Posted in Articles, Christianity, Desopakari

ஆளுமை உருவாக்கத்தில் கல்வி

Image result for education and personality

உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மாபெரும் மாற்றங்களெல்லாம் வெகு சில ஆளுமைகளால் உருவாகியிருப்பதைக் கண்டு கொள்ள முடியும். எப்படி ஒரு சிறு விதையானது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறதோ, அது போல தான் ஆளுமை உடையவர்கள் மாபெரும் திறமைகளை தங்களுக்குள் கொண்டிருக்கிறார்கள். அவை மிகப்பெரிய மாற்றத்துக்கான விதைகளாக பின்னர் உருமாறுகின்றன

மார்ட்டின் லூத்தர் கிங் எனும் தனிமனிதருடைய ஆளுமைத் திறமை தான் கருப்பின மக்களின் விடுதலைக்கான கருவியானது. வட அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தின் நிற வேற்றுமைக்கு முடிவு கட்டியது அவர் தான்.

கார்ல் மார்க்ஸ் எனும் மனிதருடைய சமத்துவச் சித்தாந்தம் தான் உலக அளவிலேயே மிகப்பெரிய சமூகப்புரட்சியை உருவாக்கியது. பல நாடுகளின் அரசியல் கட்டமைப்புக்கும், சமூக மறுமலர்ச்சிக்கும் அவரது சிந்தனைகளே அடித்தளமிட்டன. இப்படி ஏராளம் உதாரணங்களைச் சொல்ல முடியும்.

விவிலிய வரலாற்றைப் புரட்டிப் பார்த்தாலும் அதே கதை தான். மோசே எனும் ஆளுமை தான் இஸ்ரேல் மக்களுடைய விடுதலைக்கான விதை. அவருடைய செயல்பாடுகள் தான் பல நூற்றாண்டு அடிமைத்தனத்தை உடைத்தெறிந்து மக்களை விடுதலை வழியில் நடத்தியது.

தாவீது எனும் மன்னனுடைய ஆளுமைத் தன்மை தான் இஸ்ரேல் மக்களுக்கு நீண்ட நெடிய காலம் மிகச் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடிந்தது. இஸ்ரேல் நாட்டின் ஒருமைப்பாட்டையும், கண்ணியத்தையும் கட்டிக் காத்தது.

இப்படிப்பட்ட ஆளுமைகளை நாம் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கிடையே சில ஒற்றுமைகளைக் கண்டு கொள்ளலாம். அவற்றில் மிக முக்கியமான ஒன்று சக மனித கரிசனை. இன்னொன்று தார்மீகக் கோபம். இவை இரண்டுமே இரண்டறக் கலந்தவை எனலாம். சக மனிதன் மீதான நேசம் இருப்பவர்களால் மட்டுமே, அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக தார்மீகக் கோபம் கொள்ள முடியும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ஆளுமைகளைத் தீர்மானிப்பது அவர்களுடைய வீரம் அல்ல, ஈரம் !

வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம் ; என்றிருக்கும் மக்களால் சமூகப் பங்களிப்பு செய்ய இயலாது. அவர்கள் சமூகத்தின் ஆளுமைகளாக எப்போதுமே உருவாக முடியாது. சூழல்களின் அடிமைகளாக மட்டுமே வாழமுடியும் என்பதே உண்மை.

இந்த ஆளுமைத் தன்மையைக் கட்டமைக்கும் வேலையைச் செய்வதில் கல்வி மிக முக்கிய இடத்தில் இருக்கிறது. மழலைப் பருவத்திலேயே இந்த கல்வியின் நீரூற்றப்படும் செடிகள் தான் பருவ காலத்தில் கனிகளை பரிசளிக்கின்றன. ஒரு குயவனைப் போல வனைகின்ற ஆசிரியரின் கைகள் தான் அழகிய கலைகளையும், பயனுள்ள பாண்டங்களையும் உருவாக்குகிறது.

இயேசு சொன்ன வீடுகட்டுபவரின் உவமை இதன் ஒரு சிறந்த உதாரணம் எனலாம். ஒருவர் வீட்டை மணலின் மீது அடித்தளமிட்டுக் கட்டுகிறார். அது புயல்காற்றின் விரல்கள் தீண்டியபோதே விழுந்து அழிகிறது. இன்னொருவர் வீட்டை பாறையின் மீது கட்டுகிறார். அதை புயலின் கரங்கள் புரட்டிப் போட முடியவில்லை. நிலைத்து நிற்கிறது.

