காட்சி 1
( அப்பா & இளைய + மூத்த மகன் )
அப்பா : டேய்.. எங்கே ஓடறே.. இங்க வா
இளைய மகன் : அங்கும் இங்கும்… ஓடுகிறான்… அப்பா… பிளீஸ்
அப்பா : என்னடா பிளீஸ் ? ஒழுங்கா படிக்க சொல்லும்போ படிக்கிறதில்லை.. இப்போ என்ன மார்க் வாங்கியிருக்கே…
இ.ம : அப்பா நான் நல்லா தான்பா எழுதினேன்.. ஆனா மார்க் தான் கிடைக்கல
அப்பா : ஆமா.. மார்க்கை காக்கா வந்து தூக்கிட்டு போச்சு… எழுதினதுக்கு தான்டா டீச்சர் மார்க் போடுவாங்க. அவங்களே விடையையும் எழுதி, மார்க்கையும் போடுவாங்களா ?
இ. ம : நான் எழுதினதுக்கெல்லாம் மார்க் கொஞ்சம் கட் பண்ணி போட்டாங்க.. அதான் மார்க் கம்மியாச்சு.
அப்பா : சும்மா சும்மா சாக்கு போக்கு சொல்லிட்டே திரியாதே.. இங்கே வா… முதல்ல… உனக்கு ரெண்டு குடுத்தா தான் சரிப்பட்டு வருவே…
இ.ம : அடுத்த தடவை நிறைய மார்க் எடுக்கறேன்ப்பா…
அப்பா : இப்படித் தான் ஒவ்வொரு தடவையும் சொல்றேன். உன் அண்ணனைப் பாரு… ஒழுங்கா வீட்ல இருந்து படிக்கிறான். நீ தான் பகல்ல பட்டம் உடறே, நைட்ல குறட்ட உடறே.. மார்க்ல மட்டும் கோட்டை உடறே…
இ.ம : ஆமா. அண்ணனை மட்டும் ஓவரா ஏத்தி வெச்சு பேசுங்க, என்னை மட்டும் திட்டிட்டே இருங்க.
அப்பா : உனக்கு பாதி நேரம் ஸ்மார்ட் போன் நோண்டணும். போனை கீழ வெச்சா நைசா தூக்கிட்டு போயிடறே. பாஸ்வேர்ட் எது வெச்சாலும் கண்டு பிடிச்சுடறே… போன் இல்லேன்னா டிவி பாக்கறே… அப்புறம் படிப்பு எப்படி வரும்.
இ.ம : சரி.. விடுங்க. அடுத்ததடவை நான் மார்க் வாங்கலேன்னா கேளுங்க.
அப்பா : சரி.. இந்த தடவை விடறேன்… நெக்ஸ்ட் டைம் ஒழுங்கா மார்க் வரலேன்னா பாரு..
காட்சி 2
( இ.ம & நண்பன் )
நண்பன் : என்னடா..ட டல்லா இருக்கே…
இ.ம : வீட்ல செம சண்டைடா.. மார்க் மார்க் மார்க்.. படி..படி..படி.. என்னடா எல்லா அப்பாக்களும் இப்படியே இருக்காங்க..
நண் : ஆமாடா.. அவங்க படிச்சப்போ எல்லாம் ஈசியா இருந்துச்சு, இப்போ எவ்ளோ கஷ்டம்ன்னு அவங்களுக்கே தெரியல
இ : அவங்களுக்கு தெரியும்டா. இருந்தாலும் திட்டிட்டே இருக்காங்க.
நண் : எனக்கும் வீட்ல செம சண்டை தான் … நேற்றைக்கு அப்புறம் பிரண்ட் வீட்டுக்கு போயிட்டேன். கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்தேன். நைட் தான் வீட்டுக்கு போனேன்.
இ : லேட்டா போனதுக்கும் நல்லா கிடைச்சிருக்குமே…
நண் : ஆமாமா… அதுக்கும் செம திட்டு விழுந்துடுச்சு..
