Posted in Articles, Christianity, Desopakari

உள்நாட்டு இறைபணியாளர்கள்

உள்நாட்டு இறைபணியாளர்கள்

இங்கிலாந்து இறை பணியாளர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தி அறிவித்துக் கொண்டிருந்த கால கட்டம். அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காரோ எனும் பகுதி. அன்றைய காலத்தில் அங்குள்ள மக்களில் ஒரு பிரிவினர், “ஹெட் ஹண்டர்ஸ்” என அழைக்கப்படும் தலை வெட்டும் குணம் படைத்தவர்கள். மக்களுடைய தலையை வெட்டுவது அவர்களுக்கு உறுத்தலாய் இருந்ததில்லை. உற்சாகமாக இருந்தது. அன்றைய வாழ்க்கைச் சூழலில், அவர்களுடைய கலாச்சாரப் பின்னணியில் அது அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப் பட்டது.

உதாரணமாக, திருமணத்துக்கு பெண் கொடுக்க வேண்டுமென்றால் அந்த ஆண்மகன் வீரமுடையவனாக இருக்க வேண்டும். வீரத்தை எப்படி நிரூபிப்பது ? அவன் வெட்டிய தலைகளின் எண்ணிக்கையைக் கொண்டு தான் அது நிர்ணயிக்கப்பட்டது. முப்பது தலையை வெட்டினவன் வீரனாகக் கொண்டாடப்பட்டான். கேட்கவே திடுக்கிட வைக்கும் இத்தகைய மனிதர்கள் உலகின் பல பாகங்களிலும் இருந்தார்கள். அவர்களுடைய வீடுகளின் நிலைக்கால்களில் மண்டை ஓடுகள் தோரணங்களாகத் தொங்குவதும், அவர்களுடைய கழுத்தில் மண்டையோடுகள் மாலைகளாகத் தொங்குவதும் சர்வ சாதாரணம்.

அப்படிப்பட்ட ஒரு பகுதியில் வேல்ஸ் இறை பணியாளர்கள் நற்செய்தி அறிவித்தார்கள். கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஒரு குடும்பம் இறைவனின் அன்பினால் தொடப்படுகிறது. தொடப்பட்டவர் ஊர் மக்களால் வெறுக்கப்படுகிறார். கிராமத்தின் நடுவே, கிராமத் தலைவரின் முன்னால் அந்த கிறிஸ்தவக் குடும்பம் நிறுத்தப்படுகிறது. இயேசுவை ஏற்றுக் கொண்டவரோ, விசுவாசத்தில் ஆழமாய் நிற்கிறார். இயேசுவை ஏற்காதவர்கள், கலாச்சாரத்தில் காலூன்றி நிற்கிறார்கள்.

கிராமத் தலைவர் அந்த நபரைப் பார்த்துக் கேட்கிறார். “இயேசுவை விட்டு விடு… மீண்டும் பழைய வாழ்வுக்குத் திரும்பு. இல்லையேல் நீயும் குடும்பமும் கொல்லப்படுவீர்கள்.”

அந்த நபர் சொன்னார், “இயேசுவை பின் பற்ற நான் முடிவு செய்து விட்டேன். இனிமேல் திரும்பிப் பார்க்கும் எண்ணமில்லை”. இது அவர் எழுதி வைத்த பாடலின் ஒரு வரி. இந்த வரியைக் கேட்டதும் கிராமம் கொந்தளித்தது. கிராமத் தலைவர் கட்டளையிட்டார். அந்த மனிதருடைய இரண்டு பிள்ளைகளும் அவருடைய கண் முன்னால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அப்பா என தோளில் தொங்கிய பிள்ளைகள் கண் முன்னால் துடித்துச் சாவதைக் கண்ட தந்தையின் மனம் துடிதுடித்தது.

தலை வெட்டுவதில் மனம் சஞ்சலப்படாத தலைவன் சொன்னான். “இயேசுவை விட்டு விடு.. இல்லையேல் அடுத்ததாக உன் மனைவி கொல்லப்படுவாள்”

அவர் கண்ணீர் குரலோடு பாடினார், “என்னோடு யாருமே இணையாமல் போனாலும், நான் இயேசுவைப் பின் செல்வேன்”

அவருடைய மனைவியை அம்பு துளைத்தது. கண் முன்னாலேயே அவர் கதறியபடி விழுந்து இறந்தார். இயேசுவுக்காய் தன் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இறந்து போனதைக் கண்ட அந்த மனிதர் உயிர் துடித்தார்.

