Posted in Christianity, Sunday School

SKIT : திருந்திய மைந்தன்

Image result for prodigal son

காட்சி 1

( நான்கு நண்பர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர் )

நண்பர் 1 : என்னடா ரமேஷ்.. ரொம்ப டல்லா இருக்கே ? என்னாச்சு ?

ரமேஷ் : டல்லெல்லாம் ஒண்ணுமில்லை.. வீட்ல அண்ணன் போடற சீன் தான் தாங்க முடியல.

ந 1 : அப்படி என்னதான்டா பண்றான் உன் அண்ணன் ? அவன் எப்பவுமே உனக்கு ஏதாச்சும் கொடச்சல் குடுத்துட்டே இருக்கானே…

ரமேஷ் : ஆமாடா… அப்பாவோட ரியல் எஸ்டேட்டும், ஹார்ட்வேர் ஷாப்பும் அவன் தானே பாத்துக்கறான். அதான்.. ரொம்ப வேலை பாக்கறானாம்.. நான் வெட்டியாம்… நாசூக்கா குத்திக் காட்டறான்.

ந 2 : அவன் சொல்றதை சொல்லிட்டு கிடப்பான். நீ விட்டுத் தள்ளு. உனக்கு தான் தேவைக்கு காசு கிடைக்குதுல்ல.

ரமேஷ் : பணம் அப்பா அக்கவுண்ட் ல போட்டுடுவாரு. ஆனா ஏதோ அவன் சொத்தை எனக்கு புடிங்கி குடுக்கிறது மாதிரி டயலாக் விடுவான். கடுப்பாயிருக்கு.

ந 3 : ம்ம்.. அண்ணன்னு ஒருத்தன் இருந்தா நொண்ணை சொல்லிட்டு தாண்டா இருப்பான்.

ரமேஷ் : இன்னிக்கு அப்பா கிட்டே கொஞ்சம் காசு கேட்டேன். சரிப்பா போடறேன்னு சொன்னாரு அப்பா. இவன் இடையில நின்னுகிட்டு, ‘வெண்ணை திங்கறவன் ஒருத்தன்… வெளங்கிடும்…’ அப்படின்னு இழுக்கறான். கடுப்பாயிடுச்சு. பேசாம வந்துட்டேன்.

ந 2 : நீ பேசாம வந்தது தான் தப்பு. அவன் பேச்சை கட் பண்ணியிருக்கணும். அவனை ஆஃப் பண்ணியிருக்கணும்.

ரமேஷ் : எப்படிடா ஆஃப் பண்றது ? .. நாமளா ஏதாச்சும் பண்ணி பெரிய ஆள் ஆகலேன்னா நமக்கு மரியாதை இருக்காது.

ந 1 : இப்போ தான் நீ பாயின்டுக்கே வரே… நான் ஒரு ஐடியா சொல்றேன் கேக்கறியா ?

ரமேஷ் : சொல்லு, எப்படியும் மொக்க ஐடியாவா தான் சொல்லுவே.

ந 1 : ஒரு பக்கா ஐடியா சொல்றேன். ஒரு கம்பெனி ஆரம்பிப்போம். எனக்கு நிறைய பிஸினஸ் ஐடியாஸ் இருக்கு. ஆனா என்ன ஸ்பான்சர் பண்ண தான் ஆளில்லை. என் வீட்டு நிலமை உனக்கே தெரியும். நீ ஸ்பான்சர் பண்ணினா நாம எங்கயோ போயிடலாம்….

ரமேஷ் : பிஸினசா.. அது ஒண்ணு தான் கொறச்சல்…. அப்படியெல்லாம் வேர்வை சிந்தி உழைக்க எனக்குப் புடிக்காதுப்பா.

ந 2 : ஒரு கம்பெனி ஆரம்பிச்சு, கிளையன்ட் புடிச்சு, புராஜக்ட் புடிச்சு… அதெல்லாம் வேலைக்காவாதுடா.. நான் ஒரு ஐடியா சொல்லவா ?