இ : வீட்டுக்கே போகாம இருந்தா தான் பெட்டர் அதுக்கு..
நண் : அதுக்கு நாம ஊரைவிட்டே எங்கேயாச்சும் போனா தான் உண்டு.
இ : போலாமா அப்படி ? உனக்கு ஏதாச்சும் இடம் தெரியுமா ?
நண் : இடமெல்லாம் தெரியாது.எங்கயாச்சும் போயிட வேண்டியது தான். கேரளால போனா சூப்பரா இருக்கும்ன்னு நினைக்கிறேன். டிவில பாத்திருக்கேன்..
இ : போவோமா அப்போ ? வீட்டு டார்ச்சர் இல்லாம இருக்கும். நாமளும் ஜாலியா இருக்கலாம்.
நண் : நீ வரேன்னா நானும் வரேன். ஆனா வீட்ல இருந்து கொஞ்சம் பணம் சுருட்டணும். இல்லேன்னா நமக்கு செலவுக்கு காசு இருக்காது.
இ : அது ஓக்கே.. நம்ம எவ்வளவு எடுக்க முடியுமோ, அவ்வளவு எடுத்துட்டு வந்துடுவோம். வேற எங்கயாச்சும் போய் பேரன்ட்ஸ் டார்ச்சர் இல்லாம ஜாலியா லைஃபை எஞாய் பண்ணலாம்..
நண் : அப்போ சூப்பர்டா.. எப்போ போலாம் ?
இ : நாளைக்கே போவோம்டா.. இருக்கிறதை நான் எடுத்துட்டு வரேன்.. நீயும் எடுத்துட்டு வா.. என்ன சொல்றே..
நண் : சூப்பர் டா.. நாளைக்கே நாம சாயங்காலம் ஒரு டிரெயினை புடிக்கிறோம்… கலக்கறோம்.
இ : டீல்… டீல்..
காட்சி 3
( இ.ம & நண்பன் )
இ : டேய்.. நாம இங்க வந்து ஒரு வாரம் ஆச்சு.. கையில எடுத்துட்டு வந்த காசெல்லாம் தீந்து போச்சு… நீ எதுவும் எடுத்துட்டு வராம வந்துட்டே.
ந : என்ன பண்ண ? வீட்ல காசே இல்ல.. தேடிப் பாத்தேன் கிடைக்கல.
இ : நான் வீட்ல இருந்து கொஞ்சம் நகை எடுத்துட்டு வந்தேன்… அதை வித்து… கொஞ்ச நாளைக்கு அட்ஜஸ்ட் பண்ணலாம்…
ந : ஓக்கே டா.. வா.. ஏதாச்சும் நகைக்கடைக்கு போலாம்.
( ஒரு கடைக்குப் போகிறார்கள் )
இ : சார்… ஒரு நகை விக்கணும்.. என்ன விலை கிடைக்கும்ன்னு பாத்து சொல்லுங்க.
நகைக்கடைக்காரர் : நீங்க யாருப்பா ? சின்ன பசங்களா இருக்கீங்க ? எங்கேயிருந்து வரீங்க ?
இ : நாங்க வேற ஊர்ல இருந்து வரோம்.. கைல இருந்த காசு தீந்திடுச்சு அதான் நகையை விக்கலாம்ம்னு வந்தேன்.
நகை : இது எத்தனை பவுன்
இ : அதெல்லாம் தெரியல
நகை : யாரோடது இது ?
இ : என் வீட்ல உள்ளது தான்.
நகை : உண்மையைச் சொல்லு.. நீங்க எங்கே திருடிட்டு வந்தீங்க ? உங்களை போலீஸ்ல புடிச்சு குடுக்கப் போறேன்.. திருட்டுப் பசங்களா ? எங்கயிருந்தோ வந்து… நகையை திருடி என்கிட்டே கொண்டு வரீங்களா ?
( அப்போது நண்பன் ஓடிவிடுகிறான் )
இ : இல்ல.. இல்ல.. இது எங்க வீட்டு நகை தான்.
