Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 31 ஒபதியா

Image result for book of obadiah

ஒபதியா என்பதற்கு “யாவே இறைவனை வழிபடுபவர்” என்பது பொருள். பழைய ஏற்பாட்டு நூலிலேயே மிகவும் சிறிய நூல் இது தான். இந்த நூலில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உண்டு. இருபத்து ஒன்று வசனங்களும், 670 வார்த்தைகளும் கொண்ட மிகவும் சுருக்கமான நூல் இது.

ஒபதியா தென் நாடான யூதாவில் வாழ்ந்தவர். எருசலேம் நகர் வீழ்ச்சியடைந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட நூல் இது. எருசலேமின் வீழ்ச்சி அருகில் உள்ள நாடுகளுக்கு அக்களிப்பை அளித்தது. அதில் ஒரு நாடு ஏதோம். ஏதோம் யூதாவில் புகுந்து யூதாவின் நகர்களைச் சூறையாடியது. இந்த ஏதோமியர் வேறு யாருமல்ல ஆபிரகாமின் மகனான ஈசாக்கின் புதல்வர்களில் ஒருவரான ஏசாவின் வழிமரபினர். அவர்கள் போராடுவது ஏசாவின் இன்னொரு சகோதரனான யாக்கோபின் வழிமரபினரோடு !

கருவிலேயே சண்டையிட்ட இரட்டையர்கள் ஏசாவும், யாக்கோபும். யாக்கோபு இறைவனால் தேர்ந்து கொள்ளப்பட்டவர். ஆனாலும் வாழ்க்கையில் பல குறுக்கு புத்திகளைக் காண்பித்து கடைசியில் இறைவனிடம் சரணடைந்தவர். ஏசா வேட்டைக்காரன். சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு தனது தலைமகன் உரிமையைக் கூட யாக்கோபுக்கு விற்றவன். இருவருக்கும் வாழும் போதே பகை. அந்தப் பகை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் பரவி தீரா நிரந்தரப் பகையாய் உருவாகி விட்டது.

யாரெல்லாம் இஸ்ரேல் மீதும், எருசலேம் மீதும் போர் தொடுக்கிறார்களோ அவர்களோடெல்லாம் இணைந்து கொண்டு இஸ்ரேலுக்கும், யூதாவுக்கும் குடைச்சல் கொடுப்பதை ஏதோம் வழக்கமாகிக் கொண்டிருந்தது.

ஒபதியா ஏதோம் நாட்டுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார். ஏதோம் நாடு தண்டிக்கப்படும் என்பதை அவர் தீர்க்கத்தரிசனமாய் கூறினார். அவருடைய தீர்க்கத்தரிசனம் ஒரு காட்சிப்படுத்தல் போல அமைந்திருக்கிறது. ஏதோம் நாடு சாக்கடலுக்கு தென் கிழக்காய் அமைந்துள்ள நகரம். இது வாக்களிக்கப்பட்ட தேசத்தின் பகுதி தான். ஆனால் இந்த நிலத்தை இஸ்ரயேலர்கள் கையகப்படுத்தவில்லை.

ஏதோமில் இரண்டு நகர்கள் உண்டு. அதில் ஒன்று சேலா. அதை சிவப்பு பாறைகளால் நிரம்பியிருக்கும் இடம். அதில் அழகிய வேலைப்பாடுகளுடன் பல ஆலயங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டாயிரம் அடி உயரமாய் அமைந்துள்ள இந்த நகரத்தைத் தான் ஒபதியா தனது இறைவாக்கில் குறிப்பிடுகிறார்.

மலைக்குகைகளில் வாழ்ந்த ஏதோமியர்களுக்கு இந்த கலைவேலைப்பாடுகள் அடங்கிய மலை ஒரு அந்தஸ்தின் அடையாளம். அதன் உச்சியிலிருந்து பார்த்தால் செங்கடலும், சாக்கடலும் அழகாய்த் தெரியும். எத்தனை அழகு இருந்தால் என்ன ? ஏதோமியர்கள் உண்மை தெய்வத்தை வழிபடும் வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கவில்லை.

