Posted in Articles, Christianity, Uncategorized

SKIT : மாமியார் மருமகள்

( காலை நேரம் )

மாமியார் : கவிதா.. கவிதா… ஒரு காபி கொண்டாம்மா…

கவிதா : இதோ ஒரு நிமிஷம் ம்மா… ( மெதுவாக : ஆமா.. கண்ணு முழிச்ச உடனே காபி கேட்டுடுவாங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணினா என்னவாம் ? )

மாமியார் : உனக்கு வேலை இருக்குன்னா, அப்புறமா கூட குடு.. பரவாயில்லை.

கவிதா : இல்ல ம்மா.. இதோ… கொண்டு வந்துடறேன் ( மெதுவாக : பாவம்.. காபி குடிக்காட்டா அவங்களுக்கு தலைவலி வந்தாலும் வந்துடும் )

மாமியார் : சரிம்மா…

கவிதா : இந்தாங்கம்மா காபி..

மாமியார் : தாங்க்ஸ்மா.. நீ குடிச்சுட்டியா ?

கவிதா : இல்லம்மா.. கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சுட்டு குடிக்கிறேன்.

மாமியார் : சரிம்மா.. நீ போய் வேலையைப் பாரு.

கவிதா : சரிம்மா ( கவிதா செல்கிறார் )

மாமியார் : ( காபியைக் குடித்துப் பார்க்கிறார் ) ( மெதுவாக ) ஐயய்யோ சூடே இல்லையே… ம்ம்ம்.. சரி .. பரவாயில்லை. பாவம் காலைல இருந்தே வேலை செஞ்சு கஷ்டப்படறா.. மறுபடியும் ஒரு வேலையைக் குடுக்க வேண்டாம்.

( அப்போது மகள் அனிதா வருகிறாள். )

அனிதா : அம்மா.. அண்ணி எங்கே… எனக்கு காபி வரவேயில்லையே..

மாமியார் : நீ போய் எடுத்து குடி.. அவ வேற வேலையா இருக்கா..

அனிதா : ஆமா.. உங்களுக்கு மட்டும் தருவாங்க. . எனக்கு தர மாட்டாங்களோ.. வரவர நமக்கு இந்த வீட்ல மரியாதை இல்லாம போச்சு.

மாமியார் : சிரிக்கிறார்… நீ இன்னொரு வீட்டுக்குப் போகும்போ … அங்கே உனக்கொரு நாத்தனார் இருப்பா…

அனிதா : அப்படி ஒருத்தி இருந்தா நான் ஒரு வழி பண்ணிடுவேன்.

மாமியார் : ( ஜாலியாக ) அப்போ உனக்கு மட்டும் ஒரு நியாயம் கவிதாக்கு ஒரு நியாயமா ?

அனிதா : சரி.. சரி.. விடுங்க.. நானே காபி போட்டுக்கறேன்..

( அப்போது கவிதா உள்ளே வருகிறார் )

கவிதா : ஏய்..அனிதா எழும்பிட்டியா… இன்னிக்கு காலேஜ் இருக்கா ? காபி குடிச்சுட்டியா ?

அனிதா : இல்ல அண்ணி… குடிச்சுக்கறேன்..

கவிதா : உனக்கும் சேத்து தான் போட்டிருக்கேன்.. கொஞ்சம் சூடு பண்ணிக்கோ சரியா..

அனிதா : சரி.. அண்ணி.. ஆமா, அண்ணன் இன்னிக்கு பாம்பே போறதா சொன்னான், எப்போ போறான் ?

கவிதா : பத்து மணி பிளைட்டுன்னு சொன்னாரு.. அதான் அவரோட துணியெல்லாம் அயர்ன் பண்ணிட்டிருந்தேன்.

அனிதா : ஆமா.. அதெல்லாம் அவன் பண்ண மாட்டானா ?

கவிதா : ஹி…ஹி.. பண்ணுவாரு.. நான் சும்மா தானே இருக்கேன்.. கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல..

அனிதா : ஆமா.. இந்த பொண்டாட்டிங்க தான் புருஷனை சோம்பேறியாக்கறது.

மாமியார் : ஆமாமா.. நீ ஒரு வீட்டுக்குப் போகும்போ தெரியும்.. நீ எப்படி உன் புருஷனை சோம்பேறி ஆக்கறேன்னு

அனிதா : நான் அப்படியெல்லாம் பண்ணவே மாட்டேன். அவரு தான் எனக்கு எல்லாம் பண்ணணும். .. நான் ஜாலியா இருக்கணும்.

மாமியார் : ஓவரான கனவெல்லாம் வளர்த்த வேண்டாம் மகளே… குடும்பங்கறது ஒருத்தர் ஒருத்தருக்கு உதவியா இருக்கிறது தான். நான் ஏன் அவங்களுக்கு உதவி செய்யணும் ? அப்படிங்கற சிந்தனை வந்தாலே குடும்பம் ஆட்டம் கண்டுடும்.

கவிதா : அவ சின்னப் பொண்ணு ம்ம்மா.. அதான் விளையாட்டுத் தனமா பேசறா.

