Posted in Articles, Christianity, Poem on People, SAINTS

சிசிலியா எனும் இறையிசை

சிசிலியா எனும் இறையிசை

Guercino - St. Cecilia .jpg

இசையும் இறையும்
இரண்டறக் கலந்தவை.

இருளைக் கிழித்து
ஒளி பிறந்தது !
பிரபஞ்சப் படைப்பின்
முதல் மௌன இசை.

இயேசுவின் பிறப்பை
இடையர்க்கு அறிவித்தது
தூதரின் மெல்லிசை.

கல்வாரியில்
மீட்பின் முனகல்கள்
துயரத்தின் இசை.

இசையின்றி
இறையில்லை.

சிசிலியா
அந்த
இசையான இறைவனை
இசையாலே அசைத்தவர்

இசைக்கலைஞரின்
பாதுகாவலி மட்டுமல்ல,
இசைக்கருவிகளை
உருவாக்கும் கலைஞருக்கும்
அவரே பாதுகாவலி.

இறை தங்கும் ஆலயமாய்
தன்னை
சிறுவயதிலேயே
அன்பரின் பாதத்தில்
அடிமையாய் வைத்தவர்

சிற்றின்பத்தின் சிற்றோடைகளை
விடுத்து
பேரின்பத்தின் பெருநதிக்காய்
உயிருக்குள்
பாடல் இசைத்துக் கிடந்தவர்.

விண்வாழ் தூதர்
மண்வந்து
இசைப்பேழையின் அருகிருந்து
இடையறாமல் காத்தது
இந்தப் புனிதரின் வாழ்வில் தான்.

திருமணம் வந்து
தேரில் ஏற்றிய போதும்
இதயத்தில்
தேவனை மட்டுமே ஏற்றினார்.

கனவுகளோடு வந்த‌
கணவனையும்
கடவுளோடு இணைத்து
த‌ன்
கன்னித் தன்மையை
கடவுளுக்காய்க் காத்தவர்.

லில்லிப் பூக்களும்
ரோஜாப் பூக்களுமாய்
தூதர்கள்
இவரருகே வாசம் புரிவதை
வாசனை கண்டு
வியந்தவர் பலர்.

லில்லி,
தூய்மையின் அடையாளம்.
உடல் உள்ளத் தூய்மையை
சிசிலியா காத்ததன்
விண்ணக அங்கீகாரம்.

ரோஜா
மறைசாட்சியின் அடையாளம்.
குருதிக் கரையில்
இறையில் கரைவார் எனும்
நிறைவின் குறியீடு.

தன்
இதயத்தின் இசையைக் கூட‌
பிறருக்குப்
புரியவைக்கும்
புதுமையின் அம்சம் அவர்.

த‌ன்
வாழ்க்கையின் வழியெங்கும்
இறைவார்த்தையை
நடவு செய்த நங்கையவர்.

ரோம்,
கிறிஸ்தவத்தை
வெறி கொண்டு வேட்டையாடிய‌
காலம் !
கிறிஸ்தவர்களை
பொறி வைத்து
படுகொலை செய்த காலம்.

சிசிலியாவின்
கணவரும், அவர் சகோதரரும்
அதிகாரிகள் முன்
வீசப்பட்டனர்.

விரோதத்தின் விழிகள்
அவர்களை எரித்தன.
இயேசுவை மறுத்தால்
வாழ்க்கையைத் தொடரலாம்,
இயேசுவை எடுத்தால்
வாழ்க்கையை முடிக்கலாம்
எதுவேண்டும் ? என‌
கர்வம் குரல்கள் கர்ஜித்தன.

நிலைக்களமான‌
வாழ்க்கைக்காய்
கொலைக்களமே
போதுமென தேர்ந்தெடுத்தனர்.

ஜீவனை காப்பதற்காய்
ஜீவனை விட்டனர்.

எரிச்சலில் எரிமலையாய்
எதிரிகள் திரிந்தனர்.

முல்லை மலரான‌
மங்கையை
அழிப்பதே
அடுத்த இலக்கென‌
அலறித் திரிந்தனர்

அதிகாரி
கறையானான்
சிலிலியா
சிறையானாள் !

