பாவம் வாசலில் படுத்திருக்கும்
*=
காட்சி 1
( விக்டர் & ஸ்டீபன் . முதலில் விக்டர் செயரில் அமர்ந்து பைபிள் வாசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஸ்டீபன் வருகிறான் )
விக்டர் : ( பைபிள் படித்துக் கொண்டிருக்கிறான் )
ஸ்டீபன் : ஹேய்.. விக்டர்.. என்னப்பா.. மரத்து மூட்ல உக்காந்து சீரியசா பைபிள் வாசிச்சிட்டு இருக்கே போல.
விக்டர் : ஆமாடா.. நாளைக்கு நம்ம பைபிள் ஸ்டடிக்கு கொஞ்சம் பிரிபேர் பண்ணலாம்ன்னு பாத்தேன். பைபிள் ஒரு புதையல் இல்லையா.. அதான் வாசிக்க வாசிக்க அப்படியே போயிட்டே இருக்கு.. நீ படிச்சிட்டியா..
ஸ்டீபன் : ஓ..யா.. நானும் மறந்துட்டேன்.. நானும் படிக்கிறேன்… ( ஒரு செயரை இழுத்துப் போட்டு உட்கார்கிறான். மொபைலை எடுக்கிறான் )
விக்டர் : கைல பைபிள் இல்லையா… ?
ஸ்டீபன் : இப்போ பைபிளையெல்லாம் நான் ரொம்ப யூஸ் பண்றதில்லை. ஸ்மார்ட் போன் வந்தப்புறம்.. இதான் ஈசியா இருக்கு.
விக்டர் : இருந்தாலும் பைபிள்ல படிக்கிற மாதிரி ஃபோக்கஸ் கிடைக்காது. தவிர்க்க முடியாத சூழல்கள்ல போன்ல படிக்கலாம்.. எப்பவுமே போன்ல படிக்கிறது எனக்கென்னவோ சரியா படல.
ஸ்டீபன் : நீயெல்லாம் ஒரு பழைய பஞ்சாங்கம்டா…. இந்த போன்ல படிக்கிறதுல எவ்ளோ யூஸ் இருக்கு தெரியுமா.. உதாரணமா.. நீ படிக்கிற பைபிள் என்ன வெர்ஷன் ?
விக்டர் : கிங் ஜேம்ஸ்.. பவர் எடிஷன்.
ஸ்டீபன் : உன் கிட்டே, என் ஐ வி இருக்கா ? நியூ கிங் ஜேம்ஸ் இருக்கா ? அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் வெர்ஷன் இருக்கா.. சீ.. என் கைல எல்லாமே இருக்கு. எதை வேணும்ன்னாலும் நான் படிக்கலாம்.
விக்டர் : ம்ம்.. குட்..குட்.. உனக்கு அது கம்ஃபர்ட்டபிளா இருந்தா அதை படி.. எனக்கு பிரச்சினை இல்லை ( புன்னகைக்கிறான்.. பின் படிக்கத் துவங்குகிறான் )
ஸ்டீபன் : ( மொபைலை எடுத்து படிக்கிறான் )… டொய்ங்…. ( ஒரு மெசேஜ் வருகிறது… ஸ்டீபன் அதைப் பார்க்கிறான்.. சிரிக்கிறான். மொபைபில் பதில் அனுப்புகிறான். பிறகு விக்டரைப் பார்த்துவிட்டு.. மீண்டும் மொபைபில் பைபிள் படிக்கிறான். விக்டர் எதையும் கவனிக்காமல் பைபிள் படித்துக் கொண்டே இருக்கிறான்.
( டொய்ய்ங்… ) இப்போது மீண்டும் ஒரு மெசேஜ் வருகிறது…
ஸ்டீபன் : யப்பா.. நாடு போற போக்கை நினைச்சா என்ன பண்றதுன்னே தெரியல. யாருக்கும் பாதுகாப்பில்லை. மனிதாபிமானமே செத்துப் போச்சு. ( மீண்டும் விக்டரைப் பார்த்தபடி படிக்கிறான் )
( ஒரு கால் வருகிறது.. எடுக்கிறான்.. எழும்பி நடந்தபடி பேசுகிறான் .. மீண்டும் வந்து உட்கார்ந்து படிக்கிறான் )
ஸ்டீபன் : (டொய்ங்.. மறுபடியும் சத்தம்.. இப்போது ஃபேஸ்புக்.. ஸ்கிரீனை விரல்களால் தள்ளி விட்டபடி.. கொஞ்ச நேரம் பார்க்கிறான். சிரிக்கிறான் )
விக்டர் : வெரி இண்டரஸ்டிங் பேசேஜ்பா… யப்பா.. என்ன அற்புதமான பகுதி…. இல்லையா ?? படிச்சு முடிச்சுட்டியா..
