Posted in Articles, Sunday School

SKIT : பாதாளத்தில் ஒரு பெர்ஃபாமனஸ் அப்ரைசல் (Christmas Special SKIT )

Image result for satans meet

காட்சி 1

( லூசிபர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், அப்போது சாத்தானின் தூதன் ஒருவன் வருகிறான் )

தூதன் 1 : கர்வத்தின் பெருங்கடலே, அதர்மத்தின் ஆழியே, பெருமைகளின் பிரியனே, சோதனைகளின் வித்தனே, பிரபஞ்சத்தின் பாவச் சுவடே, கருப்புக்கெல்லாம் அரசனே, அந்தியாய் வந்தவனே, பாதகர்களின் பிதாவே வணக்கம் வணக்கம்

லூசிபர் : உன் புகழ்ச்சியில் யாம் மகிழ்ந்தோம். என்ன விஷயமாய் வந்திருக்கிறாய்

தூ 1 : தலைவரே, நமது சாத்தான்களின் பெர்ஃபாமன்ஸ் ரிவ்யூ காலம் வந்திருக்கிறது. ஒவ்வொருவரும் எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள் என்பதை பரிசோதித்துப் பார்த்து அவர்களுக்கு நல்ல இன்கிரிமென்ட், பதவி உயர்வு, போனஸ், சம்பள உயர்வெல்லாம் கொடுக்க வேண்டிய காலம் இது.

லூ : ஓ.. ஆமாம்.. ஆமாம்.. நம்ம புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்… அவங்க பண்ற வேலையைப் பாத்து நானே வியந்து போயிடுக்கிறேன்.

தூ 1 : எதை வைத்து அப்படிச் சொல்கிறீர்கள் கருப்பு ஆடே !

லூ : உனக்கு ஞாபகம் இருக்கா தெரியலை. ஒரு தடவை கடவுள் என்கிட்டே வந்து “யோபுவைப் பாத்தாயா சாத்தானே” ந்னு நக்கலா கேட்டாரு. கடவுள் கிட்டே பெர்மிஷன் வாங்கி யோபுவை புரட்டிப் புரட்டிப் போட்டும் அவன் நம்ம பக்கத்துக்கு வரவே இல்லை. அன்னிக்கு நான் தோத்துட்டேன். ஆனா இப்பல்லாம் கடவுள் வந்து அவனைப் பாத்தாயா ? அவளைப் பாத்தாயான்னு கேக்கறதில்லை. ஏன்னா நம்ம பசங்க தீயா வேலை செய்றாங்கோ…

தூ : ஓ.. அது மகிழ்ச்சியான செய்தி நமக்கு. காரணம் என்னவோ ?

லூ : அதுவா ? இப்போ இருக்கிற மக்களெல்லாம் முட்டை ஓட்டு விசுவாசிகள். ஓரமா ஒரு தட்டு குடுத்தா பொட்டுன்னு போயிடுவாங்க. கடவுளே கடவுளே ந்னு கூப்டுவாங்க, அவங்களை ஆபீஸ் வேலையைத் தூக்கினாலே போதும், குய்யோ முய்யோ.. நீயெல்லாம் கடவுளான்னு கட்சி மாறிடுவாங்க.

தூ 1 : ஹா..ஹா.. கேக்கவே எவ்வளவு சந்தோசமா இருக்கு. இப்போ இருக்கிற மக்களெல்லாம் சோடா பாட்டில் விசுவாசிகள்ன்னு ஒருத்தர் சொன்னாரு.

லூ : சோடா பாட்டில் விசுவாசிகளா ? வாட் யூ மீன்..