மாமியார் : ம்ம்..இப்போ பேசறது தானே அப்புறமும் வரும்.

கவிதா : அப்படியெல்லாம் இல்லம்ம்மா.. நாம பிறந்த வீட்ல ஜாலியா, சந்தோசமா அன்பா இருந்தா அப்படியே தான் புகுந்த வீட்டையும் வெச்சுக்க நினைப்போம்.. அவ அப்படி தான் வெச்சுப்பா..

அனிதா : ஓவர் தத்துவம் எல்லாம் பேசாதீங்க.. கல்யாணத்தைப் பற்றி எதுக்கு இப்போ பேச்சு. அங்கே போய் மாமியார் தொந்தரவுல கஷ்டப்படவா ?

கவிதா : மாமியார்னா என்ன ? எல்லாருமே ஒரு குடும்பம் தானே… சண்டை வந்தா போட்டுக்கோங்க, ஆனா அப்புறம் சமாதானம் ஆயிடுங்க.. நாங்க இருக்கிற மாதிரி..

மாமியார் : ( விளையாட்டாக ) ஆமா.. நான் எப்போ சண்டை போட்டேன் உன் கூட..

அனிதா : இதோ.இதோ இப்போ சண்டை ஸ்டார்ட் ஆகுதுல்ல..( சிரிக்கிறார் )

கவிதா : ஹா..ஹா.. எங்களுக்குச் சண்டை போட வேண்டிய தேவை வரல. அதான் உண்மை.

மாமியார் : அப்படியெல்லாம் இல்ல.. நாங்க சண்டை போட்டிருக்கோம். ஆனா அந்த சண்டையை நீட்டக் கூடாது. ஒருத்தர் விட்டுக் குடுத்து போகணும். விட்டுக் குடுக்கிறவங்க பெரிய மனுஷங்கன்னு நினைச்சுக்கணும், அப்போ விட்டுக் குடுக்கத் தோணும். ஈகோ இல்லாம இருந்தா வீட்ல யூ..கோ ந்னு கத்த வேண்டி வராது.

கவிதா : சூப்பரா பேசறீங்கம்மா.. உண்மை தான்.. என்னப் பொறுத்தவரைக்கும் பொறுமையை கடைபிடிச்சாலே முக்காவாசி பிரச்சினை போயிடும்மா…

அனிதா : போதும் போதும் நிறுத்துங்க.. ஓவரா அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடாதீங்க… நான் கிளம்பறேன்.

மாமியார் :..ஆமாமா.. நீ காலேஜுக்கு கிளம்பு… டைம் ஆவுது..

கவிதா : சரிம்மா… இன்னிக்கு லஞ்ச் என்ன பண்ணலாம் ?

மாமியார் : அது கொஞ்சம் கழிஞ்சு யோசிப்போம்.. நீ இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடு

*

Posted in Articles, Christianity, Sunday School

Exam Skit : நாங்க ஜெயிப்போம்…

காட்சி 1

(இரவு பன்னிரண்டு மணி , நித்யா போனில் பேசுகிறாள் )

நித்யா : ஏய் வித்யா… எனக்கு ஒரு டவுட் இருக்குடி… நான் வாட்ஸப் பண்ணியிருக்கேன் பாரேன்.

வித்யா : ( வித்யா பேசும்போது குரல் மட்டும் கேட்கும் … ) பாத்தேண்டி, சரியாவே தெரியல. இன்னொரு வாட்டி எடுத்து அனுப்பு.

நித்யா : சரி..சரி… நீ எல்லாம் படிச்சுட்டியா ?

வித்யா : என்னத்த படிச்சுட்டியா ? இன்னும் பாதி கிணறு தாண்டலடி.. எப்போ படிச்சு.. எப்போ முடிக்கப் போறேனோ.

நித்யா : நான் முக்கி முக்கி முக்காக் கிணறு வந்துட்டேன். இன்னும் கிடக்கு படிக்க..

வித்யா : ஆமா.. படிக்கலாம்ன்னு உக்காந்தா நம்ம பிரண்ட்ஸ் குரூப்ல ஒரே அரட்டை.. டைம் போனதே தெரியல. வேஸ்ட் பண்ணிட்டேன். இன்னும் படிக்க வேண்டியது எக்கச்சக்கம் கிடக்கு.

நித்யா : ஆமாடி.. நானும் டிக்டாக் கேட்டுட்டு இருந்தேன் ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு இருந்தேன். எக்ஸாமுக்கு இடையே கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்ல.

வித்யா : ஆமாடி… படிக்க உக்காரும்போ தான் ஸ்கூல்ல நாம் பண்ற கலாட்டா எல்லாம் ஞாபகத்துக்கு வருது. அதுவும் ஒவ்வொரு வாத்யாரையும் நாம கலாய்க்கிறது தான் மனசுல வருது. அப்புறம் எங்கே படிப்புல கவனம் இருக்கப் போவுது

( அப்போது அம்மா வருகிறார் )

அம்மா : என்னம்மா ? உங்களுக்கு இப்போ தான் பொழுது விடியுதா ? நடு ராத்திரியில உக்காந்து ஆந்தை மாதிரி அரட்டை அடிச்சிட்டு இருக்கே. போய் உக்காந்து படி, இல்லேன்னா நல்லா தூங்கு.

