Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 30 ஆமோஸ்

Image result for book of amos

 

இஸ்ரேல் நாட்டுக்கு இறைவாக்கு உரைக்க கடவுள் அனுப்பிய கடைசி இறைவாக்கினர்கள் தான் ஆமோஸ் இறைவாக்கினரும், ஓசேயா இறைவாக்கினரும். ஆமோஸ் இறைவாக்கினரின் வார்த்தைகள் கடவுளின் எண்ணங்களைப் பேசுகிறது. ஓசேயா நூல் இறைவனின் உணர்வுகளைப் பேசுகிறது.

முதலில் எழுத்து வடிவம் பெற்ற இறைவாக்கினர் நூல் ஆமோஸ் தான். நூலில் மொத்தம் ஒன்பது அதிகாரங்களும், 146 வசனங்களும், 4217 வார்த்தைகளும் இந்த நூலில் உள்ளன.

தன்னைத் தொழுது, தன்னை மட்டுமே அன்பு செய்து வாழ்கின்ற ஒரு மக்கள் இனம் இருக்க வேண்டும் என்பது இறைவனின் விருப்பமாக இருந்தது. அதற்காக பன்னிரண்டு கோத்திரங்கள் கொண்ட இஸ்ரேல் இனத்தை அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் மக்களோ இறைவனை விட்டு விலகிச் செல்வதையே தொடர்ந்து விரும்பிக் கொண்டிருந்தனர். சவுல், தாவீது, சாலமோன் எனும் மூன்று மன்னர்களுக்குப் பின் ஒன்றாய் இருந்த இனம், இரண்டானது.

வட நாடான இஸ்ரேல் பெரிய குழுவானது, பன்னிரண்டில் பத்து கோத்திரங்கள் வடக்கே இணைந்தன. அவர்கள் தாவீதின் வழிமரமற்ற அரச பரம்பரையை உருவாக்கினார்கள். அவர்களுக்கு எருசலேம் தேவாலயமும் இல்லாமல் போக பெத்தேல் சமாரியா போன்ற இடங்களில் வழிபடத் துவங்கினர்.

தென் நாடான யூதா தாவீதின் பரம்பரை அரசாட்சியுடனும், எருசலேம் தேவாலயத்துடனும் தனது பயணத்தைத் தொடர்ந்தது.

இஸ்ரேல் நாடு செழுமையாய் இருந்த காலகட்டத்தில் இறைவாக்கு உரைக்க வந்தவர் தான் ஆமோஸ். நாட்டில் வளங்களுக்குக் குறைவில்லை. பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர் ஆகிக் கொண்டே இருந்தார்கள். ஆனால் அப்போது கவனிக்கபடாமல் உதாசீனம் செய்யப்பட்ட ஏழைகள் எனும் ஒரு கூட்டமும் பெருகிக் கொண்டே இருந்தது.

வீடுகளை ஒருசாரார் வாங்கிக் குவிக்க, வீடின்றி ஒரு சாரார் வாடத் துவங்கினர். வளங்களோடு ஒரு சாரார் வாழ்க்கை நடத்த, வழியின்றி ஒரு சாரார் வாடி வதங்கினர்.

செல்வம் அங்கே பிரதானமானது. மனித நேயம் மறைந்து போனது. கையூட்டு எங்கும் தலைவிரித்தாடியது. எங்கும் அநியாயமாய் பணம் சேர்க்கும் நிலை உருவானது. நீதிபதிகளும் நீதிகளை விற்கத் துவங்கினர். பாலியல் குற்றங்கள் பரவத் துவங்கின. மதுவின் கோரத் தாண்டவம் எங்கும் வியாபித்தது.

ஓய்வு நாள் இறைவனுக்கானது எனும் சிந்தனை மெல்ல மெல்ல மறைய, ஓய்வு நாளிலும் உழைப்போம்மும், பணம் ஈட்டுவோம் எனும் சிந்தனை எங்கும் பரவத் துவங்கியது. அது ஆன்மீகத் தளத்திலும் எதிரொலித்தது. மக்கள் விளைச்சலுக்காகவும், வளத்துக்காகவும் வேறு தெய்வங்களை நாடத் துவங்கினார்கள். தூய்மை என்பது தூரமாய்ப் போனது.