கிராமத் தலைவர் அவரைப் பார்த்துக் கடைசியாய்க் கேட்டார். “மிஞ்சியிருப்பது உனது உயிர். நீ என்ன முடிவு செய்கிறாய் ? இயேசுவை விடப் போகிறாயா ? உயிரை விடப் போகிறாயா ?”

அவர் உறுதியான குரலோடு பாடினார், “சிலுவை என் முன்னால் இருக்கிறது, உலகம் என் பின்னால் இருக்கிறது”. அது தான் அவர் சொன்ன கடைசி வாக்கியம். அவரது உயிர் அந்த இடத்திலேயே பிடுங்கப்பட்டது. தன் குடும்பத்தினரோடு அவரும் அதே இடத்தில் இயேசுவுக்காக இரத்த சாட்சியாய் இறந்தார்.

சில நாட்கள் கடந்தன. அந்தக் கிராமத் தலைவரின் மனதை விட்டு அந்தக் காட்சி அகலவேயில்லை. எத்தனையோ தலைகளை வெட்டி, கிராமத்துக்கே தலைவராய் இருந்த அவரால் அந்த நிகழ்வை ஜீரணிக்க முடியவில்லை. போரிட்டு மடிந்த மக்களை அவர் பார்த்திருக்கிறார். கெஞ்சிக் கெஞ்சி உயிரை விட்ட மனிதர்களைப் பார்த்திருக்கிறார். அச்சத்தில் வெலவெலத்து உயிரை விட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால் உறுதியோடு, கடவுளுக்காக உயிரை விட்ட நபர்களை அவர் பார்த்ததேயில்லை. அதுவும் கண் முன்னால் பிள்ளைகள், மனைவி கொல்லப்பட்ட போதும் இறை விசுவாசத்தில் சலனமில்லாமல் நிலைத்திருந்த அவரது உறுதி அவரை அலைக்கழித்தது. அப்படி ஏசுவிடம் என்ன தான் இருக்கிறது என அவர் மனம் கேள்விகளை எழுப்பியது.

அவர் கிறிஸ்தவராய் மாறினார்.

அவர் கிறிஸ்தவராக மாறியதுடன் நிற்கவில்லை, அந்த கிராமத்திலுள்ள அத்தனை நபர்களும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். ஒரு குடும்பம் பலியானது, ஒரு கிராமம் மீட்கப்பட்டது. ஒரு விதை அந்தப் பகுதியில் விழுந்தது, அந்த கிராமம் முழுவதும் கனி கொடுக்கும் விளை நிலமாய் மாறியது.

புனித தோமா கிபி 52ல் இந்தியாவுக்கு நுழைந்த போது கிறிஸ்தவம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. தமிழகம், கேரளா என்றெல்லாம் பிரிக்கப்படாத அந்தக் காலகட்டத்தில் இன்றைய கேரளாவின் கரையோரப் பகுதிகளில் அவரது பணி நடந்தது. அவர் ஆரம்பித்த ஆலயம் ஒன்று கிபி 60 களிலிருந்தே செயல்பாட்டில் இருக்கிறது. அது குமரிமாவட்டத்தில் இருக்கிறது. அது தான் உலகிலேயே மிகப் பழமையான ஆலயம்.

அவர்களுடைய வரவு நமது நாட்டில் மனிதத்தை விதைத்தது, பல்வேறு கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தது, மக்களுடைய அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, ஆரோக்கியம், உறைவிடம், கல்வி என்பவற்றில் கவனம் செலுத்தியது. மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, கூடவே இறைமகன் இயேசுவைப் பற்றிய செய்தியையும் அவர்கள் அறிவித்தார்கள். நற்செய்தி அவர்களுடைய ஆன்மாவுக்கு மட்டுமல்லாமல் உலக வாழ்வுக்குமே நற்செய்தியாய் அமைந்தது. அவர்களுடைய பணிகளில் ஈர்க்கப்பட்டு தான் பலர் கிறிஸ்தவ பணியாளர்களாக மாறினார்கள்.

சாது சுந்தர் சிங் இன்று கொண்டாடப்படுகிறார் எனில் கிறிஸ்தவராய் மாறிய பின் அவர் விதைத்த விதைகளே காரணம். அவர் தன்னிடம் விதைக்கப்பட்ட நற்செய்தியை அறுவடை செய்து தனக்காய் சேமித்து வைக்கவில்லை. அவற்றை விதைகளாய் பிறருக்கு வினியோகம் செய்தார். அதனால் தான், தான் பெற்றுக் கொண்ட மீட்பின் செய்தியை உலகுக்கே அளித்தார்.

