள்
இதயத்தில்
இறைவனை அமர வைத்தனர்.
கிறிஸ்தவ‌
மறைக்குள் மனதைத் தைத்தனர்.

தியோக்ளேஷியன் மன்னன்
வெறுப்பின்
தீ வளர்த்தான்.
இரட்டையரை அழிக்க‌
குரோதம் குறித்தான்.

பக்கவாதத்தைப்
பக்குவமாய் சரிசெய்து வந்த‌
அற்புத இரட்டையரை
அறைக்குள் அடைத்தான்.
சிறகுகள் உடைத்தான்.

நோய்களை
விடுவித்து வாழ்ந்தவர்கள்
கம்பிகளுக்குள்
அடைபட்டு வாழ்ந்தனர்

எனினும்
மன்னனின் வஞ்சம்
நெஞ்சம் நீங்கவில்லை.

உயர்வைப் போதித்தவர்
உயிரை விடவேண்டும்
என‌
கொலை சிந்தனையை
விளையச் செய்தான்.

கிறிஸ்துவை மறுதலிக்க‌
கொற்றவன் இட்ட கட்டளையை
விசுவாசத்தின்
வித்துகள் புறந்தள்ளின.

மன்னன் கொதித்தான்.
இறைவனுக்குள்
பத்திரமாய் இருந்தவர்களை
சித்திரவதைக்குள்
சிதைய வைத்தான்.

வன்முறையின்
வேட்டை நாய்கள் மன்னனின்
ஆணைகளாய்
சீறிப் பாய்ந்தன.

அம்புகள்
இரட்டையரைத் தைத்தன.

கற்கள்
அவர்களைக் குதறின.

சிலுவையில்
அவர்கள்
அறையப்பட்டனர் !

ஆச்சரியம்
அங்கே பூச்சொரிந்தது.

சாவு
இரட்டையர்களைக் கண்டு
ஒதுங்கியே நின்றது.

மரணம்
புனிதர்களை நெருங்காமல்
பதுங்கியே கிடந்தது.

இன்னுமா சாகவில்லை
என‌
சதிகாரர்கள்
வெலவெலத்தனர்.

காண்பது கனவா
என‌
மன்னன் நடு நடுங்கினான்.

இவர்கள் சாகாவிடில்
கிறிஸ்தவம் வெல்லுமே
இவர்கள் பெயர் சொல்லுமே
என
குலைநடுங்கினான்.

வெட்டுங்கள் தலையை !
மன்னனின் ஆணை
பதட்டத்தின்
படிதாவி வந்தது.

கூர்வாள்கள்
குருதி வாசம் கேட்டன.
அப்பாவிக் கழுத்துகளை நோக்கி
ஆவேசமாய்ப் பாய்ந்தன.

இறைவனில்
நின்றாடியவர்கள்
இறுதியில்
துண்டானார்கள்

இலையுதிர்க்கும் மரமாய்
தலையுதித்து
சாய்ந்தனர்.

கிபி 287
இரட்டையரின் இரத்தத்தால்
கறை படிந்தது.

மண்ணின் பயணம் முடித்த‌
பாதங்கள்
விண்ணுக்குள் நுழைந்தன.

மண்ணகம்
அவர்களை கௌரவித்தது.
அவர்கள் பெயரில்
ஆலயங்கள் நிமிர்ந்தன.

தேசங்களெல்லம்
அவர்களை
புனிதர்கள் என கொண்டாடின.

மரணம் வரை
மனுமகனை
மறுதலிக்காதீர்கள்,
மனித நேயத்தை
மரணிக்க விடாதீர்கள்.

இரட்டையரின்
வாழ்வும் மரணமும்
நம் காதுகளில்
ரீங்காரமிடட்டும்.

*

சேவியர்

Posted in Articles, Sunday School

SKIT : கடவுளா ? செல்வமா ?

இரண்டு எஜமானுக்கு ஊழியம்

Image result for serving two masters

( அலுவலக கேன்டீனில் நான்கு நண்பர்கள் உரையாடுகின்றனர் )

ந 1 : டேய்.. டீ சொல்லிட்டியாடா…

ந 2 : சொல்லியாச்சு.. சொல்லியாச்சு.. அதெல்லாம் எப்பவோ சொல்லியாச்சு.

ந 3 : அப்படியே நாலு வடையும் சொல்லிடுடா..

ந 4 : உட்டா நாலு பிரியாணியும் சேத்து சொல்லுவே போல..

