Posted in Articles, Christmas Special

கிறிஸ்மஸ் என்றால் தியாகம்

கிறிஸ்மஸ் என்றால்
தியாகம்

சதிகாரச் சாத்தானின்
தந்திர வலையில்
வசமாய்ச் சிக்கிக் கொண்டார்
ஏதேன் தோட்டத்து
ஏவாள்

பாவத்தின்
துளி விஷம்
அவள்
விழிகளில் விழுந்து
உடலினில் பரவியது.

அருகிருந்த ஆதாமும்
பாவத்தின்
பங்குதாரர் ஆனார்.
புனிதக் கரையில்
பாவ நுரைகளை விதைத்தார்.

நிர்வாணத்தின்
அவமானம் நெட்டித்தள்ள‌
விலக்கப்பட்ட‌
மரத்தை விரும்பிய அவர்கள்
மரங்களின் பின்னே
பதுங்கினர்.

அவர்களுடைய
பாவத்தின் நிர்வாணம் மூடப்பட‌
அரங்கேறியது
முதல் தியாகம்.

களங்கமற்ற விலங்கொன்றின்
குருதி
முதல் பாவத்தின் முடிவில்
தரையில் புரண்டது.

அதன் பின்
பாவங்களும்,
அதன் பரிகாரமாய் குருதியும்
காலம் காலமாய்
மண்ணின் மேனியை
முத்தமிட்டுக் கொண்டே இருந்தன.

அகிலத்தில் பாவமானது,
விலங்குகளின் இரத்தத்தால்
விலக்க முடியாத
அளவுக்கு
அடர்ந்து பரவியது.

முடிவில் வந்தது விடியல்.
மாபெரும் தியாகம்
மண்ணுக்கு வந்தது
இயேசுவின் வடிவில்.

மகிமையை விண்ணில்
இறக்கி வைத்து
இறங்கி வந்தவர் அவர்.

சத்திரம்
நிராகரித்த சரித்திரம்.

மாளிகை
புறக்கணித்த மாணிக்கம்.

இயேசு,
மனிதனாய் மலர்ந்து
விண்ணக மகிமையை
தியாகம் செய்தார்.

ஏழையாய்ப் பிறந்து
வளமையின் வாழ்வைத்
தியாகம் செய்தார்.

ஊரெங்கும் நடந்து
நிம்மதித் துயிலைத்
தியாகம் செய்தார்

மனிதத்தில் மகிழ்ந்து
மதங்களின் அங்கீகாரங்களையும்
தியாகம் செய்தார்.

கிறிஸ்மஸ்
தியாகத்தின் விழா.

அன்னை
தன் பெயரினைத்
தியாகம் செய்தார்.

மகிழ்வு ஊடுருவும்
மனதுக்குள்
வாள் ஊடுருவ வலிகண்டார்.

தந்தை
தன் கனவினைத்
தியாகம் செய்தார்.

தாய்மை நிலையில்
கன்னியைக் கைப்பிடித்து
மனிதத்தின் வழி கொண்டார்

இயேசு
தன் உயிரினைத்
தியாகம் செய்தார்.

பாவ நிலையில்
சிலுவையில் தொங்கி
மீட்பின் ஒளி கண்டார்

கிறிஸ்மஸ்
தியாகத்தின் விழா !

நாம்
தியாகம் செய்ய வேண்டிய‌
நாள்.

இறைவனுக்கும் நமக்கும்
இடையே நிற்கும்
அத்தனை
வசீகரங்களையும்
தியாகம் செய்யும் நாள்

*
சேவியர்

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s