ரமேஷ் : சொல்லுங்க சொல்லுங்க.. ஐடியா தானே…

ந 2: நாம ஒரு படம் எடுக்கறோம். ஹாரர் படம் இன்னிக்கு செம ஹாட் ! எனக்குத் தெரிஞ்ச நல்ல டைரக்டர்ஸ் இருக்காங்க. ரைட்டர்ஸ் இருக்காங்க. நல்ல ஒரு ஹீரோயினைப் புடிச்சு ஒரு படத்தை ஆரம்பிச்சோம்ன்னா போதும். ஒரே படம்.. ஓஹோன்னு போயிடலாம்…

ரமேஷ் : என்னடா சொல்றே.. சினிமாவா ?

ந 2 : ஆமாடா… ஒரே படத்துல புகழோட உச்சிக்கே போயிடலாம். இப்பல்லாம் சினிமா ஆயிரம் கோடி வரைக்கும் சம்பாதிச்சுக் கொட்டுது தெரியுமா ? என்னதான் கம்மியா கணக்கு பண்ணினாலும் 50 கோடி கன்ஃபம்டா..

ரமேஷ் : என்னடா.. கேக்க நல்லாயிருக்கே.. யாரை ஹீரோவா போடலாம்

ந 2 : டேய் என்ன விளையாடறியா ? உன்னை விட ஸ்மார்ட்டான ஹீரோ எங்கடா இருக்கான் ? நீ தான்டா ஹீரோ. உனக்குப் புடிச்ச ஒரு நடிகையை ஹீரோயினா போட்டு படத்தை எடுத்திடுவோம்.

ரமேஷ் : என்னடா.. உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கிடுவீங்க போல

ந 3 : இது ரொம்ப சிம்பிள் மேட்டர் மச்சி. ஆறே மாசம், ஐம்பது கோடியோட நாம வெளியே வரலாம். அப்புறம் அது நூறாகும், ஐநூறாகும், ஆயிரமாகும்.. அப்புறம் நம்மளைத் தேடி தான் உலகமே வரும். அப்போ உன் அண்ணனைக் கூப்பிட்டு அவனுக்கும் ஒரு சீன் குடுக்கலாம். வில்லன் சீன்.

ரமேஷ் : இதுக்கு ரொம்ப செலவாகுமேடா.

ந 1 : கையில வெண்ணையை வெச்சுட்டு ஏண்டா நெய்க்கு அலையறே. உன் அப்பா கிட்டே கேளு.

ரமேஷ் : ஆமா.. ஐயாயிரம் கேட்டா ரெண்டாயிரம் குடுக்கிறவரு அவரு. அவருகிட்டே எப்படி கேக்கறது ?

ந 1 : ஏன் பணமா கேக்கறே… சொத்துல உன் பங்கை கேளு. அவருக்கு ரெண்டு பசங்க தானே. ஆளுக்கு பாதியா கேளு. வாங்கிட்டு வா, ரெண்டே வருசத்துல நாலுமடங்கா நாம அவருக்கு திருப்பி குடுக்கலாம்.

ரமேஷ் : என்னடா சொல்றே ? சொத்தைப் பிரிச்சு தருவாரா ?

ந 2 : நீ கேணையனா இருந்தா காலம் பூரா ஒரு அடிமை மாதிரி தான் இருப்பே. உனக்குன்னு ஒரு கெத்து இருக்கு. உனக்குன்னு ஒரு தில்லு இருக்கு. நீ உன் அண்ணனுக்கு முன்னாடி நின்னு ஜெயிச்சுக் காட்டணும்.

ந 1 : யோசிக்காதே மச்சி.. நாங்க இருக்கோம் உன் கூட

ந 3 : உன்னை உலகம் முழுக்க ஃபேமஸ் ஆக்காம நாங்க ஓய மாட்டோம். இது சத்தியம்.

ரமேஷ் : ம்ம்ம். சரிடா… நான் பேசறேன். பாப்போம்..

ந 2 : பாப்போம் இல்ல.. உனக்குப் புடிச்ச அந்த நடிகையையே ஹீரோயினா போடலாம். வெற்றியோட வா.

ரமேஷ் ( புன்னகையுடன் ) : கண்டிப்பா.. முதல்ல அப்பாகிட்டே பணம் எடுக்கறோம், அப்புறம் படம் எடுக்கறோம்.

காட்சி 2

( அப்பா.. ரமேஷ்.. மூத்த மகன் மகேஷ் )

ரமேஷ் : டாட்…டாட்…

அப்பா : என்னப்பா.. சொல்லு.. என்ன விஷயம்.

ரமேஷ் : அப்பா.. எனக்கு கொஞ்சம் பணம் வேணும்.