தூ : சோடா பாட்டிலை ஓப்பன் பண்ணினதும் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ன்னு ஒரு பவரா தெரியும். கொஞ்ச நேரத்துல, ஊசிப் போன பட்டாசு மாதிரி சொய்ய்ய்ய்ங் ந்னு அடங்கிடும். அப்படித் தான் இருக்காங்க நிறைய விசுவாசிகள். ஜெபக்கூட்டத்துக்குப் போயிட்டு ஸ்பிரிச்சுவல் நெஞ்சை நிமித்திட்டு வருவாங்க, கொஞ்ச நேரத்துலயே ஆன்மீக நோஞ்சான்களா மாறிடுவாங்க

லூ : ஹா..ஹா. நீ சொல்றது கேக்க நல்லா இருக்கு. சோடா பாட்டில் ஹா..ஹா.. ம்ம்ம் ஓவராலா நான் ரொம்ப ஹேப்பி.. நாம எதுக்கும் நம்ம லீடர்ஸை ஒவ்வொன்னா கூப்பிட்டு எல்லாம் எப்படி போயிட்டிருக்குன்னு விசாரிப்போம்.

தூ : கண்டிப்பா .. லேடீஸ் பர்ஸ்ட்… முதல்ல லேடீஸ் டிபார்ட்மென்டைப் பாக்கற அபெத்தோன் த டிஸ்ட்ராயரை கூப்பிடறேன்.

( தூதன் போனை எடுத்து பேசுகிறான் )

தூ : ஹலோ…. அட ஆமாப்பா… சீக்கிரம் வா… வாட் த ஹெல்…. ஹெல் ஈஸ் அவர் ஹோம்.. நீ இங்க வா… உச்சத் தலைவர் கூப்பிடறாரு.. அப்ரைசல் டைம்.

( தூதன் 2 வருகிறார்.. நடனமாடியபடி வருகிறான் )

தூ 2 : ( வணக்கியபடி ) உடைந்து விழுந்த நட்சத்திரமே, பிறரை உடைக்கும் பொற்சித்திரமே, அழகின் அகரமே, எழிலின் நரகமே.. வாழி வாழி….

லூ : நன்றி நன்றி.. சொல்லுப்பா.. எப்படி போயிட்டிருக்கு… பெண்கள் நம்ம கண்கள் மாதிரி.. அவங்களை கரெக்ட்ரா தப்பான வழியில கூட்டிட்டு போறியா இல்லையா ?

தூ 2 : தலைவரே.. ஆதித் தாய் ஏவாளையே பழத்தைக் காட்டி வழியை மாற்றியவரோட வாரிசு நாங்க. சும்மா விடுவோமா ? எல்லாமே மிகச்சரியாய் போயிட்டு இருக்கு. சரியான வழியில மக்கள் போகாதபடி கண்ணும் கருத்துமா பாத்திட்டிருக்கோம். இடுக்கமான வழியை விட்டு, அகலமான வழிக்கு டார்ச் லைட் அடிச்சிட்டிருக்கோம்…

லூ : எப்படி இதெல்லாம் சாத்தியம்ன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லு.

தூ 2 : கேளிக்கையின் கோமகனே… கலையை வைத்துத் தான் பெரும்பாலானவர்களை நிலை குலைய வைக்கிறேன். சாயங்காலம் ஆச்சுன்னா சீரியலை தூக்கி வீசறேன், அவங்களுக்கு கண்ணு துடைக்க கர்ச்சீப் எடுக்கவே நேரம் சரியா இருக்கு. எல்லா சீரியல்லயும் நம்ம சாத்தானிய சிந்தனைகளை தான் அழகா பேக் பண்ணி குடுக்கிறேன். எவனுக்கும் ஒரு பொண்டாட்டி கிடையாது, எவனும் அடுத்தவனை வாழ வைக்கணும்ன்னு நினைக்கிறது கிடையாது.. எப்படி நம்ம ஐடியா .

லூ : சூப்பர் சூப்பர்… ஆனா.. இதெல்லாம் வயசான பெண்கள் தானே பாப்பாங்க..

தூ : தலைவரே.. பெரியவங்க வீட்டு ஹால்ல இருக்கிற டீவில பாப்பாங்க.. சின்ன பிள்ளைங்க கையில இருக்கிற ஸ்மார்ட் போன்ல பாப்பாங்க. அவங்களுக்குத் தேவையான வீடியோவை நான் அதுல அனுப்பிட்டே இருக்கேன்ல..

