Posted in Articles, Sunday School

SKIT : கிறிஸ்மஸை வரவேற்போம்

காட்சி 1

( ஸ்டீபன் மேடையில் நிற்கிறான், அப்போது அலெக்ஸ் வருகிறான் )

ஸ்டீபன் : ஏய்.. அலெக்ஸ்… ஹவ் ஆர் யூ.. எங்க அவசரமா போயிட்டிருக்கே போல ?

அலெக்ஸ் : யா.. கிறிஸ்மஸ் வருதுல்லயா, அதான்டா கிறிஸ்மஸை வரவேற்க ரெடியாயிட்டே இருக்கேன். வி ஷுட் பி பிரிபேர்ட்… இல்லையா…

ஸ்டீபன் : வெரிகுட் டா… கிறிஸ்மஸ் எவ்வளவு அற்புதமான காலம் இல்லையா ? ஜீசஸ் நமக்காக பூமியில பிறந்தது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். அவரு மட்டும் பிறக்கலேன்னா….

அலெக்ஸ் : யா..யா..யா..தட் ஐ நோ.. பட்… அதையெல்லாம் யோசிக்க டைம் இல்லைடா.. ஐ நீட் டு பி ரெடி பார் கிறிஸ்மஸ்…

ஸ்டீபன் : அதை யோசிக்காம எப்படிடா கிறிஸ்மஸுக்கு ரெடியாகறது..

அலெக்ஸ் : டேய்.. இந்த மாசம் தான் என் பிஸினஸ் களை கட்டும்… அதுக்கு ரெடி ஆகறேண்டா…

ஸ்டீபன் : பிசினஸ்..????

அலெக்ஸ் : ஆமாடா என்னோட அலெக்ஸ் கேக் ஷாப் இந்த மாசம் தான்டா நல்லா விற்பனையாகும். இந்த மாசம் கிடைக்கிற லாபத்தை வெச்சு தான் அடுத்து கொஞ்ச நாளைக்கு ஓட்டணும். வித விதமான கிறிஸ்மஸ் கேக்ஸ்…

ஸ்டீபன் : ம்ம்… ஓக்கேடா…கிறிஸ்மஸ் உனக்கு ரொம்ப முக்கியமான டைம் தான்..

அலெக்ஸ் : யா..யா.. ஈவன் சர்ச்ச்குக்கு வரதுக்குக் கூட அன்னிக்கு டைம் கிடைக்காது. விடிய விடிய வியாபாரம் நடக்கும். அதானே முக்கியம் இல்லையா ? கடவுள் நமக்கு தர வாய்ப்பு இது. இதையெல்லாம் விட முடியுமா ? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ன்னு சும்மாவா சொன்னாங்க ?

ஸ்டீபன்: அதுக்காக சர்ச்சையெல்லாம் விட்டுட்டு… எப்படிடா கிறிஸ்மஸ் ?

அலெக்ஸ் : நம்ம குடும்பத்தைக் காப்பாத்தற பொறுப்பு நமக்கு உண்டு. ஜீசஸ்க்கு தெரியாதா என்ன ? அதையெல்லாம் அவரு கண்டுக்க மாட்டாரு. யாரும் செய்யாததையா நான் செய்றேன். பட்டாசு கடைகாரர், துணிகடைகாரர், அலங்காரக் கடை வெச்சிருக்கிறவர், மட்டன் கடைகாரர் எல்லாருமே அன்னிக்கு தங்களோட கடமைல தான் பிஸியா இருப்பாங்க.

ஸ்டீபன் : ம்ம்… அப்போ கிறிஸ்மஸ்னா உனக்கு பிஸினஸ் காலம்.

அலெக்ஸ் : இது வருகையின் காலம் டா.. அதாவது எனக்கு பணம் வருகையின் காலம். ஹா..ஹா.. சீ.. ஜீசஸ் வந்தா பிஸினஸ் செழிக்கும்டா.. அன்னிக்கு கூட மீன் பிடிச்சு சோர்ந்து போய் இருந்தவங்க கிட்டே என்ன சொன்னாரு ? ” வலப்பக்கம் வலையப் போடுன்னு சொன்னாரு” போட்டாங்க. எவ்ளோ மீன் கிடைச்சுது பாத்தேல்ல.. பிஸினஸ் வளரணும்னு தான்டா ஜீசஸ் நினைப்பாரு… சரிடா.. நான் கொஞ்சம் பிஸியா இருக்கேன். அப்புறம் பாப்போம்.