நகை : பின்னை ஏன் உன் நண்பன் ஓடிட்டான் ? அப்போ ஏதோ திருட்டுத் தனம் இருக்குன்னு தானே அர்த்தம் ?
இ : இல்லவே இல்ல.. எங்க கைல காசு இல்ல அதான்.. நாங்க இங்க வந்தோம். நம்புங்க.
நகை : நம்பணுமாம்.. நம்பணும்.. ( போனை எடுக்கிறார் )நம்பர் போடுகிறார். சார் போலீஸ் ஸ்டேஷனா ?
( இப்போது இ. ம ஓடிவிடுகிறான் )
நகை : ஹா..ஹா.. சும்மா மிரட்டினதும் பசங்க ஓடிட்டாங்க.. எப்படியும் பத்து பவுன் தேறும். இன்னிக்கு வெலக்கு எப்படியும் ஒரு மூணு லெச்சம் போகும்.. சூப்பர்…
காட்சி 4 :
( இ.ம.. ஒவ்வொரு இடமாக வேலை தேடுகிறான் )
இ.ம : ஐயா.. இங்க ஏதாச்சும் வேலை கிடைக்குமா ? என்ன வேலைன்னாலும் செய்வேன்…
பின் குரல் : வேலையா ? வேலை பாக்க உனக்கு என்ன தெரியும் ? பொடிப்பயலே.. ஓடு .. ஓடு..
இ. ம ( இன்னொரு இடம் போகிறான் ) : ஐயா.. ஐயா.. இந்த மளிகை கடையில ஏதாச்சும் வேலை இருக்கா ?
பின் குரல் : அப்போ நாங்க எல்லாம் என்ன பண்ணிட்டிருக்கோம் இங்கே.. ஓடு ஓடு..
இ.ம : ஐயா.. ஐயா… ஹோட்ட்ல்ல மணம் சூப்பரா வருதே… பசி வேற வயிற்றைக் கிள்ளுதே… ஐயா.. ஐயா… எனக்கு இந்த ஹோட்டல்ல ஏதாச்சும் வேலை கிடைக்குமா ?
பின்குரல் : வேலையா ? ஏன் வேலை தேடறே ?
இ.ம : ரொம்ப பசிக்குது.. அதான்..
பின்குரல் : பசிக்குதா.. சரி சரி.. போய் பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சுட்டு கொஞ்சம் பொங்கல் வாங்கி சாப்பிட்டு போ..
இ.ம : ( மனசுக்குள் ) பொங்கலா ? பொங்கல் வேண்டாம்ன்னு தட்டை தூக்கி எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு எறிஞ்சேன்.. இப்போ அந்த பொங்கலுக்கே நான் இவ்ளோ வேலை செய்ய வேண்டியிருக்கே..
பின்குரல் : என்னப்பா.. வரியா .. போறியா ?
இ.ம : இதோ வந்துட்டேங்க… (மெதுவாக ) ஏதாச்சும் சாப்பிடவாச்சும் கிடைக்கட்டும்.
காட்சி 5 :
இ.ம தனியே உட்கார்ந்து புலம்புகிறான்.
இ : ஐயோ.. முடியாது.. முடியாது.. என்னால இனிமேலும் முடியாது. கொஞ்சோண்டு பொங்கலுக்காக அவ்ளோ பாத்திரம் கழுவ வேண்டியிருக்கு. காலைல ரெண்டு இட்லிக்காக ஹோட்டலை புல்லா தொடைக்க வேண்டி இருக்கு. மத்தியானம் கொஞ்சம் சாப்பாட்டுக்காக எல்லாரோட எச்சில் இலையையும் தூக்கி வெளியே போட வேண்டியிருக்கு.. அப்பப்பா என்னால முடியாதுப்பா..
இ : சே… எவ்ளோ ஜாலியா இருந்தேன் வீட்ல…
இ : ( தலையில் அடித்துக் கொள்கிறான் ) சே.. வீட்ல படிக்கிறது மட்டும் தான் வேலை.. இங்க அதை விட ஆயிரம் மடங்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு.