லூ : ஒ.. பேஷ் பேஷ்.. வீடியோ பாக்கவே விருப்பம் இல்லாதவங்களுக்கு..

தூ 2 : தலைவரே.. நீங்க பூமிக்கு விசிட் அடிச்சு ரொம்ப நாளாச்சோ ? ரொம்ப அவுட் டேட்டடா இருக்கீங்க போல… சொல்றேன்…சொல்றேன்… ஸ்மார்ட்போனும் செல்பியும் பெண்களோட இரண்டு கண்களாக்கிட்டேன். வாட்ஸப்பும், ஃபேஸ்புக்கும் இதயமாக்கிட்டேன். டிஜிடல் கிசுகிசுவை அவங்களோட வழக்கமாக்கிட்டேன். சிற்றின்ப சிந்தனைகளை அவங்களுடைய இரத்தமாக்கிட்டேன். ஒட்டு மொத்தமா குளோஸ்..

லூ : ஹா..ஹா.. பலே பலே.. செமயா எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்றே….. உனக்கு நிச்சயம் நல்ல ஹைக் இன்கிரீமென்ட் எல்லாம் உண்டு.

தூ 2 : ரொம்ப நன்றி தலைவரே.. நல்லா பாத்து போட்டு குடுங்க… உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டியிருக்கு.

லூ : கண்டிப்பா.. பட்.. எனக்கு ஒரு சின்ன சந்தேகம். எல்லா சண்டேயும் நிறைய பெண்கள் சர்ச்சுக்கு போறாங்க, கன்வென்ஷன்கள்ல பாத்தாலும் தாய்மார்கள் தான் அதிகமா இருக்காங்க.. அப்புறம் எப்படி நீ…. இதையெல்லாம் சாதிக்கிறே.

தூ 2 : தலைவரே.. அவங்க சர்ச்சுக்கு போறதுக்கு அலோ பண்ணுவேன், ஆனா ஜீசஸ் கிட்டே போகாம ஸ்டாப் பண்ணிடுவேன். கன்வென்ஷன் போக என்கரேஜ் பண்ணுவேன், கர்த்தர் கிட்டே போகாம டிஸ்கரேஜ் பண்ணுவேன். கிறிஸ்டியன் டிவி பாக்க பெர்மிஷன் குடுப்பேன், பைபிள் கிட்டே போகாம கேர்புல்லா இருப்பேன். மொத்தத்துல அவங்க ஸ்பிரிச்சுவல்ன்னு அவங்களையே நம்ப வைப்பேன்.. ஹா..ஹா

லூ : வா..வாவ்…வாவ்.. நீ செம கில்லாடிப்பா… உனக்கு புரமோஷனும் உண்டு. நீ போகலாம்.

தூ 2 : நன்றி சூப்பர் நட்சத்திரமே..

லூ : அடுத்த ஆளைக் கூப்பிடுப்பா…

( தூ 1 போனை எடுத்துப் பேசுகிறார், சற்று நேரத்தில் அடுத்த தூதர் வருகிறார் )

தூ 3 : பதற வைக்கும் எதிராளியே, பரமனின் பகைவனே, அழிவுகளின் ஆழியே, போலிகளின் வேலியே வணக்கம் வணக்கம்

லூ : மகிழ்ச்சி மகிழ்ச்சி.. புகழ்ச்சியே எமக்கு மகிழ்ச்சி. சொல்.. உன் பணிகள் எப்படிப் போய்க்கொண்டிருக்கின்றன.

தூ 3 : தலைவரே.. ஆண்களிடையே பணி செய்யும் வேலை எனக்கு. நாளுக்கு நாள் வேலை கம்மியாகிக் கொண்டே தான் போகிறது. விசுவாசத்தில் இருக்கும் ஒருவனை விலக்குவது, வடை சுடுவது போல எளிதாகிவிட்டது.

லூ : ஹா..ஹா.. மகிழ்ச்சி மகிழ்ச்சி… நீ என்ன ஸ்ட்ராட்டஜி வெச்சிருக்கே.