ஸ்டீபன் : ஓ.. நீ அதுக்குள்ள முடிச்சுட்டியா.. நான் இன்னும் முடிக்கல… ஐ மீன்.. கொஞ்சம் படிச்சேன்.. இனி கொஞ்சம் டீப்பா படிக்கணும்…
விக்டர் : ம்ம்ம்.. சரிடா.. கிளம்புவோமா ? நாளைக்கு சர்ச்ல மீட் பண்ணுவோம். சர்ட் முடிஞ்சப்புறம் தானே பைபிள் ஸ்டடி… அதுக்குள்ள பிரிபேர் பண்ணிடு.
ஸ்டீபன் : யா.. யா.. அதெல்லாம் பண்ணிடலாம்.. சீ யூ டுமாரோ
காட்சி 2
( சர்ச்சில் விக்டரும் ஸ்டீபனும் உட்கார்ந்திருக்கின்றனர்.. விக்டர் முதலில் அமர்ந்திருக்கிறார். கொஞ்ச நேரத்துக்குப் பின் ஸ்டீபன் ஓடி வந்து அருகில் அமர்கிறான்… )
விக்டர் : ஹாய்… வா.. உக்காரு…
ஸ்டீபன் : நல்லவேளை மெசேஜ் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வந்துட்டேன்… கொஞ்சம் லேட்டாயிடுச்சு… நைட் தூங்க லேட்டாச்சு அதான் பிராப்ளம்.
விக்டர் : ம்ம்ம்…. ஓக்கே… ஓக்கே.. அமைதியா உக்காரு.. இது சர்ச் ( புன்னகைக்கிறான் )
ஸ்டீபன் : யாருடா இன்னிக்கு மெசேஜ் ?
விக்டர் : இன்னிக்கு நம்ம பாஸ்டர் தான்…
ஸ்டீபன் : ஓ.. அவரா… செம போரா இருக்குமேடா… பேசாம வீட்லயே தூங்கியிருக்கலாம் போல….இங்கயும் அதை தான் பண்ண போறேன்….
விக்டர் : மெசேஜே ஆரம்பிக்கல, அதுக்குள்ள ஜட்ஜ்மெண்டே குடுக்கிறே …. கேப்போம் கடவுள் நம்ம கிட்ட என்னதான் பேசறாருன்னு..
ஸ்டீபன் : ம்ம்.. ஓக்கேடா… ( கொஞ்சம் அமைதி ) உன் ஷர்ட் நல்லா இருக்குடா.. எங்கே வாங்கினே ? புதுசா ?
விக்டர் : எல்லாம் சர்ச் முடிஞ்சு சாவாகாசமா பேசிக்கலாம்பா…. கொஞ்சம் வெயிட் பண்ணு..
ஸ்டீபன் : ஓக்கே..ஓக்கே… அதா மெசேஜ் ஸ்டார்ட் ஆகுது.. பாப்போம்.. ஏதாச்சும் புரியுதான்னு…
( இருவரும் மெசேஜ் கவனிப்பது போல … )
( ஸ்டீபன் பொறுமை இழந்து நெளிகிறான்.. கொட்டாவி விடுகிறான் )
ஸ்டீபன் : செம கடிடா.. மாசத்துக்கு ஒரு நாள் இவரு பேச்சை நம்மால கேக்க முடியல. பாஸ்டரம்மா பாவம் தான்.. எப்படி நாள் முழுக்க இவரோட பேச்சை கேக்கறாங்களோ…
விக்டர் : டேய்.. சர்ச்ல ஜோக் அடிக்காதே.. ஜஸ்ட் லிசன்… கடவுள் ஏதோ ஒரு வார்த்தை மூலமா நம்ம கிட்டே பேசுவார்..
ஸ்டீபன் :ம்ம்ம் சரிடா… ( சொல்லிக் கொண்டே போனை நோண்டுகிறான் ).
ஸ்டீபன் : போன வாரம் சர்ச்ல ஏதோ பிரச்சினையாமே.. கேள்விப்பட்டியா ?
விக்டர் : இல்லைடா.. அதெல்லாம் அப்புறம் பேசுவோம்… கொஞ்சம் வெயிட் பண்ணு..
ஸ்டீபன் : ஓக்கேடா.. ரொம்ப புழுக்கமா இருக்கு.. நான் வெளியில போய் உக்கார்ரேன்…. சர்ச் முடிஞ்சப்புறம் பேசுவோம்.