இ : ( தரையை மிதிக்கிறான் ) நான் வீட்லயிருந்து காசு திருடாமலாச்சும் இருந்திருந்தா திரும்பி போயிருக்கலாம். அப்பா அடிச்சாலும் எவ்ளோ பாசமா இருந்தாரு. எல்லா வீக்கெண்டும் வெளியே கூட்டிட்டு போவாரு. ஜாலியா கதை சொல்லி தருவாரு. சே.. எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்.
இ : அவருக்கு எதிரா மட்டுமா தப்பு பண்ணினேன். திருடுறது தப்புன்னு கடவுள் சொல்லியிருக்காரு. அவருக்கு எதிராகவும் இல்லையா தப்பு பண்ணினேன்.
இ : கிடைக்காது… கிடைக்காது.. எனக்கு மன்னிப்பே கிடைக்காது.. ஐயோ.. நான் இப்போ என்ன பண்ணுவேன்.
இ : பரவாயில்ல… ம்ம்ம் நான் போவேன். அப்பாகிட்டே போய்.. உண்மையை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேப்பேன். அப்பா என்ன சொல்லுவாரு ? ( யோசிக்கிறான் )
( அப்பா பின்குரல் அல்லது இ.ம அப்பாவைப் போல பேசுவது )
டேய்..என்ன தைரியம் இருந்தா இந்த வீட்டுக்குள்ளே காலெடுத்து வைப்பே… உன்னை இவ்ளோ பாசமா பாத்துகிட்டதுக்கு ஊரை விட்டே ஓடிப் போயிட்டே இல்ல… எங்க மானம் மரியாதை எல்லாம் போச்சு… இப்போ எதுக்கு வந்தே !
இ : ஐயையோ.. இது ரொம்ப கஷ்டமா இருக்கே.. ஓடிப் போனதுக்கே இப்படின்னா.. பணம் எடுத்துட்டு போனேனே.. அதுக்கு என்ன சொல்லுவாரு ?
( அப்பா பின்குரல் அல்லது இ.ம அப்பாவைப் போல பேசுவது )
நில்றா அங்கே… நான் கஷ்டப்பட்டு சேத்து வெச்ச பணத்தை எல்லாம் திருடிட்டு ஓடிட்டியா.. திருட்டுப் பயலே.. கெட்ட சகவாசம் வெக்காதே வெக்காதேன்னு சொன்னேன் கேட்டியா.. உன் அண்ணனைப் பாத்து படிச்சிருக்கலாம்ல.. வந்தது தான் வந்தே.. பணம் எல்லாம் எங்கே..முதல்ல பணத்தை எண்ணி கைல வை….
இ : ஆஹா…… இது அதை விட ரொம்ப கஷ்டமா இருக்கே.. பணத்தை எடுத்துட்டு போனதுக்கே இவ்ளோ திட்டுவாருன்னா, நகையை எடுத்துட்டு போனதுக்கு என்ன செய்வாரு ?
( அப்பா பின்குரல் அல்லது இ.ம அப்பாவைப் போல பேசுவது )
டேய்… எங்கடா போயிருந்தே… என்னடா கோலம் இது. என்ன தைரியம் இருந்தா அலமாரியை திறந்து நகையெல்லாம் எடுத்துட்டு போயிருப்பே… எங்கே வெச்சே நகையெல்லாம். டேய்… அந்த கம்பை எடு.. இவன் தோலை உரிச்சு முதல்ல நகையெல்லாம் எங்கேன்னு கேக்கணும்… இவனை வெளுத்தா தான் சரிப்பட்டு வருவான்…
( இ.ம அங்கும் இங்கும் நடக்கிறான் .. பின் பெருமூச்சு விடுகிறான் )
இ.ம : என்னதான் நடந்தாலும் சரி… நான் அப்பா கிட்டே போவேன். எப்படியாவது திருட்டு ரயில் பஸ்.. லாரி.. ஏதாச்சும் புடிச்சாச்சும் நான் கண்டிப்பா ஊருக்கு போவேன். அடச்சே.. இனிமே இந்த திருட்டு வேலையே இருக்கக் கூடாது லைஃப்ல.. ரயில், பஸ்ஸுக்கு டிக்கெட் எடுக்க காசு இல்லேன்னா, நான் ஏதாவது லாரி புடிச்சோ, யார் கிட்டேயாவது லிஃப்ட் கேட்டோ போயிடுவேன். இனிமே எந்த திருட்டு வேலையுமே வேண்டாம். போயிட்டு என்ன பேசலாம்… ம்ம்ம்….