( அலெக்ஸ் போகிறான்.. அப்போது சில்வியா வருகிறாள் )

சில்வியா : என்ன ஸ்டீபன்னா நடுரோட்டுல நின்னு ஏதோ யோசிச்சிட்டிருக்கீங்க ?

ஸ்டீபன் : இல்ல…. அலெக்ஸ் வந்திருந்தான் அவன் கூட பேசிட்டிருந்தேன். கிறிஸ்மஸ் பற்றி.

சில்வியா : ஆமாண்ணா.. கிறிஸ்மஸ் வருது, ஒரே எக்சைட்மென்ட் தான். கிறிஸ்மசை வரவேற்க ரெடியாயிட்டே இருக்கேன்.

ஸ்டீபன் : ம்ம்ம்.. நீயும் ஏதாச்சும் கேக் ஷாப் வெச்சிருக்கியா ?

சில்வியா : சே..சே… நோ பிஸினஸ் மைன்ட்… ஷாப்பிங் எல்லாம் பெண்டிங்ல இருக்கு. இந்த தடவை நாங்க பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரே மாதிரி டிரஸ் வாங்க போறோம்.

ஸ்டீபம் : ஓ.. அப்படி… ம்ம்ம்…

சில் : யா.. யா.. வாட்ஸப்ல நாங்க குரூப் ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம். கிறிஸ்மஸ் கிரேசீஸ் ந்னு பேரு வெச்சிருக்கோம். அதுல ஐடியாஸ் எல்லாம் ஷேர் பண்ணுவோம். அதுல இருந்து ஒரு டிரஸை நாங்க செலக்ட் பண்ணுவோம்.

ஸ்டீபன் : டிரஸ்தான் கிறிஸ்மஸ்ல மெயின் ந்னு நினைக்கிறியா ?

சில் : சேச்சே.. அப்படியெல்லாம் இல்லை. டிரஸ் போட்டு நாலு செல்பி எடுக்கிறது ரொம்ப முக்கியம். ஆனா வேறயும் நிறைய இருக்கு…

ஸ்டீபன் : வேறயும் நிறையன்னா…

சில் : யூ..நோ… டிவில நல்ல புரோக்ராம்ஸ், ஈவ்னிங் பிரண்ட்ஸ் கூட அவுட்டிங்… ஆ.. சொல்ல மறந்துட்டேன்.. இங்கே நல்ல ஹை ஹீல்ஸ் ஷூ எங்க கிடைக்கும்ன்னு தெரியுமான்னா ?

ஸ்டீபன் : செருப்பு எங்க கிடைக்கும்ன்னு என் கிட்டே கேக்கறே.. நான் என்ன செருப்பு கடையா வெச்சிருக்கேன்.

சில் : செருப்பு வெச்சிருக்கிறவனுக்கு மட்டும் தான் செருப்பு பற்றி தெரியுமா என்ன ? தெரியலேன்னா விடுங்க. நான் ஆன்லைன்ல பாத்துக்கறேன்.

ஸ்டீபன் : ம்ம்ம்.. கிறிஸ்மஸுக்கு சர்க்காவது வருவியா ?

சில் : என்னண்ணா இப்படி கேட்டுட்டீங்க. அதான் ரொம்ப முக்கியம்.. அதை விடுவேனா என்ன ?

ஸ்டீபன் : அப்பா.. கொஞ்சம் நிம்மதியா இருக்கு.

சில் : அன்னிக்குதான் சர்ச் நல்லா டெக்கரேட் பண்ணியிருப்பாங்க. போட்டோ எல்லாம் சூப்பரா வரும். குடில் பக்கத்துலயும், கிறிஸ்மஸ் ட்ரீ பக்கத்துலயும் நின்னு போட்டோ எடுக்கிறதை மிஸ் பண்ண முடியுமா ?