நித்யா : இல்லம்மா. ஒரு டவுட் கேட்டிட்டிருந்தேன்

அம்மா : ஆமா. உங்களுக்கு எந்த நேரமும் வாட்சப் நோண்ட வேண்டியது. அப்புறம் படிப்பு எங்கே வரும் ? செல்போனே ரொம்ப கெடுதல்ன்னு சொல்றாங்க… அதை கீழே வைக்க மாட்டேங்கறீங்க.

நித்யா : பாடத்தை தான்மா போட்டோ எடுத்து அனுப்பிட்டிருந்தோம்.. வேற ஒண்ணும் இல்லை.

அம்மா : ஆமா.. ஆமா… கடைசி நிமிசம் வரைக்கும் செல்பி எடுத்துட்டு திரிய வேண்டியது. கடைசி கட்டத்துல குய்யோ முய்யோன்னு கத்த வேண்டியது. நீங்க என்ன ஒட்டகமா ? ஒரே நேரத்துல எல்லாத்தையும் கரைச்சு குடிக்கிறதுக்கு.

நித்யா : ஐயோ.. அம்மா.. மிட்நைட்ல வந்து அட்வைஸை அவுத்து வுடாதீங்கம்மா…

அம்மா : ஆமா, நான் தான் அட்வைஸ் பண்றேனாக்கும். “பையத் தின்னா பனையையும் தின்னலாம்” ந்னு சொல்லுவாங்க. அதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா ? கொஞ்சம் கொஞ்சமா சாப்டா பனை மரத்தைக் கூட சாப்டலாம்ன்னு. நீங்க என்னடான்னா எக்ஸாமுக்கு முந்தின நாள் தான் ஒரே நேரத்துல மலையை முழுங்க பாக்கறீங்க. அதெல்லாம் நடக்குமா ?

நித்யா : அம்மா.. சரிம்மா… கிளம்பு.. நான் தூங்க போறேன்.

காட்சி : 2

( நித்யா அவளுடைய இரண்டு தோழிகளான மாலா, ஜெனிஃபர் இருவரையும் சந்திக்கிறாள் )

மாலா : ஏய் நித்யா.. எப்டி இருக்கே.. எக்ஸாம் நெருங்க நெருங்க ஒரே டென்ஷனா இருக்குடி.

நித்யா : அதையேண்டி கேக்கறே.. அமுத சுரபி மாதிரி தோண்டத் தோண்ட பாடம் வந்துட்டே இருக்கு. என்ன பண்றதுன்னே தெரியல.

மாலா : ஆமா.. நிறைய இருக்கு படிக்க… . நீ ஃபுல்லா படிச்சுட்டியா ஜெனிஃபர் ?

ஜெனிஃபர் : என்னத்த படிக்க ? ( கையை மேலே காட்டி ) எல்லாம் மேல இருக்கிறவரு பாத்துப்பாரு.

மாலா : யாரு ஆண்டவரா ?

ஜெனிஃபர் : ஆமா.. இந்த வருஷம் வந்த வாக்கு தத்தம் என்னன்னு தெரியுமா ? “நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்” தான். சோ.. நான் அமர்ந்திருக்கிறேன். அவர் ஜெயிக்க வைப்பாரு

மாலா : நீ ரொம்ப ஓவர்டி.. நான் படிச்சிருக்கேன். நான் எழுதப்போறேன். சும்மா சும்மா கடவுளை எல்லாம் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.

ஜெனிஃபர் : ஏண்டி ? உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா ?

மாலா : கடவுள் என்ன பேனா புடிச்சு உனக்கு எக்ஸாமா எழுதப் போறாரு… சும்மா படிச்சதை எழுது. தேவையில்லாம கடவுள் கிடவுள்ன்னு புலம்பாதே.

நித்யா : அப்படியெல்லாம் சொல்லாதேடி.. கிடைக்கிற மார்க்கும் கிடைக்காம போக போவுது.

ஜெனிஃபர் : ம்ஹூம்.. கடவுள் கோச்சுக்க போறாரா என்ன ?

நித்யா : நான் ரிஸ்க் எடுக்க தயாரா இல்ல… படிக்கணும், கடவுளையும் நம்பணும்.

மாலா : ஆமா.. என் உன் கண்ணு இப்படி சிவந்து கெடக்கு ? ஸ்ட்றாபெரி பழம் மாதிரி ?

நித்யா : நைட்டு தூங்கும்போ ரெண்டு மணி.. இப்போ தூக்கம் சொக்குது. ஒரு டீ குடிப்போமா ?

