Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 29 யோவேல்

29

யோவேல்

Image result for book of Joel

யோவேல் இறைவாக்கினரைக் குறித்து விவிலியம் அதிகமாகப் பேசவில்லை. அவர் பெத்துவேல் என்பவரின் மகன் என்பதைத் தவிர. இருவருடைய பெயரிலும் ‘கடவுள்’எனும் பொருள் இருக்கிறது, எனவே அவர்கள் ஒரு ஆன்மீகக் குடும்பத்தில் பிறந்திருக்க வாய்ப்பு உண்டு.

யோவேல் நூல் கிமு 9ம் தூநூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என இறையியலார்கள் நம்புகின்றனர். யோவேல் என்பதற்கு ‘யாவே தான் கடவுள்” என்பது பொருள். இந்த நூலில் மூன்று அதிகாரங்களும், எழுபத்து மூன்று வசனங்களும், இரண்டாயிரத்து முப்பத்து நான்கு வார்த்தைகளும் உள்ளன. யூதாவில் ஆரம்பகாலத்தில் இறைவாக்குரைத்தவர் யோவேல் இறைவாக்கினர்.

‘ஆண்டவரின் நாள்’ எனும் பதத்தை பயன்படுத்திய யோவேல் அதை மிகப்பெரிய எச்சரிக்கையாய் மக்களுக்குக் கொடுத்தார். தீர்ப்பு என்பதும் கடவுளின் நியாயமும் வேற்றின மக்கள் மீதல்ல, இஸ்ரேல் நாட்டின் மீதே விழும் எனும் எச்சரிக்கையை முதன் முதலில் விடுத்தவர் அவர் தான். ‘ஆண்டவரின் நாள்’ என்பது வெளிச்சத்தின் வரவல்ல, இருளின் வரவு. என அவரது இறைவாக்கு அதிர்ச்சியளிக்கிறது.

பல கிறிஸ்தவர்கள் தாங்கள் விண்ணகம் செல்வது சர்வ நிச்சயம் என்றும், எப்படிப்பட்ட பாவ வாழ்க்கை வாழ்ந்தாலும் கடவுள் கை விடமாட்டார் என்றும் நினைக்கின்றனர். அவர்களுக்கு யோவேலின் எச்சரிக்கை என்னவென்றால், ‘ஆண்டவரின் நாள்’ உங்களுக்கு இருளாய் வரும் என்பதே !

வெட்டுக்கிளிகளால் நாடு அடையப்போகும் அழிவை யோவேல் இறைவாக்கினர் முன்னுரைத்தார். நாட்டில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இருக்கும். உண்பதற்கும் எதுவுமின்றி எல்லாம் அழிக்கப்படும். என்பதே அவரது வார்த்தை. சுமார் 60 கோடி வெட்டுக்கிளிகள், அறுநூற்று நாற்பது கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் விஸ்வரூப வடிவமாய் நாட்டில் நுழைந்தால் ஒரு நாளைக்கு அவை தின்று குவிக்ககூடிய தானியங்கள் எண்பதாயிரம் டன் ! என்கிறது ஒரு கணக்கு.

வெட்டுக்கிளிகள் இறைவனின் தீர்ப்பாய் வருவதை விடுதலைப்பயணம் நூலில் மோசேயின் வாழ்க்கையில் வாசிக்கலாம். இறைவன் அனுப்பிய பத்து வாதைகளில் எட்டாவது வாதை வெட்டுக்கிளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கையாகவே நடக்க சாத்தியமுள்ள விஷயங்கள் இயற்கைக்கு மாறான அளவுக்கு விஸ்வரூபமாக நடக்கும் போது இறைவனின் கரம் அதில் இருப்பதை நாம் உணர முடியும். இந்த வெட்டுக்கிளிகளின் வருகையும் அப்படிப்பட்டதே.

இயற்கை பேரழிவுகள், இடர்கள் எல்லாமே இறைவன் நமக்கு அனுப்புகின்ற ஒரு செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யோவேல் இறைவாக்கினரின் வெட்டுக்கிளிகள் உவமை இன்னொரு விஷயத்தையும் எடுத்துரைக்கிறது. அது பாபிலோனியர்களின் படையெடுப்பு. வெட்டுக்கிளிகளைப் போல படையெடுத்து வருகின்ற வீரர்களை யோவேல் பதிவு செய்கிறார். பாபிலோனியர்களின் படையெடுப்பு தான் வெட்டுக்கிளிகளைப் போல அனைத்தையும் அழித்து நகர்கிறது. ஒரு குழந்தையோ, ஒரு உயிருள்ள கால்நடையோ கூட தப்பவில்லை என்பது துயரமான வரலாறு.

யோவேல் நூலின் இரண்டாம் பாகம் மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிபடையில் அமைந்துள்ளது. மக்கள் மனம் திரும்பாவிடில் இறைவனின் தண்டனை மிக அதிகமாய் இருக்கும் என்பதை அவரது வார்த்தைகள் எடுத்தியம்புகின்றன.

மக்கள் யோவேலின் இறைவார்த்தைக்குச் செவிமடுத்து மனம் திரும்பவில்லை. அதை விட நல்லது மது அருந்தி மயங்கிக் கிடப்பது என சென்று விட்டனர். இப்போது இரண்டாம் முறையாக யோவேல் அழைப்பு விடுக்கிறார்.

“உங்கள் உடைகளையல்ல, இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்” என்பது புதிய அறைகூவலாக வருகிறது. வெளிப்படையான அடையாளமல்ல, உள்ளார்ந்த மாற்றமே தேவையானது. என்பதே அதன் பொருள்.

யோவேல் இறைவாக்கினர் மனம் திரும்புதலை மகிழ்ச்சியின் அடையாளமாய் கூறுகிறார். இழந்து போனவை திரும்பக் கிடைக்கும் எனும் நம்பிக்கையின் வார்த்தையையும், ஆறுதலின் வார்த்தையையும் தருகிறார்.

எனது வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் எல்லாரையும் ஆசீர்வதிப்பேன் என இறைவன் வாக்களித்தார். “நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள்.
அந்நாள்களில், உங்கள் பணியாளர், பணிப்பெண்கள் மேலும்
என் ஆவியைப் பொழிந்தருள்வேன்” என்றுரைத்தார் அவர்.

ஆண்டவரின் நாள் எப்படி இருக்கும், அதற்கு என்ன அறிகுறி தெரியும் என்பதைப் பற்றி யோவேல் உரைத்தது மிக முக்கியமானது. “எங்குமே, இரத்த ஆறாகவும் நெருப்பு மண்டலமாகவும், புகைப்படலமாகவும் இருக்கும். அச்சம் தரும் பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்னே, கதிரவன் இருண்டு போகும்; நிலவோ இரத்தமாக மாறும்” என்றார் அவர்.

மீட்பின் நம்பிக்கையாக அவரது வார்த்தை “ஆண்டவரின் திருப்பெயரைச்சொல்லி வேண்டுவோர் யாவரும் தப்பிப்பிழைப்பர்” என ஒலிக்கிறது.

யோவேல் நூலிலுள்ள தீர்க்கதரிசனங்களில் சில நிறைவேறிவிட்டன. இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் இறுதி நியாயத் தீர்ப்புடன் மற்றவையும் முடிவு பெறும்.

மிகவும் சுருக்கமான இந்த நூல் மிகவும் பரந்துபட்ட இறை சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s