அப்பா : என்னோட பர்ஸ்ல இருக்கும்.. எடுத்துக்கோ…

ரமேஷ் : அப்படியில்லை.. எனக்கு கொஞ்சம் நிறைய பணம் வேணும்.

அப்பா : சரி.. சொல்லு நான் டிரான்ஸ்ஃபர் பண்ணி விடறேன்.. ஐயாயிரமா, பத்தாயிரமா ? எதுக்குனு சொல்லலியே ?

ரமேஷ் : இல்லை நிறைய வேணும்… நான் பிஸினஸ் பண்ண போறேன்.

அப்பா : வாவ்.. மகனே.. இப்போ தாண்டா எனக்கு சந்தோசமா இருக்கு. உன் அண்ணன் ரியல் எஸ்டேட்டையும் ஹார்ட்வேர் பிஸினசையும் சேத்து பாக்க முடியாம கஷ்டப்படறான். நீ ஹார்ட்வேரை எடுத்துக்கோ… நல்லா பிசினஸ் பண்ணு…

மகேஷ் : இவனா.. ஹார்ட்வேர் பிஸினஸையா ? ம்ம்ம். வெளங்கிடும்.

அப்பா : அப்போ ரியல் எஸ்டேட்டை பாக்கட்டும்

மகேஷ் : இவனா ? காமெடி பண்றீங்களா… நான் இல்லேன்னா இங்கே எதுவுமே நடக்காது. அவன் எது வேணும்ன்னாலும் பண்ணட்டும். பிளாப் ஆனா என்கிட்டே ஒண்ணும் சொல்ல கூடாது.

ரமேஷ் : எனக்கு நம்ம பிஸினஸ் எல்லாம் வேண்டாம்.. நான் வேற பண்ண போறேன்.

அப்பா : வேற பிசினஸா ? அப்படி என்ன பிஸினஸ் டா உனக்கு தெரியும் ?

ரமேஷ் : அதெல்லாம் எனக்கு பிரன்ஸ்ட் இருக்காங்க.. அவங்க பாத்துப்பாங்க. எல்லாம் பிளான் பண்ணியாச்சு.

மகேஷ் : பிரண்ட்ஸா ? உன் கூட வேலை வெட்டியில்லாம சுத்திட்டு இருப்பாங்களே அவங்களா ? வெளங்கிடும்…

ரமேஷ் : அப்பா..இவன் எப்பவும் வெளங்கிடும்ன்னு சொல்றதே எனக்கு புடிக்கல. எனக்கு என் சொத்தைப் பிரிச்சு கொடுங்க போறேன்.

அப்பா : வாட்.. என்ன சொன்னே ? புரியல

ரமேஷ் : சொத்துல எனக்கு வரவேண்டிய பங்கை பிரிச்சு குடுங்க, நான் போய் பிஸினஸ் பண்றேன்

அப்பா : சொத்தை பிரிக்கவா ? விளையாடறியா ? நான் இன்னும் உயிரோட தாண்டா இருக்கேன். நான் செத்தப்புறம் தாண்டா சொத்தை பிரிக்கணும்.

ரமேஷ் : அதுக்காக நீங்க சாகற வரைக்கும் வெயிட் பண்ண முடியாது. சீக்கிரம் சாகுங்கன்னு சொல்லவும் முடியாது. ஐ நீட் மை ஷேர்

அப்பா : ( அதிர்ச்சியில் ) மகனே.. நீயாடா இப்படியெல்லாம் பேசறே.

மகேஷ் : இப்போவாச்சும் புரியுதா உங்க மவனோட லச்சணம்.. நான் தான் உங்க கூட கடைசி வரைக்கும் இருந்து ஹெல்ப் பண்றேன்.. நான் மட்டும் இல்லேன்னா…

அப்பா : ( ரமேஷைப் பார்த்து ) வேணான்டா.. உனக்கு சொத்தை கையாள தெரியாது. பிரண்ட்ஸ் எல்லாம் உன்னை ஏமாத்திடுவாங்க… நீ இங்கேயே இரு.. பணம் எவ்வளவு வேணும்ன்னாலும் தரேன். எங்களுக்கு ஒத்தாசையா இரு..

ரமேஷ்: சும்மா சீன் போடாதீங்கப்பா… எனக்கு சொத்தைப் பிரிச்சு கொடுங்க.