இயேசுவை உதறு
அளிப்போம் சிறகு
என்றனர்.

பரமனை பரிகசித்தால்
வசந்தங்கள்
பரிசளிப்போம்
என்றனர்.

சிசிலியா சிரித்தாள்.

கடவுளைப் புறந்தள்ளி
உலகினில்
ஒட்டுவதா ?
உலகினை உதறிவிட்டு
இறையினை
எட்டுவதா ?
நான் நல்ல பங்கை தேர்ந்தெடுப்பேன்.

உன்
மரணப் பரிசு போதும்
மன்னவனை மறுதலியேன்
என்றாள்.

இருட்டான‌
குளியலறையில்
அடைக்கப்பட்டார் இசைப்பறவை.

ஏழுமடங்கு வெப்பமான‌
நீராவி
அறையை நிறைத்தது.
அவள் அங்கமோ
இறையில் குளிர்ந்து
இசையில் மிளிர்ந்தது.

சாவாள் என நினைத்திருந்தவள்
சாதகம் செய்வதைக் கண்டு
அதிகாரி
அலறினான்

வாள்களால் அவளை
வீழ்த்துங்கள்,
தலையினை வெட்டி
தரையின் வீசுங்கள்
என்றான்.

தலைவனுக்காய் தலைதர‌
சம்மதம் எனக்கு
அதுவே
நிலைவரம் எனக்கு
என்றாள் சிசிலியா.

வாள்கள்
கழுத்தை நோக்கி
கழுகு போல் பாய்ந்தன.
மூன்று முறை
அந்த மெழுகுக் கழுத்தை
கூர்வாள்கள் குதறின.

மூவொரு இறைவனின்
பிரியையை
மூன்று வெட்டுகளால்
பிரிக்க முடியவில்லை.

மூன்று முறைக்கு மேல்
வெட்ட‌
அன்று
சட்டப்படி அனுமதியுமில்லை !

வெட்டியவர் ஓடினர்
வெட்டுப்பட்டவர் பாடினார்.

மீனின் வயிற்றுக்குள்
மூன்று நாள் இருந்த‌
யோனாவாய்,
மண்ணின் மடியினில்
மூன்று நாள் இருந்த‌
மனுமகனாய்
செசிலியா மூன்று வெட்டுகளுடன்
மூன்று நாள் இருந்தார்.

அந்த நிலையிலும்
புன்னகைத்தாள்
போதித்தாள்
நானூறு பேரை மனம் மாற்றினார்.

உள்ளதையெல்லாம்
ஏழைகளுக்கும்
உள்ளத்தை இயேசுவுக்கும் கொடுத்தார்.

இறையோடு வாழ்ந்த‌
இல்லத்தை
இறைவனுக்கு
ஆலயமாக்கச் சொன்னார்

கடைசியில்
மரணம் மெல்ல சத்தமிட்டது
இசையின்
நெற்றியில் முத்தமிட்டது.

ராகம் ஒன்று
புல்லாங்குழலுக்குள் புகுந்ததாய்,
நாதம் ஒன்று
வீணைக்குள் அடைந்ததாய்
செசிலியா
இறைவனின் இதயத்தில்
நிறைந்தாள்.

மண்ணகம்
துயர் கண்டது.
விண்ணகம் இசைகொண்டது

முதல் நூற்றாண்டின்
கடைசியில் முளைத்தவர்
இரண்டாம் நூற்றாண்டு
முளைத்ததும்
விடைபெற்றார்.

நான்காம் நூற்றாண்டு
திருச்சபை இவரை
புனிதரெனக் கண்டது.

பதினைந்தாம் நூற்றாண்டில்
அவர் கல்லறை
திறக்கப்பட்டது.

துயில் கொண்ட‌
தூரிகையாய் அவர் தெரிந்தார்.
அன்றலர்ந்த மலரென‌
உடல் அழியாதிருந்தது.
மலரின் நறுமணம் விலகாதிருந்தது.

நவம்பர் 22
விழா நாள் என‌
அவர் பெயரை திருச்சபை
எழுதிக் கொண்டது.

சிசிலியா
தூய்மையின் இசை.
சிசிலியா
இசையின் தூய்மை.

*

சேவியர்

 

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s