ஸ்டீபன் : ஓ… ஸ்டாரை விட்டுட்டியே….

சில் : ஆமா..ஆமா.. ஸ்டார் பக்கத்துல நின்னு கூட செல்பி எடுக்கணும். எடுத்ததும் ஸ்டேட்டஸ்ல போடணும். மிட்நைட்ல வாட்ஸப் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ணணும். கிறிஸ்மஸ் ஈஸ் எக்சைட்டிங்.

ஸ்டீபன் : ம்ம்… சோ, ஜீஸஸ் மனிதனா நமக்காக பிறந்து வந்ததைப் பற்றி நினைக்க மாட்டே ? கிறிஸ்மஸ் அன்னிக்கு ?

சில் : அண்ணா.. ஜோக் அடிக்காதீங்க.. அது ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தி.. தட் எவ்ரி ஒன் நோஸ்…. இது செலிபிரேஷன் எரா… என் ஜாய் பண்ணணும்.

ஸ்டீபன் : ம்ம்….ம்ம்ம்…

சில் : சரிண்ணா.. நான் கிளம்பறேன்… மேட்சிங் இயரிங்ஸ் வாங்கணும்…. பிரண்ட்ஸ் வெயிட் பண்ணுவாங்க..

( சில்வியா வேகமாக ஓடுகிறாள். அப்போது சர்ச் மெம்பர் ஒருவர் வருகிறார் )

ஸ்டீபன் : வணக்கம்ணே.. நல்ல இருக்கீங்களா ?

மெம்பர் : ஆமாப்பா… கர்த்தர் கிருபையால ரொம்ப நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே ?

ஸ்டீபன் : ரொம்ப நல்லா இருக்கேன்னே…. இந்த வருஷம் கிறிஸ்மஸுக்கு என்ன ஸ்பெஷன்னே..

மெம்பர் : இந்த வருஷம் என்னத்தை பெருசா கிழிக்க போறானுவ.. நாங்க கமிட்டில இருந்தப்போ இருந்த மாதிரி கிறிஸ்மஸ் நடந்திருக்குமா என்ன ? அப்போ நாங்க வெச்ச கிறிஸ்மஸ் ட்ரீ அறுபது அடி.. நினைச்சுப் பாரு. கோயில் கோபுரமே கொஞ்சம் சின்னதா தெரியும்.. அப்போ நாங்க வெச்ச குடில் ஒரு மாளிகை மாதிரி இருக்கும். இப்ப இருக்கிறவங்க வேஸ்ட். ஏதோ கடமைக்கு செய்றாங்க.

ஸ்டீபன் : அண்ணே.. கிறிஸ்மஸ்ங்கறது பெருசு இல்லன்னே, சின்னது.

மெம்பர் : என்னப்பா சொல்றே…

ஸ்டீபன் : பெரிய ஆண்டவர் சின்ன மனுஷனா வந்தது கிறிஸ்மஸ். பெரிய மாளிகையை விட்டு சின்ன குடிசையை தேடினது கிறிஸ்மஸ். பெரிய விண்ணக இடத்தை விட்டு சின்ன மண்ணகம் வந்தது கிறிஸ்மஸ். மேன்மையை விட்டு தாழ்மையை எடுத்தது கிறிஸ்மஸ். நாமளும் நம்மை தாழ்த்தி சின்னவனா மாறுறது தானேன்னே நல்லது ?

மெம்பர் : அடப் போப்பா.. நான் எவ்ளோ முக்கியமான விஷயத்தை பேசிட்டிருக்கேன்.. நீ ஏதோ புக்ல படிச்சதையெல்லாம் என்கிட்டே சொல்லி காமிக்கிறே…

ஸ்டீபன் : சரி அதை விடுங்கண்ணே.. மற்றபடி கிறிஸ்மஸ் ஏற்பாடுகளெல்லாம்.. எப்படி இருக்கு ? தயாரிப்புகள்…

மெம்பர் : மத்தபடி என்னப்பா…. அலங்காரத்துக்கு இந்த வருஷம் எவ்வளவு செலவு பண்றாங்கன்னு எனக்கு பாக்கணும். தெரிஞ்சவங்களுக்கே கான்ட்ராக்ட் குடுத்துருவாங்கப்பா… கேர்புல்லா நீங்க எல்லாம் இதை கவனிக்கணும். கிறிஸ்மஸ் ஈஸ்டரெல்லாம் நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்க வேண்டிய காலங்கள்.