மகேஷ் : ஏன்டா.. அப்பாவையே எதிர்த்து பேசறியா ? வெளங்கிடும்….

ரமேஷ்: ஆரம்பிச்சுட்டியா உன் புராணத்தை. உன் சொத்தையா நான் கேட்டேன். என்னோட சொத்தை தானே கேட்டேன். தேவையில்லாம உன் மூக்கை இதுல நுழைக்காதே.

அப்பா : அப்பா.. சண்டை போடாதீங்க.. உனக்கு சொத்து தானே வேணும். தரேன். ஆடிட்டர் வேல்முருகனை கூப்பிடு. சொத்தை இரண்டா பிரிச்சு, உனக்குரிய பங்கை உன் அக்கவுண்ட்ல பணமா போடறேன். நீ பிஸினஸ் ஆரம்பி.

மகேஷ் : அப்படி சொத்தை பிரிக்கிறீங்கன்னா ரெண்டா தானே பிரிப்பீங்க… அப்படியே ரெண்டு பேர் கிட்டேயும் கொடுத்திடுங்க… வாங்கிட்டு போறவன் அப்புறம் மறுபடியும் வந்து நிக்கக் கூடாது பாருங்க.

அப்பா : உங்க ரெண்டு பேருக்கும் சேர வேண்டிய சொத்தை நான் உங்க ரெண்டு பேருக்குமா தந்துடறேன்பா… நாம சந்தோசமா அன்பா இணைஞ்சு இருக்கணும்ன்னு நினைச்சேன். கடைசில நம்ம வீட்லயே இப்படி சண்டை வந்துச்சு.

மகேஷ் : போறது தான் போறே… நம்ம வீட்ல நிறைய வேலைக்காரங்க உண்டு. கடையிலயும், பிஸினஸ்லயும் நிறைய ஆட்கள் உண்டு. எல்லார் கிட்டேயும் சொல்லிடு. சொத்தையெல்லாம் வாங்கிட்டு போறேன்னு. அவங்களுக்கும் தெரியணும்ல, இங்கே இனிமே நான் தான் முதலாளின்னு.

ரமேஷ் : யாருக்கு வேணும் இந்த வீடும், உன் ஆட்களும். நான் வெளியூர் போறேன். எப்படி வரேன்னு நீ பொறுத்திருந்து பாரு.

மகேஷ் : ஆமா.. இவரு பெரிய ஆளாகப்போறாராம். .. வெளங்…. சரி விடு.

அப்பா ( போனில் ) : சார்.. ஆமா… இல்ல, ரெண்டா பிரிச்சு எனக்கு டீட்டெயில்ஸை வாட்ஸப் பண்ணுங்க. பாதியை ரமேஷுக்கும், பாதியை மகேஷுக்கும் போட்டிருங்க. ஆங்.. சரி.. இன்னிக்கே முடிச்சிடுங்க.

( எல்லோரும் போகிறார்கள் )

காட்சி 3

ந 1 : நம்மவே முடியலடா.. எட்டு கோடி ரூபாய் ! எட்டு கோடிக்கு எவ்ளோ சீரோன்னு இப்போ தான் பாக்கறேன். நீ தில்லான ஆள்தாண்டா.. வேலையை நாசூக்கா முடிச்சுட்டியே.

ரமேஷ் : அதெல்லாம் இருக்கட்டும்டா.. அந்த ஹீரோயின் கிட்டே பேசினீங்களா ? கால்ஷீட் வாங்கினீங்களா ? டைரக்டர் என்ன சொல்றாரு ?

ந 2 : ரமேஷ்.. நீ எதுக்கும் கவலைப்படாதே .. ( ந3 ஐப் பார்த்து ) இவன் தான் இனிமே உன்னோட மேனேஜர். அவனுக்கு தேவையான அக்சஸ் எல்லாம் குடுத்துடு. வரவு செலவு எல்லாத்தையும் அவன் கிளியரா பாத்துப்பான்.

ந 3 : யா.. ஐம் அ பிகாம் பர்சன்.. அப்புறம் எம்பிஏ கூட முடிச்சிருக்கேன். எல்லாருக்கும் தெரிஞ்சது தான்.