மாலா : ம்ம்ம்.. போலாம்டி

காட்சி 3

( நித்யா, மாலா, ஜெனிஃபர் டீ கடைக்குப் போகிறார்கள். அங்கே ராபர்ட் இருக்கிறான் )

நித்யா : ஹேய்.. ராபர்ட்… என்னடா டீ கடையில உக்காந்திருக்கே ? எப்படியும் எக்ஸாம் முடிச்சு டீ போட வேண்டியது தான்னு முடிவு பண்ணி ஏற்கனவே வந்து செட்டில் ஆயிட்டியா ?

ராபர்ட் : நான் ஏன் டீ போட போறேன்.. நான் ஸ்கூல் முடிச்சு பெரிய பெரிய காலேஜ்ல சேரப் போறேன்.

நித்யா : பெரிய காலேஜ்… நீ… அதுக்கு நல்ல மார்க் எடுக்கணும் தெரியும்ல…. மார்க்..மார்க்….

ராபர்ட் : நீ என்னப்பா விஷயம் புரியாம, மத்தேயு மார்க் ந்னு பேசிட்டிருக்கே. இப்பல்லாம் எல்லாத்துக்கும் ஆள் இருக்கு. யாராவது அரசியல் தலைவரையோ, காலேஜ் ஆட்களையோ புடிச்சா போதும். சீட்டெல்லாம் சிம்பிளா கிடைக்கும்.

நித்யா : அதெல்லாம் நம்பும்படியாவா இருக்கு… ஒழுங்கா படிக்கிற வேலையைப் பாரு.

ராபர்ட் : படிக்கிறதெல்லாம் கஷ்டமான வேலைப்பா… லைஃப்ல எல்லாம் ஈசியா கிடைக்கணும். இப்ப தான் ஏகப்பட்ட காலேஜ்கள் வந்துச்சுல்ல, சீட் கிடைக்கிறதெல்லாம் ஒரு மேட்டரா என்ன ?

மாலா : அதெல்லாம் லட்சக்கணக்கில பணம் இருக்கிறவங்களுக்கு தான் செட் ஆகும். அதுவும் இனிமே நீட் மாதிரி எஞ்சினியரிங் காலேஜுக்கும் எக்ஸாம் கொண்டு வரப் போறாங்க, படிக்காம எஸ்கேப் ஆகவே முடியாது.

ராபர்ட் : அப்படியே மார்க் முக்கியம்ன்னா காப்பி அடிக்கிறதுக்கு என்ன வழின்னு யோசிப்பேன் .. படிச்சு கஷ்டப்பட மாட்டேன்… ஹா…ஹா…

நித்யா : உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. அண்ணே.. நாலு டீ ஸ்றாங்கா போடுங்க..

ராபர்ட் : see… நான் படிச்சு பாத்தேன், மண்டைல ஏறல. இப்போ சப்ஜெக்ட் எல்லாம் டஃப் ஆக்கிட்டாங்க. அதனால படிச்சு கஷ்டப்பட வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். அவ்ளோ தான்…

( டீ வருகிறது )

ராபர்ட் : ..அண்ணே.. டீ நல்ல பால்ல தானே போடறீங்க ? இப்போ பால் முழுக்க கலப்படம்ன்னு சொல்றாங்க. டீ தூள் கூட ஃபெர்டிலைசர் கலந்து வருதாம்.

டீகடைக்காரர் : நம்ம கடையில அநியாயமான விஷயமே கிடையாதுப்பா.. இது இயேசு எனக்குக் குடுத்த வாழ்க்கை.. நீங்க குடிங்க. ஊருக்கு தான் உபதேசம் பண்றீங்க…

மாலா : என்னண்ணே ஊருக்கு உபதேசம்.

டீ : இல்ல.. அடுத்தவன் நேர்மையா இருக்கணும்ன்னு நாம எப்பவும் நினைக்கிறோம்.. ஆனா நாம நேர்மையா இருக்கிறோமா ?

ராபர்ட் : ஏன் அப்படி சொல்றீங்க ?

டீ : இல்ல… நான் போடற டீ நேர்மையா இருக்கணும்ன்னு நினைக்கிறீங்க. ஆனா நீங்க எழுதற தேர்வு நேர்மையா இருக்கணும்ன்னு நினைக்க மாட்டேங்கறீங்க. நீங்க ஒரு காலேஜ்ல நேர்மையா போய் ஜாயின் பண்ணணும்ன்னு நினைக்க மாட்டேங்கறீங்க.

ராபர்ட் : அது.. அது வந்து.. இதெல்லாம் இப்போ ரொம்ப சாதாரணம்னே… பணம் இருந்தா எல்லாமே நடக்கும்.

டீ : நீங்க பண்ற தப்புக்கு நியாயம் கற்பிக்காதீங்க. வாழ்க்கைல பணத்தையே கும்பிட்டிட்டு இருக்கிறவன் பரலோகம் போக முடியாதுன்னு இயேசு சொல்றாரு தெரியும்ல. நல்ல வாழ்க்கைக்கான பாதை குறுகலா தான் இருக்கும், ஆனா அது தான் சரியான இலக்கில உங்களைக் கொண்டு போய் சேர்க்கும். அழிவுக்கான பாதை அகலமா இருக்கும், ஆனா அதுல போனா அழிவு தான்.

