Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 22 இனிமை மிகு பாடல்

22

இனிமை மிகு பாடல்

Image result for book of songs of solomon

திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மீக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும்.

இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார். எட்டு அதிகாரங்களுடன், நூற்று பதினேழு வசனங்களுடன், இரண்டாயிரத்து அறுநூற்று அறுபத்து ஒன்று வார்த்தைகளுடன் அமைந்துள்ள அற்புதமான கவிதை நூல் இது. எட்டு அதிகாரங்களானாலும் இந்த நூலை 28 கவிதைகளின் தொகுப்பு என்கின்றனர் இறையியலார்கள்.

விவிலியத்தில் 22வது நூலாக இது அமைந்துள்ளது. விவிலியத்தில் அமைந்துள்ள கவிதை நூல்களில் இது கடைசி நூல். இந்த நூலின் சாலமோன் மன்னனின் பெயர் ஏழு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு நூல்கள் பைபிளில் உண்டு. ஒன்று எஸ்தர், இன்னொன்று இந்த இனிமை மிகு பாடல் !

ஒரு நாடகம் போல அமைந்துள்ள இந்தப் பாடலில் காதலே பிரதானம். இது கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையேயான உறவைச் சொல்லும் கவிதைகள் என சிலர் விளக்கம் தருகின்றனர். சிலரோ, பாலஸ்தீன நாட்டில் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட பாடல்கள் இவை என்கின்றனர். சிலர் இன்னும் பல வித்தியாசமான விளக்கங்களுடன் களமிறங்குகின்றனர்.

ஆனால் இவை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முளைக்கின்ற காதலின் வரிகள் என்று சொல்வதே பொருத்தமானது. கிறிஸ்தவம் அன்பினால் கட்டமைக்கப்பட்டது. திருமணம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் அன்பும், காதலும் கசிந்துருகுதலும் இயல்பே. எனினும் இது சொல்லும் ஆன்மீகப் புரிதல்களை உள்வாங்கிக் கொள்ளுதல் அதிகம் பயன் தரும்.

இந்தக் கவிதை நாவலை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன முன்னுரைக் கதையை விவிலிய அறிஞர் ஒருவர் தருகிறார். ஒரு ஏழை பெண் இருக்கிறார். அவள் மலை நாட்டில் திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்கிறாள். வசதியற்றவள் அவள். அவளுடைய குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை, வேலைக்காரியாய் நடத்துகிறார்கள்.

அவளை ஒரு ஆட்டிடையன் காதலிக்கிறான். உண்மையில் அவன் தான் சாலமோன் மன்னன். அது அவளுக்குத் தெரியவில்லை. காதலில் கசிந்துருகுகின்றனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். திரும்பி வருவேன் என சொல்லிவிட்டு இடையன் சென்று விடுகிறான். நீண்ட நாட்களுக்கு மௌனம். காதலியின் இரவுகள் துயரம் கொள்கின்றன. பகல்கள் பரிதவிக்கின்றன.

ஒருநாள் அவன் திரும்பி வருகிறான். அரசனாக. இவள் அதிர்ச்சியடைகிறாள். பல மனைவியரில் ஒருத்தியாக தான் இணைந்ததை அவள் புரிந்து கொள்கிறாள். அரசின் உயரிய இடம் அவளுக்குக் கிடைக்கிறது. ஆனாலும் அவளுக்கு நிம்மதியில்லை. மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்கு காதலனுடன் செல்ல ஆசைப்படுகிறாள்.

இந்த கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு இந்தப் பாடலை வாசிக்கும் போது அது அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

கிரேக்க இலக்கிய மரபும், கிரேக்கக் கலாச்சாரமும் உடலையும், ஆன்மாவையும் இரண்டாகப் பார்க்கிறது. இரண்டு விதமான வாழ்க்கையாகப் பார்க்கிறது. எபிரேய மரபு இரண்டுமே இறைவனின் படைப்பாக ஒன்றிணைந்த நிலையில் பார்க்கிறது. அந்த எபிரேயக் கலாச்சார மனநிலையில் இந்த நூலை வாசிப்பது அதிக புரிதலைத் தருகிறது.

கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான அன்னியோன்ய உறவாக இந்த பாடலை பார்க்கலாம். இறைவன் திருச்சபையை மணப்பெண்ணாகப் பார்க்கும் விளக்கம் புதிய ஏற்பாட்டில் காணக்கிடைக்கிறது. கடவுள் இஸ்ரயேலை மணப்பெண்ணாகப் பார்க்கும் நிலை பழைய ஏற்பாட்டில் காணக்கிடைக்கிறது. அதுபோல கடவுள் மனிதனை மணப்பெண்ணாகப் பார்க்கும் வடிவம் இது எனக் கொள்ளலாம்.

1005 காதல் பாடல்களை எழுதிய சாலமோன் மன்னனின் பாடல்களில் ஒன்று இது. மிக முக்கியமான பாடல் என்பதால் தான் இறைவன் இதைத் தேர்ந்தெடுத்து பைபிளில் இடம் பெறச் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஆலயம் செல்வதோ, பைபிள் வாசிப்பதோ, நற்செய்தி அறிவிப்பதோ அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனோடு ஒரு ஆழமான அன்புறவை கொண்டிருப்பது. அதைத் தான் இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது.

இந்த நூலில் 15 நாடுகளைக் குறித்த செய்திகளும், இருபத்தோரு உணவுப் பொருட்களின் குறிப்புகளும், பதினைந்து விலங்குகளைக் குறித்த தகவல்களும் இருப்பதாய் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவது, ஆசை கொள்வது, துணையாய் இருப்பது, இன்பமாய் இருப்பது, இணைந்தே இருப்பது, பிரிந்து இருப்பது, நம்பிக்கையாய் இருப்பது, புகழ்வது என இந்தப் பாடல்கள் பல்வேறு உணர்வுகளைப் பதிவு செய்கின்றன.

வியக்க வைக்கும் இந்த கவிதை நூல், நிச்சயம் தவற விடக் கூடாத நூல்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s