ந 3 : அதெல்லாம் சொல்ல மாட்டேன்டா.. அதுக்கு தான் வெள்ளிக்கிழமை நமக்கு வருதே ஆபீஸ்டே.. ஒரு செம கலக்கு கலக்கிடணும். எல்லாரும் வரீங்கல்ல ?

ந 1 : என்னடா இப்படி சொல்றே.. அதுக்கு வராமலா ? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சும்மாவா ?

ந 3 : நைட்டு டின்னருக்கு மேல தான் பட்டாசு கெளப்பும்… அடிக்கடி இப்படி ஒரு பார்ட்டி வெச்சாங்கன்னா நமக்கும் உற்சாகம் பிச்சுக்கும்…

ந 4 : ( நபர் 2 வைப் பார்த்து ) ஆமா.. நீ போன வருஷம் வந்துட்டு சீக்கிரம் போயிட்டேல்ல.. அப்புறம் தான் செம ஃபன்… இந்த வருஷமாச்சும் கடைசி வரைக்கும் நில்லுடா… முடியும்போ ஒரு செல்பி எடுத்துட்டு தான் கிளம்பறோம்.

ந 2 : இல்லடா.. நான் டின்னர் முடிஞ்சதும் கிளம்பிடுவேன்.. அதுக்கப்புறம் நமக்கு செட் ஆவாது.

ந 3 : என்னடா… பெரிய சுவாமிஜி மாதிரி பேசறே… சுவாமிஜிகளே இப்போ இதெல்லாம் கண்டுக்கறதில்லை.

ந 4 : சும்மா லைட்டா கொஞ்சம் பீரு, பறந்தே போயிடும் போரு.. அவ்ளோ தானே. இதுல என்ன பெரிய பந்தா வேண்டிக் கிடக்கு.

ந 2 : பந்தா இல்லைடா… இது எனக்குத் தேவை இல்லை. அவ்ளோ தான். என்னோட நம்பிக்கைகளுக்கெல்லாம் இது எதிரா இருக்கு.

ந 3 : என்ன பெரிய நம்பிக்கை ? நாங்க மட்டும் என்ன பரம்பரை குடிகாரங்களா ? இல்லை இது எங்களோட குலத்தொழிலா ? ஏதோ பிரண்ட்ஸ் கூட சேரும்போ கொஞ்சம் ஜாலியா இருக்கிறது தானே.

ந 2 : இது கடவுளுக்குப் பிடிக்காத விஷயம்பா.. அதை நான் பண்றதில்லை.

ந 1 : சும்மா கடவுள் கடவுள்ன்னு சொல்லாதே.. இயேசு பண்ணின முதல் புதுமையே வைன் உண்டாக்கினது தான் தெரியுமா. நீ என்னடான்னா…

ந 2 : காமெடி பண்ணாதேடா… ஒரு திருமண விருந்தில குறையை தீர்த்து வெச்சாரு அவ்ளோ தான். அதுக்காக நான் குடிகாரனா மாறணும்ன்னு கிடையாது. மதுவுக்கு எதிரா பைபிள்ல நிறைய வசனம் இருக்கு சொல்லவா ?

ந 3 : யப்பா… போதும்பா பைபிள் பைபிள்ன்னு… லைஃப்னா எல்லாமே இருக்கணும். கொஞ்சம் கடவுள், கொஞ்சம் கலாட்டா.. இப்படி எல்லாமே.. இல்லேன்னா போரடிக்கும்.

ந 2 : வாழ்க்கைல எல்லாமே சாய்ஸ் தான்டா.. உன்னோட புராஜக்ட்ல நீ ரெண்டு பாஸுக்கு வேலை பாக்க முடியுமா ? முடியாது. அதே மாதிரி தான் என்னோட வாழ்க்கைல நான் ரெண்டு பாஸுக்கு வேலை பாக்க முடியாது.

ந 1 : அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம் ? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடறே நீ.

ந 2 : நோ..நோ.. கடவுளோட வழி ஒண்ணு, உலகத்தோட வழி ஒண்ணு. ரெண்டுல எதுன்னு நாம தான் செலக்ட் பண்ணணும். நான் கடவுளோட வழியை தேர்ந்தெடுக்கிறேன் அவ்ளோ தான்.

ந 4 : அப்படியெல்லாம் வாழ முடியாதுடா… ஒரு விஷயத்துல வேணும்ன்னா நீ கடவுளோட வழியை தேர்ந்தெடுக்கலாம் ஆனா எல்லா இடத்துலயும் தேர்ந்தெடுக்க முடியாது.

ந 2 : எல்லா விஷயத்துலயும் தேர்ந்தெடுக்கலாம்.. ஏன் முடியாது ? முடியும் ந்னு நினைச்சா முடியும். வேணும் சக்க வேரிலயும் காய்க்கும்.