தூ 3 : தலைவரே.. கடவுள் கிட்டே போகாதேன்னு யார் கிட்டேயும் நான் சொல்றதில்லை. என் கிட்டே வான்னும் நான் யாரையும் கூப்பிடறதில்லை. கடவுள் பாதி, மிருகம் பாதின்னு நினைக்கிற விஷயங்களையெல்லாம் அவங்களுக்கு பிரீயா குடுத்துட்டே இருக்கேன்.

லூ : புரியலையே… கொஞ்சம் டீட்டெயில்ஸ் பிளீஸ்

தூ 3 : தலைவரே.. மொபைல் இருக்கிறவனுக்கு சில ஆப்ஸ் குடுப்பேன்… அவன் அதுக்குள்ளயே குடியிருப்பான். அது இல்லாதவனுக்கு சில கேர்ல்ஸ் குடுப்பேன்.. அவன் அவங்களை நெனச்சு நினைச்சு அழிஞ்சே போவான்.. அதுவும் இல்லாதவனுக்கு கொஞ்சம் பணம் குடுப்பேன் அவன் பரவசத்துவ பரமனை மறப்பான்… கொஞ்சம் ஈகோ, கொஞ்சம் எரிச்சல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வன்மம் இதெல்லாம் அப்படியே பிஸா மேல தூவற டாப்பிங்ஸ் மாதிரி தூவிட்டா அவங்க பாட்டுக்கு அங்கயே கிடப்பாங்க.

லூ : இதெல்லாம் அவ்ளோ ஈசியா என்ன ? ரொம்ப கஷ்டம் இல்லையா ? அவங்களுக்கு புரியாதா ?

தூ : அப்படியே கொஞ்சம் புரிஞ்சுச்சுன்னாலும் வாட்ஸப்ல நாலு ஸ்டேட்டஸ் போட்டுட்டு வேலையைப் பாக்க போயிடுவாங்க ப்ரபோ.. டோன்ட் வரி..

லூ : பட்.. அந்த ஆப்ஸ் சொன்னியே.. பைபிள் ஆப்ஸும் நிறைய வந்திருக்காமே…

தூ : அந்த ஆப்ஸ்குக்கு இடையிலயும் நான் ஆட்ஸ் குடுப்பேன்.. அவன் அந்த நூலைப் புடிச்சு வேற பட்டம் விட போயிடுவான். சிற்றின்பம் ரொம்ப பவர்புல் தலைவரே…

லூ : ஹா..ஹா.. வெரி குட் வெரி குட்… ஏதாச்சும் சவால்கள் ?

தூ : ஒரே ஒரு சவால்.. இந்த வயசான கிழடுங்க தான். ஐயையோ வாழ்க்கை முடியப் போவுதேன்னு நினைச்சு சட்டுன்னு சிலரு ஆன்மீகத்துக்கு தாவிடறாங்க…

லூ : மடப்பசங்க.. வாழ்க்கை பூரா நம்ம கூட இருப்பாங்களாம், கடைசி டைம்ல அப்படியே நம்மை கழட்டி விட்டுட்டு அந்தப் பக்கம் போயிடுவாங்களாம்.. அவங்களை எப்படி தடுப்பே ?

தூ 3 : அதுக்கும் சில டெக்னிக் உண்டு. “நீதான்ன்யா பெரிய மூப்பர்”.. ந்னு கொஞ்சம் ஈகோவை கிளறி விட்டா பாதி பேர் அவுட். நீ தப்பே பண்ணலேய்யா ந்னு கூட இருந்து நாலு வாட்டி சொன்னா மத்தவங்களும் அவுட். அவங்க மனசுல, உண்மையிலேயே கடவுள் இருக்காரா என்ன..ன்னு ஒரு சந்தேகத்தையும் அப்பப்போ நட்டு வைப்பேன். என்ன ஒரு சிலர் அப்படியும் இப்படியும் எஸ்கேப் ஆவாங்க…

லூ : ம்ம்.. மழை பெஞ்சு முடிஞ்சப்புறம் இலையில தங்கியிருக்கிற ஒண்ணிரண்டு மழைத்துளி மாதிரி, ஒரு சிலர் இருப்பாங்க.. அவங்களை நாம விட்டுத் தள்ளலாம்.