விக்டர் : ஏண்டா வெளியே போறே.. இங்கே உக்காரு.. வெளியே போனா போக்கஸ் பண்ண முடியாது.
ஸ்டீபன் : நோ..நோ.. சூடா இருந்தா தான் என்னால போக்கஸ் பண்ண முடியாது.. நீ இங்கே இரு…
( ஸ்டீபன் வெளியே போகிறான் )
காட்சி 3
( பஸ் ஸ்டாண்ட் … விக்டர் ஸ்டீபன் .. இப்போது விக்டரின் கையில் ஒரு சின்ன பைபிள் இருக்கிறது.. )
ஸ்டீபன் : ஹேய்.. எங்கடா போறே ?
விக்டர் : ஹேய் ஸ்டீபன்.. நான் கோயம்பேடு வரைக்கும் போகணும்பா.. கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு.
ஸ்டீபன் : எனக்கும் கோயம்பேடு மார்க்கெட் தாண்டா போணும்.. என்னாச்சு பஸ் வரலையா..
விக்டர் : என்னன்னு தெரியல.. ரொம்ப நேரமா பஸ்ஸே வரல…
ஸ்டீபன் : ம்ம்.. கைல அதென்னடா ? பைபிளா ? இவ்ளோ சின்னதா இருக்கு.
விக்டர் : இது பாக்கெட் பைபிள்டா.. டிராவல்ல பெரிய பைபிள் எடுத்துட்டு போக முடியலைன்னா இதை பாக்கெட்ல போட்டுப்பேன். இப்படி பஸ்ஸுக்கு காத்திருக்கிற நேரத்துல நாலு வசனம் படிச்சா மனசுக்கு ஆறுதலா இருக்கும்.
ஸ்டீபன் : டேய்.. எப்பவும் வசனம் வசனம்னு இருக்காதே. உலகத்தைப் பாரு.. கடவுள் இந்த உலகத்தை ஏன் இவ்ளோ அழகா படைச்சாரு ? நாம பாத்து ரசிக்கணும்ன்னு தான்.
விக்டர் : இந்த மொட்டை வெயில்ல.. தார் ரோட்ல நீ இயற்கையை ரசிக்கிறே… நடக்கட்டும் நடக்கட்டும்
ஸ்டீபன் : சரி, இயற்கைன்னா இயற்கை இல்லை.. மக்களை பாக்கலாம்.. அவங்களோட பழக்க வழக்கங்களைப் பாக்கலாம்.. இதெல்லாம் நமக்கு வாழ்க்கைப் பாடம் இல்லையா ?
விக்டர் : அதையெல்லாம் பாக்கறதால எனக்கு என்னடா லாபம் ?
ஸ்டீபன் : சமூகத்தோட ஒட்டாம இருக்கிறது ரொம்ப தப்புடா
விக்டர் : டேய்.. நான் எங்கடா ஒட்டாம இருக்கேன்.. டைமை வேஸ்ட் பண்ற நேரத்துல வேட்ஸ் படிக்கிறேன் அவ்வளவு தான். இப்போ என்ன உங் கூட பேசிட்டு தானே இருக்கேன்.
ஸ்டீபன் : ம்ம்ம்.. என்னவோ போ… ( எதையோ உற்றுப் பார்க்கிறான் ).. ம்ம்…ச்சே… மக்களோட டிரசிங் சென்ஸ் ரொம்ப கம்மியாயிடுச்சு.. இப்படிப்பட்ட டிரஸ் எல்லாம் போட எப்படித் தான் பேரண்ட்ஸ் பெர்மிஷன் குடுக்கிறாங்களோ
விக்டர் : இப்படிப்பட்ட காட்சியெல்லாம் பாக்க வேண்டாம்ன்னு தான் நான் பைபிளை பாக்கிறேன்.. நீ தான் சமூகம், இயற்கை, மக்கள் ந்னு இப்படி புலம்பறே..
ஸ்டீபன் : ஐமீன்… மக்களை டைவர்ட் பண்றாங்க.. இப்படியெல்லாம் டிரஸ் பண்ணி.. அதான் சொன்னேன்.
விக்டர் : ம்ம் உண்மை தான்.. அவங்களை விமர்சிக்கிறதை விட, நாம கவனமா இருக்கணுன்னு நான் நினைக்கிறேன்.