ந 3 : சரி, இப்போ பெர்ஃபாமன்ஸ் அப்ரைசல் வருது. என்ன பண்ணினேன்னு கேட்டா நாம நாலு விஷயம் சேத்து சொன்னா தானே நமக்கு ஹைக் பிரமோஷன் எல்லாம் வரும். இல்லேன்னா நம்மளை ஒதுக்கிடுவாங்க.

ந 2 : அதுக்கு தக்கபடி வேலை பாக்கணும், இல்லேன்னா உண்மையை சொல்லணும். உண்மையை சொல்லி கம்மியா சம்பளம் வாங்கறது, பொய் சொல்லி நிறைய சம்பளம் வாங்கறதை விட நல்லது தானே.

ந 1 : சரி.. அதை விடு… இப்போ.. கஸ்டமர் வந்து உன்கிட்டே ‘குடுத்த வேலை என்னாச்சு’ ந்னு கேப்பான். உன் பாஸு.. முடியாத வேலையை ‘எல்லாம் முடிஞ்சுச்சு’ ந்னு சொல்ல சொல்லுவாரு. சொல்லலேன்னா உன் வேலை போகும். சொன்னா கடவுள் கிட்டே பொய் சொன்னவன் ஆவே என்ன பண்ணுவே ?

ந 2 : நான் கடவுள் கிட்டே ஞானத்தைக் கேப்பேன். கடவுளா, வேலையா ந்னு ஒரு சாய்ஸ் வந்தா நான் கடவுளை தான் செலக்ட் பண்ணுவேன்.

ந 3 : சான்ஸே இல்லை.. ஒரு பொய் சொல்ல மறுத்து வேலையை விடுவியா என்ன ?

ந 2 : ஒரு பொய் சொல்ல மறுத்து இயேசுவுக்காக உயிரை விட்டவங்க எத்தனையோ பேரு இருக்காங்க, நான் வேலையை விட மாட்டேனா ?

ந 1 : நிஜமாவா தான் சொல்றியாடா ? ஆச்சரியமா இருக்கு.. அவ்ளோ கஷ்டப்படணுமா கடவுளுக்காக ?

ந 2 : டேய்.. இதுல என்னடா கஷ்டம் ? இதை செஞ்சா மனசு மகிழ்ச்சியா, லேசா இருக்கும்டா. அப்பாவுக்குப் பிரியமான ஒரு வேலையை செஞ்சுட்டா, அதுக்காக அப்பா அடையற சந்தோசம் தாண்டா பெருசு. அந்த மகிழ்ச்சி வேற எங்கடா கிடைக்கும் ?

ந 3 : இப்படி யோக்கியன் மாதிரி பேசி பேசி நீ லைஃப்ல எல்லாத்தையும் வேஸ்ட் பண்றே டா

ந 2 : உலக சுகத்தை டேஸ்ட் பண்ணி, நான் விண்ணக லைஃபை வேஸ்ட் பண்ணக் கூடாதுன்னு நினைக்கிறேன் டா.. செல்வத்தை இங்கே சேத்து வைக்கிறதை விட சொர்க்கத்துல சேத்து வைக்க நினைக்கிறேன்.

ந 1 : யப்பா… உன்கூட பேசறதுக்கு பேசாம இருக்கலாம்…. நீ வேணும்ன்னா வா.. இல்லேன்னா போ.. கழுவி வெச்ச கடவுள் மாதிரி கதை விடாதே..

ந 3 : இன்னுமாடா.. டீ வரல.. விடு.. டீயை கேன்சல் பண்ணு.. நான் கிளம்பறேன்.

ந 2 : யப்பா.. டென்சனாகாதே..

நம்ம வாழ்க்கைங்கறது நாம எடுக்கிற தீர்மானங்களோட தொகுப்பு. எந்த தீர்மானம் எடுக்கணுங்கறதை நீயே தீர்மானி.. அவ்ளோதான்.

*

 

காட்சி 2

( நபர் 2 & நபர் 4 )

நபர் 2 : என்னடா.. நீயும் சீக்கிரம் கிளம்பிட்டே.. பார்ட்டிக்கு போகலையா ?

நபர் 4 : இல்லடா நான் போகல…

நபர் 2 : என்னாச்சு, போன வருஷம் பட்டையைக் கிளப்பினது நீதான்னு பிரண்ட்ஸ் சொன்னாங்க ? இந்த வருஷம் என்னாச்சு ?