ந 1 : படிச்சதை வெச்சு ஒண்ணும் கிழிக்க முடியாது. ரமேஷ் இல்லேன்னா நாம எல்லாம் சிங்கிள் டீக்கு சிங்கியடிக்க வேண்டியது தான். சோ, ஞாபகம் வெச்சுக்கோ.

ந 2 : ரமேஷ் இனிமே ஹீரோ.. சோ, அவன் இவன்னு எல்லாம் பேச கூடாது. சும்மா சுத்தி சுத்தி நிக்கக் கூடாது. அவரு கெத்தை மெயின்டெயின் பண்ணணும்

( ரமேஷ் பெருமிதத்தில் நிற்கிறான் )

ந 2 : ஆங்.. சொல்ல மறந்துட்டேன். டைரக்டர் கிட்டே பேசினேன். அவரு ஸ்டோரி டிஸ்கஷன் பிளான் பண்ணுவோம்ன்னு சொன்னாரு. நான் மலேஷியாவுல ஒரு பீச் ரிசார்ட் புக் பண்ணியிருக்கேன்.

ரமேஷ் : மலேஷியாவா.. அங்கே எதுக்குடா.

ர 3 : ஏன் ஜெர்க் ஆகறீங்க.. நீங்களும் ஹீரோயினும் முதல்ல போறீங்க, ஒன் மந்த் கழிச்சு டைரக்டரும் நாங்களும் வரோம்… ஓக்கே..

ரமேஷ் : ஓ. அப்படி.. ஓக்கே.. மலேஷியாவே போவோம். ஐ மீன்.. நாங்க போறோம்.

ர 2 : உன்னோட ஸ்மார்ட் போன்ல என்னோட பிங்கர் ஐடன்டிடி போட்டுக் குடு, இல்லேன்ன ஒவ்வொரு டிரான்சாக்ஷனுக்கும் உன்னை கஷ்டப்படுத்த வேண்டியிருக்கும்.

ரமேஷ் : யா..யா. அதை போட்டுடுவோம்… நீயே கணக்கு வழக்கெல்லாம் பாத்துக்கோ. ஆமா படத்துக்கு என்ன பெயர் போடலாம் ?

ர 1 : கெட்ட குமாரன் , ந்னு வெச்சுப்போம். இந்த படம் ஒரு ரேஞ்ச் ல இருக்கும் பாரு.

ரமேஷ் : ஓக்கே ஓக்கே அதெல்லாம் நீங்க பாத்துக்கோங்க.. ஆமா.. அந்த மலேஷியாவில என்னிக்கு போறோம் நாங்க ? அந்த ஹீரோயினோட வாட்சப் நம்பர் என்ன ?

ர 2 : அட..அப்படியே ஹீரோவா மாறிட்டேப்பா நீ.. சூப்பர்.. அடுத்த வாரமே அனுப்பறேன். டோன்ட் வரி. அதுக்கு முன்னாடி எல்லா ஏற்பாடுகளையும் செய்யறேன்.

காட்சி 4

( மலேஷியாவில் ரமேஷ் )

ரமேஷ் : ( காலையில் ) அப்பா.. ஒரு மாசம் போனதே தெரியல…. மலேஷிய வாழ்க்கை சூப்பர் தான்பா… சினிமாக்காரங்க வாழ்க்கை என்ன சுகம், என்ன சுகம். ஆமா… எங்கே ஹீரோயின் விஸ்தாரா…

( சுற்றுமுற்றும் பார்க்கிறான் காணோம் )

ரமேஷ் : ம்ம்.. போன் பண்ணி பாப்போம்… ஐயோ.. என் போன் எங்கே ? வாட்.. போனை காணோமா… எங்கே வெச்சேன்.. இங்கே தானே வெச்சேன்..

ரமேஷ் : ஹோட்டர் நம்பர்ல இருந்து கால்பண்ணி பாப்போம்… ( அழைக்கிறான் ) சுவிட்ச் ஆஃபா ? என்னாச்சு என் போனுக்கு. சரி விஸ்தாராவுக்கு போன் பண்ணுவோம்.. நம்மர் பர்ஸ்ல இருக்கு… ஐயோ.. என் பர்சையும் காணோம் ( தேடுகிறான் ) என்ன ? என் பையையும் காணோம்.. ஐயோ என் பேக்.. பாஸ்போர்ட்.. டிக்கெட்..

