தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்
தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.
வாழ்க்கை
நமக்கு முன்னால்
இரண்டு திசைகளை நீட்டுகிறது,
நாம்
தேர்ந்தெடுக்கும் திசை
நம்
இலக்குகளை நிர்ணயிக்கிறது.
பரபாஸா
பரமனா
எனும் வாய்ப்புக்கு
பரபாஸ் என கூக்குரலிட்டது
கூட்டம் !
பதவியா
நீதியா
எனும் வாய்ப்புக்கு
கைகளைக் கழுவி அழுக்கானான்
பிலாத்து !
என் விருப்பமா
தந்தையின் விருப்பமா
எனும் கேள்விக்கு
தந்தையின் சிந்தமென்றார்
இயேசு !
தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.
ஆசீர்வதிப்பதா
சபிப்பதா
எனும்
பாலாமின் சிந்தனைக்கு
வாய்பேசிய கழுதை விடை தந்தது.
அழைப்பினை ஏற்பதா
தூரமாய் செல்வதா
எனும்
யோனாவின் முடிவுக்கு
விழுங்கித் துப்பிய மீன் விடை சொன்னது.
பசியினில் மடிவதா
பரமனில் இணைவதா
எனும்
எலியாவின் சூழலுக்கு
உணவு சுமந்த காகம் விடை சொன்னது.
விசுவாசத்தில் நிலைப்பதா
சுவாசத்தை முடிப்பதா
எனும்
தானியேலின் தருணத்துக்கு
வாயடைத்த சிங்கங்கள் விடை தந்தன.
மறுதலித்து நகர்வதா
பிந்தொடர்ந்து மரிப்பதா
எனும்
கேள்விக்கு
கொக்கரித்த சேவல் விடைதந்தது.
மனிதர்களின்
குழப்ப முடிச்சுகளை
விலங்குகள் வந்து
விலக்கி விடுகின்றன.
தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.
அகலமான வாசலா ?
இடுக்கமான வாசலா,
இருளின் சூட்சியா
ஒளியின் ஆட்சியா ?
சாவின் சன்னலா
வாழ்வின் வாசலா ?
பாவத்தின் வசீகரமா
புனிதத்தின் நிரந்தரமா ?
நில வாழ்வா ?
நிலை வாழ்வா ?
காலம் நம் முன்னால்
பூவா தலையா
போட்டு விளையாடுகின்றது.
தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.
சிலுவைப் பாதையில்
சீமோனுக்கு
சிலுவை
சுமக்கும் வாய்ப்பொன்று
வலுக்கட்டாய விருதாய் வழங்கப்பட்டது.
அவன்
வழியோரத்தில் நின்று
வரலாற்றின் விழுதொன்றை
வழுவ விடாமல்
பிடித்துக் கொண்டான்.
சிலுவை உச்சியில்
கள்வனுக்கு
முதல் வாய்ப்பொன்று
கடைசி வாய்ப்பாய்
வழங்கப்பட்டது.
அவன்
மரணத்தின் கோரைப்பற்களிடையே
வாழ்வின் வசந்தத்தை
பறித்தெடுத்தான்.
தவக்காலம்
வாய்ப்புகளின் காலம்.
நழுவ விட்ட வாய்ப்புகளை
எண்ணி
உடைந்து போகாமல்,
கிடைத்த வாய்ப்பை
நழுவ விடாமல் அடையும் காலம்.
*
சேவியர்