Posted in Articles, Christmas Special, Sunday School

கிறிஸ்மஸ் என்பது அர்ப்பணிப்பு

கிறிஸ்மஸ் என்பது
அர்ப்பணிப்பு

*

கிறிஸ்மஸ்
அர்ப்பணிப்பின் விழா.

தர்ப்பரன் பாதத்தில்
அர்ப்பண மலராய்
நம்மை
அர்ப்பணிக்கும் விழா.

மகிமையின் கிரீடத்திலிருந்து
மனிதனின் சரீரத்துக்கு
இயேசு இறங்கியது
தந்தைக்கு தன்னை
அர்ப்பணித்ததன் அடையாளம்.

தூய்மையின் வழிநடந்த‌
அன்னை மரியாள்
கன்னியாய்,
தாயாகத் தயாரானது
பரமனுக்குத் தன்னை
அர்ப்பணித்ததன் அடையாளம்.

சந்தேகத்தின் நகக்கீறல்களால்
நங்கையை நசுக்காமல்
கனவின் குரல் கேட்டு
யோசேப்பு மரியாவை ஏற்றது
அர்ப்பணிப்பின் அடையாளம்.

வானத்தில் கேட்ட‌
கானத்தில்
இடையர்கள்
தொழுவம் தேடித் திரிந்தது
அர்ப்பணிப்பின் அடையாளம்.

ஞானியராய் இருந்தாலும்
வெளிச்சத்தின் விரல் பிடித்து
அரசரைத் தேடி
ஞானியர் அலைந்தது
அர்ப்பணிப்பின் அடையாளம்.

வாலின் நீளத்தை அதிகமாக்கி
ஒளியின் தூரத்தை
விசாலமாக்கிய விண்மீன்
அர்ப்பணிப்பின் அடையாளம்.

அழையா விருந்தாளிகளாம்
மரியாள் குடும்பத்தை
அசைபோட்டு வரவேற்ற‌
கால்நடைகள்
அர்ப்பணிப்பின் அடையாளம்.

கிறிஸ்மஸ்
அர்ப்பணிப்பின் அடையாளம்.

நாமும் அர்ப்பணிப்போம்
கரங்களை நழுவாத‌
களிமண்ணாய்,
கர்த்தரின் கரங்களில்
நம்மையே அர்ப்பணிப்போம்.

அர்ப்பணிப்பின்
கிறிஸ்மஸ் அர்த்தம் பெறும்.

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...