தூ 3 : இருந்தாலும் கடைசி வரை முயற்சி செய்வேன் அழிவின் அரசே..

லூ : ம்ம்ம்.. நீயும் நல்லா தான் வேலை செஞ்சிருக்கே.. உனக்கும் நிச்சயம் ஹைக் எல்லாம் உண்டு. நீ போகலாம்.

தூ 3 : நன்றி. நன்றி .. நன்றி

லூ : ( தூதர் 1 டம் ) அடுத்து இந்த சர்ச், ஸ்பிரிச்சுவல் ஏரியாவை கவனிக்கிறவனைக் கூப்பிடுப்பா. அதான் ரொம்ப முக்கியம்..

தூ 1 : இதோ… உடனே ( போனை எடுத்துப் பேசுகிறார் )

தூ 4 : இறுமாப்பின் இதயமே, பெருமைகளின் புதையலே, கர்வத்தின் கர்ஜனையே, தாழ்மையின் எதிரியே.. வணங்குகிறேன் அடியேன்…

லூ : வாப்பா..வா… எல்லாம் எப்படி போயிட்டிருக்கு ?

தூ : அமர்க்களமா போயிட்டிருக்கு.. இப்போ மட்டும் இயேசு வந்தா அவருக்கு சுழற்றி அடிக்கிறதுக்கு சாட்டையோட நீளம் பத்தாம போயிருக்கும்., “ஏண்டா மவனே என் வூட்டை கள்வர் குகையாக்கினீங்கோ” ந்னு கேட்டு அடிக்கிற நிலமைல சர்ச்களை கொண்டு வர மாடா உழைக்கிறேன்.

லூ : ம்ம்ம்.. கேர்புல் கேர்புல்.. கடவுளோட சன்னிதியில போய் வேலை பாக்கறது ரொம்ப கஷ்டம்..

தூ 4 : அதுக்கு முதல்ல கடவுளை அவங்களே வெளியேற்றற மாதிரி வேலைகளைத் தானே செய்றேன்.. கடவுள் இல்லேன்னா.. அப்புறம் அது வெறும் கட்டிடமாயிடும்ல… நமக்கு பிரச்சினை இல்லை.

லூ : ஆமா.. ஆமா.. அதை நாசூக்கா பண்ணணும்.. சதுரங்க விளையாட்டு மாதிரி உன்னோட மூவ் இருக்கணும்.

தூ 4 : நான் உங்க சிஷ்யன்.. தேவாலயத்தைக் கெடுக்கிறது நமக்கு கைவந்த கலை. இப்பல்லாம் நாம பத்தடி பாஞ்சா சபை பத்தாயிரம் அடி பாஞ்சுடுது.

லூ : வெரி குட் வெரி குட்.. எல்லாம் நம்ம புள்ளிங்கோ பல இடத்திலயும் பண்ற கடின உழைப்பு தான் காரணம். நீ சர்ச்சை எப்படி கன்ட்ரோல்ல வெச்சிருக்கே ?

தூ 4 : அது ஒவ்வொரு சர்ச்சுக்கும் தக்கபடி டெக்னிக் வெச்சிருக்கேன் உதாரணமா சில சர்ச்ல மூப்பர்களை கிளறி விட்டா போதும், சில சர்ச்ல சின்னப் பசங்களை தூண்டி விடணும், சில இடங்கள்ல பாஸ்டரைப் புடிக்கணும், சில இடங்கள்ள பெண்களை இழுக்கணும். இப்படி சபைக்கு தக்கபடி பண்றோம்.

