Posted in Bible Books

பைபிள் கூறும் வரலாறு : 20 நீதிமொழிகள்

20
நீதிமொழிகள்

Image result for book of proverbs

நீதிமொழிகள் எனும் வார்த்தையை அறிவார்ந்த சொற்கள், ஞானமுள்ள வாக்கியங்கள் என எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையைச் செம்மைப்படுத்த துணை புரிகின்ற சிந்தனைகள் என்பது தான் எளிமையான விளக்கம்.

அது சரி, நீதிமொழிகளுக்கு பைபிளில் என்ன வேலை ? உலகெங்கும் அரிஸ்டாட்டில் போன்ற எத்தனையோ தத்துவ ஞானிகள் இருக்கும் போது சாலமோனின் சிந்தனைகள் மட்டும் ஏன் பைபிளில் இடம் பெற வேண்டும் ? அதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு.

தாவீது மன்னன் இறைவனின் இதயத்துக்கு நெருக்கமானவர். அவரது மகன் தான் சாலமோன் மன்னன். ஒரு முறை கடவுள் அவருக்குத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். அரசனாய் இருப்பவரிடம் இப்படி ஒரு கேள்வி எழுப்பப்பட்டால் தோல்வியே காணாத மன்னனாக வேண்டும் என்றோ, செல்வத்தில் புரளும் சக்கரவர்த்தி ஆகவேண்டும் என்றோ தான் கேட்பார்கள். சாலமோனோ, “மக்களை வழிநடத்தும் ஞானம் வேண்டும்” என்றார்.

கடவுள் அவருக்கு அந்த வரத்தை கொடுத்தார். ‘உன்னைப் போல ஞானவான் இதுவரைப் பிறக்கவில்லை, இனியும் பிறப்பதில்லை” என வரமறித்தார். அப்படிப்பட்ட இறை ஞானம் நிரம்பிய மனிதரின் சொற்கள் தான் இவை.

நீதி மொழிகள் அவருடைய வாழ்வின் நடுப்பகுதியில் எழுதப்பட்டவை. இந்த நூலில் மொத்தம் 915 நீதி மொழிகள் உள்ளன. அவற்றில் 851 நீதிமொழிகள் சாலமோன் மன்னன் எழுதியவை. மற்றவை ஆகூர் மற்றும் இலமுவேல் ஆகியோர் எழுதியவை. 31 அதிகாரங்களில் 29 அதிகாரங்களை சாலமோனும் மற்ற இரண்டு அதிகாரங்களை இவர்கள் ஆளுக்கொன்றாகவும் எழுதியிருக்கின்றனர்.

சாலமோன் மொத்தம் எழுதிய நீதிமொழிகள் 3000 ( 1 அரசர் 4 : 32 ) என்கிறது பைபிள். அவற்றில் பெரும்பாலானவை பைபிளில் இடம்பெறவில்லை என்பது வியப்பான விஷயம். பைபிளில் எது இடம்பெற வேண்டும் என்பதை இறைவனே தீர்மானிக்கிறார் என்பதன் உறுதிப்படுத்துதலாக இதைப் புரிந்து கொள்ளலாம்.

கிமு 931 களை ஒட்டிய வருடங்களில் தான் சாலமோன் மன்னனின் நீதிமொழிகள் எழுதப்பட்டன. ஆனால் அப்போதே எல்லாம் தொகுக்கப்படவில்லை. சில இறைவாக்கினர் எசேக்கியேல் காலத்தில் கிமு 700 களில் தொகுக்கப்பட்டது.

மீட்பைப் பற்றிய செய்தி நேரடியாக இந்த நூலில் இல்லை. ஆன்மீக செழிவுக்கான இறை சிந்தனைகளும் இல்லை. ஆனால் இந்த நீதிமொழிகள் மனதைச் சலவை செய்யும் வல்லமை கொண்டவை. அன்றாட வாழ்க்கையில் நாம் நடக்க வேண்டிய வழிகளை நமக்குக் காட்டுபவை.

கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரை ஆன்மீக வாழ்வு, உலக வாழ்வு என தனித்தனி பிரிவு இல்லை. உலக வாழ்க்கையை முழுமையாய் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்வாக மாற்ற வேண்டும் என்பதே கிறிஸ்தவ சிந்தனை. எல்லாவற்றையும் இறைவனுக்காய் செய்வதற்கு நீதிமொழிகள் வழிகாட்டுகின்றன.

இறைவனோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? பிறரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? பெற்றோரோடு உள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? அரசோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? குழந்தைகளோடு எப்படிப் பழக வேண்டும் ? தன்னோடுள்ள உறவு எப்படி இருக்க வேண்டும் ? எதிரிகளோடு எப்படி பழக வேண்டும் ? போன்ற எதார்த்தமான வாழ்க்கைப் பாடங்கள் இந்த நூலில் நிரம்பியிருக்கின்றன.

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ என்ன செய்யவேண்டும் ? என்ன செய்யக் கூடாது எனும் சிந்தனையே இந்த நூலின் அடிப்படை எனலாம். ஞானமா முட்டாள் தனமா ? தாழ்மையா பெருமையா ? நீதியா அநீதியா ? சோம்பலா சுறுசுறுப்பா ? மதுவா தெளிவா ? வாழ்வா சாவா ? கோபமா சாந்தமா ? காதலா காமமா ? ஏழ்மையா செல்வமா ? என முரண்களால் கேள்விகள் அமைத்து சரியான வழி எது என்பதை எளிமையாய்ச் சொல்கிறது நீதிமொழிகள் நூல்.

இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழவேண்டுமெனில் தாழ்மையை மனதில் கொண்டிருக்க வேண்டும், பிறருக்கு நீதியானவற்றை மட்டுமே செய்ய வேண்டும், இறையச்சம் நிரம்ப இருக்க வேண்டும் என மூன்று நிலைகளில் நீதிமொழிகள் அறிவுறுத்துகிறது.

ஒரு முட்டாள் எப்படி இருப்பான் என்பதைப் பற்றி மட்டுமே சுமார் 70 நீதிமொழிகள் பேசுகின்றன. அவற்றை விலக்கி விட வேண்டும். பேச்சு எப்படி இருக்க வேண்டும் என்பதை கணிசமான நீதி மொழிகள் பேசுகின்றன. அவற்றை கைக்கொள்ள வேன்டும். உதாரணமாக பேச்சு நேர்மையாய் இருக்க வேண்டும், குறைவாகப் பேச வேண்டும், அமைதியாகப் பேச வேண்டும், சரியாகப் பேசவேண்டும் என தெளிவான அறிவுரையை நீதிமொழிகள் தருகிறது.

தினம் ஒரு அதிகாரம் என மாதம் தோறும் நீதிமொழிகளைப் படித்தால் மனம் தெளிவாகும் என்பது திண்ணம்.

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s