ஜெனிஃபர் : பைபிள் வசனத்தை புட்டு புட்டு வைக்கிறீங்கன்னே… எனக்கு கவலையில்லை.. குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாகும், ஜெயமோ கர்த்தரால் வரும். சோ, கடவுள் வெற்றி தருவார். நான் ஏன் கவலைப்படணும்.

டீ : ஜெயமோ கர்த்தரால் வரும். அதுல சந்தேகமே இல்லை. ஆனா, குதிரையை யார் யுத்த நாளுக்கு ஆயத்தம் பண்றது ? அது நாம தான் இல்லையா ?

ஜெனிஃபர் : ஓ.. என்ன சொல்ல வரீங்க ?

டீ : நாம படிக்க வேண்டிய பாடத்தை சரியா படிச்சிட்டு, கடவுள் கிட்டே நம்மை ஒப்படைச்சா கடவுள் நமக்கு மிகப்பெரிய வெற்றியைத் தருவார். ஆனா, ஒண்ணுமே பண்ணாம கடவுளை நம்பினா அவரு கைவிட்டிடுவாரு

ஜெனிஃபர் : நிஜமாவா ?

டீ : ஆமா, பத்து கன்னியர் கதை உனக்கு தெரியாதா ? நீ கிறிஸ்டியன் தானே ?

ஜெனிஃபர் : தெரியும் தெரியும். மணமகன் ராத்திரி வராரு. அவரை எதிர்கொள்ள பத்து பேரு போறாங்க. பத்து பேர் கையிலயும் விளக்கு இருக்கு. ஆனா அஞ்சு பேர் கிட்டே மட்டும் தான் எண்ணை இருக்கு. மணமகன் வரும்போ எண்ணை இருக்கிறவங்க ளோட விளக்கு எரியுது, அவங்க மணமகனோட மணவீட்டுக்குள்ள போறாங்க. மத்தவங்க எண்ணை இல்லாம, விளக்கு அணையுது. அவங்களுக்கு மணவீட்டுக்குள்ள நுழையற வாய்ப்பு கிடைக்கல.

டீ : வெரிகுட். கதை நல்லாவே தெரியுது. இதுல இருக்கிற அந்த அஞ்சு புத்தியுள்ள கன்னிகள் மாதிரி நீங்க இருக்கணும். எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி நல்லா தயாராகணும். படிச்சிட்டு போறது தேவையான எண்ணை கொண்டு போறது மாதிரின்னு வெச்சுக்கலாம். படிக்காம போறது வெறும் விளக்கோட போறது. எக்ஸாமுக்கு கொஸ்டின் பேப்பர் வந்ததும், படிச்சவங்க எழுதறாங்க. வெற்றி அடையறாங்க. படிக்காதவங்க ரிசல்ட் அணைஞ்சு போயிடுது. அவங்களால ஜெயிக்க முடியல.

ஜெனிஃபர் : இந்த கதைக்கு இதுவா விளக்கம்.

டீ : இந்த சூழ்நிலைக்கு இந்த விளக்கத்தையும் நாம எடுத்துக்கலாம். கடவுளுடைய வார்த்தை நமக்கு பல விளக்கங்களை சொல்லும். இப்போ ராபர்ட் தம்பி சொல்றது என்னன்னா ? எண்ணை என்ன ? விளக்கே இல்லாம கூட போயிடலாம்ன்னு.. அதெல்லாம் முடியாது தம்பி. நல்லா படிச்சு நல்ல காலேஜ்ல சேரணுமே தவிர, நாம படிக்கிற நேரத்துல தூங்கிட்டு, நல்ல காலேஜ் கிடைக்கும்ன்னு கனவு காணக் கூடாது

மாலா : ம்ம்.. விதைக்கும்போ தூங்கிட்டு, அறுக்கிற காலத்துல அருவா எடுத்துட்டு வரதுல பயனில்லைன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க. அதானே ? நீங்க சொல்ல வரது கொஞ்சம் கொஞ்சம் புரியுது.

டீ : கொஞ்சம் கொஞ்சம் என்ன, கிளியராவே புரிஞ்சுக்கோங்க. நல்லா படிங்க, நேர்மையா தேர்வு எழுதுங்க, கடவுள் கிட்டே ஜெபம் பண்ணுங்க. அவரு உங்களுக்கு நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைத் தருவாரு. நல்ல காலேஜ்ல இடத்தையும் தருவார்.

நித்யா : உண்மை தான்… அஞ்சு அப்பம் ரெண்டு மீன் நாம குடுத்தா அதை ஐயாயிரம் பேருக்கு குடுக்க இயேசுவால முடியும். நாம நம்மால முடிஞ்ச அளவுக்கு நல்ல சின்சியரா படிச்சா அதைக் கொண்டு பெரிய வெற்றியைத் தர இயேசுவால முடியும்.