லூ : அந்தந்த டிப்பார்ட்மென்ட் சாத்தான்ஸ் கூட கொலாபரேஷன் வெச்சு தானே பண்றீங்க

தூ 4 : ஆமா..ஆமா.. நாம எல்லாம் அழிவின் விழுதுகள் இல்லையா ? இப்போ பாருங்க… நிறைய சபைகள்ல ‘ஏய்.. எங்க ஆளு பெருசா, உங்க ஆளு பெருசா’ ந்னு ஒரு சின்ன பொறியை தூவி விட்டா போதும். அது வெடிச்சு தூள் கிளப்பும். அப்புறம் நமக்கு செம வேடிக்கை தான்.( மெதுவாக ) சாதி இல்லேன்னா நிறைய சபையை உடைக்கவே முடியாம போயிருக்கும்.

லூ : குட்..குட்.. எங்கெல்லாம் கேப் கிடைக்குதோ அங்கெல்லாம் ஸ்கோர் பண்ணணும்.. ஞாபகம் வெச்சுக்கோ எலக்ஷன், காணிக்கை, பிரசங்கம், விற்பனை இப்படி எந்த இடத்தையும் விடக்கூடாது.

தூ 4 : கண்டிப்பா.. கண்டிப்பா…ஒண்ணையும் விடறதில்லை… சில இடங்கள்ல சபை வலுவா இருக்கும், அப்போ பாஸ்டரை கூப்டு பஞ்ச் டயலாக் பேச வைப்பேன். நாலு தப்பான டாக்ட்ரின்ஸ் கொண்டு வருவேன். சில புக்ஸை நீக்குவேன், சிலதை சேப்பேன்..இது தப்புல்லன்னு சொல்லுவேன்.. அது தப்புல்லன்னு சொல்லுவேன்.. கடைசில எதுவுமே தப்பில்ல ந்னு சொல்லுவேன்.. ஹா..ஹா…

லூ : சூப்பர் சூப்பர்.. படிப்படியா… படிப்படியா அதிரடி காட்டறே.. வெரி குட்…வெரிகுட்…

தூ 4 : அது மட்டுமில்லே… சர்ச்களை உடைச்சு உடைச்சு ஏகப்பட்ட டினாமினேஷன் ஆக்கிட்டே இருக்கேன். ஒரு சர்ச்சுக்கும் இன்னொரு சர்ச்சுக்கும் சண்டையை மூட்டுவேன். நான் தான் உண்மை ந்னு சொல்லி எல்லாருமே சண்டை போடறாங்க… சோ, நம்ம வேலை ஈசியோ ஈசி..

லூ : பெர்பெக்ட்..பெர்பெக்ட்… அப்படியே மத்த சாத்தான்ஸ் கூட பேசி எதையெல்லாம் சர்ச்சுக்குள்ள கொண்டு வர முடியுமோ எல்லாத்தையும் கொண்டு வா.. அப்போ தான் சர்ச் ஏது, உலகம் ஏதுன்னு வித்தியாசமே தெரியாம போயிடும்.

தூ 4 : ஹா.. ஹா.. பக்காவா சொன்னீங்க.. அப்படியே கடவுள் ரொம்ப சாஃப்ட்ப்பா.. நீ ஏறி மிதிச்சா கூட சிரிச்சிட்டே போயிடுவாருங்கற மாதிரி ஒரு இமேஜ் கிரியேட் பண்றேன்.. அதனால கடவுள் பயமெல்லாம் காணாம போயிடுச்சு… ஒண்ணு ரெண்டு ஜீவன்ஸ் அத்தி பூத்தாப்ல வரும். அதுவும் அழிஞ்சு வர உயிரினங்கள் மாதிரி காணாம போயிடும் கூடிய சீக்கிரம். அவங்களை மற்ற கிறிஸ்தவர்களே பாத்துப்பாங்க.. நாம ஒண்ணும் கவலைப்படத் தேவையில்லை.

லூ : வெரி வெரி குட்.. உனக்கும் நிச்சயம் ஹைக் பிரமோஷன் உண்டு.. நீ போகலாம்.

தூதன் 1 : இரக்கமற்ற இதயமே வணக்கம்.. ஒரு விஷயம் சொல்லணும்.

