இவர்கள் என்ன ஆனார்கள் ?
மகதலா மரியா

விவிலியத்திலுள்ள நபர்களின் மிக முக்கியமானவர்களில் ஒருவர் மகதலா மரியா. அவர் மிக முக்கியமானவராய் மாறியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அவர் இயேசுவின் பிரியத்துக்குரிய சீடர்களில் ஒருவராக இருந்தர். இன்னொன்று, அவர் உயிர்த்த இயேசுவை முதலில் காணும் பாக்கியத்தைப் பெற்றார்.
மரியா எனும் பெயர் விவிலியத்தில் ஏராளம் உண்டு. அந்தக் காலத்தில் அது மிகவும் பிரபலமான பெயராக இருந்திருக்கிறது. எனவே மகதலா மரியாவை வேறுபடுத்திக் காட்ட அவர் பிறந்த இடத்தையும் பெயருடன் இணைத்து மகதலா மரியா என்று ஆக்கினார்கள். அதாவது, கலிலேயக் கடற்கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மகதலா எனும் இடத்தைச் சேர்ந்த மரியா என்பது இதன் பெயர்.
இவரிடமிருந்து ஏழு பேய்களை இயேசு ஓட்டியிருந்தார். பேயின் தொந்தரவில் உழன்ற அவர் பின்னர் இயேசுவின் சீடராக மாறினார். அதன் பின் இயேசுவின் வாழ்க்கையோடு தொடர்ந்து நடந்த அவர், இயேசுவின் மரணத்தின் போதும் கூடவே இருந்தார். இயேசுவின் கல்லறை அருகே கவலையுடன் அமர்ந்திருந்தார். இயேசு இறந்தபின்னும் அவர் நினைவாக கல்லறைக்குச் சென்றார். அதனால், உயிர்த்த இயேசுவை முதன் முதலில் தரிசிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
நற்செய்தியை முதன் முதலில் அறிவிக்கும் பாக்கியத்தையும் மகதலா மரியா பெற்றார். “என்னைப் பற்றி கொள்ளாதே, நற்செய்தியைப் போய் அறிவி” என்பது தான் உயிர்த்த இயேசு அவரிடம் சொன்ன வார்த்தைகள். பாவத்தின் முதல் செய்தி ஏவாளின் மூலம் வந்தது போல, மீட்பின் முதல் செய்தி மரியா மூலம் வருகிறது. மரியாவின் கண்ணீர் தாழ்ச்சியின் கண்ணீர், இயேசுவைக் காணாமல் அதிக துயரத்தில் இருந்த அவருக்கு முதல் காட்சியைத் தந்து அவரது அன்பை அங்கீகரிக்கிறார் இயேசு. என்கிறார், புனித அன்ஸ்லம்.
இவர் இயேசுவின் சீடராகும் முன் பாவியாக வாழ்ந்தார் என்றும், இல்லை இல்லை, அந்த மரியா வேறு இந்த மரியா வேறு என்றும் இருவேறு கருத்துகள் திருச்சபையில் நிலவுகின்றன.
கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வுக்குப் பின்பு மகதலா மரியாள் என்ன ஆனார் என்பதைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தில் இல்லை, ஆனால் பைபிளுக்கு வெளியே உள்ள குறிப்புகளின் படி இவர் இயேசுவின் சீடர்களோடு இணைந்திருந்தார். அவர்களுடன் இயேசுவின் நற்செய்தி அறிவித்தலுக்கு தன்னை அர்ப்பணித்திருந்தார் எனும் செய்திகள் கிடைக்கின்றன.
அவரையும் இயேசுவின் தீவிர சீடர்கள் சிலரையும் யூதர்கள் மாலுமியற்ற கப்பலில் ஏற்றி தனியே விட்டதாகவும், கப்பல் இறையருளால் தற்போதைய பிரான்ஸ் நாட்டுப் பகுதியில் வந்ததாகவும், அங்கு அவர்கள் நற்செய்தி அறிவித்ததாகவும் சொல்கிறது.
இன்னொரு செய்தி, இவர் யோவானுடன் இணைந்து நற்செய்திப் பணி ஆற்றிக் கொண்டிருந்ததாகச் சொல்கிறது.
“மகதலா மரியாவின் நற்செய்தி” எனும் நூல் கிறிஸ்தவத்தின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட நூல். கிபி மூன்றாம் நூற்றாண்டுகளில் அது எழுதப்பட்டது.
அதிலுள்ள சில குறிப்புகள் சுவாரஸ்யமானவை. “இயேசு எல்லா சீடர்களையும் விட மகதலா மரியாவை நேசித்தார்” எனும் செய்தி அதில் காணப்படுகிறது.