ஸ்டீபன் : ஓ.. மை காட்.. ( கையை நீட்டி ) அவன் போற போக்கைப் பாரு.. பைக் கிடைச்சா எப்படி வேணும்ன்னாலும் ஓட்டிடுவாங்களா… வாயில அசிங்கமா வருது.. பொறுப்பில்லாத பசங்க.
விக்டர் : ம்ம்ம்.. ( கையிலிருக்கும் சின்ன பைபிளை பிரிக்கிறான் ) நம்ம கண்களை பாதுகாக்கணும்ன்னா வசனம் தாண்டா…
ஸ்டீபன் : ம்ம்ம்.. படி.. நான் மெயில் செக் பண்ணிக்கறேன்….
காட்சி 4
( ஸ்டீபன் & விக்டர் )
ஸ்டீபன் : விக்டர்.. உன் கிட்டே கொஞ்சம் பேசணும்…
விக்டர் : சொல்லுடா.. என்ன விஷயம் .. என் கிட்டே பேச பெர்மிஷன் எல்லாம் கேக்க தேவையில்லை.. சொல்லு
ஸ்டீபன் : கொஞ்ச நாளாவே மனச சரியில்லை.. ஸ்பிரிச்சுவலா வீக்கா போற மாதிரி ஒரு பீலிங்… ஒரு நிம்மதியில்லை…
விக்டர் : ம்ம்ம்.. நானே உன் கிட்டே பேசலாம்ன்னு தான் நினைச்சேன். பைபிள்ல ஒரு வசனம் உண்டு. பாவம் நம் வீட்டு வாசல்படியில் படுத்திருக்கும், நாம அதை அடக்கி ஆளணும்ன்னு…. கதவைத் திறந்தா தான் ஆபத்து… கவனமா இருந்தா ஆபத்துல்ல..
ஸ்டீபன் : அப்படின்னா ? புரியல
விக்டர் : நம்ம இலக்கு இயேசுவைப் போல மாறணும், புனிதமான வாழ்க்கை வாழணும்ன்னு தான் இருக்கணும். ஆனா அது சாத்தானுக்குப் புடிக்காது. எப்படிடா நம்மளோட சிந்தனையை திசை திருப்பலாம்ன்னு தான் அலைவான். அதுக்கு நாம இடம் கொடுக்கக் கூடாது.
ஸ்டீபன் : இன்னும் கொஞ்சம் புரியற மாதிரி சொன்னா நல்லா இருக்கும்.
விக்டர் : உதாரணமா, பைபிள் வாசிக்கும்போ நம்ம கவனம் பைபிள்ல மட்டும் இருக்கணும். அதுக்கு மொபைல் இடைஞ்சலா இருக்குன்னா ஒதுக்கி வைச்சுடணும். கடவுள் இடறலாய் இருக்கிற கண்ணையே பிடிங்கி எறிய சொன்னார். மொபைல் இடறலாய் இருந்தால் மொபைலை தூக்கி எறிய தயங்கக் கூடாது.
ஸ்டீபன் : யா.. அது உண்மை தாண்டா.. நான் மொபைல்ல பைபிள் வாசிக்க ஆரம்பிப்பேன்.. கடைசில வாட்ஸர், எஸ் எம் எஸ், டுவிட்டர் ந்னு எல்லா இடங்கள்ளயும் அலைஞ்சு பைபிளை வாசிச்சும், வாசிக்காமலும் தான் முடிப்பேன்.
விக்டர் : யெஸ்.. அதான் சொல்ல வந்தேன். சர்ச்ல வரும்போ கூட நம்ம கவனம் கடவுள் மேல இருக்கணுமே தவிர, கூட இருக்கறவங்க மேல இருக்கக் கூடாது. இறை பிரசன்னத்தை விட்டு நம்மை விரட்டணும்ன்னு சாத்தான் ரொம்ப முயற்சி பண்ணுவான். அந்த டிராப்ல நாம விழக் கூடாது.
ஸ்டீபன் : யா.. ஐ அக்ரீ.அ து என் தப்பு தாண்டா…
விக்டர் : உலகத்தை ரசிக்கிறது, இயற்கையை ரசிக்கிறது எல்லாம் நல்லது தான். ஆனா நம்ம கண்கள் பலவீனமானவை. ஊனுடல் பலவீனமானதுன்னு இயேசுவே சொல்லியிருக்காரு. அதனால நாம பாவத்தை கண்டா ஓடி ஒளியணும். அதான் ஈசி.
ஸ்டீபன் : உண்மை தாண்டா.. எப்பவுமே பைபிளா, எப்பவுமே கடவுளான்னு நினைக்கிறது தான் தப்பு. எப்பவுமே கடவுளோட இருக்கிறது தான் நம்மை சரியா நடத்தும். சரியா ?