லூ : சொல்லுப்பா.. சொல்லு.. நான் இன்னிக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்.

தூ 1 : இப்படி உலகத்துல எல்லாம் நடந்தா, கடவுளோட வார்த்தை நிறைவேறுவது போல தானே. அப்போ இரண்டாம் வருகை வரும்ல. என்ன தான் உலகத்தையே நாம சேத்துகிட்டாலும் நாமளும் எரி நரகத்துல தானே விழப் போறோம். இல்லையா ?

லூ : சட்டென எழுகிறான் ( கோபத்தில் கத்துகிறான் ) நிறுத்து.. ஏன் அதை ஞாபகப் படுத்துகிறாய்.

தூ 1 : மன்னிக்க வேண்டும். பயமாக இருந்தது. நல்லவர்கள் மட்டும் கடவுளோடு சொர்க்கம் போவார்கள். நாம் முதலில் இருந்த சொர்க்கம் அது. நாம போக முடியாம ஆயிடுச்சு. அதனால மத்தவங்களையும் போக விடாம தடுக்கிறோம். ஆனா கடைசியில் நாமும், நாம் நமது வலையில் விழ வைத்திருக்கும் எல்லோருமே நெருப்புக்குத் தானே போக வேண்டும்… இல்லையா ? வேறு வழி உண்டா

லூ : நீ என்னுடைய நல்ல மூடை கெடுத்து விட்டாய்.. முடிவை ஞாபகப்படுத்தி என்னுடைய மனசை காயப்படுத்திவிட்டாய்.. உனக்கு இந்த ஆண்டு எந்த பிரதிபலனும் தரப்படாது. அடுத்த ஒரு ஆண்டு நீ சம்பளம் இல்லாமல் தான் வேலை பார்க்க வேண்டும். போ.. என் கண் முன்னிருந்து.. போ…

தூ 1 : வழுக்கி விழுந்த நட்சத்திரமே, நிமிர்ந்து எழுந்த கர்வக் கதிரே … அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நான் சொன்னது தவறு தான் மன்னித்து விடுங்கள்.

லூ : ஹா..ஹா… சாத்தானிடம் மன்னிப்பு கேட்கும் ஒரே ஒருத்தன் நீ தான். சரி..சரி.. உனக்கு ஒரு ஸ்பெஷல் அசைன்மென்ட் தரேன்.. அதை சரியா பண்ணினா உனக்கு புரமோஷன் தரேன். மன்னிச்சு விட்டுடறேன்.

தூ 1 : சொல்லுங்க.. சொல்லுங்க.. என்ன பண்ணணும்.

லூ : கிறிஸ்மஸ் வருதுல்ல.. அந்த நாளில தான் இந்த உலக கிறிஸ்தவர்கள் எல்லாருமே அந்த இயேசுவை நினைக்கிறாங்க.. மனம் திரும்புறாங்க… பாவ மன்னிப்பு கேட்கிறாங்க.. ஏழைகளுக்கு உதவறாங்க… ரொம்ப நேரம் சர்ச்ல இருக்காங்க… பிரேயர் பண்றாங்க… சே…சே..சே…ஐ..ஹேட் திஸ்..

தூ 1 : உண்மை தான் .. உண்மை தான்..

லூ : அதனால இந்த கிறிஸ்மஸ் காலத்துல, கிறிஸ்மஸோட உண்மையான அர்த்தத்தை விட்டு விலகி நடக்கிறமாதிரி சிட்டுவேஷன்ஸை கிரியேட் பண்ணு…

தூ 1 : அது ரொம்ப சிம்பிள் … இயேசுவுக்கும் மனுஷனுக்கும் இடையிலே கொஞ்சம் ஆடம்பரங்களை அள்ளி விட்டா போதும். கடவுளுக்கும் மனுஷனுக்கும் இடையே கொஞ்சம் ‘டேக் டைவர்ஷன்’ ஐட்டம்ஸை வெச்சுட்டா போதும்.

லூ : அதெல்லாம் நமக்கு கை வந்த கலையாச்சே… என்ன பண்ண போறே.