ரமேஷ் : ஐயோ .. என்ன செய்வேன்… என் பிரண்ட்ச்ஸ் நம்பர் ஏதும் எனக்குத் தெரியாதே…

ரமேஷ் : சரி .. ஹோட்டல்ல சொல்லுவோம்.

ரமேஷ் : ஆமா சார்.. எல்லாமே திருடு போயிருக்கு… என்னது காலையில ரெண்டு மணிக்கு ஹோட்டல் கார்ல ஏர்போர்ட் போனாங்களா ? விஸ்தாராவா ?… ஓ..மை..காட்…. எல்லாமே பிளானா ? …. இல்ல சார்.. நான் பணம் கட்டிடுவேன்.. ஹோட்டல் பீஸ் எல்லாம் கட்டிடுவேன்.. என் அக்கவுண்ட்ல .. ஐ ஹேவ் எயிட் க்ரோர்.. டோன்ட் வரி… நோ.. நோ.போலீஸ் எல்லாம் வேண்டாம்….

காட்சி 5

( ரமேஷ்.. ஒரு போலீஸ் அதிகாரி முன் )

ரமேஷ் : சார்.. ஆறு மாசமா போலீஸ் கஸ்டடில வெச்சிருக்கீங்க. ஒழுங்கா சாப்பாடும் இல்லை. யாரையும் பாக்கவும் விடல… எவ்வளவோ முயற்சி பண்ணியும் எதுவும் சொல்ல மாட்டேங்கறீங்க. பிளீஸ்… ஹெல்ப் மி…. நான் நல்ல வசதியா வாழ்ந்தவன். இங்கே கொசு, மூட்டைப்பூச்சி கடில கஷ்டப்படறேன்.. பிளீஸ்>

போலீஸ் : ரமேஷ்…. உங்க மேல தீவிரமான ஆக்ஷன் எடுத்திருக்காங்க. உங்க கிட்டே பாஸ்போர்ட் இல்லை, விசா இல்லை, நீங்க இல்லீகலா தங்கியிருக்கிற மாதிரி தான் கேஸ் போட்டிருக்காங்க. அதான் இவ்ளோ கெடுபிடி. நான் புதுசா வந்திருக்கேன்.. அதான் எல்லா கைதிகளையும் பாத்துட்டி இருக்கேன்.

ரமேஷ் : சார் நான் ஒரு மூவி டிஸ்கஷனுக்காக இங்கே வந்தேன். ஏழு மாசம் ஆச்சு. இமிகிரேஷன்ல கூட என் டீட்டெயில்ஸ் இருக்கும்.

போலீஸ் : ம்ம்ம்… உன் மேல இன்னொரு கேசும் இருக்கு…. பிராடு கேஸ்… ஹோட்டலுக்கு முப்பது இலட்சம் பில் பாக்கி இருக்கு. உன்னை யாரும் நம்ப தயாரா இல்லை.. உனக்கு ஹெல்ப் பண்ணவும் இங்கே யாரும் இல்லை. மலேஷியால யாரையாச்சும் உனக்கு தெரியுமா ?

ரமேஷ் : சார்.. இங்கே எனக்கு யாரையும் தெரியாது.. பட் பணம் ஒரு பிரச்சினை இல்லை… என்னோட பேங்க் டீட்டெயில்ஸ் எல்லாம் குடுத்தேனே.. பாத்தீங்களா.. ஹோட்டலுக்கு… பணம் டிரான்ஸ்பர் பண்ணிடலாம் சார். நாட் எ ப்ராப்ளம்..

போலீஸ் : எது.. நீ குடுத்த அக்கவுண்ட் ??? . அதுல நயா பைசா இல்ல. எல்லாத்தையும் தொடச்சு எடுத்திருக்காங்க. எல்லாத்துக்கும் உன்னோட போன்ல இருந்து தான் அப்ரூவல் போயிருக்கு. சோ, இது உனக்குத் தெரியாம இருக்க வாய்ப்பில்லைன்னு தான் இங்கே ரெக்கார்ட் ஆயிருக்கு.

