இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை இயேசு தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார் ( மார்க் 11 : 13, 14 )
*
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி பழம் விற்கும் சகோதரி ஒருவர் வருவார். அந்தந்த சீசனில் விளைகின்ற பழங்களை அவரது சைக்கிள் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு வருவார்.
“ஏம்மா.. மாம்பழம் இல்லையா ? ” என்று கேட்டால். “ம்க்கூக்ம்… இன்னா சீசன்ல வந்து இன்னா பழம் கேக்கறே… இது மாம்பழ சீசனே கிடையாது” என்பார். ஒவ்வொரு மரமும் கனிகொடுக்க ஒவ்வொரு காலம் உண்டு. அந்தக் காலத்தில் தான் அந்தப் பழங்கள் கிடைக்கும்.
சூப்பர் மார்க்கெட் ஆனாலும், ரோட்டோரத் தள்ளுவண்டிக் கடைகளானாலும் எங்கும் ஒரே கதை தான். அப்படியே எங்கேனும் ஆஃப் சீசன் பழங்கள் கிடைத்தால், “வாங்காதீங்கப்பா, நல்லா இருக்காது” என பெரியவர்கள் அட்வைஸ் செய்வார்கள்.
இந்த உலகப் பின்னணியில் இயேசுவின் செயல் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது. இயேசுவுக்குப் பசிக்கிறது. பார்க்கிறார், அங்கே ஒரு அத்தி மரம் நிற்கிறது. தூரத்திலிருந்து பார்த்தால் செழித்து நிற்கிறது மரம். இலைகள் சிலிர்த்து அசைகின்றன. அதில் ஏதாவது கனி இருக்கும் பசியாற்றிக் கொள்வோம் என நினைக்கிறார் அவர்.
நெருங்கிச் சென்ற இயேசு மரத்தை உற்றுப் பார்க்கிறார். கனிகள் இல்லை. ஒவ்வொரு கிளையாக எட்டிப் பார்க்கிறார். ஊஹூம்.. எங்கும் கனிகளைக் காணோம். பசியோடு வந்த இயேசு, பசியோடு திரும்ப வேண்டிய சூழல். எதிர்பார்ப்போடு வந்த இயேசு, ஏமாற்றத்தோடு திரும்ப வேண்டிய கட்டாயம்.
ஏன் கனி இல்லை என்பதற்குக் காரணம் இருக்கிறது ! அது உலகம் ஒத்துக் கொண்ட காரணம். அது ஒரு சர்வதேச விதி போல, நிராகரிப்புக்கு உள்ளாகாத காரணம். சீசன் இல்லை, அதனால பழம் இல்லை ! அந்த மரம் உலக வழக்கத்தோடும், உலக நியதிகளோடும் நூறு சதவீதம் பொருந்திப் போகிறது.
ஆனால், அந்த அத்திமரத்தை இயேசு சபித்தார். அது பட்டுப் போனது !
கிறிஸ்தவ வாழ்க்கை கனி கொடுக்கும் வாழ்க்கையாய் இருக்க வேண்டும் என இயேசு தனது பல முறை வலியுறுத்துகிறார். கனிகொடுக்காத வாழ்வினால் பயனில்லை என எச்சரிக்கையும் விடுக்கிறார். இந்த அத்திமர நிகழ்வின் வாயிலாக இயேசு சொல்ல வருகின்ற செய்தி, “கிறிஸ்தவன் கனி கொடுக்க தனியாக சீசன் ஏதும் இல்லை” என்பது தான்.
எப்போதுமே கனிகொடுக்கின்ற வாழ்க்கையையே இயேசு விரும்புகிறார்.
நினையாத நேரத்தில் தான் மனுமகன் வருவார், கனிகளோடு தயாராய் இருக்க வேண்டும்.
நினையாத நேரத்தில் தான் கன்னமிட்டுத் திருட திருடன் வருவான், விழிப்பாய் இருக்க வேண்டும்.
நினையாத நேரத்தில் தான் தொலை தூரம் சென்ற தலைவன் வருவான், தயாராய் இருக்க வேண்டும்.
அங்கே சாக்குப் போக்குகளுக்கோ, சால்ஜாப்புகளுக்கோ இடமே இல்லை.
இது எனது சீசன் அல்ல என கிறிஸ்தவர்கள் சொல்ல முடியாது. காரணம் அவர்கள் படைப்பின் இயல்போடு இருப்பவர்கள் அல்ல, படைத்தவரின் இயல்போடு இருப்பவர்கள்.
ஓய்வு நாள் மட்டுமே இறைவனுக்கானது, அந்த நாளில் கனிகளைக் கொடுப்பேன். கிறிஸ்மஸ் சீசன் வருகையின் காலம், அதில் கனிகொடுப்பேன். தவக்காலம் அதாவது லெந்து காலம் மனம் திரும்புதலின் காலம், அப்போது கனி கொடுப்பேன் என்றெல்லாம் சொல்லும் சீசன் கிறிஸ்தவர்களை இறைவன் விரும்புவதில்லை.
காரணம் பிறரைப் போல இருப்பதில் அல்ல, இறையைப் போல் இருப்பதில் தான் நமது ஆன்மிகம் ஆழப்படுகிறது. இலைகளின் வசீகரம் மக்களை ஈர்க்கலாம், கனிகள் இல்லையேல் இறைவனால் நிராகரிக்கப்படுவோம். கனி கொடுப்பதற்குக் காலம் தாழ்த்தினால், நாம் கனி கொடுக்கவே முடியாதபடி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.
இலை வாழ்வு, நமக்கு நிலை வாழ்வைத் தருவதில்லை.
கனிகொடுப்போம்.
சீசனில் கனிகொடுக்கும் சாதாரண வாழ்க்கையல்ல,
ஈசனில் கனிகொடுக்கும் புது வாழ்வு !
எப்போது கனிகொடுப்போம் என்பதல்ல,
எப்போதும் கனிகொடுப்போம் என்பதே சிந்தையாய் இருக்கட்டும்.
*
சேவியர்