ஸ்டீபன் : நான் அதைப்பற்றியெல்லாம் பேசலேண்ணே… சர்ச்ல மெசேஜ் இந்த தடவை யாராச்சும் புதுசா வராங்களா ? இல்ல.. பாஸ்டர் தானா ?

மெம்பர் : அதெல்லாம் தெரியலப்பா.. தூக்கக் கலக்கத்துல எவன் மெசேஜ் கேப்பான். அதே ஜீசஸ், அதே மேரி, அதே தூதன், அதே செய்தி.. நமக்குத் தெரியாததா என்ன ? அதுவும் மெசேஜ் ஆரம்பிக்கிற டைம்ல தான் மட்டன் கடை பிஸியா இருக்கும்.. நான் பொதுவா.. கம்யூனியன் டைம்ல போய் வாங்குவேன்.. கொஞ்சம் பிரியா இருக்கும்.

ஸ்டீபன் : அதாவது ஆட்டுக்குட்டியானவருடைய உடலைச் சாப்பிடற டைம்ல ஆட்டுக்குட்டியோட உடலை வாங்கிட்டிருப்பீங்க..

மெம் : ஹா..ஹா. தம்பிக்கு எப்பவுமே தமாஸ் தான்… கிறிஸ்மஸ் இந்த தடவை கலக்கணும் தம்பி… சர்ச் முடிஞ்சதும் வெறும் டீ மட்டும் இல்லாம வடையும் வேணும்ன்னு கேக்கணும்… பசியா இருப்போம்ல… நாங்க இருந்தப்போ…..

ஸ்டீபன் : அதெல்லாம் இருக்கட்டும்ன்னே… பாத்துக்கலாம்…. நான் கிளம்பறேன்.

மெம் : எங்கே தம்பி போயிட்டிருக்கீங்க.. உங்களை மாதிரி ஆட்களெல்லாம் சர்ச் விஷயத்துல நல்லா ஈடுபடணும்.. ஒதுங்கி நிக்காதீங்க.. அடுத்த தடவை எலக்ஷன்ல கண்டிப்பா நீங்க நிக்கணும்… நம்ம ஆளுங்க தாம்பா ஆளணும்…

ஸ்டீபன் : ஐயா.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல.. நான் சர்ச்க்கு போறேன்….

மெம் : சரிப்பா.. போயிட்டு வா… சர்ச்ல இருக்கிற செக்யூரிட்டி கேமரா இருக்குல்லப்பா.. அது வாங்கினதுல..

ஸ்டீபன் : ஐயா.. நான் கிளம்பறேன்.. கொஞ்சம் அவசரமா போணும்..

மெம் : சரிப்பா.. சண்டே சர்ச் முடிஞ்சு பேசுவோம்.. நிறைய விஷயம் உங்கிட்டே சொல்லணும்.

காட்சி 2

( ஸ்டீபன் சர்ச்சில் அமர்ந்திருக்கிறார்.. அப்போது ஒருவர் அருகில் வந்து அமர்கிறார் )

நபர் : எப்பப்பா ரொம்ப சோர்வா இருக்கே ?

ஸ்டீபன் : இல்லங்கய்யா… சும்மா தான்.. கிறிஸ்மஸ் வருதுல்லயா.. அதை தான் நினைச்சுட்டே இருந்தேன்.

நபர் : ம்ம்… கிறிஸ்மஸ் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமா இருக்குன்னு நினைச்சுட்டே இருக்கியா ?

ஸ்டீபன் : அட.. ஆமாங்கய்யா.. நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க.

நபர் : நாம பல நேரங்கள்ல அப்படித் தான் இருக்கிறோம். அடையாளங்கள்ல ரொம்ப கவனம் செலுத்தி செலுத்தி, உண்மையான அர்த்தத்தைத் தொலைச்சுடறோம்.