ரமேஷ் : சார்.. என் பிரண்ட்ஸை நம்பிட்டேன் சார். அவங்க தான் கழுத்தறுத்துட்டாங்க…. அவங்க நம்பர் எல்லாம் குடுத்திருந்தேன்.. அவங்களை கான்டாக்ட் பண்ண முடிஞ்சுதா ? எனி இன்ஃபர்மேஷன் சார்…

போலீஸ் : எல்லாமே சுவிட்ச் ஆஃப். யாரையும் கான்டாக்ட் பண்ண முடியல. நீங்க குடுத்த எந்த நபரோட டீட்டெயில்சுமே… யூஸ் ஆகல. உங்களுக்கு எந்த லக்கும் இல்லை. அதனால தான் உங்களை கடுமையான சிறையில போட்டாங்க.

ரமேஷ் : சார்… கடைசியா எனக்கு ஒரே ஒரு வழி தான் சார் இருக்கு. இந்த ஆறுமாச சிறை வாழ்க்கைல நான் கத்துகிட்டது ஒண்ணே ஒண்ணு தான். நான் புரிஞ்சுகிட்டது ஒருத்தரோட அன்பைத் தான். நிழலோட அருமை வெயில்ல தெரியும் சார். ஆறுதலோட அருமை வலியில புரியும்.

போலீஸ் : அதெல்லாம் இருக்கட்டும்.. என்ன வழி தெரியுது அதைச் சொல்லு.. யாரோட அன்பு தெரியுது…

ரமேஷ் : என்னோட…. என்னோட அப்பா. .. அவரை நாம் ரொம்ப நோகடிச்சிட்டேன். அவர் கூட இருந்தவரைக்கும் எனக்கு எந்த கஷ்டமும் இருந்ததில்லை. அவர் பேச்சை கேக்காம பிறர் பேச்சைக் கேட்டதனால தான் சார் எனக்கு இப்படி பெரிய கஷ்டம் வந்திருக்கு.

போலீஸ் : உன் குடும்பக் கதையெல்லாம் எனக்கு எதுக்கு… மேட்டருக்குவா.

ரமேஷ் : சார்.. நான் என் அப்பாவை கான்டாக்ட் பண்ணணும் சார். அவருக்கு மகனா இருக்க எனக்கு தகுதியே இல்லை. அவரு இந்த படுகுழியில இருந்து மீட்டாருன்னா, காலம் பூரா அவரோட ஒரு வேலைக்காரனா இருந்து கடனை அடச்சுடுவேன்.

போலீஸ் : அதெல்லாம் நீ உன் அப்பா கிட்டே சொல்லு ஏன் என் கிட்டே சொல்றே. அவரு உன்னை மன்னிச்சு ஏத்துப்பாரான்னு எனக்கு தெரியாது…

ரமேஷ் : சார்… கடவுளுக்கு எதிராகவும், அப்பாவுக்கு எதிராகவும் நான் நடந்துட்டேன். உலக மக்களோட பேச்சைக் கேட்டு சொந்த அப்பாவை எதிர்த்துட்டேன். எவ்ளோ வருத்தப்பட்டிருப்பாருன்னு இப்போ தான் நினைச்சுப் பாக்கறேன்.

போலீஸ் : ஹலோ.. உன்னோட சொந்தக்கதை சோகக்கதை எல்லாம் எதுக்கு என் கிட்டே சொல்றே ?

ரமேஷ் : என்னோட அப்பாவை கொஞ்சம் கூப்பிட முடியுமா ? அவரு என்னை ஹெல்ப் பண்ணுவாரு சார். அட்லீஸ்ட் பணத்தையாவது அனுப்பி கடனை அடைக்க ஹெல்ப் பண்ணுவாரு.

போலீஸ் : முதல்ல பிரண்ட்ஸ் நம்பரெல்லாம் குடுத்தே அப்போ அப்பா நம்பரை குடுக்கவே இல்லை.. இப்போ குடுக்கறே ?

ரமேஷ் : என் தப்பு தான் சார். தப்பான ஆட்களை சரியானவங்கன்னு நினைச்சேன். சரியான அன்பை உதாசீனம் செஉதேன்.

போலீஸ் : அப்பா மட்டும் உனக்கு ஹெல்ப் பண்ணுவாருன்னு என்ன நிச்சயம் ?

ரமேஷ் : அவரு எப்பவுமே என்னோட அப்பா சார்… ஆமா.. நான் அவரோட மகனா நடக்கல, ஆனா அவரு என்னோட அப்பாவா தான் நடந்துப்பாரு.

போலீஸ் : அப்படியா பாப்போம்.

