Posted in கிறிஸ்தவம், Christianity, SAINTS

மரியம் திரேசியா

புனித மரியம் திரேசியா

*

 

கடவுளின்
சொந்த நாட்டிலிருந்து
வந்த
கடவுளின் சொந்த தேவதை
திரேசியா.

இயேசு உயிர்விட்டது
எனக்காகவா எனும்
அதிர்ச்சி கலந்த அறிதல்
அவரை
ஆன்மீகத்தில் அமர வைத்தது
ஆண்டவருக்குள் புலர வைத்தது.

தனக்காய்
வேதனை சுமந்த
வேந்தனை
நெஞ்சில் சுமந்தார்.

தனக்காய்
வலி சுமந்த பலியாட்டின்
வலிகளைச் சுமக்க
வலியச் சென்று வழிதேடினாள்.

தனக்காய்
காயம்பட்ட கர்த்தரின்
காயங்களைத்
தாங்க யாசித்தாள்.

வாழ்க்கைத் துணை
தனக்கு
விண்ணவன் மட்டுமே என
துறவு வாழ்க்கையை
உறவாய்க் கொண்டார்.

மரியாள் மீது
பிரியம் கொண்ட
திரேசியா
மரியம் திரேசியா ஆனார்.

பாவச் சுவடுகளை
விட்டு விட்டு
பரமனின்
பாதச் சுவடுகளைத் தொடர்ந்தார்.

நொடிகளை உடைத்த
பொழுதுகளின் இடையிலும்
இறைவனுக்காய் வாழும்
இதயம் கண்டாள். .

வசதிகளை உதறிவிட்டு
குறைவுகளில்
குடியிருக்கத் தொடங்கினார்.

படுக்கையை நிராகரித்து
குத்தும் கற்களில்
நித்திரை கொண்டார்.

தன்னை நோக்கி வரும்
நிந்தைகளை
புன்னகை சிந்தி வரவேற்கும்
விந்தைப் புறாவாய்
வடிவெடுத்தார்

இயேசு வாங்காத
நிந்தையா ?
என நிந்தையைச் சந்தித்தார்.

அவர் தாங்காத
வலிகளா ? என
வலிகளை விரும்பினார்.

இயேசு
மரியத்தின் விருப்பத்தை
வரமாய்ப் பொழிந்தார்
தனது
சிலுவை வலிகளை
பரிசாய்க் கொடுத்தார்.

திரேசியாவின் உடலில்
பெரும்புகழ் கொண்ட
தழும்புகள் தோன்றின.

ஐம்பெரும் காயங்கள்
சட்டென தோன்றி
இரத்தமிட்டு முத்தமிட்டன.

இயேசுவின் ஆணிக்காயங்கள்
விலாக் காயம்
நெற்றிக் காயம்
என
பரமன் கசிந்த இடங்களில்
திரேசியா குருதி கண்டார்
இறையில் உறுதி கொண்டார்.

வலியின்
கலைப்பைகள் அவரை
உழுதன.
இதயத்தின் விழிகள்
நில்லாமல் அழுதன.

இறை தரிசனம் கண்டார்
மானிடர் மேல்
கரிசனம் கொண்டார்.

குடும்பங்கள்
நில வாழ்வின்
நல விளக்குகளாக வேண்டுமென்றார்.

உறவுகள்
புவி வாழ்வில்
நிறைவுகள் ஆக வேண்டுமென்றார்.

போதையின்
பாதணிகளில் நுழைந்து
அழிவின் துளி தின்றவர்களை
மீட்கும் வழி கண்டார்

நேசம் அவருக்கு
நேசர் என்றானது.
மரியாள் அவருக்கு
அன்னை என்றானது.

மாலையுடன் ஆரம்பித்தன
அவரது காலைகள்,
ஆம்
செபமாலையுடன் ஆரம்பித்தன
அவரது காலைகள்.

அன்னையின் மீதான
அன்பு
அவரை
அன்னையின் மகனைப் போல
அன்பினால் வார்த்தது.

செபத்தின் விளைநிலத்தில்
அவரது
காலங்களைப் பதியனிட்டார்

நீள் இரவுகளின்
விழிப்பு வீதிகளில்
கனவுகளற்ற விழிகளோடு
கருணை தேவனை
நினைத்து செபித்தாள்.

வெளிச்சத் துளிகளை
விடாமல் துரத்தும்
ஈசல் பூச்சியாய்
ஈசனை பற்றிக் கிடந்தாள்.

பிறருக்காய் செபிப்பதை
பாக்கியமாய்க் கொண்டார்,
பிறரின்
வலிகளை தன் உடலினில்
வாங்கிக் கொண்டார்.

இவரது செபங்கள்
விண்ணகத்தின் கதவுகளை
மென்மையாத் திறந்தன
எண்ணற்ற
ஆசீர்வாதங்கள்
மண்ணகத்தில் பொழிந்தன.

வறுமை வயிறுகளுக்கும்
கல்விப் பந்தி
பரிமாறப்பட வேண்டுமென
பிரியமாய் உழைத்தார்.

திருக்குடும்பப் பள்ளி
விதையானது,
பிறர் நலப் பணிகளின்
துவக்கக் கதையானது.

இறைமகனின் புகழ்பரப்பும்
செயல்களை
தொடர்ந்து செய்த மரியம்,
ஐம்பது வயதிலேயே
படுக்கையில் விழுந்தார்.

அரைநூற்றாண்டு வயது
அரவணைத்த போதே
இறைவன் அவரை
அழைத்துக் கொண்டார்.

மரியம் மரித்துப் போனார்,
ஆனால்
புனிதத்தின் பூக்கள்
விழித்துக் கொண்டன.

வாழும் போதே
புனிதரென அறியப்பட்டவர்,
93 ஆண்டுகளுக்குப் பின்
புனிதரென அறிவிக்கப்பட்டார்.

மரியம் திரேசியா
இறைவன் மீதான
அதிக பட்ச அன்பின் அடையாளம்.

கருணையைக்
கருவில் சுமந்த
அன்னையின் புது அவதாரம்.

புனிதர்கள் மறைவதில்லை,
அவர்கள்
இடம் மாறுகின்றனர்
இடையில் நின்று
பரிந்து பேசுகின்றனர்.

மரியமும் அப்படியே,
எரியும் அன்புடன்
பிரியம் சுமந்தவர்
பிரியா அன்புடன் பரிந்தும் பேசுவார்.

நம்பினோர் மட்டும்
நம்பினால் போதும்.

வாழிய மரியம் திரேசியா !

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s