இ.ம : அப்பா.. என்னை மன்னிச்சுடுங்க.. நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். உங்க பணம் நகையெல்லாம் திருடிட்டேன். உங்க கிட்டே சொல்லாம ஓடிப்போயிட்டேன். உங்க மகனா இருக்கவே எனக்கு தகுதியில்லை. உங்க வீட்ல ஒரு வேலைக்காரனாவாச்சும் என்னை சேத்துக்கோங்க… பிளீஸ்… உங்க வீட்ல வேலைக்காரனா இருக்கிறது கூட மிகப்பெரிய நிம்மதி தான்…. ( மெதுவாக ) இப்படி சொல்லலாமா ? இல்லை… இப்படி சொல்லலாமா ?
இ.ம : அப்பா.. நான் நீங்க சொன்னதையும் கேக்கல, கடவுள் சொன்னதையும் கேக்கல. ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன். தயவு செய்து மன்னிச்சுடுங்க. உங்க மகனா இருக்க எனக்கு தகுதியே இல்லை. ஒரு வேலைக்காரனா சேத்துகிட்டு சாப்பாடு போடுவீங்களாப்பா.. பிளீஸ் ?
இ : ( கொஞ்சம் நிம்மதி முகத்துடன் ) ஆமா.. அதான் சரி… நான் கண்டிப்பா போவேன். மன்னிப்பு கேப்பேன்.
இ.ம : அப்பா மன்னிப்பாரா ? ம்ம்ம்.. சே… கண்டிப்பா மன்னிப்பாரு. அவரு எவ்ளோ அன்பானவரு. ஒரு தடவை கால்ல அடிபட்டு நான் அழுதப்போ அவரு கண்ணும் கலங்கிடுச்சு, ஓடி வந்து தூக்கிட்டாரு. ஒரு தடவை ஆஸ்பிட்டல்ல நான் உடம்பு சரியில்லாம இருந்தப்போ நைட் புல்லா தூங்காம கைய புடிச்சுட்டே பக்கத்துல உக்காந்திருந்தாரு… சின்ன வயசுல எப்பவும் என்ன தோள்ல இருந்து அவர் கீழே விடறதே இல்லை.. அவரு ரொம்ப அன்பானவரு. நிச்சயம் மன்னிப்பாரு… அவருக்கு என்மேல ரொம்ப பிரியம்.. நான் தான் அதை உதாசீனப்படுத்திட்டேன்…
( போகிறான் )
காட்சி 6
( ரொம்ப சோர்வுடன் வீட்டை நோக்கிப் போகிறான் இ.ம அப்பா அவனைப் பார்த்து ஓடி வருகிறார் )
அப்பா : ஓ.. மகனே.. என்னடா ஆச்சு.. எங்கே போயிருந்தே…. உனக்கு ஒண்ணும் ஆகலையெ.. நாங்க பதறிப் போயிட்டோம்.. போலீஸ்ல எல்லாம் கம்ப்ளயின்ட் குடுத்தோம்…
இ.ம : அப்பா. ஐம். சாரி.. என்னை மன்னிச்சிடுங்க… நான் தான்..
அப்பா : அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்பா…உன்னை பாத்ததுல எவ்ளோ சந்தோசம் தெரியுமா ? சாப்பிட்டியா ?