ஸ்டீபன் : அதான் நானும் நினைச்சேன். கிறிஸ்மஸ்ன்னு சொன்னாலே முதல்ல நினைவுக்கு வரவேண்டியது கிறிஸ்து தானே.. ஆனா அவரு தான் கடைசியா நினைவுக்கு வராரு. சிலருக்கு அதுவும் நினைவுக்கு வரதில்லை. வேர்களை நறுக்கிட்டு, கிளையில பூக்களை ஒட்ட வைக்கிறாங்க. முள்ளு ரெண்டையும் புடுங்கிட்டு கடிகாரத்துல டைம் தேடற மாதிரி இருக்கு இது.

நபர் : ம்ம்.. ரொம்ப சடங்காச்சாரமா போச்சு நமக்கு எல்லாமே… உண்மைல நாம கிறிஸ்து பிறப்பை கொண்டாடல, ஒரு ரசிகர் மன்ற விழாவைத் தான் கொண்டாடறோம். அங்கே தான் கொண்டாட்டம் முக்கியமா இருக்கும், அர்த்தம் அவசியமில்லாம போகும்.

ஸ்டீபன் : ஹா..ஹா.. நீங்களாச்சும் புரிஞ்சுகிட்டீங்களேய்யா… எத்தனையோ தீர்க்கத் தரிசிகள் முன்மொழிந்த கடவுள் அவர். நம்முடைய அத்தனை பாவங்களையும் தீர்க்க வந்த மாபரர். நமக்காக தொழுவில பிறந்து, கழுவில இறந்த கர்த்தர். அவரை நாம பயபக்தியோட வரவேற்கணும். ஆனா என்ன மனநிலைல கொண்டாடறோம்.. நினைச்சுப் பாத்தாலே பயமா இருக்கு.

நபர் : இது எப்படி இருக்குன்னா.. அம்மாவோட பர்த்டேக்கு ‘ஹேப்பி பர்த்டேம்மா’ ந்னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டுட்டு, அம்மாவை அநாதை ஆசிரமத்துல கொண்டு போய் தள்றது போல இருக்கு.

ஸ்டீபன் : எக்ஸாக்ட்லி…

நபர் : சும்மா விற்பனையிலயோ, அலங்காரத்துலயோ, ஏன் கோயில்ல வரதுலயோ கூட கிறிஸ்மஸ் இல்லை. தன்னைப் போல பிறரை நேசிக்கிறதுல தான் கிறிஸ்மஸ் முழுமையடையும். கிறிஸ்துவை உள்ளத்துல ஏற்றுக் கொண்டு அவரைப் போல வாழ்றதுல தான் உண்மையான கிறிஸ்மஸ் இருக்கு.

ஸ்டீபன் : பளிச்ன்னுன்னு சொல்லிடீங்க… அவரைப் போல வாழணும்ன்னு நினைக்கிற மக்களுக்கு முதல்ல அவர் எப்படி வாழ்ந்தார்ன்னு தெரியணும். அதுக்கு அவரோட வார்த்தைகளைப் படிக்கணும்.

நபர் : மகிழ்ச்சி… நீயாவது என்னை சரியா புரிஞ்சு வெச்சிருக்கியே… ( எழும்பி போகிறார் )

ஸ்டீபன் : என்னைப் புரிஞ்சுகிட்டீங்கன்னா சொன்னீங்க.. அப்படின்னா.. அப்படின்னா நீங்க.. ஹலோ ஹலோ.. ஐயா

( அப்படியே ஸ்டேஜை விட்டு வெளியே போகிறார் )

பின்குரல் :

கிறிஸ்மஸ் எதை நமக்குச் சொல்கிறது ? வெறும் அலங்காரங்களோ, அடையாளங்களோ கிறிஸ்மஸ் அல்ல. இறைமகன் இயேசுவின் தியாகத்தையும் அன்பையும் உணர்வதும், அவர் காட்டிய அன்பின் வழியில் நடப்பதுமே முக்கியமானது. இந்த கிறிஸ்மஸ் நமக்கு கிறிஸ்து பிறப்பின் உண்மை அர்த்தத்தைப் புரிய வைக்கட்டும்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s