டீ : எஸ்.. எஸ்.. அதைத் தான் நான் சொல்ல வரேன். இயேசு அடிக்கடி சொல்ற ரெண்டு வார்த்தைகள் இது தான், பயப்படாதே.. என்னை நம்பு.. !! அந்த இரண்டு வார்த்தையும் உங்களை பலப்படுத்தும். நீங்க, நல்லா படிங்க, கடவுளை புடிங்க

ராபர்ட் : சரிங்கய்யா.. டீ சூடா இருந்துதோ இல்லையோ, நீங்க சொன்ன அட்வைஸ் ரொம்ப சூடா இருந்துச்சு. தப்பு பண்ணிட்டேன். இனிமே போய், மிச்சம் இருக்கிற நாட்கள்ல நல்லா படிக்கப் போறேன். படிச்சதை எழுதப்போறேன், இயேசுவை நம்பப் போறேன். அவரு எனக்கு ஒரு நல்ல காலேஜ்ல இடம் வாங்கி குடுப்பாரு.

டீ : வெரிகுட் தம்பி… நல்லா படிங்க, கடவுள் உங்களை உயர்த்துவார். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை. இதொன்ணும் வாழ்வா, சாவா போராட்டம் கிடையாது. எது நமக்குத் தேவையோ அதை நமக்கு இயேசு தருவாரு. அதிகம் கிடைச்சா கர்வப்படறதும் தப்பு, கம்மியாச்சுன்னா உடைஞ்சு போறதும் தப்பு. நம்ம கடமையை சிறப்பா செய்யணும், மற்றதை கடவுளோட திட்டத்துக்கு விட்டுடணும். சரியா…

ஜெனிஃபர் : ரொம்ப நல்லா சொன்னீங்கய்யா… நானும் நல்லா படிச்சுட்டேங்கற திமிரை விட்டுட்டு இயேசுவை முழுசா நம்பப் போறேன்.

டீ : வெரிகுட்.. ஆல் த பெஸ்ட்..

*

பின்குரல் :

தேர்வு என்பது வாழ்வா சாவா எனும் போராட்டமல்ல. நாம் எவ்வளவு தூரம் படித்திருக்கிறோம், எப்படி எழுதுகிறோம் என்பதை பரிசோதித்துப் பார்க்கும் இடம் அவ்வளவு தான். கவலையை விட்டு விட்டு, கடமையைச் செய்வோம். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல, மதிப்பெண்ணுக்காக உயர்ந்த மதிப்பீடுகளை எப்போதும் கைவிடாதிருப்போம். நமது மதிப்பெண்ணைப் பார்த்து நம்மை ஆசீர்வதிப்பவரல்ல கடவுள், எனவே இயேசு நமக்காய் அமைத்திருக்கும் பாதையில் அவருடன் நடப்போம்.

நன்றி

Posted in Articles, Christianity, Desopakari

இளையோரும், இணைய தளங்களும்

இளையோரும், இணைய தளங்களும்

விண்ணரசு, கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். அந்த வலையானது நல்ல மீன்களையும், கெட்ட மீன்களையும் இழுத்து வருகிறது. நல்லவை கூடையில் சேர்க்கப்படும், கெட்டவை வெளியே கொட்டப்படும் என இயேசு ஒரு முறை விண்ணரசைக் குறித்து உவமை ஒன்றைச் சொன்னார். அதை இன்றைய இணைய வலையோடும் ஒப்பிடலாம்.

இணைய வலையானது டிஜிடல் தகவல்களை சகட்டு மேனிக்கு அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறது. அவற்றிலிருந்து நல்லவற்றைப் பொறுக்கி கூடையில் வைக்க வேண்டும், கெட்டவற்றை வெளியிலே கொட்ட வேண்டும். அப்போது அந்த வலை பயனுள்ளதாய் இருக்கும். அதை விட்டு விட்டு, நல்லவற்றை நிராகரித்து விட்டு தீயவற்றைத் தேர்ந்தெடுக்கும் போது வலையானது நமது கழுத்தை இறுக்கும் சுருக்காக மாறிவிடுகிறது.

சிறு வயதுக் கதைகளில் வேடன் வலையை விரித்து, அதில் தானியத்தை பரப்பி வைப்பான். அந்தத் தானியத்தின் வசீகரத்தைக் கண்டு பறவைகள் அதில் வந்து அமரும் போது அவை வலையில் சிக்கிக் கொள்ளும். அவற்றை அவன் வந்து சாவாகாசமாகப் பிடித்துச் செல்வான். இன்றைக்கு இணையமும் அப்படித் தான், பல வசீகரத் தானியங்களை வலைத் தளங்களில் விரித்து வைத்து இளைஞர்களின் ஆர்வத்தை தவறான வழியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.

குறிப்பாக சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் எந்த ஒரு தனிநபர் தகவலையும் கொடுக்காமல் இருப்பது மிக மிக முக்கியம். குறிப்பாக இளம் பெண்கள் இந்த வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நிம்மதியான வாழ்க்கைக்கு அவசியம். ஒரு தேவையற்ற புகைப்படமோ, ஒரு தேவையற்ற மின்னஞ்சலோ, ஒரு தேவையற்ற வாட்சப் உரையாடலோ போதும் காலமெல்லாம் நமது நிம்மதியைக் குழி தோண்டிப் புதைக்க.

