Posted in Articles, Christmas Special

கிறிஸ்மஸ் என்றால் சந்தேகம்

10

கிறிஸ்மஸ் என்றால்
சந்தேகம்

துடைத்து வைத்த‌
தூய்மை ஒளியாய்
தூதன் வந்து நின்றார்
மரியாளின் முன்.

பதின் வயதுப்
பருவகாலத்தின் தளிர் அவள்
இறைவனின்
விழிகளில் விழுந்த‌
தூய்மையின் துகள்.

“நீர் தாயாவீர்”
உலகில் ஒரு தாயல்ல‌
உலகையே
படைத்தவரின் தாய் !

தூதரின் வார்த்தை
அக்களிப்பின் ஆரவாரத்தையல்ல‌
குழப்பத்தின்
பேரலையை மரியாவுக்குள்
இறக்கி வைத்தது.

“இதெப்படி சாத்தியம் ?”
முதல் சந்தேகம் முளை விட்டது.

கன்னியாய் இருக்கிறேன்
தூய்மையாய் இருக்கிறேன்
உயிருக்குள் உயிரொன்று
உருவாவதெப்படி ?

பாவத்தின் பிணையை
ஆவியின் துணையினால்
கடவுள்
விடுவிக்கப் போவதை
மரியாள் அறியவில்லை.

கதிர்கள் முதிர்வது
இயற்கையின் கணக்கு,
முதிர்ந்தபின் கதிர்விடுவது
இறைவனின் கணக்கு !

முதிர்வயது எலிசபெத்தின்
ஏக்கத்தின் சந்தேகமும்
தரப்பட்ட‌
தாய்மையால் விலகியது !
சாராவைப் போலவே சந்தோசம்
அவளையும் நிரப்பியது.

மரியாள்
சந்தேகம் விலக்கினார்.
‘நான் உம் அடிமையென’
பணிவைக் காட்டினார்.

மணமாகா
என் மனைவிக்கு
தாய்மையின் அடையாளமா ?
நீதிமான் யோசேப்புக்குள்
நியாயமான சந்தேகம்
நிரம்பியது.

கனவு
அவரது சந்தேகத்தைக் கழுவி
விடியலில் அவரை
வெளிச்சமாக்கியது

மாளிகைக்கு வெளியேயா
மன்னன் பிறப்பான் ?
ஞானியரின் சந்தேகம்
அரண்மனைக்குள் அவர்களை
அனுப்பியது.
புனித மழலையரை பலியாக்கியது.

பெத்லேகேமிலா ?
ஒதுக்கப்பட்ட ஊரிலா
எனும் சந்தேகம்
இறைவார்த்தையின் உச்சரிப்பில்
அடங்கியது.

பிறந்தவர் மீட்பரா
எனும் சந்தேகம்
விண்மீனின் வழிகாட்டுதலில்
விலகியது.

மீட்பர் பிறந்தாரா ?
எனும் சந்தேகம்
தூதர்களின் பாட்டொலியில்
விலகியது.

கிறிஸ்மஸ்
சந்தேகங்களின் பேரணி
சென்றடைந்த இடம்.

சந்தேகங்கள்
இயல்பானவை
விளக்கங்கள் பெற்றபின்
விடைபெறுபவை.

சந்தேகம் எழுகையில்
விவிலியம் புரட்டுவோம்
சந்தேகத்தின்
சாத்தானை விரட்டுவோம்.

கிறிஸ்மஸ் என்பது
கேள்விகள் பொதிந்த
சந்தேகம் ! அன்று.
விடைகள் பொதிந்த‌
சந்தோசம் இன்று

*

சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s