Posted in Articles, Christianity, Vettimani

கடவுள் பக்தன் உறவு

“ஏதாச்சும் தேவை இருந்தா மட்டும் தான் அவன் நம்மளத் தேடி வருவான்” என சிலரைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருப்போம். அப்படிப்பட்ட நபர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். சுயநலவாதிகளாய் இவர்கள் சித்தரிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட ஆட்களைப் பார்த்தாலே காத தூரம் ஓடிவிடுவோம். காரணம் அவர்களுடைய மனதில் உண்மையான அன்பு இருப்பதில்லை. தேவைக்காக நாடிச் செல்கின்ற ஒரு சந்தர்ப்ப உறவு மட்டுமே இருக்கும்.

“அட.. நான் அப்படியில்லப்பா.. தேவைக்காக மட்டும் ஒருத்தனை நாடிப் போறதே இல்லை” என சொல்லப் போகிறீர்களா ? ஒரு நிமிடம் பொறுங்கள். மனிதர்களிடம் அப்படி. உங்களுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு எப்படி இருக்கிறது ?

அவசர கதியில் வீடு, வேலை வாழ்க்கை என ஓடிக்கொண்டே இருக்கும் போது நாம் மறந்து போகின்ற முதல் நபர் கடவுள் தான். சட்டென ஒரு நோய் வந்து படுக்கையில் விழும்போது தான் “ ஆண்டவா” என மனம் அழைக்கும். அதுவரை அந்த ஆண்டவர் ஒரு வேண்டா விருந்தாளியாய் தான் இருப்பார்.

உக்காந்து கடவுளை நினைக்கவே நேரமில்லைன்னு சொல்லிட்டு இருப்பார்கள். அலுவலக வேலையாக ஊர் ஊராக அலைந்து திரிவார்கள். கடவுள் விஷயங்களையோ பிரார்த்தனைகளையோ கண்டுக்கவே மாட்டார்கள். கேட்டால், அதுக்கெல்லாம் எங்கே டைமிருக்கு என சொல்வார்கள். ஒரு நாள் திடீரென மகனோ மகளோ ஒரு பெரிய நோயில் சிக்கிக் கொண்டால், அனைத்தையும் விட்டு விட்டு குழந்தையே கதியென கிடப்பார்கள். கோயில் கோயிலாக வழிபட தொடங்குவார்கள்.

நேற்று வரை இல்லாத டைம் இன்றைக்கு எப்படிக் கிடைத்தது ? நேற்று வரை இல்லாத கடவுள் சிந்தனை இன்று எப்படி வந்தது. ஒரு நாள் 24 நான்கு மணி நேரம் என்பது மாறி 48 மணி நேரமாச்சா என்ன ? இல்லை. பின் எப்படி ? அங்கே தான் வாழ்வின் முதன்மைகள் வந்து முகம் காட்டுகின்றன.

உண்மையில் நமக்கு நேரமில்லை தான். ஆனால் எவையெல்லாம் முக்கியம் என கருதுகிறோமோ அவற்றுக்கு ஒதுக்க நமக்கு நேரம் நிச்சயம் இருக்கிறது. குழந்தையின் உடல்நிலை முக்கியம் எனத் தோன்றும் போது மற்ற அனைத்தையும் ஒதுக்கி வைக்கிறோம். அதே போல, கடவுள் முக்கியம் என தோன்றினால் நமக்கு கடவுளோடு உறவாடவும், உரையாடவும் நேரம் கிடைக்கும்.

கடவுள் நம்முடைய தந்தையைப் போல இருக்கிறார். நம் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார். ஒரு தந்தை எப்போது மகிழ்ச்சியடைவார் ? நமது பணம் அவர் கைக்குப் போகும் போதா ? நமது தேவைக்கு அவரை பார்த்துப் பேசும் போதா ? நம்முடைய இயலாமையின் நேரத்தில் அவரைத் திட்டும் போதா ? இல்லை. எந்த தேவைகளும் இல்லாமல் அவரை சந்திக்கும் போது தான்.

“என்னப்பா.. இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கே.. என்னாச்சு ? “ என அப்பா பதட்டமாய்க் கேட்கும் போது, “இல்லப்பா.. உங்க ஞாபகம் வந்துச்சு.. பேசணும்போல தோணுச்சு.. அதான் பேசினேன்” என சொல்லிப் பாருங்கள். அது தான் ஒரு தந்தையின் மனதை நிச்சயம் நெகிழச் செய்யும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பெற்றோருடன் தொடர்பில் இருப்பது தான் அவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

“என் பையன் டெய்லி ஒருதடவையாச்சும் என்கிட்டே பேசிடுவான்” என பெருமிதத்தோடு பேசும் பாட்டிகளைப் பார்த்திருக்கிறேன். இந்த வயதிலும் தன்னிடம் தினமும் மகன் பேசுகிறானே என்பது தான் அவர்களுக்கு அதிகபட்ச ஆனந்தமாய் இருக்கிறது.