கல்வி எனும் அடித்தளத்தின் மீது கட்டப்படுகின்ற வாழ்க்கையானது, அலைகளையும் புயல்களையும் சந்தித்தாலும் நிலைகுலையாது. நிலைபெயராது. எனவே தான் ஒரு சமூகம் கல்வி கற்கவேண்டியது அக்மார்க் தேவையாகிறது. அதனால் தான் ஒரு சமூகத்திற்கு கல்வி மறுக்கப்படும்போது அங்கே சமூக அநீதி தாண்டவமாடுகிறது.

வேர்களில் பாதரசம் ஊற்றி விட்டால், கிளைகளில் கனிகளை எதிர்பார்க்க முடியாது. ஊற்றுக்கண்ணை அடைத்து விட்டார் ஈர நிலங்களை இறக்குமதி செய்ய முடியாது.

அதனால் தான் சமூகத்தின் புறக்கணிப்புக்குள்ளாகும் மக்களுக்கு கல்வியை நிராகரிக்கும் செயலை பலரும் செய்கின்றனர். அதன் காரணம், ஆளுமைகள் எவரும் அங்கிருந்து புறப்பட்டு விடக் கூடாது என்பது தான்.

“உனக்குக் கல்வி தரப்படமாட்டாது” என இன்று யாரும் சொல்ல முடியாது. காரணம் நமது தேசம் சுதந்திர தேசம். ஆனால், “இந்தத் தகுதிகள் இருந்தால் தான் உனக்குக் கல்வி” என முட்டுக்கட்டை போடமுடியும். காலம் காலமாய் அடிமை நிலையில் இருக்கும் ஒருவனிடம், உனக்கு வில்வித்தை தெரிந்தால் தான் வேலை என சொல்வது எவ்வளவு குரூரமானது. காலம் காலமாய் நீரில் வாழ்கின்ற ஆமையிடம், நீ மரமேறினால் தான் உனக்கு கல்வி என சொல்வது எவ்வளவு நயவஞ்சகமானது ? அத்தகைய சூழல் உருவாக்கப்படலாம்.

இந்த இடத்தில் தான் நமது பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் எனும் கேள்வி எழுகிறது. “தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எங்கும் இல்லை” என்றார் இயேசு. அவர்களுடைய வாழ்வில் ஒளியேற்ற நாம் செய்ய வேண்டியது எதுவென சிந்தித்துப் பார்க்க வேண்டிய தருணம் இது. அவரை மூலைக்கல்லாய்க் கொண்டு நமது வீட்டைக் கட்ட வேண்டியது அவசியம்.

கல்வி என்பது வெறுமனே தகவல்களைச் சேமித்து வைக்கும் இடம் அல்ல. அது வாழ்வியலுக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ளும் இடம். ஆசிரியர்கள் என்பவர்கள் வெறும் எழுத்துகளை நமக்குள் ஊற்றிச் செல்பவர்கள் அல்ல, எண்ணங்களை நமக்குள் ஊன்றிச் செல்பவர்கள். அவை தான் நமது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன.

தவறு செய்கின்ற தருணங்களில், “படிச்சவன் தானே நீ” என நம்மை நோக்கிக் கேள்விகள் எழுவதுண்டு. படித்தவனுக்குள் நல்ல எண்ணங்களும், சிந்தனைகளும், செயல்பாடுகளும் இருக்கும் எனும் நம்பிக்கை தான் அதன் காரணம்.

ரவுடிகளுடைய வாழ்க்கையைப் பற்றிக் கேள்விப்படும்போது “படிச்சிருந்தா உருப்பட்டிருப்பான்” என்பதையும் கேட்கிறோம். கல்வியின் தேவையை அது இன்னொரு விதத்தில் வெளிப்படுத்துகிறது.

பாடங்கள் தருகின்ற நன்னெறிகள், போதனைகள், அறிவுகள், சிந்தனைகள் தவிர்த்து ஆளுமை உருவாக்கத்தில் கல்வி தருகின்ற மிக முக்கியமானவை எவை ?