விக்டர் : எக்ஸாக்ட்லி.. ஜீசஸ் என்ன சொன்னாரு.. என் நுகத்தை ஏற்றுக் கொண்டு என்னோடு வாருங்கள் ந்னு சொன்னாரு. நுகத்தோட ஒரு பக்கம் இயேசு, இன்னொரு பக்கம் நாம. அப்படி பயணிக்கும்போ நாம தடுமாறினாலும் இயேசு நம்மை கூட்டுட்டு போவாரு. நாம தடம் மாறினாலும் இயேசு நம்மை சரி பண்ணுவாரு.
ஸ்டீபன் : நுகம்ன்னா என்னடா ? அந்த வயல்ல ரெண்டு மாடு கட்டி உழுவாங்களே ? அதுவா ?
விக்டர் : ஆமாடா. அதுல நாமும் இயேசுவும் இருக்கணும். அதான் இயேசு விரும்பறது. அப்போ தான் நம்ம போக்கஸ் சரியா இருக்கும். சரியான இடத்துல இருக்கும்.
ஸ்டீபன் : உண்மை தான்.. நீ சொல்லும்போ தான் என்னோட தப்பெல்லாம் புரியுது. என்னோட போக்கஸ் இறைவன் மேல இல்ல, அதான் தப்பு.
விக்டர் : குதிரைச் சவாரி செய்யும்போ , குதிரையோட கண்களுக்கு பக்கத்துல ஒரு மறைவை கட்டுவாங்க. அதனால குதிரை அந்தப் பக்கம், இந்தப் பக்கம் பாக்க முடியாம நேரா மட்டும் தான் பாக்கும். அப்போ தான் அது அலைபாயாம, இலக்கை நோக்கிப் பாயும். நம்ம கண்களையும் இறைவார்த்தைங்கற கவசத்தால கட்டி பாதுகாக்கணும். அப்போ தான் இலக்கு இயேசுவை நோக்கி இருக்கும்.
ஸ்டீபன் : ஆமா, குதிரைன்னு சொன்னதும், குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாகும் ஜெயமோ கர்த்தரால் வரும்ங்கற வசனம் ஞாபகத்துக்கு வருது.
விக்டர் : அதுல கூட பாரு, ஜெயம் கர்த்தரால தான் வரும். அதுல சந்தேகமே இல்லை. ஆனா குதிரையை யுத்த நாளுக்காய் ஆயத்தப்படுத்தணும். அதான் ரொம்ப முக்கியம். அதை நாம தான் பண்ணணும். நம்மை இறைவனோட வருகைக்கு ஆயத்தமா வெச்சிருக்கணும். அப்போ. மீட்பு இறைவனால் நமக்குக் கிடைக்கும்.
ஸ்டீபன் : ரொம்ப அழகா சொன்னேடா… இப்போ எனக்கு கொஞ்சம் நிம்மதி வந்திருக்கு.
விக்டர் : கவலைப்படாதே.. இயேசு சொன்னதை ஞாபகம் வெச்சுக்கோ. “மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்து கொண்டாள் “ அப்படித் தானே இயேசு சொன்னார். இயேசுவோட வார்த்தைகளைக் கேக்கறது, அவர் அருகே அமர்ந்திருப்பது தான் நல்ல பங்குன்னு இயேசு சொல்றாரு. நாமும் அதையே பற்றிக் கொள்வோம். வேற எதுவும் தேவையில்லை.
ஸ்டீபன் : ரொம்ப நன்றிடா… ஐம் கிளியர் நௌ…கிளம்பறேன்.
விக்டர் : ஓகேடா.. பிரைஸ் த லார்ட்.
பின் குரல் :
பாவம் நம்மைச் சுற்றி வலை விரித்துக் கொண்டே இருக்கிறது. பாவம் நம்மைச் சுற்றி தூண்டில்களைப் போட்டுக் கொண்டே இருக்கிறது. பாவம் நம் பாதைகளெங்கும் கண்ணி வெடிகளை புதைத்து வைத்துக் கொண்டே திரிகிறது. விழிப்பாய் இருப்போம். இறைவார்த்தை எனும் கேடயம் நம்மிடம் இருந்தால், பாவத்தின் வாள்வீச்சுகளிலிருந்து தப்பிக்கலாம். அலட்சியமாய் இருப்பது மிகவும் ஆபத்தானது. இறைவனோடு இருப்பது மட்டுமே தேவையானது. சிந்தித்து செயல்படுவோம்.