இ.ம : இல்லப்பா… பசிக்குது…
அப்பா : ஐயோ.. பசியில வந்திருக்கியா… நீ வீட்ல போய் குளிச்சிட்டிரு.. இதோ டாடி ஸ்விகி ல பிரியாணி ஆர்டர் பண்றேன்.. உனக்கு புடிச்ச மட்டன் பிரியாணி..
இ.ம : அப்பா..
அப்பா : நீ எதுவும் சொல்ல வேண்டாம்பா.. நீ எனக்கு திரும்ப கிடைச்சுட்டியே.. அதுவே போதும்பா… ரெண்டு வாரமா நான் ஆபீசுக்கே போகல… உன்னைப் பாத்ததுல தான் உயிரே வந்திருக்கு… நீ முதல்ல போய் குளி.. அப்புறம் சாப்பிடுவோம்..நடந்த எல்லாத்தையும் மறந்துடு.. ரிலாக்ஸா இரு.
( இளைய மகன் உள்ளே போகிறான் )
அண்ணன் : அப்பா இது உங்களுக்கே நல்லாயிருக்கா…..
அப்பா : என்னப்பா சொல்றே.. தம்பி வந்திருக்கான்.. முகத்துல சந்தோசத்தைக் காணோமே என்னாச்சு ?
அண்ணன் : வீட்ல இருந்த நகையெல்லாம் திருடிட்டு ஊர் சுத்த போன பையன் வந்த உடனே ஸ்விகில பிரியாணி ஆர்டர் பண்றீங்க. . வீட்ல இருந்து, உங்க பேச்சைக் கேட்டு, நல்ல பிள்ளையா படிச்சிட்டிருந்த எனக்கு ஒண்ணுமே இல்லையா ?
அப்பா : என்னப்பா பேசறே.. தம்பியை காணொம்ன்னு நாம எவ்ளோ தவிச்சுப் போயிட்டோம். அவன் திரும்பி வந்திருக்கான். செத்துப் பொழச்சு வந்திருக்கான். அவனை நாம தானேப்பா கவனிக்கணும்.
அண்ணன் : அப்போ கூடவே இருக்கிறவனுக்கு மரியாதை இல்லையா ?
அப்பா : அப்படியெல்லாம் இல்லப்பா.. எனக்குள்ள எல்லாமே உங்களுக்குரியது தானே. இப்போ நாம தம்பியை கவனிப்போம். பாவம் எவ்ளோ நாள் சாப்டாம இருந்தானோ. நாம எல்லாரும் சேந்து இருக்கிறது தானேப்பா சந்தோசம். நீங்க ரெண்டு பேரும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி.. எனக்கு ரெண்டு பேருமே வேணும்ல.. வா.. எல்லாரும் சேர்ந்து சாப்டு எவ்ளோ நாளாச்சு… கோச்சுக்காம வா…
( அப்பாவும் அண்ணனும் உள்ளே போகின்றனர் )
பின் குரல்
தந்தையின் அன்பு மாறாதது. பிள்ளைகள் எவ்வளவு தான் தவறு செய்திருந்தாலும் மனம் திரும்பி தந்தையிடம் வரும்போது தந்தையின் கரம் அரவணைக்கத் தவறாது.மண்ணகத் தந்தையே அப்படியெனில் விண்ணகத் தந்தை எப்படியிருப்பார் ! என்னிடம் வருபவர்களை நான் புறம்பே தள்ளி விடுவதில்லை என்றவர் அவர். அவரது அன்பை புரிந்து கொள்வோ. பாவம் செய்து வழி விலகிப் போனாலும் கவலையில்லை. இன்றே நமது தவறை உணர்வோம். கடவுளிடம் திரும்ப வருவோம். நம் பாவங்களை மன்னித்து நம்மை ஏற்றுக் கொள்ள அவர் ஆணிகள் பட்ட கரத்தை ஆவலாய் விரித்துக் காத்திருக்கிறார்.