இந்த நூலின் முதல் பதினான்கு அதிகாரங்களும் ஏதோமுக்கு எதிராக இறைவன் உரைக்கின்ற வார்த்தைகள். இரண்டாவது பகுதியான பதினைந்தாம் அதிகாரம் முதல் இருபத்து ஒன்றாம் அதிகாரம் வரை பிற தேசங்களுக்கு வர இருக்கின்ற தண்டனைத் தீர்ப்பைக் குறிக்கும் வார்த்தைகள்.

ஏதோமைக் குறித்து பேசும்போது அவர்களுடைய கர்வம் தேசத்தை அழிக்கும் என்கிறார். இறைவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயம் கர்வம். கர்வம் கொண்டவர்களை இறைவன் அடித்து வீழ்த்துவார் எனும் உண்மையை ஒபதியா எடுத்துரைக்கிறார். சகோதரன் யாக்கோபின் வழிமரபினர் மீது நீ வன்மம் காட்டாமல் இருந்திருக்க வேண்டும் என இறைவன் கடுமையாய் ஏதோமை எச்சரிக்கிறார்.

ஏதோமுக்கு எதிராக இறைவாக்கு உரைத்தவர் ஒபதியா மட்டுமல்ல. ஏசாயா, எசேக்கியேல், எரேமியா ஆகிய பிரபல இறைவாக்கினர்கள் மூலமாகவும் இறைவன் ஏதோமியரை எச்சரித்திருக்கிறார். எல்லா எச்சரிக்கைகளையும் ஏதோமியர் புறக்கணித்ததால் தான் இறைவனின் தீர்ப்பு அந்த நாட்டின் மீது விழுந்தது.

ஏதோமியருக்கும், யூதர்களுக்கும் இருந்த பகை தொடர்ந்து கொண்டே இருந்தது. இயேசுவின் மழலைக்காலத்தில் ஏரோது மன்னன் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையெல்லாம் கொன்றதும் ஏதோமிய வன்முறையே ! அவனுடைய மகன் திருமுழுக்கு யோவானை படுகொலை செய்தான். அவனுடைய மகன் தான் யாக்கோபுவைப் படுகொலை செய்தவன் (தி.ப12) . அவனுடைய மகன் அகரிப்பா கிபி 100களில் வாரிசு இன்றி இறந்தான். அப்படி படிப்படியாக ஏதோமியர்கள் அழிந்தனர்.

இன்று உலகில் ஏதோமியரின் வழிமரபு இல்லை. ஒபதியாவின் இறைவாக்கு அட்சர சுத்தமாய் நிறைவேறிவிட்டது. இதை இறைவன் சுமார் 600 ஆண்டு கால இடைவெளியில் செயல்படுத்தினார். இறைவன் தனது வார்த்தையை நிறைவேற்றுவார் என்பதையும், அதற்கான கால அளவை அவரே நிர்ணயிப்பார் என்பதையும் இதன் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.

இறைவன் பிற தேசங்களுக்கும் ஒபதியா மூலம் எச்சரிக்கையை அளித்தார். தனது மக்களை இன்னலுக்குள்ளாக்கும் மக்களை இறைவன் தொடர்ந்து தண்டித்து வருகிறார்.

ஒபதியா நூல் அளவில் சிறியதாக இருந்தாலும் இறைவன் தனது மக்கள் மேல் வைத்திருக்கும் அன்பையும், அவரது மக்களை எதிர்ப்போர் மீது கொள்ளும் சினத்தையும் தெளிவாய் பதிவு செய்கிறது. இன்றைய ஆன்மீக புரிதலில் செய்கிறது”அயலான் மீது அன்பு செலுத்தாத கிறிஸ்தவன் இறைவன் பார்வையில் ஏதோமியனாய் அழிவான்” என்பதைக் கற்றுக் கொள்வோம்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s