காட்சி 6

( அப்பா போலீஸ் ரமேஷ் )

அப்பா : ( ஓடி வந்து ரமேஷை கட்டியணைக்கிறார் ).. ஓ.. மை சன்.. நீ எப்படி இருக்கே.. இங்க போலீஸ்ல வந்து எப்படி மாட்டிகிட்டே… ஓ.. எப்படி இளைச்சு போயிட்டேடா.. கண்ணெல்லாம் உள்ள போயிடுச்சு. ஏதாச்சும் சாப்பிட்டியா. எத்தனை மாசமா உன்னைத் தேடறேன்…

ரமேஷ் : காலில் விழுந்து. அப்பா.. பிளீஸ் பர்கிவ் மி. நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன். உங்க மகனா இருக்கக் கூட எனக்கு தகுதியில்லை…

அப்பா : ( வாயை பொத்துகிறார் ) என்ன பேசறே நீ… உன்னை காணோமேன்னு தவியா தவிச்சு போயிட்டேன். நீ வருவே வருவேன்னு காத்திருந்தேன். போன் அடிக்கும்போ எல்லாம் ஓடோடிப் போய் விழுந்தடிச்சு எடுப்பேன். ஆனா நீ பேசவே இல்லை. இப்போ உன்னை பாக்கறது எவ்ளோ பெரிய சந்தோசம் தெரியுமா எனக்கு ?

ரமேஷ் : அப்பா… ஐம் சாரி…. சேவ் மி… என்னால இங்க இருக்க முடியல.

அப்பா : டோன்ட் வர்ரி…. எல்லாம் சரிபண்ணியாச்சு. ஹோட்டல் பில் கட்டியாச்சு. இமிகிரேஷனை கான்டாக்ட் பண்ணி உன்னை ரிட்டன் அனுப்ப ஏற்பாடு பண்ணியாச்சு. பாஸ்போர்ட் தொலைஞ்சி போச்சுன்னு கம்ப்ளெயின்ட் பதிவு பண்ணியாச்சு. லீகலா நாம இனிமே இந்தியா போயிடலாம்.

ரமேஷ் : அப்பா.. ரொம்ப நன்றிப்பா…

அப்பா : என்னப்பா நன்றி கின்றின்னி பேசிகிட்டு. வா.. முதல்ல டுவின் டவர்ஸ் பக்கம் போய் நல்ல ஹோட்டல்ல்ல சாப்பிடுவோம். பிரைவட் ஜெட் கேட்டேன் கிடைக்கல. ஈவ்னிங் மலேஷியன் ஏர்லைன்ஸ் ல பிஸினஸ் கிளாஸ் புக் பண்ணியிருக்கேன். டோன்ட் வரி … எல்லாமே சரியாயிடும். நீ என் செல்ல மகன்பா…

ரமேஷ் : அப்பா.. அண்ணன்..

அப்பா : அண்ணன் கொஞ்சம் டென்சனா தான் இருக்கான். நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே.. மறுபடியும் நீ நம்ம வீட்டுக்கு வந்து, என் மகனா அங்கே இருக்கணும். அது போதும் எனக்கு.

ரமேஷ் : உங்க அன்பை புரிஞ்சுக்காம நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேம்பா.. சாரி…

அப்பா : எப்போ நீ மனம் திரும்பி என்னை நினைச்சியோ, அப்பவே நீ மறுபடியும் என் பிள்ளையாயிட்டே. எதையும் நான் மனசுல வெச்சிருக்க மாட்டேன். வா.. நாம போலாம்.

*

பின்குரல்

தந்தையின் அன்பை விட்டு விலகிச் சென்ற மகன், மனம் திருந்திய போது தந்தை ஓடோடிச் சென்று அரவணைக்கிறார். மண்ணகத் தந்தையே இப்படியெனில் விண்ணகத் தந்தை எப்படி இருப்பார். நாம் அவரது அன்பை விட்டு விலகிச் செல்லும் போது, நமது வருகைக்காக, நமது அழைப்புக்காக, நமது அன்புக்காக அவர் ஏங்கிக் காத்திருப்பார். எதை விடவும் மேலானது தந்தையின் அன்பு.

தந்தையின் அன்புக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம்.
ஆனால் எதற்காகவும் தந்தையின் அன்பை இழக்கக் கூடாது. நன்றி.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s