1. இணைந்து செயலாற்றுதல்

கல்வி தருகின்ற படிப்பினைகளில் மிக முக்கியமானது இணைந்து செயலாற்றுகின்ற தன்மை. சமூக வாழ்வுக்கும், சமூக மாற்றத்துக்கும் அடிப்படையாய் அமைவது ‘இணைந்து வாழவேண்டும்’ எனும் சிந்தனைதான். சக மனித உறவுகளைக் கட்டியெழுப்பும் முதல் தளமாக கல்வி இருக்கிறது. பிறருடைய உணர்வுகளை மதிக்கவேண்டும் என்பதும், பிறரையும் தன்னைப் போல நினைக்க வேண்டும் என்பதும் இந்த காலகட்டத்தில் தான் கட்டமைக்கப்படும்.நட்புகளுக்காக வாழ்வதும், விட்டுக்கொடுப்பதும், உதவுவதும் என சமூகத்துக்குத் தேவையான ஆளுமைத் தன்மைகளை இங்கே கற்றுக் கொள்ளலாம்.

2. மதித்து வாழ்தல்

பிறரை மதிக்க கற்றுக்கொள்கின்ற முக்கியமான இடம் கல்வி நிலையம் எனலாம். தலைமைக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்பதன் தேவையை நாம் கற்றுக் கொள்வது இங்கே தான். எந்த ஒரு தலைவருக்கும் இருக்க வேண்டிய மிக முக்கியமான குணாதிசயம் பிறரை மதிப்பது என்பதில் சந்தேகமில்லை. தலைமையை மதிப்பது, பிறருடைய கருத்துகளுக்கு மரியாதை கொடுப்பது போன்றவையெல்லாம் ஆளுமை உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்காற்றுபவை.

3. சமத்துவ சிந்தனை

இதயத்தில் உருவாக வேண்டிய இன்னொரு முக்கியமான சிந்தனை சமத்துவம் சார்ந்தது. சமத்துவம் என்பது உள்ளம் சார்ந்தது. சமத்துவம் என்பது வாய்ப்புகள் சார்ந்தது. சமத்துவம் என்பது மனிதம் சார்ந்தது. எல்லோரும் சமம். எல்லோருக்கும் ஒரே மாதியான வாய்ப்புகள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான கவனிப்பு என்றிருக்கும் கல்வி அமைப்பு நமது ஆளுமைத் தன்மையை உரம்போட்டு வளர்க்கும் முக்கியமான தளம்.

4. எல்லைகளற்ற கற்பனை

கல்வி நமக்கு எல்லைகளற்ற கற்பனையைத் தருகிறது. நமது கலை ஆர்வத்துக்கும், புதுமைகளைத் தேடவேண்டும் எனும் ஆர்வத்துக்கும் தீனி போடும் தளம் அது தான். அதனால் தான் சிறுவயதிலேயே ‘செயல்பாடுகள்’ குறித்த பாடங்கள் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகின்றன. அவை வழக்கமான வழக்கத்துக்கு வெளியே மாணவர்களை சிந்திக்க வைக்கிறது. பிள்ளைகளின் ஆக்டிவிடி பாடங்களை செய்து கொடுக்கும் பெற்றோர் அவர்களின் கற்பனைக்கு மதில்சுவர் கட்டுகின்றனர்.

5 தன்னம்பிக்கையின் தளம்

தன்னம்பிக்கை தான் எந்த ஒரு வெற்றிக்கும் அடிப்படைத் தேவை. தன்னம்பிக்கை இல்லாத மனிதர்கள் வெற்றியாளர்களாய் பரிமளிப்பதில்லை. எந்த ஒரு ஆளுமைத் தன்மையுடைய மனிதரைப் பார்த்தாலும், அவர்களுடைய திறமைகளுக்கும் முன்னால் வந்து நிற்பது அவர்களுடைய தன்னம்பிக்கை தான். திறமையில் குறைந்தவர்கள் கூட தன்னம்பிக்கையில் நிரம்பியிருக்கையில் வெற்றி வசமாகும்.

இப்படி ஆளுமை உருவாக்கத்தில் கல்வியின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது. அதை அனைவருக்கும் கிடைக்க வழிசெய்வதே மிகச்சிறந்த பிறர்நலப் பணி. பிறர்நலம் பேசுவதே ஆன்மீகத்தின் முக்கிய நிலை.

*

சேவியர்

#Desopakari #Writerxavier

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s