“இயேசுவின் சீடர்கள் சோர்ந்து இருந்தபோது அவர்களை மகதலா மரியா உற்சாகமூட்டி நற்செய்திப் பணி செய்ய ஊக்குவித்தார்” என்னும் செய்தியும் இதில் இருக்கிறது. மகதலா மரியா இயேசுவைப் பற்றிய கனவு ஒன்றினைக் காண்கிறார். பின் இயேசுவிடம் வந்து அதைச் சொன்னபோது, “என் நினைவாக இருப்பவர்கள் பாக்கியவான்கள்” என்கிறார் இயேசு. கனவு எப்படி தோன்றுகிறது எனும் மரியாவின் கேள்விக்கு,, “ஆன்மா மனம் ஆவி எனும் மூன்று நிலைகள் மனிதனில் உண்டு, அதில் இரண்டாவது நிலையான மனமே கனவுகளின் காரணம்” என்கிறார்.
இவையெல்லாம் அன்றைய கிரேக்க தத்துவ சிந்தனைகளை ஒட்டியதாக இருக்கிறதே தவிர விவிலியத்தில் காணும் இயேசுவின் மொழிகளைப் போல இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இரண்டாம் , மூன்றாம் நூற்றாண்டு பகுதியில் எழுதப்பட்ட பிஸ்டிஸ் சோஃபியா எனும் நூலில் இயேசு தனது சீடர்களுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்வது போல ஒரு பாகம் இருக்கிறது. அதில் கணிசமான பகுதியில் அவர் மகதலா மரியாவுடன் பேசுகிறார். அந்த நூலின் படி இயேசு உயிர்த்தபின் பதினோரு ஆண்டுகள் பூமியில் இருந்து சீடர்களை வலுப்படுத்துகிறார்.
மகதலா மரியாவை அவர் புகழ்கிறார். “மரியா, நீ ஆசீர்வதிக்கப்பட்டவள். மற்ற அனைவரையும் விட நீ விண்ணில் உயர்ந்த இடத்தில் இருப்பாய்” என்கிறார். “ நீ பூமியில் ஆசீர்வதிக்கப்பட்ட பெண். நீ முழுமையின் முழுமை, நிறைவின் நிறைவு: என்கிறார். மகதலா மரியா இயேசுவிடம் நெருக்கமாய் இருப்பது சீமோன் பேதுருவுக்கு எரிச்சல் உண்டாவதாகவும், அதை இயேசுவிடம் அவர் முறையிடுவதாகவும் கதை நீள்கிறது.
நிராகரிக்கப்பட்ட ஆதிகால நூல்களில் ஒன்றான, “தோமாவின் நற்செய்தி” நூலிலும் மகதலா மரியாவைக் குறித்த செய்திகள் பல உள்ளன. ஒரு செய்தியில், “மரியாவை அனுப்பிவிடும், அவள் ஆண்களைப் போல பணிசெய்ய தகுதியற்றவர்” என சீடர் சொல்லும்போது இயேசு கடிந்து கொள்கிறார். “அவரும், விசுவாசத்தில் நிலைத்திருக்கும் மற்ற பெண்களும் ஆண்களைப் போல மாற்றப்படுவார்கள், விண்ணுலகை சொந்தமாக்குவார்கள்” என்கிறார் இயேசு.
பிலிப்புவின் நற்செய்தி எனும் நூல் கிபி 2-3ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. அதிலும் மகதலா மரியாவை இயேசு அன்பு செய்யும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. “ஏன் எங்களை விட அதிகமாய் நீங்கள் மரியாவை அன்பு செய்கிறீர்கள் என சீடர்கள் இயேசுவிடம் கேட்பதாகவும், அதற்கு இயேசு, ஒரு சாதாரண மனிதரும் ஒரு குருடரும் இருளில் இருக்கும் போது இருவருக்குமே எல்லாம் இருட்டாய்த் தெரியும். ஆனால் வெளிச்சம் வரும்போதோ ஒருவர் பார்க்கிறார் என தத்துவார்த்தமாக விளக்குகிறார்.
இவை தவிரவும் பல்வேறு ஆதிகால நூல்களில் மகதலா மரியாவைக் குறித்த செய்திகள் இடம்பெறுகின்றன. இந்த செய்திகள் தான் நவீன கால டாவின்சி கோட் போன்ற புனை கதைகளுக்கு ஊக்க சக்தியாய் இருக்கின்றன.
இவைகளில் பெரும்பாலும் புனைகதைகள் என்பதில் சந்தேகம் இல்லை. இயேசுவின் அன்பினால் பாவம் நீங்கப்பெற்று அவரது உயிர்ப்பில் பங்குபெற்ற மகதலா மரியா நற்செய்தி அறிவித்தலில் ஈடுபட்டு இறந்து போனார் என்பதையே ஆதிகால திருச்சபை ஏற்றுக் கொண்டுள்ளது. பாரம்பரியக் கிறிஸ்தவ சபைகள் இவரை புனிதராகப் போற்றுகின்றன. ஜூலை 22ம் தியதி அவரது தினமாகக் கொண்டாடப்படுகிறது.
*
சேவியர்
Like this:
Like Loading...