காலங்கள் கடந்தாலும் சோதனைகள் தீர்வதில்லை. ஒவ்வொரு காலத்திலும் சாத்தான் தனது சோதனையை வேறு வேறு விதமாகத் தந்து கொண்டே இருப்பான். ஆதியில் பழத்தைக் காட்டி ஏவாளை வசீகரித்த சாத்தான், இன்றைக்கு தளத்தைக் காட்டி இளைஞர்களை இழுக்கப் பார்க்கிறான்.

ஒன்று மட்டும் மனதில் கொள்ள வேண்டும். சாத்தானால் சோதனைகளைத் தர மட்டுமே முடியும், அதில் விழுவதா இல்லையா எனும் முடிவு நம்மிடமே இருக்கிறது. பழத்தைச் சாப்பிடும் ஆசையை சாத்தான் தூண்டினான், ஏவாள் விழுந்தாள். பாவத்தை அரவணைத்தாள். கல்லை அப்பமாய் மாற்றிச் சாப்பிட இயேசுவின் ஆசையைத் தூண்டினான். இயேசு நிமிர்ந்தார், புனிதத்தை தேர்ந்தெடுத்தார். அது தான் வித்தியாசம். சோதனைகளின் வசீகரத்தில் வழுக்கிவிட்டால், ஆன்மிக முதுகெலும்பு உடைந்து போகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்றைய தொழில்நுட்ப உலகில் அனைத்துமே இணைய இழைகளால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. எனவே இணையத்தைத் தவிர்த்துவிட்டு வாழ்ந்தல் என்பது ஏறக்குறைய சாத்தியமற்ற நிலை என்று கூடச் சொல்லலாம். இந்த சூழலில் கவனமாக வாழவேண்டியது நமது தேவை. எப்படி இயேசு அழைத்தபோது, “வலைகளை விட்டு விட்டு” இயேசுவை சீடர்கள் பிந்தொடர்ந்தார்களோ, அது போல நாம் ‘இணைய வலையை’ விட்டுவிட்டு இயேசுவைப் பின்செல்லத் தயாராய் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிலும் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நன்மையைப் பற்றிக் கொள்வதும், தீமையை விட்டுச் செல்வதும் நமது கையில் தான் இருக்கிறது. இயேசு “வலப்பக்கமாக வலைகளை வீசுங்கள்” என்றார். வலப்பக்கம் என்பது விண்ணகத்தின் பக்கம். வலப்பக்கமாய் வீசும் வலை என்பது நல்ல விஷயங்களைப் பெற்றுக் கொள்ள இணையத்தைப் பயன்படுத்துதல் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இணைய தளத்தைத் தவிர்த்தல் சாத்தியமற்ற இன்றைய சூழலில் எப்படியெல்லாம் இணையத்தை நல்லமுறையில் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொள்வது பயனளிக்கும்.

1. கலைகளை வளர்க்கலாம்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நமது கலைகளை வளர்த்தெடுக்க இணையம் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு இசைக்கலைஞன் எந்த ஒரு இசைக்கருவியையும் வாங்காமலேயே பாடல்களுக்கு இசையமைக்க முடியும். செலவில்லாமலேயே பாடி ஒரு பாடலை தரமான முறையில் உருவாக்கவும் முடியும். எந்த கலை நமக்குப் பிடித்திருக்கிறதோ, அந்தக் கலையைக் குறித்த அதிக தகவல்களை இணையம் இலவசமாகவே அள்ளித் தருகிறது.

எழுத்தாளர்கள் தளங்களை ஆரம்பித்து தங்கள் சிந்தனைகளை எழுதி வைக்கலாம். ஓவியர்கள் டிஜிடல் ஓவியங்களை அழகாக உருவாக்கலாம். பாடகர்கள் தங்களுடைய குரலை பதிவேற்றி அங்கீகாரம் பெறலாம். இப்படி எந்த ஒரு கலையையும் வளர்க்கலாம். இந்த கலைகளையெல்லாம் இறைவனுடைய மகிமைக்காகச் செய்யும் போது அவை அர்த்தம் பெறும்.

2. சிந்தனைகளைப் பகிரலாம்.

இன்றைக்கு இணையதளத்தை மிகவும் பாசிட்டிவாகப் பயன்படுத்தும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக யூடியூப் சேனலை எடுத்துக் கொண்டால், நிறைய கிறிஸ்தவ படைப்புகள் சார்ந்த தளங்கள் இருக்கின்றன. நம்முடைய சிந்தனைகளை வீடியோவாகப் பதிவுசெய்து வைக்கும்போது அவை சர்வதேச அளவில் மக்களுக்குப் பயனளிக்கின்றன. தொலைக்காட்சியைப் போல, ‘ஆன்லைன் தொலைக்காட்சிகள்’ உருவாக்குவதும் எளிதாகியிருக்கிறது. இவையெல்லாம் இளைஞர்கள் தங்களுடைய சிந்தனையை நல்ல முறையில் காட்சிப்படுத்த உதவும்.

தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள், தன்னம்பிக்கை சார்ந்த விஷயங்கள், கிறிஸ்தவம் சார்ந்தவ விஷயங்கள் என சமூகத்துக்குத் தேவையான, பலருக்கும் பயனளிக்கக் கூடிய விஷயங்களை இத்தகைய இணைய தளங்களில் பதிவிடலாம். கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு எதிரான எதையும் பதிவிடக் கூடாது என்பது மட்டுமே சிந்தையில் கொள்ள வேண்டிய விஷயம்.

3. தொடர்பில் இருக்கலாம்.

நண்பர்களோடும், உறவினர்களோடும், ஆசிரியர்களோடும், ஆன்மிக வழிகாட்டிகளோடும் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு இன்றைக்கு இணையம் உதவுகிறது. முன்பு இத்தகைய வசதிகள் இல்லை. நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தான் தொடர்பு கொள்ள முடியும் எனும் நிலை இருந்தது. இந்த தொடர்பு விஷயத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நன்மையும் தீமையும் முடிவு செய்யப்படுகிறது. தேவையற்ற அரட்டைகளில் மூழ்கி, டிஜிடல் வெளிச்சத்தில் நாளெல்லாம் புதைந்து கிடந்தால் நமது வாழ்க்கையும், ஆரோக்கியமும் பாழாகிவிடும்.

தேவையான அன்பையும், நட்பையும் இணையத்தின் மூலம் பகிரவும், பெறவும் செய்தால் நாட்கள் இனிமையாகும். எந்த வகையிலும் நேரடியான மனித உறவுகளை, சந்திப்புகளை, அரவணைப்பை இந்த டிஜிடல் பரிவர்த்தனை இடமாற்றம் செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

4. தொழில்கள் செய்யலாம்.

இன்றைக்கு ஃபிரீலேன்சர்கள், அதாவது சுதந்திரமாக தொழிலைச் செய்பவர்கள் அதிகரித்து விட்டார்கள். அவர்களுக்கு இணைய தளங்கள் களம் அமைத்துக் கொடுக்கின்றன. வீட்டில் இருந்தபடியே வேலைகளைச் செய்யவும், அவற்றை இணையத்திலேயே பதிவேற்றி பணம் பெற்றுக் கொள்வதுமான கிரவுட் சோர்சிங் முறையிலான வேலைகள் அதிகம் காணப்படுகின்றன. நாணயமான, நல்ல வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய பணிகளை இளைஞர்கள் தேடிக் கண்டுபிடிக்கலாம்.

அதே நேரம், இணையத்தில் ஏமாற்றுபவர்களும் ஏராளம் உண்டு என்பதால் விழிப்புடன் இருக்க வேண்டியதும் அவசியம். தவறான செயல்களில் ஈடுபடுவது நமது அமைதியான வாழ்க்கையையே மிக எளிதில் அழித்து விடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

5. நேரத்தை மிச்சப்படுத்தலாம்

இணையமும், இணையதளங்களும் நமக்கு நிறைய நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. ஒரு ரிக்கார்ட் எழுதவே லைப்ரரிகளில் மாதக் கணக்கில் நூல்களைப் புரட்டிய காலங்கள் மலையேறிவிட்டன. இன்றைக்கு இருக்கும் இடத்திலிருந்து கொண்டே தகவல்களை உலகில் எந்த மூலையிலிருந்தும் இழுத்து எடுக்கலாம். மிக எளிதாகக் கிடைக்கின்ற தகவல்கள் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்தித் தருகின்றன. இருந்த இடத்திலிருந்தே செய்து முடிக்கின்ற வங்கி வேலைகள் நமக்கு நேரத்தை சேமித்துத் தருகின்றன.

இப்படி மிச்சப்படுகின்ற நேரங்களை மனித நேயப் பணிகளுக்கும், இறைமகன் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் பணிக்கும் நாம் செலவிட வேண்டும். அப்போது நமக்கு விண்னகத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

இப்படி இணைய தளங்களை நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு நமக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. இணைய தளங்கள் இன்றைக்கு இறை தளங்களாகவும் இருக்கின்றன, சாத்தானின் தளங்களாகவும் இருக்கின்றன. எதை நாம் தெரிந்தெடுக்கிறோம் என்பதில் இருக்கிறது நமது பயணத்தின் வெற்றி.

இணைய தளங்களை நாம் பயன்படுத்தும்போது ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்போம். இந்த இணைய தளத்தை நானும் இயேசுவும் ஒன்றாக அமர்ந்து பார்க்க முடியுமா ? “முடியும்” என நீங்கள் தைரியமாகச் சொல்ல முடிந்தால் அந்தத் தளத்தைப் பாருங்கள். இல்லையேல் தவிர்த்து விடுங்கள். நீங்கள் பாவத்தில் விழ மாட்டீர்கள்.

*

சேவியர்