கடவுளும் அப்படிப்பட்ட ஒரு நட்புறவைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார். நமது தேவைக்காய் நச்சரிக்கும் போதல்ல, தேவைப்படாத போதும் அவர் பெயரை உச்சரிக்கும் போது தான் அவர் மகிழ்கிறார். “சும்மா உன்னைப் பாக்க வந்தேன்” எனும் ஸ்நேகத்தை அவர் ரசிக்கிறார்.

சில வீடுகளில் ரொம்ப முதிய வயதினர் இருப்பார்கள். அவர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் பிள்ளைகள் அவரிடம் வந்து அனுமதி கேட்பார்கள். “அப்பா நான் இதைச் செய்யவா ? அதைச் செய்யவா ? ” என்று. தந்தைக்கு எதுவும் புரியாவிட்டால் கூட, “அப்படியே செய்ப்பா..” என்பார்கள். தன்னிடம் வந்து மகன் அனுமதி கேட்கிறானே எனும் நிறைவு அவர்களிடம் இருக்கும். சுயமாய் முடிவெடுக்கும் நிலைக்கு வந்தபின்பும் கூட தந்தையைச் சார்ந்து இருப்பதில் இருக்கின்ற புனிதமான உறவு தான், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதும். எதைச் செய்யும் முன்னும், “இப்படிச் செய்யவா ? “என கடவுளிடம் கேட்பது எவ்வளவு இனிமையானது ?

கடவுளோடு நமக்குள்ள உறவைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு தொடர்ந்த உரையாடல்கள் கடவுளோடு செய்ய வேண்டியது அவசியம். இறைவனோடான உறவின் வெளிப்பாடு, சக மனிதனோடான மனிதாபிமான செயல்களில் வெளிப்பட வேண்டும்.

இறைவனுக்கும் நமக்குமிடையேயான தொடர்பு வலுவாக இருக்கும் போது, நாம் சோதனைகளை கடக்கின்ற வலிமை கிடைக்கின்றது. சிங்கத்தின் மேல் இருக்கின்ற சிற்றெறும்பு வழியில் எதிர்படுகின்ற சுண்டெலிகளைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. சுண்டெலி வரும்போதல்ல, எப்போதுமே சிங்கத்தின் முதுகில் இருப்பதே உண்மையான அன்பு.

கடவுளோடு எப்போதும் தொடர்பில் இருந்தால் தான் கடவுள் விரும்புவது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தந்தையோடு இணைந்தே இருக்கின்ற மகனிடம் தான் தந்தையின் இயல்புகள் இழையோடும். அவனிடம் தான் தந்தையின் சிந்தனைகள் பதியமிடப்படும். இறைவனின் இயல்புகளும், இறைவனின் விருப்பங்களும் நமது வாழ்விலும் வெளிப்பட நாம் கடவுளோடு தொடர்பில் இருக்க வேண்டும்.

அதற்கு முதலில் கடவுளுக்கும் நமக்கும் இடையே மதில் சுவர் போல இருக்கின்ற விஷயங்களை விலக்க வேண்டும். அப்போது தான் கடவுளோடான தொடர்பு நமக்கு எப்போதும் இருக்கும். அந்த தடைகள் உலக கேளிக்கைகளாகவோ, தொழில்நுட்பங்களாகவோ, தீய சக்திகளாகவோ, தீய சிந்தனைகளாகவோ, சுயநலமாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.

கடவுளுக்கும் நமக்குமிடையே உள்ள உறவை வலுவாக்குகின்ற நண்பர்களை நம்முடன் வைத்திருக்க வேண்டும். அவர்கள் நமது ஆன்மீக பாலத்தை வலிமையாகக் கட்டியெழுப்புவார்கள். நமது நண்பர்கள் நம்மை நன்மையின் வழியில் நடத்துபவர்களாக இருக்க வேண்டும்.

எதிர்பாராத நேரத்தில் மனைவிக்கு அளிக்கின்ற பரிசு குடும்ப உறவைக் கட்டியெழுப்பும். எதிர்பாராத நேரத்தில் தந்தையோடு செலவிடுகின்ற சில மணித் துளிகள் புனித உறவைக் கட்டியெழுப்பும். தேவைகளற்ற போதும் தாயின் கரம் பிடித்து அமர்ந்திருக்கும் பொழுதுகள் இறை பிரசன்னத்தை உருவாக்கம் செய்யும்.

அதே போல தான், நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனின் அருகாமையில் அன்புடன் அமரும் தருணங்கள் ஆன்மிக உறவைக் கட்டியெழுப்பும். இறைவனின் அருகில் அமர்வது என்பது, இறைவனுக்குப் பிரியமானவற்றைச் செய்வதே. இறைவனுக்குப் பிரியமானது என்பது மனிதநேயத்தின் உயர்நிலையே. எப்போதும் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள், கண நேரமும் பிரியாமல் இறைவனோடு இருக்கிறார்கள்.

நமது தேவைகளை இறைவன் நிறைவேற்றுகிறார். நாம் இறைவனின் பிள்ளைகளாய் இருந்தால் மட்டும் போதுமானது.
*

சேவியர்
Thank you : Siva Thamizh

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s