இந்த காலகட்டத்தில் தான் இத்தகைய சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிரான இறைவனின் குரலாய் வந்தார் ஆமோஸ் இறைவாக்கினர். ஆமோஸ் என்பதற்கு துயரத்தைத் தாங்குபவர் என்பது பொருள். தென் நாடான யூதாவில், எருசலேமுக்கு பன்னிரண்டு மைல் தொலைவில் வாழ்ந்து வந்தவர் . சமத்துவ சமுதாயமே இறைவனின் பார்வை என விளம்பினார். மிகவும் கடுமையான போதனையாய் இவரது போதனைகள் அமைந்திருந்தன. பழைய ஏற்பாட்டில் ஆமோஸ் இறைவாக்கினரைப் பற்றிய குறிப்பு ஆமோஸ் இறைவாக்கினர் நூலில் மட்டுமே வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

இஸ்ரேல் மக்களை இறைவன் மீண்டும் தன் வழிக்குக் கொண்டு வர தண்டனைகளைக் கொடுத்தார் என்கிறது பைபிள். செல்வத்தை கொண்டாடிய அவர்களின் விளைச்சலை நிறுத்தினார். வளங்களோடு வாழ்க்கை நடத்திய அவர்களின் நீர் ஆதாரத்தை குறைத்தார். பயிர்களை அழிக்க வெட்டுக்கிளிகளை அனுப்பினார். விலங்குகளை வலுவிழக்கச் செய்தார். மனிதர்களுக்கு நோய்களை அனுப்பினார்.

ஆமோஸ் இறைவாக்கினர் தொழுகைக் கூடங்களில் ஆன்மீகம் கற்றவரல்ல. வளமான வாழ்க்கை வாழ்ந்தவரல்ல. ஏழ்மை நிலையில் பிறந்து வளர்ந்தவர். அடக்குமுறையின் வலியையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர். ஏழைகளின் உணவான அத்தி மரங்களைப் பராமரித்து வந்தவர். இறைவாக்கினராய் வருவதற்குரிய ஆன்மீக கல்வி அவருக்கு இல்லை. ஆனாலும் இறைவனின் கரம் அவரை வலிமையாய்ப் பற்றிக் கொண்டது. நற்செய்தி அறிவித்தலுக்குத் தேவை கல்வியறிவல்ல, இறையருள் என்பதை இவரது வாழ்க்கை நமக்கு புரிய வைக்கிறது.

மக்களை அழிப்பேன் என காட்சியின் மூலம் இறைவன் ஆமோஸுக்கு எடுத்துரைக்கிறார். ஆமோஸ் இறைவாக்கினரோ இறைவனிடம் மன்றாடிப் புலம்புகிறார். இறைவன் மனம் மாறி தனது திட்டத்தை மாற்றிக் கொள்கிறார். நமது செபங்கள் இறைவனின் திட்டங்களை மாற்றும் எனும் உண்மையை இந்த நிகழ்வு நமக்குப் புரிய வைக்கிறது.

ஆமோஸின் இறைவாக்குகள் மக்களை கோபமடையச் செய்கின்றன. காரணம் அவருடைய எச்சரிக்கைகள் மக்களுடைய இதயங்களில் மிகப்பெரிய இடியாக இறங்கின. எட்டு நாடுகளின் மீது அவர் எச்சரிக்கை விடுத்தார். மூன்று நீண்ட உரைகளை ஆற்றினார். ஐந்து குறியீடுகளைப் பேசினார். மூன்று மாற்றங்களைக் குறித்துப் பேசினார்.

கவித்துவமும், இறை சிந்தனையும் அடங்கிய ஒரு முக்கியமான நூலாய் திகழ்கிறது ஆமோஸ் இறைவாக்கினரின் நூல் !

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s