தூ 1 : பழிகளின் பிதாவே.. மக்களோட பார்வை விடிவெள்ளியாம் இறைவனை விட்டு விட்டு, மரத்துல கட்டற நட்சத்திரங்கள்ல விழற மாதிரி பாத்துக்கறேன். குடிலை அலங்காரம் செய்யத் தூண்டிட்டு இயேசுவை மறக்கடிக்க வைக்கிறேன். மரத்தை அலங்காரம் செய்ய வெச்சுட்டு, மனதை அலங்கோலமா வெச்சிருக்க உற்சாகப் படுத்தப் போறேன். கவனமெல்லாம் கர்த்தரிடம் இல்லாம மட்டனிடம் இருக்கிற மாதிரி மாத்தப் போறேன்.

லூ : ஹா..ஹா.. நான் புள்ளி வெச்சா நீ கோடே போடறே.. சபாஷ் சபாஷ்

தூ 1 : அது மட்டுமல்ல இசையின் வித்தகனே.. சர்ச்க்கு உள்ளேயும் யாரோட பாட்டு நல்லா இருக்கு, யாரோட மெசேஜ் நல்லா இருக்கு, யாரோட ஸ்கிட் நல்லா இருக்குன்னு ஒரு போட்டியை உருவாக்கி, பொறாமையை விதைக்கப் போறேன். மக்கள் இணைஞ்சே இருந்தாலும் மனசுல பிரிஞ்சே கிடக்கற மாதிரி பண்ணிடறேன்.

லூ : பலே..பலே… இப்போ தான் எனக்கு உற்சாகம் மறுபடியும் வந்திருக்கு… நீ போ.. உண்மையான கிறிஸ்மஸ் ங்கறது கிறிஸ்துவை இரட்சகரா ஏற்றுக் கொள்வதுங்கற உண்மையை மக்கள் மறக்கணும். அப்படியே.. டிவில உலகத் தொலைக்காட்சிகளிலேயே முதல் முறையாக ந்னு நாலு படமும் போட ஏற்பாடு பண்ணு.. அப்போ தான் இந்த பைபிள், சர்ச் எல்லாம் கொஞ்சம் ஓரமா போயிடும். ரொம்ப தூரமா போயிடும்.

தூ 1 : அதெல்லாம் நீங்க சொல்லணுமா.. இந்த ரெண்டு நாளும் அவங்களை திசை திருப்பிட்டா… அவ்ளோ தான் அப்புறம் அவங்க வழக்கம் போல ‘பழைய குருடி, கதவைத் திறடி’ ந்னு போயிடுவாங்க…

லூ : ஹா..ஹா… கிரேட் கிரேட்… இப்போ நானே உனக்கு சொல்லுவேன்.. ஹேப்பி கிறிஸ்மஸ் .. ஹா..ஹா…

பின் குரல் :

உலகம் சாத்தானின் தந்திர வலையில் சிக்கிக் கிடக்கிறது. ஆனால் முடிவு இறைவனிடம் தான் இருக்கிறது. அழிவின் பாதையா, வாழ்வின் பாதையா ? நல்லதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கிறிஸ்மஸ் என்பது இறைமகனை உள்ளத்தில் ஏற்றும் காலம். அதற்கு தடையாய் இருக்கும் ஆடம்பரங்கள், எண்ணங்கள், சிந்தனைகள், கேளிக்கைகள் போன்றவற்றை விலக்குவோம். இறைவனையே இதயத்தில் வைப்போம்.

அனைவருக்கும் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துகள்

*

One thought on “SKIT : பாதாளத்தில் ஒரு பெர்ஃபாமனஸ் அப்ரைசல் (Christmas Special SKIT )

  1. Sema brorher unmaiyave ipa nadakurathu pathi azaga theliva solirukinga Jesus ethukaga intha boomi ku vanthar nu pala peruku theriyala nenga pana intha story valiya niraiya per purinchipanga God bless u brother ungaloda intha muyarchiku

    Liked by 1 person

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s