சீர்திருத்தத் திருச்சபையின் இசை உலகை ஆக்கிரமித்திருக்கும் சாஸ்திரியார், இசை நற்செய்தி அறிவித்தலில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார். கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் ஆழமாய் தனது சிறுவயதைச் செலவிட்டவர். சிறு வயதிலேயே இயேசுவின் சிலுவையைக் காட்சியாய்க் கண்டவர். பிற்காலத்தில் சீர்திருத்தத் திருச்சபையின் மூலமாக நற்செய்தி அறிவித்தலை தீவிரமாகச் செய்தார். வாழையடி வாழையாக அவரது குடும்பமே கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்வதற்கு அவர் இட்ட விதையே காரணம்.

நட்டாலத்தில் பிறந்த நீலகண்டனான தேவசகாயம், அரசவையில் ஏற்படுத்திய ஆன்மிகப் புரட்சி மகத்தானது. அன்றைய சமூக ஆன்மிக களத்தில் அவரது பங்களிப்பு கணிசமானதாய் இருந்தது. கிறிஸ்தவத்தைப் பின்பற்றியதற்காகவும், அதை செயல்படுத்தியதர்களாகவும் அவருக்கு மிகக் கடுமையான சித்திரவதைகள் செய்யப்பட்டதாய் பதிவுகள் சொல்கின்றன. அதன் பின்னர் நிலமை மாறியது. அவர் மக்களாலும், அதிகாரிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஒரு விதையாக விழுந்த அவரை அறியாதவர்கள் இன்று குமரிமாவட்டத்தில் இல்லை எனலாம்.

ஐடா ஸ்கட்டர் எனும் ஒரு இறை பணியாளர் நமது மாநிலத்தில் உருவாக்கிய பணியாளர்கள் ஏராளம் ஏராளம். மருத்துவத் துறையில் அவரது பங்களிப்பு உள்ளூர் மக்களை இறைபணிக்கு தயாராக்கியது. அவர்கள் இயேசுவின் பணியை ஏழைகளுக்கு மருத்துவப் பணி செய்யும் பாதையில் சுமந்து சென்றனர்.

உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருத்து ஒன்றுண்டு. இறைவன் தனித்தனி நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை விண்ணக விதைகளாக ஆங்காங்கே நடுகிறார். அவர்கள் அங்குள்ள நிலங்களை பதப்படுத்தி வாழையடி வாழையாக, மூங்கிலின் புது முளைகளாக நற்செய்தியை தலைமுறை தோறும் சுமந்து கொண்டே திரிகிறார்கள்.

துவக்க காலக் கிறிஸ்தவ சமூகத்தோடு ஒப்பிடுகையில் நாம் இன்று சந்திக்கின்ற பிரச்சினைகள் கடுகளவு எனலாம். பொதுவெளியில் கிறிஸ்துவுக்காக உயிரை விட்டவர்களும், அதை ஆனந்தமாய் ஏற்றுக் கொண்டவர்களும் எண்ணிலடங்கா என வரலாறு குருதிப் பிசுபுசுப்புடன் இருக்கிறது.

இந்த சூழலில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் இரண்டு உண்டு.

1. நமக்காக, நமது சமூக, ஆன்மிக வாழ்வின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட, பாடுபடுகின்ற இறை பணியாளர்களை நன்றியுடன் நினைவு கூர்வது. அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இயேசுவுக்காக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை நேசிப்பது.
2. அவர்கள் காட்டும் இயேசுவின் வழியில் நமது வாழ்க்கையை அமைப்பது. பெற்றுக் கொள்பவர்களாக மட்டும் இருக்காமல், இறைவனுக்காக பணி செய்பவர்களாகவும் மாறுவது. அது தான் அவர்களுடைய பணியின் இழையை அறுபடாமல் காப்பாற்றும். விண்ணக வாழ்க்கையை நழுவ விடாமல் நம்மைப் பாதுகாக்கும்.

அன்று முதல், இன்று வரை பணி செய்கின்ற உள்நாட்டுப் பணியாளர்களை நேசிப்போம். அவர்களுக்குத் தோள்கொடுப்போம். அவர்களுடைய பணியில் நம்மை முழுமையாய் ஈடுபடுத்துவோம்.

*

சேவியர்

தேசோபகாரி, மார்ச் 2020

உங்கள் கருத்தைச் சொல்லலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s