ந 4 : நீ அன்னிக்கு பேசினது எனக்கு டச்சிங்கா இருந்துச்சு. நம்ம வாழ்க்கை நாம எடுக்கிற தீர்மானங்களால நிர்ணயிக்கப்படுதுன்னு சொன்னே. உண்மை தாண்டா. நான் காலேஜ் படிக்கும்போ எடுத்த ஒரு தப்பான சாய்ஸ் தான் என்னை தவறான வழிக்கு கொண்டு போச்சு. அப்போவும் ஒரு அண்ணா என்கிட்டே அட்வைஸ் பண்ணினாரு நான் கேக்கல. நான் செய்றது தான் சரின்னு இருந்துட்டேன்.

நபர் 2 : தப்பு செய்யாத மனுஷனே இல்லை. ஆனா தப்பு செய்றதை நிறுத்தாதவன் மனுஷனா இருக்கிறதுல அர்த்தமும் இல்லை. கடவுள் நம்மை படைச்சது அவருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழத் தான். நமக்குப் பிரியமான வாழ்க்கையை வாழ இல்லை.

ந 4 : உண்மை தாண்டா.. எல்லா இடங்கள்லயும் நமக்கு ரெண்டு சாய்ஸ் வருது. கடவுளுக்குப் பிரியமான ஒண்ணு, பிடிக்காத ஒண்ணு. பிரியமானதை மட்டும் செலக்ட் பண்ணி போயிட்டே இருந்தோம்ன்னா கடவுளை நோக்கி நேர்கோட்டில போயிட்டே இருக்கலாம். நாம மாறி மாறி தேர்ந்தெடுக்கறதால தான் ஒரே இடத்துல நாம சுத்திகிட்டே இருக்கோம்.

ந 2 : ரொம்ப தெளிவா பேசறே நீ. திரெட்மில்லில எவ்வளவு நேரம் தான் கஷ்டப்பட்டு ஓடினாலும் அடுத்த ஊருக்குப் போய் சேர முடியாது. அதே போல தான் தப்பான இடத்துல எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் கடவுளை சேர முடியாது.

ந 4 : கடவுளுக்கும், உலகத்துக்கும் சேவை செய்ய முடியவே முடியாதுடா. அதை நான் புரிஞ்சுகிட்டேன். நீ ஒரு முன்மாதிரியான வாழ்க்கை வாழும்போ, என்னால அது முடியாதான்னு யோசிச்சேன்.

ந 2 : நீ என்னை பாக்காதே.. இயேசுவை பாரு. அவரு தான் நமக்கெல்லாம் பெர்பக்ட் எக்ஸாம்பிள். மனுஷம் மாறிகிட்டே இருப்பான். கடவுள் மாற மாட்டாரு.

ந 4 : ரொம்ப நன்றிடா. நீ ஆபீஸ்ல நடந்துக்கற விதம். உன்னோட சின்சியாரிடி. ஆபீஸ் பொருட்களை எல்லாம் வேஸ்ட் பண்ணாத தன்மை. ஆபீஸ் டைமை வேஸ்ட் பண்ணாத உன்னோட நேர்மை. எல்லாமே எனக்கு ஆச்சரியமா இருக்கும். இப்போ தான் புரியுது, உன்னோட எஜமானரா நீ கடவுளை வெச்சிருக்கே. அதனால தான் கடவுளுக்குப் பிரியமானதை எல்லாம் செய்றே. இனிமே நானும் முடிவு பண்ணிட்டேன். ரெண்டு எஜமானருன்னு இனிமே ஊழியம் செய்ய மாட்டேன். கடவுளுக்கு மட்டும் தான்.

ந 2 : ரொம்ப மகிழ்ச்சிடா.. வா.. போலாம்.

பின்குரல்

வாழ்க்கை நமக்கு முன்னால் வெளிச்சத்தையும் இருட்டையும் நீட்டுகிறது. நாம் வெளிச்சத்தைத் தேர்ந்தெடுத்தால் ஒளியின் பிள்ளைகளாய் வாழ்வோம். இருட்டும் வெளிச்சமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. இரண்டுக்கும் ஒரே நேரத்தில் ஊழியம் செய்யவும் முடியாது. கடவுளும், உலகமும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உலக சிற்றின்பமா, இறைவனின் பேரின்பமா ? எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம். யாரை நாம் தலைவராகக் கொள்கிறோம். அதுவே நமது வாழ்க்கையின் பயணத்தை நிர்ணயிக்கும். கடவுளை தேர்ந்தெடுப்போம், விண்ணகத்தை சம்பாதிப்போம்.

*